தமிழ்நாட்டின் பாஜக தலைவராக தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணைய துணைத் தலைவராக இருந்த எல்.முருகனை அந்தக் கட்சி 11 மார்ச், 2020 அன்று நியமித்தது. உடனே இங்கிருக்கும் சில முற்போக்குவாதிகளும், வலதுசாரிக் கும்பல்களும் சேர்ந்து கொண்டு பாஜகவுக்கு முட்டுக் கொடுக்க ஆரம்பித்தார்கள். “திராவிட அரசியல் கட்சிகளில் ஒரு தலித் தலைவராக வர முடியுமா? ஆனால் உங்களால் பார்ப்பனக் கட்சி என்று சொல்லப்பட்ட பாஜகவால் அது முடிந்திருக்கின்றது" என்று. அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம் அது என்ன உண்மை என்றால், திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் தலித்துகளுக்கான பிரதிநிதித்துவம் என்பது அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இல்லை என்பதும், தலைவராக வருவதற்கு அதில் எப்போதுமே வாய்ப்பு இல்லை என்பதும்தான். மேலும் தலித்துகளின் சமூக, பொருளாதார விடுதலைகாக தங்களால் செய்யப்படும் குறைந்த பட்ச நலத்திட்டங்களைக் கூட பிச்சையாகப் பார்க்கும் மனநிலையில்தான் அவர்கள் இருக்கின்றார்கள்.

l murugan bjpஇதற்கு சிறந்த உதாரணம் திமுக அமைப்புச் செயலாளர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினரான எஸ்.ஆர்.பாரதி சில நாட்களுக்கு முன்னால் பேசிய பேச்சு. “வட மாநிலத்தினர் எல்லாரும் முட்டாள்கள்; அறிவே இல்லாதவர்கள். இதை நான் வெளிப்படையாகவே கூறுகிறேன். மகாராஷ்டிராவில் ஹரிஜன் பிரிவைச் சேர்ந்த ஒருவர்கூட இப்போதுவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்தப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் நிலை வேறு. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி ஆதி திராவிடர் உட்படப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பலரை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணி அமர்த்தியுள்ளார். இவையெல்லாம் திமுக அவர்களுக்குப் போட்ட பிச்சை” என்று அவர் கூறியிருந்தார். இது சம்மந்தமாக அவர் வருத்தம் தெரிவித்து இருந்தாலும் அவர் மீது சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாகவே இந்தியா போன்ற சாதிகள் நிறைந்த நாடுகளில் சமரசம் செய்யாமல் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லை. இந்த இழி நிலையில் இருந்து தலித்துகளை காப்பாற்றத்தான் அம்பேத்கர் அவர்கள் இரட்டை வாக்குரிமையை தலித்துகளுக்குக் கேட்டார். ஆனால் காந்தியால் நயவஞ்சகமாக இந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தலித் வேட்பாளர்களை தனித் தொகுதியில் மட்டுமே பெரும்பாலும் நிறுத்துகின்றன. இதற்கு திமுக, அதிமுக மட்டும் விதிவிலக்கு இல்லை.

அதனால் திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இருக்கும் தலித்துகள் பெரும்பாலும் ஆதிக்க சாதி அரசியலை எதிர்த்துப் பேசும் திராணியற்ற பிழைப்புவாதிகளாய்த்தான் இருப்பார்கள். ஒருவேளை அவர்கள் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிராகப் பேசினால் அவர்கள் நிச்சயம் ஆதிக்க சாதிகளால் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார்கள். எனவே தேர்தல் அரசியலில் இருக்கும் தலித்துகளை நாம் சாதி ஒழிப்புப் போராளிகளாக பார்க்கத் தேவையில்லை. அதுவும் நீண்ட காலம் தேர்தல் அரசியலில் கரைந்து போன ஒரு தலித் வேட்பாளர் அடிப்படையில் தலித் என்ற சொல்லிற்கு உண்டான அத்துனை பொருளில் இருந்தும் விடுபட்டவராக இருப்பார்.

