பி. எஸ். கிருஷ்ணன், இந்திய அரசின் சமூக நலத் துறை செயலாளராகப் பணியாற்றி, 1990 இல் ஓய்வு பெற்றவர். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு ஆணையராகவும் பணிபுரிந்துள்ளார். மய்ய, மாநில அரசுகளிலும், திட்ட ஆணையத்திலும் – பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினர் நலன் குறித்த பல்வேறு உயர் அதிகாரப் பதவிகளில் சீரிய பங்காற்றியுள்ளார்.

P.S.Krishnan_370வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் மண்டல் அறிக்கை நடைமுறைப் படுத்தப்பட்டதிலும், பவுத்தம் தழுவிய தலித் மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் சட்டம் உருவானதிலும் இவருடைய பங்கு முதன்மையானது.

பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தில் உறுப்பினராக செயல் பட்டுள்ளார். இட ஒதுக்கீட்டுக்கான ஆலோசகராக மய்ய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையில் செயலாற்றியுள்ளார். பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தில் உறுப்பினராகவும், செயலா ளராகவும் இருந்தவர். தற்பொழுது திட்ட ஆணையத்தில் தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் அதிகாரமயமாக்கலுக்கான வழிகாட்டும் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வரைவு செய்து சட்டமாக்கியதில் இவருடைய பங்கு முக்கியமானது. தற்பொழுது இச்சட்டத்தை மேலும் உறுதி செய்து வலுவானதாக்கி செயல்படுத்தும் தேசிய கூட்டணியில் இவர் முதன்மை ஆலோசகராக உள்ளார். தலித் மக்களின் மனித உரிமைகள், தலித் மக்கள் மீதான வன்கொடுமைத் தடுப்பு மற்றும் பட்டியல் சாதி மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துதல் குறித்த பல்வேறு செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான மக்கள் ஆணையத்தில் தலைவராகவும் உள்ளார்.

பி. எஸ். கிருஷ்ணன் அவர்கள், பட்டியல் சாதியினருக்கான சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் பட்டியல் சாதியினருக்கான வளர்ச்சி ஆணையச் சட்டம் என்ற வரைவுச் சட்டத்தை உருவாக்கி, இச்சட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் சிறப்பு உட்கூறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதை உறுதிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது குறித்து

"தலித் முரசு'க்காக அவருடன் நடந்த உரையாடலில் இருந்து சில பகுதிகள் :

சந்திப்பு : இனியன் இளங்கோ

திட்டக்குழுவின் செயல்பாடுகளைச் சொல்லுங்கள்.

நம் நாடு விடுதலை பெற்ற பிறகு, நமது நாடு மற்றும் நாட்டு மக்களின் முன்னேற்றத்தை திட்டமிடுவதற்காக,1950 ஆம் ஆண்டு திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது. நிதி அமைச்சகத்திட மிருந்து அடுத்த அய்ந்தாண்டுகளுக்கான மத்திய அரசின் நிதி வருவாய் வழிகளையும் திட்ட ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இதில் திட்டமிடப்படாத செலவுகளை – சம்பளங்கள், முந்தைய திட்ட காலங்களில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்கான செலவுகள், கட்டமைப்புக்கான பராமரிப்பு செலவுகள், கடன்களுக்கு வட்டி கட்டுதல் போன்றவை – இத்திட்டக்கணக்கில் வராது. இவ்வருவாய் அளவுகள் நிதி அமைச்சகத்திற்கும், திட்ட ஆணையத்திற்கும் இடையே கருத்துப் பரிமாற்றம் செய்து உறுதி செய்யப்படுகிறது. ஆகவே, திட்ட ஆணையம் என்பது திட்டமிடுவதற்கு கிடைக்கக்கூடிய நிதி வருவாய் வழிகளை கணக்கில் கொண்டு இரு செயல்பாடுகளை மேற்கொள்கிறது.

