modi with ashok singhal

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் அசோக் சிங்கால், குர்கான் மருத்துவமனையில் 17/11/2015 அன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு மோடி அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன் நேரில் சென்று அஞ்சலியும் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் பிரதமரே நேரில் சென்று அஞ்சலி செலுத்துகின்றார் என்றால் அவர் எவ்வளவு பெரிய மனிதராக இருக்க வேண்டும்!. அப்படிப்பட்ட அந்த மாமனிதன் இந்திய மக்களுக்கு செய்த நல்ல காரியம் என்ன என்பதையும், எந்தத் துறையைச் சேர்ந்த மக்களுக்கு அவரது இழப்பு பேரிழப்பாக பார்க்கப்படுகின்றது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்று இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியிலும், மதவெறியர்களின் முற்றுகையிலும் இருப்பதற்கு மூல காரணம் இந்த அசோக் சிங்காலே ஆவார். இவர் தான் மோடி என்ற மதவெறி பிடித்த மனிதனை இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று முதன்முதலில் குரல் எழுப்பியவர். அதனால் தான் மோடி கண்ணீர் விடுகின்றார். தன்னைப் போன்ற ஓர் அற்பப் பிறவியைப் பிரதமராக வர வேண்டும் என்று குரல் கொடுத்த ஒரு நல்ல உள்ளம் இறந்துவிட்டதே என்று.

இவரது சாதனைகள் மனிதகுலம் உள்ளவரை பேசப்பட வேண்டியது. இந்தியாவிற்கு உலக அரங்கில் மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பில் முக்கிய குற்றவாளி இந்த அசோக் சிங்கால் ஆவார். இதற்காக 1983–ல் முசாபர் நகரில் அவர் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் அயோத்தியில் ராமர் கோவில், மதுராவில் கிருஷ்ணன் கோவில், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் போன்றவை இந்தியாவிற்குப் படை எடுத்து வந்த முகலாயர்களால் அழிக்கப்பட்டது என்றும், எனவே இந்தப் பகுதிகளில் உள்ள மசூதிகளை முஸ்லீம்கள் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியவர். அத்தோடு நிற்காமல் 1984-ல் டெல்லியில் சாதுக்களை ஒன்று திரட்டி ராமஜென்ம பூமி நியாஸ் என்ற அமைப்பை நிறுவினார். 1990களில் அயோத்தியில் கரசேவை நடத்தப் போவதாக அறிவித்தார். இது பெரும் கலவரத்தில் முடிந்தது. இந்த கரசேவையின் அடுத்த கட்டம் தாம் 1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. உத்திரப் பிரதேசத்திலும், இந்திய அளவிலும் பி.ஜே.பிக்கு மிகப்பெரிய அளவில் இந்து ஓட்டு வங்கியைப் பெற்றுத் தந்தது இந்த பாபர் மசூதி இடிப்பு நிகழ்வாகும்.

அசோக்சிங்கால் உதித்த சில முத்துக்களைப் பார்த்தாலே அவர் இந்திய மக்களுக்கு செய்த நன்மைகள் புலப்படும்.

“முஸ்லிம்கள் இந்துக்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்தால் எவ்வளவு காலம் அவர்களால் இங்கு வாழ முடியும்? முஸ்லீம்கள் அயோத்தி கோவில் மற்றும் காசி, மதுரா, கோவில்களிகள் ஆகியவற்றின் மீதான உரிமைகோரலை கைவிட வேண்டும்."

