இந்திய உழைக்கும் வர்க்கத்தின் தலைவர்களான குருசந்த் தாக்கூர் (வங்காளம்), ஜோதிபா புலே (புனே), சத்திரபதி சாகு மகாராஜ் (கோல்காபூர்), பெரியார் (தமிழ்நாடு) மற்றும் டாக்டர் அம்பேத்கர் (மகாராட்டிரா) போன்றோர் பார்வையில் ரஷ்யப் புரட்சியின் விளைவுகளும், அதன் எதிர்கால பயன்களும் வெளிப்படையாக உணரப்பட்டன. ஆனால் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் சமூக அமைப்பை மாற்றியமைக்கப் போராடிய இந்தப் புரட்சியாளர்களில் எவரும் கம்யூனிச இயக்கத்தில் தொடர்ந்து நம்பிக்கை வைக்க முடியவில்லை.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செங்கொடிகளை ஏற்றுவதன் மூலம் வர விருக் கக்கூடிய வளமான எதிர்காலத்தைக் காட்டி உழைக்கும் மக்கள் அனைவரையும் அடிமைப்படுத்தியதில் முதன்மையான மற்றும் ஒரே கருவியாக இருந்த பார்ப்பனத் தலைவர்களால் - இந்த வேடிக்கையான முரண்பாடான சூழல் தொடக்கத்திலிருந்தே உருவாக் கப்பட்டது. அவர்கள் பன்னாட்டு கம்யூனிச இயக்கத்திலும் ஈடுபட்டார்கள். இயற்கையாகவே அது அழிவை நோக்கியே சென்றது.

இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் மிகவும் பழைமைவாத, நிலவுடைமைப் பார்ப்பனக் குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ்காரராகவே தொடங்கினார். ஆனால், திடீரென அக்காலத்தில் தென் மாநிலமான கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியை உயர்த்திப் பிடிக்கத் தொடங்கினார். அவருக்கும் எம். என். ராயுடன் தொடர்பு இருந்தது. வங்காளத்திலும் காட்சி எவ்விதத்திலும் மாறவில்லை. பெரும் ஜமீன்தார் குடும்பங்களின் உறுப்பினர்களும், பார்ப்பனர்களும், எம்.என். ராய்யும் சிறப்பு கவனிப்பிற்கு உள்ளாகினர். அக்காலத்திய கம்யூனிஸ்ட் தலைவரான தோழர் முஸாபர் அகமதின் "எனது வாழ்க்கையும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்' என்ற நூலில் கம்யூனிஸ்ட் கட்சியில் நிலவி வந்த இந்த போக்கைக் குறித்து விரிவாகக் காணலாம்.

ரஷ்ய போல்ஷ்விக் புரட்சி அல்லது அக்டோபர் புரட்சி என்று அழைக்கப்படும் 1917 இன் புரட்சி, சீனா அல்லது வியட்நாம், அய்ரோப்பா அல்லது லத்தீன் அமெரிக்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் புரட்சிகள் எதுவும் ஆளும் வர்க்கத்தினரால் நடத்தப்படவில்லை. அவை உழைக்கும் வர்க்கத்தினரால் மட்டுமே ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டன. இந்தப் புரட்சிகளில் எந்த ஒரு தலைவரும் ஆளும் அல்லது அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். மேலும், ஆளும் வர்க்கம், ஒரு வர்க்கமாக விடுதலைப் போராளியாக செயல்பட முடியாது. ஆளும் வர்க்கத்தில் இன்றியமையாமல் இருக்க வேண்டியது என்னவெனில், நன்மை செய்வதற்கான மனஉறுதியும், சுயநல வகுப்பு நலன்களின் அடிப்படையில் எழும் உள்ளக் கட்டுப்பாடு களிலிருந்து விடுபட்ட நிலையுமேயாகும்.

