சென்ற இதழ் தொடர்ச்சி...
பூனா ஒப்பந்தம்:-
வட்டமேசை மாநாடு முடிவுற்றதும் காந்தி 1931 டிசம்பர் 28 அன்று இந்தியாவிற்குப் புறப்பட்டார். ஆனால் அம்பேத்கர், தான் கல்வியில் உயரம் தொடக்காரணமாக யிருந்தப் பேராசிரியர்களை நன்றியுடன் கண்டு உரை யாடிட 1931, டிசம்பர் 5 ஆம் நாள் நியுயார்க் சென்றார். பின் 1932 சனவரி 4 ஆம் நாள் லண்டன் திரும்பினார் சனவரி 15 அன்று டாக்டர் அம்பேத்கரும் முஸ்லீம் தலைவர் மௌலானா ஷவுகத் அலியும் லண்டனிலிருந்து கிளம்பி சனவரி 29 அன்று பம்பாய் வந்தடைந்தனர்.
பரேலில் அம்பேத்கருக்கு வரவேற்பு கூட்டம் அதில். அம்பேத்கர் உரையாற்றினார். ஒரு கொள்கையின் வெற்றிக்கும் தோல்விக்கும் அதன் தலைவர் மட்டும் காரணமாக இருப்பதில்லை.; தொண்டர்களின் பேரா தரவும் ஒத்துழைப்பும் காரணமாகும், என்றார். மேலும், நான் காந்தியை எதிர்க்கின்றேன். அதற்காகவே என்னைத் துரோகி என்றழைக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். இது ஆதாரமற்றது. உங்களுடைய அடிமைத் தளைகளை அகற்றுவதற்குக் காந்தியே மிகக் கடுமை யாக எதிர்ப்பைக் காட்டியிருப்பதை அறிந்து உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. என்று கூறினார்.
அம்பேத்கர் லண்டனிலிருந்தபோது காந்தியை 4, 5 முறை சந்தித்தார்., காந்தி தன் கையில் புனித குரான் நூலை எடுத்துக்கொண்டு இரகசியமாக ஆகாகான் இருப்பிடத்திற்குச் சென்றார்; அந்த முஸ்லீம் தலைவரைத் தீண்டப்படாத மக்களுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தி னார் காந்தி.. அதற்கு ஆகாகான் இணங்க மறுத்து விட்டார் என்ற செய்தியை அம்பேத்கர் வெளிப்படுத்தினார். காந்தியைத் தெய்வாம்சம் உள்ளவராகக் கருதாதீர்கள்; மனிதனைத் தெய்வாம்சமாகக் கருதுவதை எதிர்ப்பவன் நான் என்று அம்பேத்கர் கூறினார். இதுவரை அம்பேத் கரின் எண்ணங்களுக்கும் முயற்சிகளுக்கும் செயல்களுக் கும் உறுதுணையாக நின்ற தீண்டப்படாத இனத் தலைவர் எம்.சி. இராஜா, இந்துமகாசபைத் தலைவர் டாக்டர் மூஞ்சேயுடன் இணைந்து, தனி ஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டு வாக்காளர் தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையினைத் தந்தி மூலம் பிரிட்டிஷ் பிரதமருக்குத் தெரிவித்தார். இது அம்பேத்கரை இக்கட்டான நிலைக்குத் தள்ளியது.
இதனால் அம்பேத்கர் 1932 மே 26 அன்று லண்ட னுக்குப் புறப்பட்டுச் சென்றார். சூன் 7 அன்று லண்டன் சென்றடைந்தார், வகுப்புச் சிக்கல் பற்றிய அரசின் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பிரிட்டிஷ் பிரதமரையும், மற்ற அமைச்சர்களையும் சந்தித்துத் தன் கோரிக்கை களை அவர்களிடம் விளக்கினார். அதன்பின் ஆகஸ்டு 17ஆம் நாள் பம்பாய் வந்தடைந்தார்.
1932 ஆகஸ்டு 20 அன்று பிரிட்டிஷ் பிரதமர் இந்தியாவின் வகுப்புப் பிரச்சினைக்கான தீர்ப்பினை வழங்கினார். அத்தீர்ப்பின் படி, தீண்டப்படாத மக்களுக்கு மாநிலச் சட்ட சபைகளில் தனி இட ஒதுக்கீடும், தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்குரிமையும், பொதுத்தொகுதியில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க மற்றொரு வாக்குரிமையும், ஆக 2 வாக்குரிமைகள் வழங்கப்பட்டிருந்தன.
