இடஒதுக்கீடு என்பது, மக்களை ஒன்றிணைக்கக்கூடிய மிகப்பெரிய காரணியாகும். 15 சதவிகித தலித்துகளையும், 8 சதவிகித பழங்குடியினரையும் இடஒதுக்கீடு ஒன்றிணைக்கிறது. கிரீமிலேயர் என்று சொல்லப்படுபவர்களை சமூகத்தின் எஞ்சிய பகுதியினருடன் இணைத்து வைத்திருக்கும் பசையாக இடஒதுக்கீடே விளங்குகிறது.

கிரீமி லேயர் என்று சொல்லப்படும் பிரிவைச் சேர்ந்த ஒரு பெண்ணோ, பையனோ சாதிச் சான்றிதழைப் பெற்று, அதனைத் தனது விண்ணப்பப் படிவத்தில் நிரப்பும் போது, சாதித் தன்னுணர்வு நிலை அவளுள் அல்லது அவனுள் நிலைநிறுத்தப்படுகிறது. இத்தகைய சாதித் தன்னுணர்வு நிலை - தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர் பார்வையிலிருந்து மிகவும் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. கடின உழைப்பாலும், தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளாலும் சிறிது கவுரவமும், முக்கியத்துவமும் கூடிய பதவிகளை அடைய முடிந்தவர்களிடம் காட்டப்படுகின்ற வன்மம் நிறைந்த நடவடிக்கையே கிரீமிலேயர் கொள்கையாகும்.

முன்னேறிச் செல்ல இயலாமல், ஆற்றுப்படுத்துதலையும், உதவியையும் தனது சமூகத்தில் உள்ள முன்னேறிய நபர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறவர்களிடம் காட்டப்படுகிற குரூரமான நடத்தையே கிரீமிலேயர் கொள்கையாகும். ஏனெனில், கிரீமிலேயர் என அழைக்கப்படுகிற நபர்களை, தங்கள் சாதியைச் சேர்ந்த ஏழைகளிடமிருந்து கிரீமிலேயர் கொள்கை துண்டித்துவிட விழைகிறது. தலித்துகளில் கிரீமிலேயரைச் சார்ந்த மக்களே அச்சமூகத்தின் மிகப்பெரிய பலமாக விளங்குகின்றனர். கிரீமிலேயரில் இருப்பதைக் காரணம் காட்டி, இடஒதுக்கீட்டிலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்பட்டால், தங்கள் சக சாதியினர் மீதான இவர்களின் ஈர்ப்பு பெருமளவுக்குக் குறைந்து விடும்.

ஒரு பெரும் பகுதியினரைக் கொண்ட தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர், பார்ப்பனமயமாக்கலுக்கு உள்ளாகி, சமூக நீதி இயக்கத்தில் சுயநலம் கொண்டோராக மாறிவிட்டிருக்கும் உண்மையை இது மறுப்பது ஆகாது. ஆனால், சமூக நீதிப் போராட்டத்திற்குப் பெரும் இடைஞ்சலாகவும், தேவையற்றவர்களாகவும் இருக்கும் இப்பார்ப்பனியமயப்பட்ட சக்திகள், கிரீமிலேயர் கொள்கையை ஆதரிக்க ஒருபோதும் "காரணமாக' ஆக மாட்டார்கள்.

சி.பி.எம். கட்சியோ அல்லது வேறெந்த கட்சியோ, அநியாயங்கள், சுரண்டல், ஏழ்மை, பிற்படுத்தப்பட்ட தன்மை முதலானவற்றுக்கு எதிரான போராட்டத்தைக் குறித்துப் பேசுகிறது என்றால், எதார்த்தத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியினரையும் உள்ளடக்கிய, தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு எதிரான அநியாயங்கள், சுரண்டல், ஏழ்மை, பிற்படுத்தப்பட்ட தன்மை ஆகியவற்றையே குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு சமூக, பொருளாதார நடவடிக்கையையும் விளக்க எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் பயன்படுத்துகிற மூன்று முக்கியமான வார்த்தைகளாகிய முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் ஆகியவை மட்டுமே - இந்த ஒன்றுமறியாத மக்களின் வாழ்க்கையிலுள்ள துயரங்களுக்குக் காரணமில்லை.

