black_lady_600

(கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தெற்கு சூடான் 9.7.2011 அன்று தனி நாடாக விடுதலை பெற்றதைக் கொண்டாடும் கருப்பினப் பெண்)

நிலமூறிய உதிரம் கைகளில் திரள்கிறது
விடுதலைப் பதாகையாய்
வானத்தின் அகலம் முழுதும்
உயர்ந்த கைகள் வரைகின்றன
விடுதலை வரலாற்றை
சிந்திய குருதியும் இழந்த உயிர்களும்
நிழல்தரும் தாவரங்களாய் வளர்ந்திருக்கின்றன
ஆதிக்கத்தின் சூலறுக்க துணிந்த கைகள்
கிளைகளாகி தென்றலை வீசுகின்றன
அடிமைத்தளை தீர்ந்த பொழுதில்
புதிதாய்த் தோன்றுகிறது எங்கள் நட்சத்திரம்
கெட்டித் தட்டிய எங்கள் நிலங்கள்
நெகிழ்ந்து தருகின்றன
விதைகளைத் தூவுவதற்கான இடங்களை
எங்கள் அறுவடைகளை இப்போது
தின்போம் நாங்களே
எங்கள் குழந்தைகள் உரத்துப் பாடும்
பாடல்களைக் கேட்டு எதிரொலிக்கின்றன
பள்ளிகளின் சுவர்கள்

வேட்டுகளற்ற எங்கள் வீதி கொண்டாட்டங்களில்
சத்தமிட்டு நடனமாடுகிறோம் நாங்கள்
'ரத்தம் சிந்துகின்ற
எந்த விடுதலைப் போரும் வெல்லும்'

Pin It