1870 மற்றும் 1880–களில் தொடர்ந்து எழுந்த விவசாயப் புரட்சிகளாலும், நாடெங்கும் பரவியிருந்த அத்தகைய விவசாய அமைப்புகள், பிரிட்டிஷ் மற்றும் இந்திய சுரண்டல்காரர்களை – தங்களின் சமரசமற்ற புரட்சிகர எழுச்சியால் திருப்பி அடிக்க முற்பட்ட நிலையிலும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள பிரிட்டிஷ் அரசு பாதுகாப்பான முறையில் உருவாக்கிய ஓர் அமைப்பே இந்திய தேசிய காங்கிரஸ் என சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல கம்யூனிச சிந்தனையாளர்களும், இந்த கருத்தினால் ஊக்கம் பெற்று, இது குறித்து பல கட்டுரைகள் எழுதவும், சமரசமற்ற புரட்சிகர ஆற்றலுக்கான தகுதி விவசாயிகளுக்கு மட்டுமே உள்ளது என அறிவிக்கவும் முற்பட்டனர். ஆனால், பரிதாபகரமாக, இந்த ஆற்றல், இந்திய இந்து கம்யூனிஸ்டுகளால் அழிக்கப்பட்டது.

Karl-Marx-flickr_370கம்யூனிஸ்டுகளால் நடத்தவும் நிர்வகிக்கவும் படுகின்ற கிராம பஞ்சாயத்து முறையில், விவசாயிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுள்ளனர். கிராமப்புற வங்காளத்திலும், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற புறநகர்ப் பகுதிகளிலும் எவரும் தங்கள் மனதைத் திறந்து கருத்தை முன்வைக்கும் சுதந்திரம் இல்லை. ஊழல், குற்றச் செயல்கள், ஒழுக்கமற்ற வாழ்க்கை முறை, வேலை வழங்குவது என்ற பெயரில் கட்டாய விபச்சாரம், பாலியல் தொழில், வறுமை, கட்டுப்பாடற்ற அறியாமை, மூடநம்பிக்கைகள் மற்றும் விதியின் மீதான நம்பிக்கை, பெரும் எண்ணிக்கையில் கிராமப்புறங்களில் மதுக் கடைகளை திறந்தது ஆகியவற்றினால் அவர்களின் வாழ்வு முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ளது.

அரியானா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பீகார் போன்ற இடங்களில் உள்ளதைப் போல, வங்காளத்தின் விவசாயிகள் வலுவான நிலையில் இல்லை. வங்காளத்தின் விவசாய சமூகத்தில் உள்ள தனித்தன்மை என்னவெனில், அது பெரும்பான்மையாக தீண்டத்தகாத மக்களை, சாதியப் படிநிலையில் கீழே உள்ள சூத்திரர்களை, பழங்குடியினரை மற்றும் முஸ்லிம்களை கொண்டதாக உள்ளது. சமூகத்திற்கு உணவு தானியங்களை வழங்கும் பெரும் பொறுப்பினையும், அதற்காக பெரும் வேதனைகளையும் சுமக்கும் வங்காளத்தின் விவசாயிகள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுவது என்பது, உலக விவசாயிகள் வரலாற்றில் அறியப்படாத தனித்தன்மையுடைய கூறாகும்.

பிற மாநிலங்களில் உள்ள விவசாயிகள் முற்றிலுமாக சுரண்டப்பட்டு எல்லாவற்றையும் இழந்த நிலையில், தங்கள் வேதனைகளை வெளிப்படுத்த பயன்படுத்தும் எதிர்ப்பு வடிவமாக தற்கொலையை பயன்படுத்துகின்றனர். ஆனால், அவ்வாறு தற்கொலை செய்து கொள்வதற்குகூட வறுமையில் சிக்கிக் கொண்டுள்ள வங்காளத்தின் விவசாயிகளுக்கு துணிச்சலும் ஊக்கமும் அளிக்கும் சூழலைத் தர பார்ப்பன கம்யூனிஸ்டுகள் தவறிவிட்டனர்.

