ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சார்பாக டாக்டர் அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்; சாதி இந்துக்கள் சார்பாக மதன்மோகன் மாளவியா கையொப்பமிட்டார். ஒப்பந்தம் கையெழுத் தாகும் முன்பு, ராவ் பகதூர் ராஜாவும் அவரைப் பின்பற்றுபவர்களும் கையெழுத்திடுவதை தாங்கள் அனுமதிக்க முடியாது என்று மதராசிலிருந்து வந்திருந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். மேலும், அவர் அவ்வாறு கையெழுத்திட அனுமதிக்கப்பட்டால், டாக்டர் அம்பேத்கரும் அவரைப் பின்பற்றுபவர்களும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட மாட்டார்கள் என்றும் கூறினர். இந்த நிபந்தனைகளை ஏற்று டாக்டர் அம்பேத்கரும் அவரைப் பின்பற்று பவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதையடுத்து திரு. ராஜா மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களின் கையொப்பங்களைப் பெற ஏற்பாடு செய்யும்படி டாக்டர் அம்பேத்கர் கேட்டுக் கொண்டார்.

AL145_370நீண்ட விவாதத்திற்குப் பிறகு அவர்களை தனிப்பட்ட முறையில் அந்த ஆவணத்தின் இறுதிப் பகுதியில் கையெழுத்திட அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அவ்வாறே அவர்கள் கையெழுத்திட்டனர். ஆனால், ஒரு பெரிய வியப்பு என்னவெனில், ஆவணத்தின் இறுதியில் ராஜா கையெழுத்திட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் ஜெயகர் மற்றும் சப்ரூ ஆகியோரின் கையொப்பங்களுக்கிடையே அவர் தமது கையொப் பத்தை செருகி இட்டார்.

“பூனா ஒப்பந்தத்தில், 24.9.1932 அன்று கையொப்ப மிட்டவர்கள் : 1. மதன்மோகன் மாளவியா 2. தேஜ் பகதூர் சப்ரு 3. எம்.ஆர். ஜெயகர், 4. பி.ஆர். அம்பேத்கர் 5. சிறீநிவாசன் 6. எம்.சி. ராஜா 7. சி.வி. மேத்தா 8. சி. ராஜகோபாலாச்சாரி 9. ராஜேந்திர பிரசாத் 10. ஜி.டி. பிர்லா 11. ராமேஸ்வரதாஸ் பிர்லா 12. பி.எஸ். காமத் 13. ஜி.கே. தியோதர் 14. ஏ.வி. தாக்கர் 15. ஆர்.ஆர். பாகலே 16. பி.ஜி. சோலங்கி 17. பி. பாலு 18. கோவிந்த் மாளவியா 19. தேவதாஸ் காந்தி 20. பிஸ்வாஸ் 21. பி.என். ராஜ்போஜ் 22. ராவை .ஜி.ஏ 23. சங்கர்லால் பங்கர்

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது, “மகிழ்ச்சி கரை புரண்டோட ராஜகோபாலாச்சாரி, தமது பேனாவை டாக்டர் அம்பேத்கருடன் பரிமாறிக் கொண்டார்.

பம்பாயில் செப்டம்பர் 25 அன்று நடைபெற்ற இந்த மாநாட்டின் கடைசிக் கூட்டத்தில் கீழ்க்கண்டவர்களின் கையொப்பங்களும் பெறப்பட்டன : 1. லல்லுபாய் சாமல்தாஸ் 2. ஹன்சாமேத்தா 3. கே. நடராஜன் 4. காமகோட்டி நடராஜன் 5. புருஷோத்தம்தாஸ் தாசர்தாஸ் 6. மதுரதாஸ்வாசன்ஜி 7. வால்சந்த் ஹீராச்சந்த் 8. கே.என். குன்ஸ்ரு 9. கே.ஜி. லிமாயி 10. பி. கோதண்டராவ் 11. என்.வி. காட்கில் 12. மனுசுபேதார் 13. அவந்தராபாய் கோகலே 14. கே.ஜே. சிட்டாலியா 15. ராதாசாந்த் மாளவியா 16. ஏ.ஆர். பாட் 17. கோலம் 18. பிரதான்.