1. திட்ட ஆணையம் பல்வேறு மத்திய அமைச்சகங்களோடு கலந்தாலோசித்து, அந்தந்த அமைச்சகங்களுக்கான திட்டங்களை வரையறுக்கிறது. 2. திட்ட ஆணையம் மாநில அரசுகளோடு கலந்தாலோசித்து, மாநில அரசுகளின் பல்வேறு கூடுதலான வருவாய் தரும் வழிகளை கணக்கில் கொண்டு அதோடு, "காட்கில் சூத்திரம்' அடிப்படையில் மத்திய, அரசு மாநில அரசுகளுக்கு தரும் நிதிகளையும் கணக்கில் கொண்டு – திட்ட ஆணையம் மாநில வளர்ச்சித் திட்டங்களை உறுதி செய்கிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் 5 ஆண்டுத் திட்டமானது, ஆண்டு குறிக்கோள்களுடன்கூடிய திட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. மத்திய அரசுக்காக திட்ட ஆணையத்தால் தயாரிக்கப்படும் ஆண்டுத் திட்டமானது, ஒவ்வொரு ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் ஒரு பகுதியாக அமைகிறது. திட்ட ஆணையம் ஆண்டுத் திட்டங்களையும், 5 ஆண்டுத் திட்டங்களையும் உருவாக்குகிறது. இதன் அடிப்படையில், மத்திய அரசும் நிதி அமைச்சகமும் ஓராண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயாரிக்கின்றன.

திட்ட ஆணையம் நாடாளுமன்றத்தின் மீது அதிகாரம் செலுத்துகிறதா?

 இவ்வாறு கூறுவது தவறு. நிதி அமைச்சகம், திட்ட ஆணையத்தோடு கலந்தாலோசித்துதான் 5 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயாரிக்கிறது. ஓராண்டுக்கான நிதிநிலை அறிக்கையும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, நிதிநிலை அறிக்கை குறித்து வாக்களிக்கப்படுகிறது. நிதிநிலை அறிக்கையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் எனில், எதிர்க்கட்சிகளும் அதைத் தீர்மானங்கள் மூலம் தெரிவிக்கலாம். நிதிநிலை அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் போதுமான வாக்குகள் கிடைக்காமல் தோல்வி அடைந்தால், மத்திய அரசே அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டது என்று பொருளாகும். நாடாளுமன்ற வாக்களிப்பில் ஒரு நிதிநிலை அறிக்கை தோல்வியுற்ற பிறகு, எந்த அரசும் அதிகாரத்தில் தொடர முடியாது.

திட்ட ஆணையம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அமைப்பா?

இல்லை – இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஓர் அமைப்பேயாகும். இருப்பினும், நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் கீழ், சட்டத்தின் செயல்பாடுகளைக் கொண்ட அதே நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அமைப்புகள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, தேர்தல் ஆணையம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஓர் அமைப்பாகும். திட்ட ஆணையத்திற்கு ஒரு குறிப்பிட்ட வழிமுறைப்படி உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட பிறகு திட்டக்குழு உறுப்பினர்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். திட்டக்குழு ஆணையமானது, நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. நிதிநிலை அறிக்கையின் மீது வாக்களிக்கும் நாடாளுமன்றத்தின் உச்சபட்ச அதிகாரத்தையும் திட்டக்குழு ஆணையம் அழிக்க முடியாது.

நிதிநிலை அறிக்கைக்கு இரண்டு பகுதிகள் உண்டு. திட்டமிடப்படும் நிதிநிலை அறிக்கை; திட்டமிடப்படாத நிதிநிலை அறிக்கை. கடன்களுக்கான வட்டிகளை கட்டுவது, ராணுவச் செலவுகள், கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளின் பராமரிப்புச் செலவுகள் போன்றவை திட்டமிடப்படாத நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும். நிதிநிலை அறிக்கையின் 3 இல் 1 பங்கு திட்டமிடப்படாத நிதிநிலை அறிக்கையாகும். வளர்ச்சிப் பணிகளை கவனிக்கும் அமைச்சர்கள், திட்ட ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினர்கள் ஆவர். பிரதமரே திட்ட ஆணையத்தின் தலைவர்.