இதைச் சரியாக உள்வாங்கிக் கொள்ளும்போதுதான் தலித் விடுதலை, சாதி ஒழிப்பு என்பதை எல்லாம் அதன் சரியான பொருளில் நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதைச் சரியாக புரிந்து கொள்ளாதவர்கள்தான், சாதியை மையப்படுத்தி இயங்கும் இந்தத் தேர்தல் அரசியலிலும் மற்றும் அதிகார மட்டங்களிலும் தலித்துகள் செல்வாக்கு செலுத்துவதே பெரிய வெற்றியாகப் பார்க்கின்றார்கள்.

அப்படிப்பட்ட நபர்களுக்குத்தான் முருகன் அவர்களின் நியமனம் உள்ளக் கிளர்ச்சியை தந்துள்ளது. உண்மையில் பார்ப்பனியம் என்ற சொல்லின் உண்மையான பொருளை அறிந்தவர்கள் எச்.ராஜாவுக்கும், முருகனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நன்கு உணர்வார்கள். எப்படி முதலாளித்துவ சிந்தனை என்பது மூலதனத்தை வைத்திருக்கும் முதலாளிகளை மட்டும் குறிப்பதாக இல்லாமல், வரம்பற்று சொத்து சேர்ப்பதையும், சமூகத்தை மேலாண்மை செய்வதையும் ஆதரிக்கும் அனைரையும் குறிப்பிடுகின்றதோ அதே போல பார்ப்பனியம் என்பதும் ஒரு சிந்தனா முறை, அது பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் இருக்கும் என்றல்ல, தன்னை உயர்ந்தவன், அடுத்தவனை தாழ்ந்தவன் என்று நினைப்பவர்களையும் அல்லது அதை மனதளவில் ஒத்துக் கொள்ளும் அனைவரையுமே குறிக்கும்.

மனதளவில் ஒருவன் முதலாளியாக வாழ்கின்றனா அல்லது பார்ப்பன அடிவருடியாக வாழ்கின்றனா என்பதெல்லாம் அவன் வாழ்கின்ற வாழ்முறையைச் சார்ந்தது. நாம் அப்படித்தான் முருகனையும் பார்க்க வேண்டும். முருகன் தன்னளவில் ஒரு தலித்தாக இருந்தாலும், அவர் அடிப்படையில் இந்து சமூக அமைப்பின் சாதியை மனதார ஏற்றுக் கொண்டு பார்ப்பன மேலாதிக்கத்துக்கு துணை போகும் பிழைப்புவாதி. தீண்டாமையையும், அதற்குக் காரணமான பார்ப்பனியத்தையும் ஏற்றுக் கொண்டவர். இல்லை என்றால் அவரை பாஜக ஒருக்காலும் உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்க்காது என்பதுதான் உண்மை.

முருகன் போன்றவர்களுக்கு கட்சியின் தலைமைப் பதவியை கொடுத்து விட்டதாலேயே பாஜகவைக் கொண்டாடுபவர்களுக்காக நாம் பாஜகவின் கடந்த கால வரலாறு சிலவற்றை நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்

பாஜகவை தலித் மக்களிடையே பிரபலப்படுத்தும் வகையில், தலித் மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்வுகளை, அது கர்நாடகாவில் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக, எடியூரப்பா உள்ளிட்டோர் தினசரி காலையில் தலித் மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களோடு கலந்துரையாடிவிட்டு, அங்கே உணவு சாப்பிடுவதாக சபதம் எடுத்திருந்தார்கள். ஆனால் உண்மையில் என்ன நடந்தது?

சித்ரதுர்கா மாவட்டத்தின் கெலாகோட் பகுதியில் உள்ள வெங்கடேஷ் என்ற தலித் வீட்டுக்குச் சென்ற எடியூரப்பா உள்ளிட்டோர் அந்த தலித் வீட்டில் சமைத்த உணவை உண்ண மறுத்து விட்டனர். மாறாக, ஓட்டலில் இருந்து உணவை வாங்கி வந்து, எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினர் அனைவரும் சாப்பிட்டார்கள். இப்படி வேண்டுமென்றே தலித்துகளை இழிவுபடுத்திய அவருக்கு எதிராக மண்டியா காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. இங்கு மட்டுமல்ல, கர்நாடகாவில் உள்ள துமாகுரு மாவட்டம் குப்பி பகுதியில் உள்ள ஒரு தலித் வீட்டிற்கு சென்ற போதும் இதே போல தனது தலித் பாசத்தைக் காட்டினார் எடியூரப்பா.

