சர்வ வல்லமை படைத்து
அதிகாரம் பொதிந்ததாய்
வந்து விழுகிறது
உனது வார்த்தைகள் ஒவ்வொன்றும்
சுடுமணலில் சிக்கித்தவிக்கும்
எறும்பினைப்போல்
சுருண்டு வீழ்கிறேன் நாள்தோறும்
தேடிப்பிடித்து எடுத்து
வர்ணஜாலத்துடன் வீசும்
உனது வசீகர வார்த்தைகள் யாவும்
இந்நூற்றாண்டில் அல்ல
எப்போதுமே சிலரõல் பேசப்படுபவைதான்
அரை நூற்றாண்டாய் சேகரித்த
எனது ஆளுமையின் பொக்கிசங்கள் யாவும்
நொடிப்பொழுதில் வீசி எறியப்படுகின்றன
பாழும் புழுதியில்
நெஞ்சைப் பிளக்கும்
உனது சொற்களில்
மனதை வெடிவைத்து தகர்க்கும்
அதிசயத்தை இப்போதுதான் உணர்கிறேன்
இப்போதெல்லாம்
மேல்சட்டையோ கீழ்சட்டையோ இன்றி
அம்மணமாய் திரிவதாய்
என் உடல்மொழி சொல்கிறது
கழிவுகளை ஆடையாக்கி
கண்ணீரைப் போர்வையாக்கி
பாடையோடு போவதுபோல்
நானும் போய்க்கொண்டிருக்கிறேன்
நடைபிணம்போல்
மழையானாலும் பனியானாலும்
உருகிவழியும் எரிச்சலோடு
உடைந்து நொறுங்கி
வீதி உலா செல்லும் எனக்கு
நிகழ்கால காரணங்கள் இவைதாமென்று
ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை
எனது பிறப்பின் ஆதிமூலம் தொட்டு
படரும் என் மீதான வன்மத்திற்கு
நான் மட்டும் பொறுப்பல்ல
நீயும் இந்த சமூகமும்
என்பதும்தான்
நான் அறுதியிட்டுக் கூறும் உறுதிமொழி

– விழி.பா. இதயவேந்தன்

அரசுப் பேருந்தில் ஆதிக்க சாதியினருக்கு இணையாக இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ஒரே காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்ட போராளி செகுடந்தாளி முருகேசனுக்கு, கோவையில் 17.11.2010 அன்று நடைபெற்ற வீர வணக்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை.

Pin It