காந்தி இந்தியாவுக்குத் திரும்பியதும் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார். 1932 சனவரி 4ஆம் நாள் கைது செய்யப்பட்டார். 1932 மார்ச் தொடக்கத்தில் காந்தி எரவாடா சிறையிலிருந்து, தீண்டப்படாத மக்களையும் சாதி இந்துக்களையும் பிரிக்கின்ற எந்தவொரு முயற்சி யையும் என் உயிரைக்கொடுத்தேனும் தடுப்பேன் என்று பிரிட்டிஷ் அமைச்சரவைக்குத் தெரிவித்திருந்தார்.
வகுப்புவாரித் தீர்ப்பில் தீண்டப்படாத மக்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி வழங்கப்பட்டிருந்தது. ஆகவே அதனை எதிர்த்து காந்தி உண்ணா நோன்பினை அறிவித்து விட்டார். ஆனால் வகுப்புவாரி அடிப்படையில், கிறித்தவர்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள தனித் தொகுதி பற்றிக் காந்தி எதிர்ப்புக் காட்டவில்லை. எனவே காந்தியின் உண்ணாவிரதம் நேர்மையற்றது. மேலும் இலண்டனில் சிறுபான்மை யினர் குழுவின் கடைசிக் கூட்டத்தில் வகுப்புவாரிச் சிக்கலில் இறுதி முடிவு எடுக்கும் தனி அதிகாரத்தைப் பிரிட்டிஷ் பிரதமருக்கு அளிக்கும் உறுதிமொழிப் பத்திரத் தில் காந்தியும் கையெழுத்திட்டிருந்தார். ஆகவே காந்தியும் பிரிட்டிஷ் பிரதமரின் வகுப்பு வாரித் தீர்ப்பிற்குக் கட்டுப் பட்டவரே. ஆகவே காந்தியார் நேர்மையின்றி உண்ணா நிலையை மேற்கொண்டார்..காந்தியார் சுதந்திரம் வேண்டியோ, தீண்டாமை ஒழிப்பிற்கோ உண்ணா நிலையை மேற்கொள்ளவில்லை.
சிக்கலுக்குத் தீர்வுகாணவும், காந்தியைக் காப்பாற்றிட வும் வேண்டி செப்டம்பர் 19 ஆம் நாள் பம்பாயில் இந்துத் தலைவர்கள் கூடி அம்பேத்கருடன் பலசுற்றுகள் உரை யாடியும், காந்தியுடன் பலமுறை கலந்து பேசியும் ஒரு முடிவுக்கு வந்தனர். கலந்துரையாடலில் கலந்து கொண்ட வர்கள் டாக்டர் மதன்மோகன் மாளவியா, டாக்டர் சோலங்கி, சர் தேஜ்பகதூர் சாப்ரு, ஜெயகர், இராஜாஜி, டாக்டர் ராஜேந்திரபிரசாத் முதலானோர்.
பூனா ஒப்பந்தம் கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது. மாநில சட்டசபைகளில் 148 இடங்களைத் தீண்டப்படாத மக்களுக்கு ஒதுக்கப்பட்டது. மத்திய சட்ட சபையில் பிரிட்டிஷ் இந்தியாவில் இந்துக்களுக்கென உள்ள மொத்த இடங்களில் 10 விழுக்காட்டைத் தீண்டப்படாத மக்களுக்கு ஒதுக்குவது என்று முடிவானது. கருத்துக் கணிப்பு கட்டாயம் இருக்கவேண்டும். ஆனால் அது 5 ஆண்டு களானதும் நடத்தப்படவேண்டும் என்று காந்தி கூறினார். 5 ஆண்டுகள் அல்லது என் உயிர். இதுவே என் முடிவு என்று உறுதியுடன் காந்தி கூறினார். ஆனால் அம்பேத்கர் கருத்துக்கணிப்பு எடுக்கும் காலம் குறைந்தது 10 ஆண்டுகளாவது இருக்கவேண்டும் என்றார். இறுதியாக, கருத்துக்கணிப்பு எப்போது நடத்துவது என்ற காலவரை யறையைக் குறிப்பிடாமல் ஒப்பந்தம் செய்து கொள்வது என்பதை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். இந்த முடிவினை இராஜாஜி காந்தியிடம் கூறினார். காந்தி அந்த முடிவினை ஏற்றுக்கொண்டார். 1932 செப்டம்பர் 24 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஒப்பந்தம் கையெழுத் தானது. தீண்டப்படாதார் சார்பில் அம்பேத்கரும் இந்துக் கள் சார்பில் மதன்மோகன் மாளவியாவும் கையெழுத் திட்டனர். பூனா ஒபந்தத்திற்கு பிரிட்டிஷ் அரசு ஒப்புதல் அளிக்குமாறு பாராளுமன்றத்திற்கும் பரிந்துரைக்கப் போவதாக செப்டம்பர் 26, 1932 இல் பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. அன்று மாலை ஐந்தரை மணிக்கு எரவாடா சிறையில் கஸ்தூரிபாய் ஆரஞ்சு சாறினைக் காந்திக்குக் கொடுத்து உண்ணா நோன்பினை முடித்து வைத்தார்.