நமது நாடு நாடாளுமன்ற ஜனநாயக முறையைப் பின்பற்றுகிறது. இதில், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால் ஆட்சி செய்யும் கட்சி அல்லது கூட்டணி உருவாக்கப்படுகிறது. திட்ட ஆணையம், அதிகாரத்தில் இருக்கும் அரசின் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டது. மேலும், திட்ட ஆணையம் நாடாளுமன்றத்திற்கு பொறுப்பானது. ஒரு பொறுப்பான அரசு கொள்கைகளை வகுக்கும் முன்பு, மக்களோடு கலந்தாலோசிக்க வேண்டும். ஆனால், அரசின் கொள்கைகள் மக்களின் நலன்களுக்கு எதிராக இருந்தால், அந்த அரசின் கட்சி மற்றும் கட்சிகள் அடுத்த தேர்தலில் வாக்குகளை இழந்து, அரசையும் இழக்க நேரலாம். இவ்வாறுதான் நாடாளுமன்ற ஜனநாயக முறை செயல்படுகிறது.

திட்ட ஆணையம் தாராளமயமாக்கல், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் போன்ற அரசின் கொள்கைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் ஆகிய கொள்கைகளை 1991 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு தன்னுடைய கொள்கைகளாக அறிவித்திருக்கிறது. சில நேரங்களில் அரசானது, ஒடுக்கப்பட்ட, வாய்ப்புகளை இழந்த மக்களின் நலன்களை அலட்சியப்படுத்துகிறது. அப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் அமைப்பு ரீதியாகத் திரண்டு, அவர்களின் நலன் குறித்த கொள்கைகளை செயல்படுத்தவும், கொள்கைகளை மாற்றவும் அரசை வலியுறுத்தலாம். ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை அரசு தொடர்ந்து புறக்கணித்தால், அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் அதிருப்தியுற்ற மக்களின் எதிர்ப்பை அடுத்த தேர்தலில் சந்திக்க வேண்டியிருக்கும். சில துறைகளில் ஒரு பொதுவான தேசிய கொள்கையை வகுப்பது தேவையாக இருக்கிறது.

பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் முன்னேற்றத்திற்காகவும், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளுக்கு அவசியமான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்காகவும்– தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வந்த பல்வேறு அரசுகளும், பல்வேறு திட்ட ஆணையங்களும் அலட்சியப்படுத்தியயே வந்திருக்கின்றன. மருத்துவம், சுகாதாரம், கல்வி போன்ற துறைகளுக்கும், பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மதச் சிறுபான்மை சமூகத்தினரிடையே உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் முன்னேற்றத்திற்காகவும் மிகக் குறைந்தளவே பணம் செலவழிக்கப்படுகிறது. மேலும், இம்மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டமிட்ட, முழுமையான, பன்முகத்தன்மை வாய்ந்த திட்டமிடுதலும் இல்லை. சுகாதாரம், மருத்துவம், கல்வி ஆகிய துறைகளைவிட மற்ற துறைகளுக்கே அரசு அதிகமாக செலவிடுகிறது. இவற்றில் சில நியாயமானதாகவும் மற்றவை சுயநல, பேராசை பிடித்த, அதிகாரம் மிக்க ஆதிக்க வகுப்பினரின் நலன்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.

இருவகையான நலன்களே அரசு மற்றும் திட்ட ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் முடிவுகளை நிர்ணயிக்கின்றன. இதில் ஒரு வகையானது, பேராசை மற்றும் சுயநலன்களின் அடிப்படையாக, சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. சில நலன்கள், மக்கள் மற்றும் நாட்டிற்கு தேவையான, நியாயமானவையாக இருக்கின்றன. இந்நிலையில், புறக்கணிக்கப்பட்ட மக்கள், அமைப்பு ரீதியாகத் திரண்டெழுந்து ஆளும் கட்சிகளையும் எதிர்க்கட்சிகளையும் தங்கள் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்க வற்புறுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஒரு காலத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்திய அரசுப் பணியிலும், வட இந்திய மாநிலங்களிலும் இடஒதுக்கீடே இல்லாமல் இருந்தனர். ஆகவே, பிற்படுத்தப்பட்ட மக்கள் அணிதிரண்டு, தங்கள் கோரிக்கைகளை விளக்கி அப்போதிருந்த முக்கிய எதிர்க்கட்சியினரிடம் ஆதரவு திரட்டினர். அந்த எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தபோது, அது பிற்படுத்தப்பட்ட சாதிகள் இருப்பதை ஒப்புக்கொண்டு, அவர்களுக்கு 1990 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு வழங்கியது.

