முன்பொரு காலத்தில்
எனக்கும் உனக்குமாக
வழக்கொன்றிருந்தது.

அறிவிக்கப்படாத சட்டமாயிருந்தது
பின்னாளில் அது.

என் குரல்வளை
நெருக்கிப் பின்னியபோதும்
கைகளைக் கயிறுகளில்
கட்டி பிணைத்தபோதும்
கால்கள் மீறிப் போகாமல்
பின்னுக்குத் தள்ளியபோதும்
உடலையே வளைத்து
திமிற முடியாமல் செய்தபோதும்
வேறு எவரின் குரல்களும்
எனக்காக எழுந்ததாய் சொல்லுதற்கில்லை.

எல்லாம்
எல்லாருக்கும் என ஒப்புகை செய்தபின்
தொடர்ச்சியே என்றாலும்
மறுதலித்தே வந்தாய் தொடர்ந்து

என் மண்ணில் உழைப்பெடுத்து
உண்டு, நீர் அருந்தி
வாழ்ந்த காலத்திற்கும்
வாழப்போகும் நாள்களுக்குமான
இடைவெளிகள் ஏதுமற்று
கடக்கிறது காலம் கவனமுடன்

எல்லாம் சமமென்பதாய் நினைத்து
நீதித்தராசில்
குத்திட்டு விழிக்கிறது கண்கள் அவ்வப்போது

என்றாலும்
வாழ்தலின் அர்த்தமென்பது
முரண்கள் நிறைந்தபடி
இப்படியாக இருக்க
தடைகள் பல கடந்தபடி
விசாரணைக்குள்ளாகியிருக்கிறது சமூகம்.
Pin It