“மசூதிகளை கோவில்களாக மாற்றுவோம்”

“வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் இந்தியா இந்துக்களின் நாடாகிவிடும்”

“நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் வந்த பிறகு இந்தியாவின் 800 ஆண்டுகள் அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது சாதாரண புரட்சியல்ல இந்தியாவை ஒரு வட்டத்திற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் புரட்சி அல்ல இது. உலகத்திற்கே உயரிய தத்துவங்களையும் வாழ்க்கை முறையையும் அறிமுகப்படுத்தும் புரட்சி”

“பசு வதைக்கு நாடுமுழுக்க தடைவிதிக்க வேண்டும்”

“இந்துக்கள் ஒவ்வொருவரும் தலா 5 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்”

இப்படி எல்லாம் பேசிய ஒருவரை என்ன செய்திருக்க வேண்டும்? தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் திகார் சிறையில் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் நாம் தான் ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோமே! நமக்குத்தான் கருத்துச் சுதந்திரமும், மத சகிப்புத்தன்மையும் ரத்தத்திலேயே ஊறிய ஒன்றாயிற்றே. அதனால் பேசவிட்டு வேடிக்கை பார்த்தோம். விளைவு பல ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை மதத்தீவிரவாதிற்குத் தின்னக் கொடுத்தோம். அத்தோடு விட்டோமா, அப்படி மதக்கலவரத்தைத் தூண்டிவிட்ட அயோக்கியர்களை எல்லாம் தேசபக்தர்களாக சித்தரித்தோம். அதனால் எழுச்சியுற்ற பல விஷப்பாம்புகள் இன்றும் விஷத்தைக் கக்கிக் கொண்டு இருக்கின்றன.

இன்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் காலிகள் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பேசும்போது இங்குள்ள சிலர் பிரதமர் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூப்பாடு போட்டுக் கொண்டு இருந்தார்கள். சில தினங்களுக்கு முன் மோடியும் இது போன்று பேசுபவர்களைக் கண்டிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். நாமும் மோடி நல்லவர், அவரது கட்சிக்காரர்கள் தான் இதுபோன்று வன்முறையாக பேசிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று நினைத்தோம். ஆனால் மோடி அது எல்லாம் மக்களை ஏமாற்ற தான் செய்யும் பம்மாத்து வேலை என்று நிரூபித்துவிட்டார். அசோக் சிங்காலின் மறைவை ஒட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் “அசோக் சிங்காலின் மறைவு தனக்குப் பேரிழப்பு. நாட்டின் வளர்ச்சிக்குத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். அசோக் சிங்கால் அவர்களின் வாழ்த்துக்களும் வழிகாட்டுதல்களும் எனக்கு எப்போதும் கிடைத்தது அதிர்ஷ்டவசமானது” என்று கூறியுள்ளார்.

இதுதான் மோடியின் உண்மையான முகம். மத வெறியர்களால் ஒருபோதும் தங்களை மறைத்துக் கொள்ள முடியாது என்பதற்கு மோடியே சிறந்த உதாரணம். இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமான ஒருவரை நாட்டின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் என்று மோடி சொல்கின்றார் என்றால் நீங்கள் புரிந்து கொள்ளலாம், மோடியைப் பொருத்தவரை வளர்ச்சி என்பது எது என்று. மாட்டுக்கறி தின்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடி விடவேண்டும் என்பதும், ராமனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் விபச்சார விடுதியில் பிறந்தவர்கள் என்று சொல்வதும், மாட்டுக்கறி சாப்பிட்டால் ஒரு மாநில முதலமைச்சரையே தலையை வெட்டிவிடுவேன் என்று சொல்வதும் தான் நாட்டின் உண்மையான வளர்ச்சி. இந்த வளர்ச்சியை சாதிக்கத்தான் மோடியை இந்திய மக்கள் பெரும்பான்மையாக ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்து இருக்கின்றார்கள். ஏனென்றால் அவரே குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களைப் படுகொலை செய்து வளர்ச்சியின் நாயகனாக உள்ளார்.

நீங்களும் வரும் காலங்களில் வரலாற்றில் இடம்பெற்று ஒரு வரலாற்று நாயகனாக விரும்பினால் அசோக் சிங்காலைப் பின்பற்றலாம். முடியவில்லை என்றால் மோடியைப் பின்பற்றலாம். அதுவும் முடியவில்லை என்றால் நம்ம ஊர் லோக்கல் தாதா எச்சிக்கலை ராஜாவையாவது பின்பற்றலாம். நீங்கள் வரலாற்று நாயகராக வாழ்த்துக்கள்!

- செ.கார்கி

Pin It