புரட்சிகர இந்து மார்க்சிய கட்சிகளுக்கிடையே ஒரு தீவிரவாத பிரிவு உள்ளது. அதிதீவிர புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்.) என்று அது புகழ்பெற்றுள்ளது. அவர்கள் நக்சலைட்கள் என்று பரவலாக அறியப்படுகிறார்கள். வடக்கு வங்காளத்தின் டார்ஜிலிங், ஜல்பாய்குடி, கொச்பிகார் மற்றும் ராய்கன்ஞ் தொகுதிகளை உள்ளடக்கிய நக்சல்பாரி பகுதியில்தான் இந்த இயக்கம் வேரூன்றியது. பெரும் எண்ணிக்கையில் தீண்டத்தகாதவர்களும், தாழ்த்தப்பட்ட சாதி மக்களும் வசிக்கக் கூடிய பெரும்பாலும் பழங்குடியினப் பகுதியாக அப்பகுதி உள்ளது. இயற்கை வசதிக்காகவும் அரசியல், பொருளாதார ஆதாயங்களுக்காகவும் அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து பழங்குடியினரும் – அதிகாரப்பூர்வ சமூகத்தால் பழங்குடிகளாக அங்கீகரிக்கப்படவில்லை. மதம் மாறிய முஸ்லிம்களும், கிறித்துவர்களும், பவுத்தர்களும் அங்கு பெரும் எண்ணிக்கையில் காணப்படுகின்றனர்.

இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் அப்பட்டமான வறுமையில் வாழ்கின்றனர். அப்பகுதியில் உள்ள மக்களில் 97 விழுக்காட்டினர் அதன் தொல்குடிமக்களாவர். அவர்கள் உற்பத்தி சாதியினராகவோ, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த நிலமற்ற கூலிகளாகவோ, மீனவர்களாக, கைவினைக் கலைஞர்களாக மற்றும் சிறு விவசாயிகளாக உள்ளனர். அவர்கள் சமூகத்தின் கீழ் நிலையை சேர்ந்தவர்களாக உள்ளனர். அரசியல் தலைமையும், அதன் காரணமாக பொருளாதார ஆதிக்கமும் சமூக உயர்நிலையும் பார்ப்பனர்களின் கைகளிலேயே முழுவதுமாக இருந்தது. மிகத் தீவிரமான கம்யூனிஸ்ட் – நக்சலைட் இயக்கங்கள் அங்கு இருந்தபோதும் இந்நிலையே தொடர்ந்தது.

"இந்தியாவின் 543 முகங்கள்' என்ற தனது நூலில் எச்.டி.சிங் நடத்தியுள்ள அரசியல் ஆய்வில், அவர் இந்த நான்கு மாவட்டங்களின் மக்கள் தொகையில் இந்து அல்லாதவர்களின் விகிதாச்சாரம் மிக அதிகமாக உள்ளதையும், இப்பகுதியில் நக்சல்பாரி இயக்கத்தின் ஊடாக செயல்படும் கம்யூனிஸ்ட் இயக்கம் பார்ப்பனத் தலைவர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் இந்து அல்லாதவர்களின் மக்கள் தொகை (பிற்படுத்தப்பட்ட / சூத்திரர்கள் தவிர), 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 58.9 விழுக்காடாகும். உண்மையில் அவர்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 68 விழுக்காட்டிற்கு குறைவாக இருக்க முடியாது.

மிக நுண்ணிய எண்ணிக்கையில் உள்ள பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே வங்காளத்தின் ஜனநாயக மற்றும் குடியரசு இயக்கங்களும் உள்ளன. மாநிலத்தின் மக்களின் பெயரால் நடக்கும் அரசை அதற்கு வாக்களித்தவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதையே இவ்வாய்வு தெளிவாக அறிவிக்கிறது. அத்துடன் இப்பகுதியில் தேர்தல் நடக்கத் தொடங்கிய காலகட்டம் தொடங்கி, நாடாளுமன்றத்திற்கான இடங்களில் பார்ப்பனர்களே பெருவாரியாக தேர்ந்தெடுக்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆளும் சாதியை சேர்ந்த தனித்துவமான ஆளுமையை உடைய தலைவர்களான சாரு மஜும்தார், கனு சன்யாள், அசிம் சாட்டர்ஜி (தோழர் காகா), விநோத் மிஸ்ரா, திபங்கர் பட்டாச்சார்யா போன்றவர்கள், சமூகத்தின் கீழ் நிலையில் உள்ள தலித்துகளை, மார்க்ஸ் மற்றும் மாவோவின் பெயரால் விடுதலை செய்து, அவர்களை இந்தியாவின் ஆளும் வர்க்கமாக மாற்ற வந்துள்ளனர். சீனாவின் தலைவரே தங்களுக்கும் தலைவர் என்று அவர்கள் அறிவித்தனர். பிற்காலத்தில், அசிம் சாட்டர்ஜி எவ்விதத் தயக்கமுமின்றி, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசில் இடம் பெற்று 2006 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.