பட்டியல் சாதியினரின் பலவீனம் என்னவென்றால், அவர்களால் ஓரணியில் திரள முடியவில்லை. பட்டியல் சாதியினர் பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலையில் இருக்கின்றனர். அவர்களில் சிலர், பாபாசாகேப் அம்பேத்கர் 1943 முதல் உருவாக்கி, இன்று வரை நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு மற்றும் "போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்' மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இவ்வாறு பட்டியல் சாதியினரில் படித்த வர்க்கத்தினர் உருவாகி இருந்தாலும், இப்படித்த வர்க்கம், முன்னேறிய சாதிகளில் உள்ள படித்த வர்க்கத்தைவிட மிகச் சிறியது. பட்டியல் சாதியினரில் இருக்கும் படித்த வர்க்கம், பட்டியல் சாதியினரின் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் அரசியல் சாசன அடிப்படையிலான அதிகாரப்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடைய செயல்பட வேண்டும்.

பட்டியல் சாதியினர் அரசின் பல்வேறு கவர்ச்சிகர திட்டங்களுக்கு மயங்கிவிடக் கூடாது. மாறாக, தங்கள் முன்னேற்றத்திற்கான உறுதியான செயல்பாடுகளை அவர்கள் கேட்க வேண்டும். அவர்களின் குறிக்கோள்களில் முக்கியமான ஒன்று, கிராமத்தில் உள்ள தலித் மக்களுக்கு விவசாய நிலங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது. இது, தேசிய கொள்கையின் முக்கியமான அங்கமாகும். ஆனால், இன்றுவரை இது நிறைவேற்றப்படவில்லை. இத்தகைய நிலையான குறிக்கோள்களின் அடிப்படையிலேயே தலித் மக்களும் பழங்குடியினரும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.

உண்மை என்னவெனில், பட்டியல் சாதியினருக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறிதளவு நிலம்கூட, நீர்ப்பாசன வசதியின்றி இருக்கிறது. எனவே, இம்மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நிலங்களிலும் நீர்ப்பாசன வசதி செய்து தரப்படவேண்டும் என்பது ஒரு முக்கிய கோரிக்கையாக இருக்க வேண்டும். பட்டியல் சாதியினர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒருவருக்கொருவர் ஆதரவு தந்து தத்தம் வளர்ச்சிக்காகப் பாடுபடவேண்டும். பட்டியல் சாதியினரின் ஆதரவு இல்லை எனில், பிற்படுத்தப்பட்ட சாதியினர் தங்களுக்கு வேண்டிய வற்றைப் பெற்றுவிட முடியாது என்பதை உணர வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்கள் தலித் மக்களோடு நட்புறவுடன் செயல்பட்டு, தீண்டாமைக்கும், வன்கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஒவ்வொரு கட்சியும் அதிகாரத்திற்கு வர விரும்புகிறது. அது அதிகாரத்திற்கு வர, அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே அவை செய்கின்றன. அவ்வாறு அதிகாரத்திற்கு வர விரும்புகின்றவர்கள், உச்சநிலையில் இருக்கும் சில மனிதர்களை திருப்தி செய்து, அடித்தட்டு மக்களுக்கு ரொட்டித் துண்டுகளை மட்டுமே வீசுவார்கள். அரசியல் ரீதியான விருப்பம் இல்லாததால்தான் ஒடுக்கப்பட்ட வகுப்பினரான பட்டியல் சாதியினரின் நலன்கள் அரசால் ஒதுக்கப்படுகின்றன என்று குற்றம் சாட்டப்படுகிறது. இது, முற்றிலும் சரியானது அல்ல. அரசு சில விஷயங்களில் அரசியல் ரீதியான உறுதியைக் காட்டுகிறது.'' பட்டியல் சாதியினரில் உள்ள அறிவுஜீவிகள் இம்மக்களுக்கான கோரிக்கைகளை தெளிவாகக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் போராடினால் – ஜனநாயக சமூகத்தில் எந்த கட்சியினரும் அவர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்த இயலாது. ஆனால், இன்று அது போதுமான அளவில் நடைபெறவில்லை.