ஒப்பந்தத்தின் வாசகம் உடனடியாக பிரிட்டிஷ் அமைச்சரவைக்கும், வைசிராய்க்கும் ஒவ்வொரு கட்சியாலும் தனித்தனியாக தந்தி மூலம் அனுப்பப்பட்டது. மேலும், ஒவ்வொரு கட்சியினரும் ஒப்பந்த நகலை தனித்தனியே அளித்தனர். பம்பாய் ஆளுநரின் செயலாளருக்கும் அளிக்கப்பட்டது. அடுத்த நாள் காலை ஒப்பந்தத்தை உறுதி செய்ய பம்பாய்க்கு தலைவர்கள் திரும்பினர். பிற்பகல் 2 மணிக்கு இந்திய வணிகர் சங்க மண்டபத்தில் தலைவர்கள் ஒரு கூட்டத்தை நடத்தினர்.

பூனா ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த நடந்த இந்தக் கூட்டத்தைப் பற்றி "பம்பாய் கிரானிக்கில்' பின்வருமாறு செய்தி வெளியிட்டிருந்தது. பண்டிட் மதன்மோகன் மாளவியா கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தமது உரையில், பூனா ஒப்பந்தம் கையெழுத்தாக உதவிய எல்லோருக்கும் அவர் நன்றி கூறினார். டாக்டர் அம்பேத்கரின் உதவியில்லாமல் இந்த பூனா ஒப்பந்தம் உருப்பெற்றிருப்பது சிரமம் என்று கூறி அவருக்கு சிறப்பு நன்றி தெரிவித்தார். இப்பொழுது இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் முழுப் பொறுப்பும் இந்துக்களின் தோள்களின் மீது உள்ளது.

சர் தேஜ் பகதூர் சப்ரு மற்றும் ராஜகோபாலாச்சாரி ஆகியோர் நிகழ்ச்சியில் உரையாற்றினர். திரு. மதுரதாசும் விஸ்ஸோன்ஜி ஹிம்ஜியும் தீர்மானத்தை முன்மொழிந்தனர். திரு. மதுரதாஸ் விஸ்ஸோன்ஜி, பூனா ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் தீர்மானத்தை முன்மொழிந்தார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

“சாதி இந்து தலைவர்களுக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் தலைவர்களுக்கும் இடையே 1932 செப்டம்பர் 24 அன்று ஏற்பட்ட பூனா ஒப்பந்தத்தை இம்மாநாடு உறுதிப்படுத்துகிறது. மேலும், இந்து சமூகத்திற்குள்ளேயே தனித் தேர்தல் தொகுதிகள் ஏற்படுத்திய பிரிட்டிஷ் அரசு அதன் முடிவைத் திரும்பப் பெறும் என்றும், பூனா ஒப்பந்தத்தை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளும் என்றும் இம்மாநாடு நம்புகிறது. மகாத்மா காந்தி தாம் விதித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தமது உண்ணா நோன்பை முடித்துக் கொள்வதற்கு உதவும் வகையில் காலம் கடப்பதற்கு முன் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அரசை மாநாடு வலியுறுத்துகிறது.

“இந்துக்களில் எவர் ஒருவரையும் அவரது பிறப்பின் காரணமாக தீண்டத்தகாதவர் என்று கருதக்கூடாது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது; இதுவரை அவ்வாறு கருதப்பட்டவர்கள் பொதுக் கிணறு, பொதுப் பள்ளி, பொதுச் சாலைகள் மற்றும் ஏனைய பொது அமைப்புகளைப் பயன்படுத்த மற்ற இந்துக்களைப் போல் இவர்களும் அதே உரிமை பெறுவர். வெகுவிரைவில் இந்த உரிமை சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படும். அவ்வாறு அங்கீகாரம் பெறவில்லை எனில், நாடாளுமன்றம் இயற்றும் முதல் சட்டங்களில் ஒன்றாக இது இருக்கும்.

“தீண்டத்தகாத வகுப்பினர் என்று அழைக்கப்படுபவர்கள் மீது பழக்க வழக்கத்தால் சுமத்தப்பட்டுள்ள, அவர்கள் ஆலயங்களில் நுழைவதைத் தடுப்பது உள்ளிட்ட எல்லா தகுதியின்மைகளையும் விரைவில் நீக்க, அனைத்து சட்டப்பூர்வமான சமாதான வழிகளில் பாடுபட வேண்டியது, எல்லா இந்து தலைவர்களின் கடமையாகும் என்று மேலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.''

திரு. சப்ரு பின்வருமாறு கூறினார் : “தாம் மேற்கொண்ட லட்சியத்திற்காக டாக்டர் அம்பேத்கர் வீரமாகப் போராடினார்.