சாதாரண காவலர்களையும், வர்க்க எதிரிகள் என அடையாளம் காட்டப்படும் சாதாரண தனி நபர்களையும் அழித்தொழிப்பதன் மூலம் – நிரந்தர ஆட்சியாளர்களிடமிருந்து ஆட்சி செங்கோலைப் பறித்து விடலாம் என்று எளிமையான, ஒன்றிமறியாத, அறியாமையில் உள்ள பழங்குடியினரை அவர்கள் நம்ப வைத்துள்ளனர். எனினும் கூர்க்கா முக்தி மோர்ச்சா மற்றும் கமதாபூர் விடுதலை முன்னணி போன்றவை, தனி மாநிலத்திற்கான மக்களின் ஜனநாயகப்பூர்வமான கோரிக்கைகளை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது. கம்யூனிஸ்டுகளின் 30 ஆண்டு கால தடையற்ற நல்ல ஆட்சிக்குப் பிறகு, சி.பி.எம். தலைவர்கள் டார்ஜிலிங் பகுதியை விட்டு வெளியேற வேண்டுமென தாக்கீது கொடுக்கப்பட்டுள்ளது என்பது எத்தனை வேடிக்கையான உண்மை?

இந்த பழங்குடியினர் பகுதிகள், தகித்துக் கொண்டிருக்கும் புரட்சியின் களமாகவே எப்போதும் இருந்துள்ளன. இந்தியாவின் தொல்குடி மக்கள், இந்து சமூகத்தின் சாயலிலிருந்து விலகியே நின்றிருந்தனர். அவர்கள் பார்ப்பனர்களை வெறுத்தனர். ஆரியமயம், இந்துமயம் மற்றும் சமஸ்கிருத மயம் ஆகியவற்றின் பெயரில் அடிமைப்படுத்துவதன் கீழ் வர அவர்கள் மறுத்துவிட்டனர். மாறாக, பிற மதங்களான கிறித்துவம் அல்லது இஸ்லாம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதன் மூலம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளின் கீழ் அடைக்கலம் புகுந்தனர். ஜனநாயகக் கட்டமைப்பில், நாடாளுமன்ற வழிமுறையில், மதம் மாறிய கிறித்துவப் பழங்குடியினர், தலித் பெரும்பான்மையினருடன் இணைந்து மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர்.

தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும், வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் அம்பேத்கரியத்தின் பாதிப்பிலிருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப, இந்து கம்யூனிஸ்டுகள் "நக்சலிசம்' என்ற பெயரில் "பழங்குடியினர் முன்னணி'யை தொடங்கினர். அதனால்தான் இந்த கம்யூனிஸ்டுகள், இந்து அல்லாத பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழக்கூடிய பகுதிகளுக்கு மட்டுமே குதித்துக் கொண்டு செல்கின்றனர். அதை அவர்கள் "நக்சலிசம்' அல்லது நக்சல் இயக்கம் என்று அழைக்கின்றனர். இதன் விளைவாக, அவர்கள் பின்பற்றும் இசம் அல்லது கருத்தியல் குறித்து குறைந்த அக்கறையே கொண்டுள்ளனர். அது, மாவோயிசமா அல்லது மார்க்சிசமா என்பதைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. ஆனால், அது தொடங்கிய இடமான நக்சல்பாரி என்பதை குறித்து அக்கறை கொண்டுள்ளனர்.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் தொல்குடி மக்களின் புரட்சிகர உணர்வை, ஆளும் சாதியின் உறுப்பினர்களான மநுவாதி மார்க்சிஸ்டுகள் வெற்றிகரமாக அழித்துவிட்டனர். நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்து, அப்பாவி தனிநபர்களை கொன்றும், அரசு உடைமைகளை அழித்தும் அரசுக்கு எதிரான குற்றச் செயல்களைப் புரிந்த பழங்குடி மக்கள், அரசின் கொடூரமான அச்சுறுத்தலின் கீழ் எளிதாக வந்துள்ளனர். "உலக அனாதைகள்' குற்றம் மற்றும் தண்டனையின் பக்கம் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை காக்கவோ, வழிகாட்டவோ எவரும் இல்லை. இறுதியில் அவர்கள் விரக்தியின் பிடிக்குள் சென்றுவிட்டனர்.