தலித்துகளுக்கு தாங்களும், தங்களுடைய சித்தாந்தமும் எதிரிகள் அல்ல என காட்டிக் கொள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் சாதிவெறியர்கள் என்னதான் முயன்றாலும் அவர்களின் இயல்பான செயல்பாடுகளே அதைப் பொய் எனக் காட்டிவிடும். தற்போது உ.பி முதல்வராக இருக்கும் தாக்கூர் சாதியைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் அந்த மாநிலத்தில் வாழும் முஷார் இன மக்களை சந்திக்கச் செல்லும் முன், அந்த மக்கள் அனைவரும் சோப்பு, ஷாம்பு போட்டு குளித்துவிட்டு வர வேண்டும் என்று சொல்லி அவரது பரிவாரங்கள் கட்டாயப்படுத்தி இருக்கின்றார்கள்.

இதுதான் பாஜக ஆர்.எஸ்.எஸ்ஸின் உண்மையான முகம். இதை எல்லாம் சகித்துக் கொண்டல்ல, மனதார ஏற்றுக் கொண்டு அதில் இருந்தால் மட்டுமே உங்களுக்கு பட்டங்களும், பதவிகளும் தேடி வரும். அதற்கு சிறந்த உதாரணம் ராம்நாத் கோவிந்த். தற்போது எப்படி முருகன் தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டதை சிலர் கொண்டாடுகின்றார்களோ அதே போலத்தான் அன்று ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவராக பாஜக தேர்ந்தெடுத்த போதும் கொண்டாடினார்கள். ஆனால் உண்மையில் ராம்நாத் கோவிந்த்தை ஏன் பாஜக தேர்ந்தெடுத்தது?

காரணம் ராம்நாத் கோவிந்த் கடந்த 20 ஆண்டுகளில் பல முறை தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் ஆர்.எஸ்.எஸ்-ன் குரலையே வெளிப்படுத்தினார் என்பதால்தான்.

அரசு வேலைகளுக்கான இட ஒதுக்கீட்டில், இசுலாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துக்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் இடம் வழங்க வேண்டும் என கடந்த 2009-ம் ஆண்டு ரங்கநாத் மிஸ்ரா கமிசன் பரிந்துரை செய்தபோது, அப்போது பாஜகவின் தேசிய பேச்சாளராக இருந்த ராம்நாத் கோவிந்து, இசுலாமிய, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த தலித்துகளை தாழ்த்தப்பட்ட சாதியினரில் சேர்ப்பது அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமானது என்றும், இசுலாமிய, கிறிஸ்தவ தலித்துகளை தாழ்த்தப்பட்ட சாதியினராக அங்கீகரிப்பது பல தலித்துகள் மதம் மாறுவதற்கு உதவும் என்றும், அந்த வகையில் இந்திய சமூகத்தின் வடிவமைப்பையே அது அழித்துவிடும் என்றும் கூறினார்.

கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்க தூதரகங்களுக்கிடையில் நடந்த தகவல் தொடர்பு ஆவணங்களில் ஓர் ஆவணம் தான் "இந்திய தலித்துகளின் சமூக, பொருளாதார நிலை இன்னமும் இருளிலேயே உள்ளது" என்ற ஆவணம். இதில் ராம்நாத் கோவிந்திடம் இந்தியாவில் தலித்துகளின் நிலைமைகள் குறித்து கேட்கப்பட்ட போது, இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான தீண்டாமை வெகுவாகக் குறைந்துள்ளது என்றும், வீடு கொடுப்பதில் மட்டும் தான் தீண்டாமை வெளிப்படையாக இருப்பதாகவும், பணியில் சேருவது போன்றவற்றில் சாதிய பாரபட்சம் முந்தைய பத்தாண்டுகளாக குறைந்திருப்பதாகவும் கூறினார். மேலும் இந்திய தலித்துகள் இட ஒதுக்கீடு மூலம் பெரும்பான்மையாக பலன் பெற்று வருவதாகவும், சாதிய வேற்றுமையைப் போக்க ஆரம்பக் கல்வியில் இருந்து பயிற்றுவித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவின் சாதி அமைப்பை பற்றிக் கூறும் போது ஐரோப்பாவில் தொழிற்கழகங்கள் உருவானதைப் போல இந்தியாவில் இன்னார் இன்ன தொழிலைச் செய்து கொள்ளலாம் என உருவாக்கப்பட்ட அமைப்பு தான் சாதியக் கட்டமைப்பு என்றும், அவரவர் தங்களது தொழிலைப் பாதுகாத்துக் கொள்ள சாதியக் கட்டமைப்பைப் பாதுகாக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். இதையெல்லாம் சொல்லி விட்டு, கடைசியில் சாதியத்தை இந்தியாவை விட்டு ஒழிக்க முடியாதா என்ற கேள்விக்கு, “இந்து மதம் சாதியை ஏற்றுக் கொண்டு அனுமதிப்பதால், இந்தியாவில் சாதியை அவ்வளவு எளிதாக ஒழித்து விட முடியாது, அது மறைய குறைந்தது 100 ஆண்டுகள் ஆகலாம் என்றும் சொல்கின்றார்.