வெளி நாட்டுச் சுற்றுப் பயணத்திலிருந்த தந்தை பெரியார் காந்தியார்-அம்பேத்கர் பிரச்சினையை அறிந்ததும் அம்பேத்கருக்குத் தந்தி கொடுத்தார்: கோடிக்கணக்கான தீண்டப்படாத மக்களின் உரிமையை விட ஒரு தனி நபர் முக்கியமில்லை. உங்கள் உறுதி யான நிலையிலிருந்து பின் வாங்க வேண்டாம், என்று! இருந்தும் அம்பேத்கர் சம்மதித்துவிட்டார்.
டாக்டர் அம்பேத்கர் போன்று எந்த ஒரு மனிதனும் இக்கட்டான நிலைக்கு ஆளானதில்லை. ஒரு புறம் மகாத்மா காந்தியின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய நிலைமை; மறுபுறம் தீண்டத்தகாத மக்களின் நலன் களைக் காத்திட வேண்டிய நிலைமை என இருவேறுபட்ட பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியக் கட்டாயத்தில் அம்பேத்கர் சூழ்நிலைக் கைதியாக இருந்தார். இறுதியில் காந்தி, இராஜாஜி, சாப்ரு ஆகியோரின் ஒத்துழைப்போடு ஒப்பந்தம் நிறைவேறியது.
இதன் பின் மூன்றாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 1932 நவம்பர் 7ஆம் நாள் அம்பேத்கர் இங்கிலாந்திற்குப் பயணமானார். அப் பயணத்தின்போது தீண்டாமை எதிர்ப்புக்கழகத்தின் பொதுச் செயலாளர் தாக்கருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், சட்டத்தினாலோ அல்லது தேர்தல் சட்டத்திருத் தத்தின் மூலமோ தீண்டப்படாதவர்களையும் உயர் சாதி இந்துக்களையும் ஒன்றுபடுத்திவிட முடியாது. தீண்டப்படா தவர்களின் மனித உரிமைகளை ஏற்கும் மனமாற்றம் சாதி இந்துக்களுக்கு ஏற்படவேண்டும் என்று குறிப்பிட்டி ருந்தார். நவம்பர் 17 ஆம் நாள் மூன்றாவது வட்டமேஜை மாநாடு தொடங்கி நடைபெற்றது. போரினால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவினால் பிரிட்டிஷ் மக்கள் உற்சாக மின்றி பங்கேற்றனர் இந்திய உறுப்பினர்களிடையே ஒருங்கிணைப்பில்லை. எந்தவொரு முடிவுமின்றி மா நாடு 24-12-1932 அன்று முடிவடைந்தது.
1933 இல் பாம்பேயில் வாழ்வதற்கு அம்பேத்கர் தன் மேற்பார்வையில் ஒரு வீடுகட்டி முடித்தார். அவ்வில் லத்திற்கு இராஜகிரகா என்று பெயரிட்டார். அங்கே தனது செந்த நூலகத்தை நிறுவினார். அந்த நூலகத்தி.ல் 50,000 க்கும் அதிகமான புத்தகங்களை வைத்திருந்தார்.
அவரது மனைவி ரமாபாய் நீண்ட கால உடல் நலிவிற்குப் பிறகு 27-5-1935அன்று மண்ணுலகை நீத்தார். மனைவியின் மறைவால் ஆறாத்துயருற்ற நிலையில். பொது வாழ்க்கையிலிருந்தே. முழுவதுமாக விலகிடலாமா என்று எண்ணினார்.