பட்டியல் சாதியினருக்கான சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் பட்டியல் சாதியினருக்கான வளர்ச்சி ஆணைய சட்ட வரைவு குறித்து தங்கள் கருத்து என்ன?

அரசியல் கட்சிகளும், மய்ய அரசும், மாநில அரசுகளும் எந்தக் கட்சி கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் நாட்டின் நிதி நிலை திட்டத்தின் ஒரு பகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடி இன மக்கள் தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப பட்டியல் பழங்குடி இனத்தவரின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பது, அரசியல் சாசனத்தின் கடமை. இது, வளர்ச்சி மற்றும் நல்வாழ்வின் அனைத்து கூறுகளிலும் பட்டியல் சாதியினருக்கும் மற்றும் பழங்குடியினத்தவருக்கும், முன்னேறிய சமூகத்தினருக்கும் இடையே உள்ள இடைவெளியை விலக்கி சமத்துவத்தை உண்டாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதற்காக, இரு கருவிகள் உருவாக்கப்பட்டன. 1. பட்டியல் இனத்தவருக்கான சிறப்பு உட்கூறுத் திட்டம் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு உட்கூறு துணைத் திட்டம் 1970 களின் இறுதியில் உருவாக்கப்பட்டன. சிறப்பு உட்கூறு திட்டம் 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மய்ய, மாநில அரசுகளால் உருவாக்கப்படுகிறது. ஆனால், தொடக்கக் காலங்களில் சிறிது முன்னேற்றத்திற்குப் பிறகு மத்திய, மாநில அரசுகள் இரண்டு வளர்ச்சிக் கருவிகளையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டன.

சிறப்பு உட்கூறுத் திட்டம் பட்டியல் சாதியினரின் விழுக்காட்டிற்கு ஏற்ப வழங்கப்படவேண்டும். ஆனால், அவ்வாறு வழங்கப்படுவதில்லை. அதோடு, மிகவும் தரம் குறைந்த வகையில் வெளிப்படைத் தன்மையின்றி தவறாகப் பயன்படுத்துவதற்கும் நடத்தப்படுவதற்கும் வாய்ப்பாக தற்பொழுது இருக்கிறது.

இது தவிர, சிறப்பு உட்கூறு திட்ட நிதி சற்றும் பொருத்தமில்லாதவர்களுக்காக திருப்பிவிடப்பட்டு செலவிடப்படுகிறது. இது, எல்லா மத்திய, மாநில அரசுகளிலும் நடக்கிறது. சிறப்பு உட்கூறுத் திட்டம் மற்றும் துணைத் திட்டத்தின் நோக்கமே வளர்ச்சி மற்றும் நல்வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் முன்னேறிய சாதியினரின் நிலையை எட்டுவதே ஆகும். இதை நான் உறுதியுடன் கூற முடியும். இத்திட்டத்தை இந்நோக்கத்திற்காக கருத்தாக்கம் செய்து உருவாக்கினேன். அப்பொழுது நான் உள்துறை அமைச்சகத்தில் பட்டியல் சாதி, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான நல்வாழ்வு மற்றும் வளர்ச்சிக்கான இணைச் செயலாளர் என்ற புதிதாக உருவாக்கப்பட்ட பதவியை வகித்து வந்தேன்.