பிற்படுத்தப்பட்ட தன்மை, ஏழ்மை ஆகியவை, நகர்ப்புற "உயர் சாதி'யினரின் நடுத்தர வர்க்கக் குடியிருப்புகள் தவிர அனைத்து இடங்களிலும் பெரிதும் காணக் கிடைப்பதற்கு - பொது நிர்வாகத்தில் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான பாரபட்ச உணர்வும், வெறுப்பும்கூட காரணமாக இருக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், பொருளாதார நிலை குறித்து கருதாமல் "கீழ் சாதி' உறுப்பினர்களை உடைய பொது

நிர்வாகம் குறைந்தபட்சம் "கீழ் சாதி'யினருக்கு எதிரான பாரபட்சங்கள் மற்றும் வெறுப்பு இல்லாதவையாக இருப்பதோடு, அவர்களின் பார்வையிலிருந்து பார்க்கும்போது கூடுதல் செயல்படும் தன்மை உடையதாகவும் இருக்கும்.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றின் முதல் அத்தியாயத்தின் ஓரிடத்தில் (பத்தி 9) இவ்வாறு குறிப்பிடுகிறது : “தேசிய பகுதிகளில் உள்ள அரசுப் பதவிகளில் அனைத்தையும் என்று சொல்ல முடியாவிட்டாலும், கிட்டத்தட்ட அனைத்தையும் ரஷ்யர்களே வகித்தனர்.'' கடந்த நூற்றாண்டில் இதையொத்த நிலை இந்தியாவில் நிலவவில்லையா? கோலாப்பூர் அரசரான சாகு மகாராஜ் சாதிவாரி இடஒதுக்கீட்டின் உதவியோடு அரசு நிர்வாகத்தை ஜனநாயகப்படுத்தவில்லையா? ரஷ்யாவில் இருந்த பிரச்சனை ஒரு தேசிய இனம் சார்ந்த பிரச்சனை. அதை சாதிப் பிரச்சனையோடு ஒப்பிட முடியாது என சிலர் வாதிடலாம். தேசிய இனப் பிரச்சனையைப் போன்றே சாதியப் பிரச்சனையும் ஒரு குழுவினரின் பிரச்சனையாக இருக்கிறது என்பதே அந்த மறுப்புக்கு எங்களின் பதிலாக இருக்கிறது.

ஒவ்வொரு சமுதாயத்திலும், வர்க்கப் பிரச்சனையைத் தவிரவும் குழுக்களின் பிரச்சனைகள் என எண்ணற்ற பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. வரலாற்றில் எந்தவொரு சமூகப் புரட்சியும் வர்க்கப் பிரச்சினைகளின் அடிப்படையில் மட்டுமே வெற்றியடைந்தது இல்லை. சாதி அடிப்படையிலான மேலாதிக்கத்தை வேரறுப்பது என்பது பணக்காரர், ஏழை வேறுபாடு இன்றி அனைத்து பிற்படுத்தப்பட்டவர்களின் நலன்களையும் உள்ளடக்கியதாகும். வஞ்சிக்கப்பட்ட சாதிகளின் ஒற்றுமையில் பொருளாதார அடிப்படையில் பிளவு ஏற்படுவது ஏற்கத்தகாத ஒன்றாகும். எனவேதான், நாங்கள் கிரிமீலேயரை எதிர்க்கிறோம்.

மிகச் சிறந்த கறுப்பினத் தலைவரான மார்டின் லூதர் கிங் ஜுனியர் எழுதினார் : “நாங்கள் ஒரு குழுவாக ஒடுக்கப்பட்டோம். அவ்வொடுக்குமுறையை ஒரு குழுவாகவே நாங்கள் வெல்ல வேண்டும்'' என்றார். அதைப் போலவே நாங்களும் ஒடுக்குதலுக்கும் ஒதுக்குதலுக்கும் ஒரு குழுவாகவே உள்ளாக்கப்பட்டோம்; அந்த ஒடுக்குமுறையையும், ஒதுக்கலையும் ஒரு குழுவினராகவே வெல்ல வேண்டியிருக்கிறது என்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகிய நாங்களும் உறுதிபடக் கூறுகிறோம்.

சி.பி.எம். கட்சித் தலைவர்கள் இடஒதுக்கீட்டை ஒரு வலி நிவாரண நடவடிக்கை என்றே அடிக்கடி குறிப்பிடுகின்றனர். வெறுமனே வலி நிவாரண நடவடிக்கையாக மட்டும் இருக்குமேயானால் இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் நடத்தியதைப் போல, மருத்துவமனைகளை மூடுவது போன்ற தீவிரமான எதிர்வினைகளை ஒரு வலி நிவாரண நடவடிக்கையே ஏற்படுத்தி விடுமானால், வலிநிவாரண நடவடிக்கைகள் என அழைக்கப்படுபவை அதைவிடக் கூடுதலான ஒன்றாகவே இருக்க வேண்டும். இந்திய சமூகத்தை ஜனநாயகப்படுத்தியதில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கே முக்கியப் பங்கு உண்டு. இடஒதுக்கீட்டை வலிநிவாரண நடவடிக்கை என்று சி.பி.எம். அழைப்பது ஏற்க முடியாத ஒன்றாகும்.

சி.பி.எம். அறிக்கையின் நான்காவது பத்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது : “கல்வி நிறுவனத்தில் இடங்களை அதிகப்படுத்தும்போது, எளிய மற்றும் நலிவுற்ற பின்புலங்களில் இருந்து வருபவர்களும், இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில் வராதவர்களுமாக மாணவர்களுக்கும் தனியாக இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.''