பழங்குடி மக்களை நக்சலிசத்துக்கு கொண்டு செல்லும் போது, ஆளும் சாதி கம்யூனிஸ்டுகள், வெற்றிகரமாக அவர்களை அம்பேத்கரிய அரசியல் இயக்கங்கள் மற்றும் கிறித்துவத்துக்கு மாறும் மத இயக்கங்களிடமிருந்தும் விலக்கி வைத்தனர். எனினும், அம்பேத்கர் குற்றம் சாட்டியதைப் போல, கிறித்துவம், கிறித்துவர்கள் அரசியல் உணர்வுடன் இருப்பதை ஊக்குவிக்கவில்லை. மேலும், அனைத்து தலித் பிரிவுகளை ஒருங்கிணைப்பது அல்லது அனைத்து தொல்குடி உற்பத்தி சாதிகளை ஒருங்கிணைப்பது என்பது, நக்சல் இயக்கத்தின் உருவாக்கத்தால், மேலும் கடினமான செயலாகியது. இந்திய உழைக்கும் மக்களின் கனவை சிதைத்து, ஒற்றுமையைக் குலைத்து எழுந்து வரும் தலித் எழுச்சிக்கு நக்சலைட் இயக்கம், பெரும் சரிவை ஏற்படுத்தியது.

பழங்குடியினர் மற்றும் தீண்டத்தகாத மக்களிடையே மதமாற்ற இயக்கங்கள் பெரும் வேகத்துடன் செயல்பட்ட சிறீககுளம், நக்சல்பாரி, தெப்ரா, சந்தல் பர்கானாஸ், வட பீகாரின் கிராமப்புறங்கள், ராஞ்சி போன்ற இடங்களையே நக்சல்பாரி பார்ப்பனத் தலைவர்கள் தங்களுடைய செயல்பாட்டிற்கு தேர்ந்தெடுத்தனர். பகுதி பகுதியாக வேலை பார்ப்பது என்பது, மார்க்சிய கருத்தியல் அல்ல. இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான சிக்கல்களுக்கு எதிராக உலகளவில் போராடும் கருத்தியல் அது. பின் எவ்வாறு அது சில இனக்குழுக்களுக்கிடையே மட்டும் பணியாற்ற முடியும்? ஏன் பிறர் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. கிறித்துவத்திற்கு மட்டும் பெரும் எண்ணிக்கையில் பழங்குடியினர் மதம் மாறிய பகுதிகள் மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன?

28.5.1995 அன்று "உங்கள் மார்க்ஸ் பற்றி' என்ற தலைப்பில் "இந்துஸ்தான் டைம்ஸ்' வெளியிட்ட செய்தியில் ஆந்திரப் புரட்சியாளர்கள் மார்க்ஸை மறுவாசிப்பு செய்யத் தொடங்கியிருக்கின்றனர் என்று வெளிவந்தது. அம்பேத்கரியம் மற்றும் தலித் பகுஜன் இயக்கம் அம்மாநிலத்தில் பரவியதைத் தொடர்ந்தே இது நேர்ந்திருக்கிறது என்பது வெளிப்படையானது. அம்பேத்கரியத்தை தோற்கடிக்க மநுவாதிகளுக்கு இருந்த ஒரே ஆயுதம், இந்துமயப்படுத்தப்பட்ட மார்க்சியமே ஆகும். "மார்க்சியம் எச்சரிக்கை' என்று மார்க்ஸே எழுதியிருப்பதை நாம் மறக்க இயலாது. "மநுவாதி மார்க்சியர்கள் எச்சரிக்கை' என்று கூற வேண்டிய நேரம் தற்பொழுது வந்துள்ளது.

2008 புத்தாண்டு பிறந்த நேரத்தில் மகாத்மா காம்ரேட் ஜோதி பாசு அவர்கள் நீண்டகாலத்திற்கு பிறகு ஒரு வழியாக ஒரு வெளிப்படையான விளக்கத்தை அளித்தார். "குழப்பம் எங்கே உள்ளது. எனக்கு புரியவில்லை. ஒரு முதலாளித்துவ அமைப்பில் செயல்படக்கூடிய மாநில அரசு நமது அரசு. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்துள்ள அரசை நமது கட்சி ஆதரிக்கிறது. இந்த அமைப்பில் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு பங்குள்ளது'. "தனியார் துறையிலும் கூட்டுத் துறைகளிலும் முதலீடுகளை நாம் தொடர்ந்து கோரி வருகிறோம். அத்துடன் நீண்ட காலமாகவே வெளிநாட்டு முதலீடுகளையும் கோரி வருகிறோம். பரஸ்பர நலன்களை அடிப்படையாக வைத்தே நாம் இதனைக் கோருகிறோம்.'