1-6-1935 இல் பம்பாயில் அமைந்திருந்த அரசு சட்டக் கல்லூரியின் தலைவராகப் பணியில் அமர்த்தப்பட்டார். இந்தப் பதவியில் அவர் இரண்டு ஆண்டுகளே பணியில் இருந்தார்.
மதம் மாறும் நோக்கம்:-
நாசிக்கில், இயோலா நகராட்சி, 13-10-1935 அன்று முற்பகலில் அம்பேத்கருக்கு வரவேற்பளித்தது. அதன் பின் அன்று நடைபெற்ற இயோலா மாநாட்டில் அம்பேத் கர், தான் இந்து மதத்தைவிட்டு வேறு மதத்தைத் தழுவ இருக்கின்ற தனது எண்ணத்தை அறிவித்தார். இந்து மதத்திலுள்ள சமத்துவமின்மை தான் என் முடிவிற்குக் காரணம். நான் சிலை வணக்கத்தை எதிர்ப்பவன். மூட நம்பிக்கைகளை எதிர்த்து வருபவன். இந்துவாகப் பிறந்தது என் தவறல்ல; அது கெட்டவாய்ப்பு; தடுக்கவிய லாதது. அதனால் மனித அபிமானமற்ற அந்த மதத்தில் வாழ மறுப்பது என் முடிவில் தான் இருக்கிறது. ஆகவே நான் இந்துவாகச் சாகமாட்டேன் என்றார்.
இந்த அறிவிப்பிற்குப் பின் சீக்கிய, இஸ்லாமிய, கிறித்துவ மதத் தலைவர்கள் அம்பேத்கரைக் கண்டு தங்கள் மதத்தில் சேரும்படி வேண்டினர். அதன் பின்னர் பம்பாயில் அம்பேத்கர் தங்கியிருந்த ஓரிரு நாள்களில் இந்து மிஷனரித் தலைவர் மாதர்க்கா மகராஜ் என்பவர் அம்பேத்கரைச் சந்தித்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்தை விட்டு விலகிவிட்டால் இந்து மதம் அழிந்து விடுமே என்று வருத்தப்பட்டார், அதற்கு நான் என்ன செய்யமுடியும்? என்று அம்பேத்கர் கேட்டார். நீங்கள் தான் வழி சொல்லவேண்டும், என்றார் மகராஜ். ‘குறிப்பிட்ட காலத்திற்குள் தீண்டாமையை ஒழிப்பதாக இந்து மதத் தலைவர்கள் உறுதி கொடுக்கட்டும்’ என்றார் அம்பேத்கர். அது எளிதல்ல, இருந்தாலும் நீங்கள் முடிவைத் தள்ளி வைத்து அறிவியுங்கள், என்றார் மகராஜ் இந்துக்கள் மனம் மாறுவதானால் ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் கூடக் காத்திருக்கத் தயார். ஆனால் இந்துமதத் தலைவர் நல்லெண்ணத்தைக் காட்ட, மிகவும் நல்லவர் என்று கருதப்பட்ட கே. கே. சகத் என்ற தாழ்த்தப்பட்டவரை மராட்டிய உயர் சாதியினர் சங்கராச்சாரி பீடத்துக்கு ஓராண்டுக்கு மட்டும் அனுமதித்து தங்கள் மனமாற்றத்தைக் காட்டவும் சமவாய்ப்பை ஏற்கவும் அந்தத் தாழ்த்தப்பட்ட சங்கராச் சாரியாரின் காலில் விழிந்து வணங்குவார்களா? என்று அம்பேத்கர் கேட்டார்..மகராஜ் பதில் ஏதும் கூறவில்லை.
மதமாற்ற அறிவிப்பினை அம்பேத்கர் வெளியிட்ட சில நாள்களில், மைசூர் அரசு தசராப் பண்டிகையில் தீண்டப்படாதவர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கியது. திருவிதாங்கூர் அரசு, தீண்டப்படாதவர்கள் அரசின் ஆளூகைக்குட்பட்ட 1600 கோயில்களில் சென்று வழிபட லாம் என்று அறிவித்தது.