இப்படி தன்னை ஒரு முழு சங்கியாகவே அவர் மாற்றிக் கொண்டிருந்தாலும் ஆதிக்க சாதி வெறியர்கள் தங்களில் ஒருவராக அவரை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. இந்தியக் குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக ஒடிசாவில் உள்ள பூரி ஜகந்நாதர் கோயிலுக்கு 2018 ஆம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி அவரின் மனைவி சுவீதாவுடன் சென்றார். ஆனால் அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், அங்கே இருக்கும் ரத்னசிங்காசனம் சிலை இருக்கும் இடத்திற்குச் செல்ல விடாமல் அவரையும் அவரது மனைவியையும் 3 பாதுகாவலர்கள் தடுத்துள்ளனர். அது மட்டுமட்டுமல்லாமல் நாட்டின் முதல் குடிமகளான சுவீதாவை, பாதுகாவலர் ஒருவர் தள்ளியும் விட்டார்.

ராம்நாத் கோவிந்துக்கும், அவரது மனைவிக்கும் நடந்த அவமரியாதை குறித்து மார்ச் 19-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகை, பூரி மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது. ஆனால் புகார் கடிதம் வந்து 3 மாதங்களுக்குப் பிறகே இந்த விவகாரம் தொடர்பாக பூரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அகர்வால் விசாரணையைத் தொடங்கினார். ஆனால் இதற்காக ராம்நாத் கோவிந்த பார்ப்பனியத்தையோ, அது கட்டமைத்து வைத்திருக்கும் சாதியப் படிநிலையையோ ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் போர்க்கொடி தூக்கவில்லை. காரணம் மிக எளிதானது. அவரே மேலே சொன்னது போல தொழிலை பாதுகாத்துக் கொள்ள உருவாக்கப்பட்ட அறிவுப்பூர்வமான அமைப்புதான் சாதி என்பதை அவர் உறுதியாக நம்புகின்றார். அடுத்தவர்களையும் நம்பச் சொல்லி பரப்புரையும் செய்கின்றார். அதனால்தான் அவரை பாஜக குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.

எனவே ஆர்.எஸ்.எஸ், பாஜகவால் ஒரு தலித், குடியரசுத் தலைவராகவோ, தமிழக பாஜக தலைவராகவோ தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் அதை ஒரு மாபெரும் முற்போக்கு செயலாக நாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அடிப்படையில் அவர்கள் சாதி ஒழிப்புக்காக களமாடுகின்றார்களா என்பதை வைத்துத்தான் அவர் முற்போக்கான நபரா இல்லையா என்பதை நாம் முடிவு செய்ய முடியும். சாதியை ஏற்றுக் கொண்டு மனநோயாளியாக வாழ்பவன் பார்ப்பனனாக இருந்தாலும், தலித்தாக இருந்தாலும் அவன் அடிப்படையில் பிற்போக்குவாதியே. அவன் எந்தப் பதவியில் இருந்தாலும் அதனால் சமூக மாற்றம் என்னும் பெரும்பணிக்கு ஐந்து பைசா பிரயோஜனம் கூட கிடையாது. நாம் அப்படித்தான் முருகனையோ, ராம்நாத் கோவிந்தையோ பார்க்க வேண்டும்.

- செ.கார்கி

Pin It