நாட்டைத் துண்டாடுவதில் ஜோதிபாசு ஒரு காலத்தில் மிகத் தீவிரமாகப் பங்காற்றியுள்ளார். குறிப்பாக, வங்காளத்தை துண்டாடுவதில். ஆனால், சட்டமன்றத்தில் எவ்வித எதிர்ப்புமின்றி 26 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தை ஆண்டு வருகிறார்.சனவரி 8, 2008 நாளிட்ட "டைம்ஸ் ஆப் இந்தியா' இவ்வாறு செய்தி வெளியிட்டது. "பாசுவின் முதலாளித்துவ கருத்துகளை காரத் நியாயப்படுத்துகிறார்'. இடதுசாரிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் சோசலிசத்தை கட்டமைக்க முடியாது என்பதையும், முதலாளித்துவ அமைப்பிற்குள் ஒரு மாற்று அரசியலை மட்டுமே முன்னெடுக்க முடியும் என்பதையும் சி.பி.எம். நன்கு உணர்ந்தே இருந்தது.'

தன்னுடைய விளக்க உரையில் அவர் பல கோணங்களை தொட்டுச்செல்கிறார். எவ்வித சந்தேகத்திற்கும் அவர் இடமளிக்கவில்லை. முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்திட்டங்களை வகுப்பதிலும் அதை செயல்படுத்தும் வழிமுறைகளை திட்டமிடுவதிலும் சி.பி.அய். (எம்) இன் பார்ப்பனிய கட்டமைப்பு, பல ஆண்டுகளுக்கு முன்னிருந்தே எவ்வித, குழப்பமுமின்றி தெளிவாக முன் செல்கிறது. எனினும் மநுவாதி மார்க்சியர்களை மார்க்சியர்களாக மக்கள் தாமே அனுமானித்துக் கொண்டனர் என்ற இந்த நூலின் கருத்தியலை, மிகப்பெரும் அதிகாரமும் முக்கியத்துவமும் உடைய தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் மக்களை குழப்பவில்லை. மக்கள் தாமே அவர்கள் பயன்படுத்திய பெயர்ச்சொற்களைக் கண்டு தவறாகக் குழம்பியுள்ளனர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் "சோசலிசம்' என்ற சொல் இருந்தபோதும் பார்ப்பனிய மார்க்சியவாதிகள், இந்திராகாந்தி அம்மையார் உயர்த்திய தேசியவாத கொடியை உயர்த்திப் பிடிக்கத் தவறிவிட்டனர். மாறாக, முதலாளிகள் மற்றும் பார்ப்பனிய பாசிசத்தின் கரங்களை வலுப்படுத்தவே துணைபுரிந்தனர்.

மக்கள், உழைப்பாளிகள் அல்லது வேறு எந்த சொல்லால் அவர்களை அழைப்பினும், அவர்கள் அரசுக்கு எதிரான தங்கள் குரலை எழுப்புவதற்கான துணிவை திரட்டப் போராடிவருகின்றனர். நந்திகிராம், சிங்கூர், டார்ஜிலிங் அல்லது ஜல்பாய்குரி – கொச்பிகார், டைமண்ட்தர்பூர் போன்ற போராட்டக் களங்களில் கொல்லப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பட்டியலில் கீழ் ஜாதி தீண்டத்தகாதவர்கள், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோர் மட்டுமே உள்ளனர் என்பது வெளியாகி உள்ளது. இரு தரப்பிலும் பார்ப்பனர்கள் எவரும் உயிரிழக்கவில்லை.