லாகூரில் ஜாட்பட் தோடக் மண்டலத்தார் (சாதி ஒழிப்பு சங்கத்தார்) நடத்தவுள்ள மா நாட்டிற்குத் தலைமை ஏற்க 12-12-1935 இல் அழைத்தனர். அம்பேத்கர் தலைமை யேற்பதை சனாதனிகள் எதிர்த்தனர். ஆகவே மாநாட்டைத் தள்ளிவைத்தனர். அம்பேத்கர் பேசத் தயாரித்த உரை யில் சில வாசகங்களை மாற்றும்படிக் கேட்டனர். அதற்கு அம்பேத்கர் மறுத்துவிட்டார். அந்த மாநாடும் ரத்து செய்யப் பட்டது. ஆனால் அம்பேத்கர் தன் தலைமை உரையை “சாதி ஒழிப்பு” என்று தலைப்பிட்டு நூலாக 15-5-1936 இல் வெளியிட்டார். இந்த நூலை பெரியார் தமிழில் மொழி பெயர்க்கச் செய்து வெளியிட்டுப் பெருமை சேர்த்தார். இந்து மதத்தைச் சேர்ந்த மதத் தலைவர்களையும், பொதுவாக சாதியத்தையும் கடுமையாக விமர்சித்தார், இந்த விஷயத்தில் காந்தியையுயும் கண்டித்துள்ளார். பின்னர், 1955 பிபிசி பேட்டி ஒன்றில், குஜராத்தி மொழி இதழ்களில் சாதியத்தை ஆதரித்தும், ஆங்கில மொழி இதழ்களில் சாதி முறையை எதிர்த்தும் காந்தி எழுதி யுள்ளார் என்று அம்பேத்கர் குற்றம் சாட்டினார்
சுதந்தரத் தொழிற்கட்சி:-
15-8-1936 இல், அம்பேத்கர் சுதந்தர தெழிலாளர் கட்சியை நிறுவினார், நிலமற்றவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள் ஆகியோருடைய உடனடித் தேவைகளை நிறைவேற்ற செயல்படுதல் அதன் குறிக்கோளாகும். சமுதாய மாற்றத்திற்காகவும். மூட நம்பிக்கை ஒழிப்பிற்காகவும், கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபடுவதும் அதன் நோக்கங்களாகும். 1937 பிப்ரவரி 17 ஆம் நாள் பம்பாய் சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி 15 இட ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 4 பொது இடங்களுக்கும் போட்டியிட்டு 17 இடங்களில் வெற்றியடைந்தது. காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது என்றாலும் ஆட்சியமைக்கத் தயக்கம் கொண்டது. எனினும். 1937 ஜூலை 19ஆம் நாள் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர். அன்று மாலை சட்டசபை காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரிட்டிஷ் மன்னருக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதி மொழி கூறிப் பதவியேற்றனர். அம்பேத்கர் பகவத்கீதையின் பெயரால் உறுதி மொழி கூற மறுத்துவிட்டுக் கண்ணியமான முறையில் உறுதிமொழியை ஏற்றார்.
1937 இல் அம்பேத்கர் தலைமையில் விவசாயிகள் பேரணி சட்டசபை நோக்கிச் சென்றது. விக்டோரியா டெர்மினஸ் அருகில் இருந்த எஸ்பிளனேடு திடலை அடைந்தது. 20 பேர் ஒரு குழுவாகச் சென்று பம்பாய் மாநில முதல்வரைச் சந்தித்துக் கோரிக்கையைக் கொடுத்தனர், விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சக் கூலியை அமல்படுத்த வேண்டும் என்றும், நிலவரிப் பாக்கியை வசூலிப்பதைத் தள்ளி வைத்திருப்பது போல் குத்தகைப் பாக்கியையும் தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். கோட்டி நிலஉரிமையையும், இனாம்தார் முறையையும் ஒழித்திட சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கோரினர். சிறு நில உரிமையாளர் களுக்கு நீர்ப்பாசனத் தீர்வையைப் பாதியாகக் குறைக்கவேண்டும் என்றும் கோரினர். பம்பாய் பிரதமர் (முதலவர்) ஆவன செய்வதாகக் கூறினார்.