பொருளாதார அளவுகோலை வைத்துதான் "உயர் சாதி' ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியும். இது சாத்தியமாகுமா? நரசிம்மராவ் அரசால் ஏற்கனவே முயற்சி செய்யப்பட்டு, கடும் தோல்வியை சந்தித்த ஒன்றைத்தான் சி.பி.எம். கட்சி வலியுறுத்துகிறது. பொருளாதார அளவுகோலில் இணக்கம் காட்டுவதன் மூலம் ஆளும் "உயர் சாதி' மேல்தட்டினருடன் அடையாளம் காணப்படுவதை சி.பி.எம். விரும்புகிறதா?

மண்டலின் நெருப்பை அணைப்பதற்காக, பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு, வேறு வார்த்தைகளில் சொன்னால் - "உயர் சாதி'யினருக்கு பத்து சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் ஓர் அரசாணையை நரசிம்மராவ் வெளியிட்டார். ஏழை மக்கள் மீதான நரசிம்மராவ் அரசின் கரிசனம் இத்தகைய அளவில் இருந்தது! நரசிம்மராவ் அரசு இரு விஷயங்களில் கேவலப்பட்டது : 1) நாட்டில் ஏழை மக்களின் சீரழிவை உருவாக்கிய புதிய தாராளவாத மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கையின் காலத்தைத் தொடக்கி வைத்தமைக்காக 2) பாபர் மசூதி இடிப்பைத் தடுக்க எதையும் செய்யாமல் இருந்ததற்காக. நரசிம்மராவ் அரசால் அமைக்கப்பட்ட பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினருக்கான தேசிய ஆணையம் நிறுவப்பட்டதற்கும், அவரது அரசு இழைத்த இரு பெருங்குற்றங்களுக்கும் உள்ள தொடர்பை சி.பி.எம். கட்சி அருமையாக விளக்கும். 1992 நவம்பர் 26இல் ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச், பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினருக்கான தேசிய ஆணையம் நிறுவப்பட்டது சட்டவிரோதம் என்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த நலன்களுக்கு எதிரானதான கிரிமீலேயர் அளவுகோலுக்குச் சாதகமானதாக அதே தீர்ப்பு இருந்துவிட்டது.

மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் அரசின் முடிவு செல்லும் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை 1992 நவம்பர் 26இல் வழங்கிய ஒன்பது நீதிபதிகளுள் ஒருவரான பி.பி. சாவந்த் மிகச் சுருக்கமாக எழுதினார் :

“சட்ட விதி 16(4)இல் குறிப்பிடப்படுகிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு குடிமக்கள் என்பவர்கள், தங்களது சமூக ரீதியிலான பிற்படுத்தப்பட்ட தன்மையின் காரணமாக - கல்வியிலும், பொருளாதாரத்திலும் பிற்படுத்தப்பட்ட, சமூக ரீதியில் பிற்படுத்தப்பட்ட குடிமக்கள் ஆவர். ஒரு சாதி தன்னளவிலேயே ஒரு வர்க்கமாக அமையலாம். அதே வேளையில், ஒரு சாதி பிற்படுத்தப்பட்ட வகுப்பாக தொகுக்கப்பட வேண்டுமென்றால், அந்த குறிப்பிட்ட சாதி சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்டதாகவும், அதன் கல்வி மற்றும் பொருளாதார ரீதியிலான பிற்படுத்தப்பட்ட தன்மை அதனுடைய சமூக ரீதியிலான பிற்படுத்தப்பட்ட தன்மையின் காரணமாய் ஏற்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

“பொருளாதார அளவுகோல் மட்டுமே ஒரு வகுப்பை பிற்படுத்தப்பட்ட வகுப்பு என அடையாளப்படுத்த முடியாது; அந்த வகுப்பின் பொருளாதார ரீதியிலான பிற்படுத்தப்பட்ட தன்மை - சமூக ரீதியிலான பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதை மட்டும் வைத்துக் கொண்டு தேவையான பிரதிநிதித்துவத்தை கணக்கிட முடியாது. போதுமான பிரதிநிதித்துவத்தை கணக்கிடுவதற்கு நிர்வாகத்தின் பல்வேறு மட்டங்களிலும், பல்வேறு அந்தஸ்துகளிலும் உள்ள அவர்களின் பிரதிநிதித்துவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்; ஒட்டுமொத்த எண்ணிக்கையல்ல. நிர்வாகத்தில் போதிய அளவுக்கு குரல் இருப்பதே போதிய பிரதிநிதித்துவத்தைத் தீர்மானிப்பதாக இருக்கிறது.''

மொத்தமிருந்த ஒன்பது நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். ஆனால் அவர்களாலும்கூட இடஒதுக்கீட்டிற்குப் பொருளாதார அளவுகோல் செல்லத்தக்கது என்று அறிவிக்க இயலவில்லை.

தமிழில்: ம.மதிவண்ணன்

அடுத்த இதழிலும்

Pin It