நாட்டின் எதிர்கால வாழ்வில் ஒரு நல்ல போராளியாக இருக்கப் போவதாகவும் அவர் வாக்குறுதியளித்தார்.'' – வளரும்

ஆதாரம் : பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(1)

இதுதான் பூனா ஒப்பந்தம்!

1. மாகாண சட்ட சபைகளுக்கு பொது வாக்காளர் தொகுதிகளிலிருந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கான இடங்கள் கீழே குறிப்பிட்டுள்ளபடி ஒதுக்கப்படும்: மதராஸ் 30; பம்பாய் – சிந்து உடன் சேர்த்து 15; பஞ்சாப் 8; பீகார் மற்றும் ஒரிசா 18; மத்திய மாகாணங்கள் 20; அசாம் 7; வங்காளம் 30; அய்க்கிய மாகாணங்கள் 20; மொத்தம் 148. பிரதமரின் முடிவில் அறிவிக்கப்பட்ட மாகாண கவுன்சில்களின் மொத்த இடங்களை இந்தப் புள்ளிவிவரங்கள் அடிப்படையாகக் கொண்டுள்ளன.

2. இந்த இடங்களுக்கான தேர்தல் கூட்டு வாக்காளர் தொகுதிப்படி நடைபெறும். எனினும் கீழ்க்கண்ட செயல்முறைப் படி நடக்கும். ஒரு தொகுதியில், பொது வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் எல்லோரும் வாக்காளர் குழுவாக அமைவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு நான்கு வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை – ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற முறைப்படி வாக்காளர் குழாம் தேர்ந்தெடுக்கும். நான்கு பெயர்களில் யார் யார் முதல் கட்டத் தேர்தலில் மிக அதிக எண்ணிக்கை வாக்குகளைப் பெறுகிறார்களோ, அவர்கள் பொது வாக்காளர் தொகுதிகளில் வேட்பாளர்களாக இருப்பர்.

3. மத்திய சட்டப் பேரவையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவம், மாகாண சட்டப் பேரவைகளில் அவர்களுக்குள்ள பிரதிநிதித்துவம் போலவே பிரிவுகள் மேலே உள்ளபடி, கூட்டுத் தேர்தல் தொகுதிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட இடங்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் முதல் கட்ட தேர்தல் முறைப்படி இருக்கும்.

4. மத்திய சட்டப் பேரவை, அந்த சட்டப் பேரவைக்கு பிரிட்டிஷ் இந்தியாவில் அளிக்கப்பட்ட இடங்களில் 18 சதவிகிதம் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கப்படும்.

5. மத்திய மற்றும் மாகாண சட்டப் பேரவைகளுக்கு வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் முதல் கட்டத் தேர்தல் முறை, முதல் 10 ஆண்டுகளுக்குப் பின் பரஸ்பர ஒப்பந்தப்படி பிரிவு 6இல் கூறியுள்ளபடி, அது முன்கூட்டியே ரத்து செய்யப்பட்டாலன்றி முடிவுக்கு வரும்.

6. சட்டக் கூறுகள் 1 மற்றும் 4இல் வழிவகை செய்யப்பட்டுள்ளபடி, ஒதுக்கப்பட்ட சமூகத்தினர் மாகாண மற்றும் மத்திய சட்ட சபைகளில் இடஒதுக்கீட்டின் மூலம் பிரதிநிதித்துவம் பெறும் முறை தொடர்புடைய சமூகத்தினரின் இணக்கத்தின் வாயிலாக முடிவு செய்யும் காலம் வரை நீடிக்கும்.

7. ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு மத்திய மற்றும் மாகாணச் சட்டமன்றங்களுக்கு வாக்களிக்கும் உரிமை லோதியன் குழுவின் அறிக்கையின்படி இருக்க வேண்டும்.

8. ஸ்தல அமைப்புகளுக்கான எந்த தேர்தல்களிலும் பங்கு கொள்வதற்கோ, பொதுப் பணிகளில் நியமிக்கப்படுவதற்கோ ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் உறுப்பினர் என்ற அடிப்படையில் எவருக்கும் எந்தத் தகுதியின்மையும் இருக்காது. இவ்வகையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்க எல்லா முயற்சிகளும் செய்யப்படும். பொதுப் பணிகளில் நியமிக்கப்படுவதற்கு அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகளை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.

9. ஒவ்வொரு மாகாணத்திலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு கல்வி பெறும் வசதிகள் பெறுவதற்கு கல்வி மானியத்திலிருந்து போதுமான தொகை ஒதுக்கப்படும்.

Pin It