1938 பிப்ரவரி 12,13 தேதிகளில் தீண்டப்படாத இரயில்வே தொழிலாளர்கள் மாநாட்டில் உரையாற்றினார். நம் நாட்டில் உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிராக இரண்டு சக்திகள் உள்ளன. ஒன்று பார்ப்பனீயம் மற் றொன்று முதலாளித்துவம். பார்ப்பனீயம் என்று கூறும் போது, பார்ப்பனர்களின், குலம் அதிகாரம் சலுகைகள், அவர்களின் நலன்களைப் பற்றி அம்பேத்கர் குறிப்பிட வில்லை. சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளை எதிர்க்கும் பண்பினைத்தான் பார்ப்ப் பனியம் என்று அம்பேத்கர் குறிப்பிடுகின்றார். பார்ப் பனியம் எல்லாச் சமூகத்திலும் சாதியக் கட்டுப்பாட்டை வைத்துக்கொண்டு தீண்டப்படாதவர்களுக்குச் செய்யும் கொடுமையைப் பற்றிக் குறிப்பிட்டார்.
1941 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அம்பேத்கர் வைஸ்ராயின் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார். பின்னர் 1942 ஜூன் மாதத்தில், வைஸ்ராய் நிர்வாகக் குழுவிலும் சேர்க் கப்பட்டார். அம்பேத்கர் நாகபுரியிலிருந்தபோது தந்தி மூலம் 20-7-1942 இல் தொழிலாளர் நல அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். தீண்டப்படாதவர் சமுதாயத் திலிருந்து ஒருவர் வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் இடம் பெற்றது பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் இது தான் முதல் தடவையாகும்.
அம்பேத்கர் வைஸ்ராய் நிர்வாகக் குழுவில் சேர்க் கப்படுதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர், பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பதவியைப் பெறுவதற்கான வாய்ப்பினைப் பெற்றிருந்தார். ஆனால் அவர் அப்பதவியை ஏற்றிட மறுத்துவிட்டார். தீண்டப்படாதோர் அரசியல் உரிமைகளைப் பெறுவதற்காகத் தொண்டாற்றுவதையே பெரிதும் விரும்பினார்.; அதற்குத் தடையாக இப்பதவி அமைந்துவிடும் என்று கருதியே பதவியேற்க மறுத்தார்.
பொன்விழா:-
1942 ஏப்ரல் 14 ஆம் நாள் அம்பேத்கரின் ஐம்பதாவது பிறந்த நாள். சுதந்திரத் தொழிற்கட்சியினர், பம்பாயிலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் 9 நாள்கள் அவரின் பொன்விழாவைச் சிறப்புடன் கொண்டாடினர்.
பொன்விழாவின் கடைசிக் கூட்டம் பம்பாயில் பரேலில் கம்கார் (தொழிலாளர்) திடலில் நடைபெற்றது. அதில் விழா நாயகர் உரை நிகழ்த்தினார். அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதைக் கைவிடுமாறு கூறினார். எந்த ஒரு சமூகத்திலும்-தனியொரு மனிதன் அளவுக்கு மீறி மதிக்கப்பட்டு வணங்கப்படத் தக்கவனாகவும் கடவுளுக்குச் சமமானவனாகவும் உயர்த்தப்படுகி றானோ, அப்போதே அந்தச் சமூகம் அழிவுப்பாதையில் போய்க் கொண்டிருக் கிறது என்று அறிந்து கொள்ளலாம். எந்தவொரு மனிதனும் மனித சக்திக்கு மீறிய ஆற்றல்களையும் தெய்வத்தன்மைகளையும் பெற்றிருப்பதில்லை. ஒரு வருடைய உயர்வுக்கும் தாழ்விற்கும் அவரவருடைய செயல்களே காரணம், என்றார். மேலும், சாதி இந்துக்கள் எங்களைச் சமத்துவமாக நடத்தவேண்டும் என்பதற் காகவே மகத்திலும், நாசிக்கிலும் போராட்டங்கள் நடத்தினோம். ஆனால் எதிர்பார்த்த அளவிற்குப் பயன் விளையவில்லை. எங்களின் நியாயமான விழைவு களையும் உரிமைகளையும் கொண்டிராத எந்தவொரு திட்டத்தையும் எதிர்ப்போம் என்று அரசிற்கு எச்சரிக்கை செய்கிறோம். இந்துமக்கள் சமத்துவத்துடன் எங்களை நடத்தினால் அவர்களுடன் தோளொடு தோள் நின்று போரிடத் தயாரக உள்ளோம், என்று எழுச்சியுடன் கூறினார்.
- தொடரும்