தற்பொழுது ஒருபுறம் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கும் மறுபுறம் முன்னேறிய சாதியினருக்குமிடையே வளர்ச்சியில் மிகப்பெரிய இடைவெளி நிலவுகிறது. இந்த இடைவெளி மேலே செல்லச் செல்ல அதிகமாகிறது. எடுத்துக்காட்டாக, கல்வி ஏணியின் முதல் நிலையிலேயே எழுத்தறிவில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இந்த இடைவெளி உயர்நிலைப் பள்ளியில் இன்னும் அதிகமாகிறது. இந்நிலை களையப்படவேண்டும். இது பட்டியல் சாதியினருக்கான சிறப்பு உட்கூறுத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். இலவசங்களையும், தொலைக்காட்சிகளையும், தங்கத் தாலிகளையும் வழங்கிவிட்டு அதை சிறப்பு உட்கூறுத் திட்டம் என்று அழைப்பதன் மூலம் இக்குறிக்கோளை எட்டிவிட முடியாது. பட்டியல் சாதி மக்களை பொருளாதார ரீதியில் விடுதலை செய்து, கல்வியின் ஒவ்வொருநிலையிலும் முன்னேறியவர்களாக வளரச் செய்வது, அவர்கள் வாழும் இடங்களை மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளுடன் மாற்றுவது, தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளை ஒழிப்பது ஆகிய நோக்கங்களை கொண்ட திட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் நிதித் திட்டங்களே சிறப்பு உட்கூறு திட்டத்தில் இடம் பெற வேண்டும். அத்தகைய குறிக்கோள்கள், திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளே சிறப்பு உட்கூறு திட்டத்தில் நியாயமாக இடம்பெற முடியும். பழங்குடியினருக்கும் இதுவே பொருந்தும்.

இத்தகைய குறிக்கோள்களை அடையாமல் மாநில, மத்திய அரசுகள் ஏதோ சில புள்ளிவிவரங்களை காண்பித்து பட்டியல் சாதி மக்களுக்கு அதிகம் செய்து விட்டதாக கூறிக்கொள்கின்றன. அவர்கள் மேம்பாலம், சாலை கட்டுவதற்கான செலவுகளையும் இத்திட்டத்தில் சேர்ப்பதுண்டு. பட்டியல் சாதி தவரும் அந்த மேம்பாலங்களில் நடக்கிறார்கள் என்று பொருத்தமற்ற, அறிவு சார்பற்ற வாதத்தை வைக்கின்றனர். இதை ஏற்க முடியாது. சிறப்பு உட்கூறு திட்டத்தில் கீழுள்ள நிதி கீழ்க்கண்ட குறிக்கோள்களுக்குத்தான் செலவிடப்படமுடியும். அவை, பட்டியல் சாதி மக்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் விடுதலை, முன்னேறிய சாதியினருக்கு இணையாக அனைத்து நிலைகளிலும் சமநிலைப் பெறுவது, வாழத்தக்க வீடுகளை அனைத்து வசதிகளுடன் பெறுவது, பட்டியல் சாதி மக்களின் பாதுகாப்பு மற்றும் சுயமரியாதையை மேம்படுத்துவது.

இத்திட்டத்தின் அரசியல் சாசன நோக்கை பலப்படுத்துவதற்காக 1983 ஆம் ஆண்டு முதல் ஒரு புதிய நடைமுறையை உருவாக்கினேன். இதை நான் ஆறாவது அய்ந்தாண்டு திட்டத்தின் அனுபவத்திற்கு பிறகும் ஏழாவது அய்ந்தாண்டு திட்டத்திற்கு முன்பாகவும் தயாரித்தேன். நான் இந்த செயல்முறையை 1996 ஆம் ஆண்டு தலித் அறிக்கையில் வெளியிட்டு அதை தேசிய சமூக நிதிக்கான செயல்பாட்டு மன்றத்தின்கீழ் கருத்தாக்கம் செய்து பொதுத் தளத்தில் வைத்து, பல்வேறு அரசியல் கட்சிகளுடன் விவாதம் செய்தேன்.

– அடுத்த இதழிலும்

Pin It