சூன் 29, 2008 அன்று "டைம்ஸ் ஆப் இந்தியா', செயல்பாட்டாளரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான மகா ஸ்வேதா தேவியின் நேர்காணல் ஒன்றை "மோடியைவிட மோசமானவர் புத்ததேவ்' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது. அவர் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவான நிலையையே எடுப்பார். அத்துடன் அதை மாற்றிக்கொள்ளவும் செய்வார். "கிராம பஞ்சாயத்து தேர்தலில் தோற்ற நிலையில் மேற்கு வங்க அரசுக்கு ஆட்சியில் தொடர எந்த தார்மீக உரிமையும் இல்லை' என்று கூறுகிறார். ஆனால், நந்தி கிராம், சிங்கூர் மற்றும் கிராமப்புற வங்கத்தின் சில பகுதிகளில் மட்டுமே இந்த தோல்வி என்று சுட்டிக்காட்டப்பட்டவுடன் அவர் துடித்தெழுந்துவிட்டார். கிராம பஞ்சாயத்துதான் நிர்வாகத்தின் இதயம் என்று அவர் கூறுகிறார்.

"சி.பி.எம். ஆட்சியதிகாரத்தில் இருந்த 30 ஆண்டுகளில் 24 ஆண்டுகள் எவ்வித கணக்கு வழக்கும் இல்லை. கிராம அமைப்புகள் கொடுக்கும் பொய்யான எண்ணிக்கையின் அடிப்படையில், பெரும் அளவிலான அரிசியும் கோதுமையும் பழங்குடியினருக்காக மத்திய அரசால் மாநிலத்துக்கு அனுப்பப்படுகின்றன. அதை விநியோகிக்க கிராம பஞ்சாயத்திடம் கையளிக்கப்படுகிறது. பின்னர் அது நியாயவிலைக்கடைகளில் கொடுக்கப்படுகிறது.' அவர் நரேந்திர மோடியை விமர்சித்தாலும் குஜராத்தை பெரிதாகப் புகழ்கிறார். "அவர் செய்தது மிக மோசமானதுதான். ஆனால் கலவரத்துக்குப் பிறகு நா ன் அங்கு சென்றபோது, அகமதாபாத்திலிருந்து, பரோடா மற்றும் சூரத் வரை, கிராமங்களுக்கு செல்ல நல்ல வசதியான சாலைகள் போடப்பட்டிருந்தன. மிக எளிமையான மண் குடிசையில் கூட மின்சாரம் இருந்தது. நேர் மாறாக, நமது மாநிலத்தைப் பாருங்கள். சாலைகள் இல்லை. மருத்துவ நிலையங்கள் இல்லை. எதுவுமில்லை.'

"பாட்டாளிகளின் ஆட்சியை அமைப்பது' என்ற சொற்றொடர் கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்களில் மறக்கப்பட்ட சொற்றொடராக மாறிவிட்டது. விரைவில் அது தடை செய்யப்பட்ட சொற்றொடராகவும் மாறப் போகிறது.           

தமிழில் : பூங்குழலி

"பூணூல் காம்ரேட்ஸ்'

1957 தேர்தல் தொடங்கி, எஸ். பானர்ஜி, எஸ். ஆர். சாட்டர்ஜி மற்றும் டி. மானெயின் ஆகியோர் முறையே ஜல்பாய்குரி, கொச்பிகார், ராய்கஞ்ச் மற்றும் டார்ஜிலிங் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த நான்கு மாவட்டங்களில் தேர்தல் வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது : ஜல்பாய்குரி – 1962 – என். ஆர். கோஷ்; 1967 – பி. என். கதன்; 1991 – துனா ஒராவ்; 1977 – கே. என். தாஸ் குப்தா; 1980 – சுபோத் சென் மற்றும் 1991 – ஜே. என். தாஸ்.

கொச்பிபார் – 1957 – எஸ். பானர்ஜி; 1962 – டி. என். கர்ஜி; 1967 மற்றும் 1971 – டி. கே. தாஸ் சவுத்ரிரி1977, 80, 84 மற்றும் 1991 – ஏ. ஆர். பிரதான். ராய்கஞ்ச் – 1957 – எஸ். நர்திதி1962 மற்றும் 1967 – சி. பட்டாச்சார்யா; 1971 – எஸ். ஆர். ராய்; 1977 – எம். ஹயத் அலி; 1980 மற்றும் 84 – குலாம் யஸ்தானினி 1991 – எஸ். முகர்ஜி. டார்ஜிலிங் – 1957 – டி. மெனெய்ன்; 1967 – மோதியீ போஸ்; 1971 – ரதன் லால் பிராமின் (இகக – மா); 1977 – கே. பி. செத்ரிரி

1980 மற்றும் 1981 – ஆனந்த் பதக்

(இகக – மா); 1991 – இந்திராஜி.

Pin It