“சுயநல வகுப்பு நலன்களோடு இணைந்த திறன் என்பது, ஒரு நல்ல அரசை உருவாக்குவதற்குப் பதில் உழைக்கும் மக்களை ஒடுக்கக்கூடிய எந்திரத்தையே உருவாக்கும்” என்று கூறிய டாக்டர் அம்பேத்கர் மேலும், “ஓர் அரசின் கருவிகளை தேர்ந்தெடுக்கும்பொழுது அந்தக் கருவிகளில் நிலவும் வகுப்புப் பாகுபாட்டை கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது” என்றார். உண்மையில் அதுதான் ஒரு நல்ல அரசின் அடிப்படையாகும். ஆனால், இந்த உண்மையின் முக்கியத்துவம் ஜனநாயகத்தின் நாயகர்கள் என்று தங்களை கருதிக் கொள்ளக்கூடியவர்களால் கூட அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது வேதனையானது. காரல் மார்க்ஸ்தான் இதை அங்கீகரித்து, பாரிஸ் சமூக நிர்வாகத்தில் இதை அடிப்படையாக வைத்து செயல்பட்ட முதல் நபர் ஆவார்.

கெடுவாய்ப்பாக, இந்திய சமூகத்தின் அடித்தட்டில் இருந்தவர்கள் கம்யூனிசத்தைப் பற்றி அய்ரோப்பிய கம்யூனிஸ்டுகள் மூலமாகவோ, தங்களுடைய சொந்த தலைவர்கள் மூலமாகவோ அறியவில்லை. தலித் தலைவர்களில் எவரும் (தீண்டத்தகுந்த அல்லது தீண்டத்தகாத சூத்திரர்கள்) இந்திய கம்யூனிஸ்டு கட்சி அல்லது மார்க்சிய இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை எடுக்கவில்லை. உலகளாவிய கம்யூனிஸ்ட் அமைப்பினைச் சேர்ந்த முன்னோடிகள் - அவர்கள் ரஷ்யாவை சேர்ந்தவர்களாக இருப்பினும், சீனாவை சேர்ந்தவர்களாக இருப்பினும், இந்திய அடித்தட்டு சமூக உறுப்பினர்களுடன் தொடர்பை ஏற்படுத்தவோ, அவர்களை கம்யூனிச சிந்தாந்தத்தை ஏற்கச் செய்யவோ - இச்சமூகத்தில் இருந்து தொண்டர்களையும் தலைவர்களையும் உருவாக்கவோ தவறிவிட்டனர்.

இந்தியாவின் அரைகுறை நாகரீக சமூகங்களைக் குறித்தும், அவர்கள் பரம்பரை பரம்பரையாக தாழ்நிலையில் வைக்கப்பட்டிருப்பது குறித்தும் மார்க்ஸ் தாமே ஆய்வு செய்தார் என்பதை மட்டும் கூறிக் கொண்டிருப்பதில் பயனில்லை. அவர், இந்திய சாதிய - பொருளாதாரக் கட்டமைப்பை சரியாகப் புரிந்து வைத்திருந்தார். உலகளவில் கிறித்துவ மதத்தின் தாக்கத்திற்கு பல காலங்களுக்கு முன்பே, பார்ப்பனர்கள் ஒரு மாயப் படிநிலையின் மூலம் இந்தியாவில் ஏற்படுத்திய துயர்நிலை குறித்து அவர் விளக்குகிறார். ஒடுக்கப்பட்ட இந்தியாவின் உண்மைக் குடிகள் பிரிட்டிஷ் காலத்தில் தங்கள் குரலை உயர்த்தவோ, தங்கள் மீதான அநீதி மற்றும் சுரண்டலை எதிர்க்கவோ, தங்களின் சுதந்திரத்திற்காகப் போராடவோ இல்லை என்று சொல்வது உண்மையாகாது. எல்லா சாதகமான சூழல்களும் இருந்தபோதும் அவர்களிடையே அவர்களின் சொந்த தலைமையின் கீழ் கம்யூனிசப் போராட்டம் வேர் பிடிக்கவே இல்லை; அவை எழ அனுமதிக்கப்படவே இல்லை. மார்க்சியமும் கம்யூனிசப் புரட்சியும் ஒரு தத்துவத்திற்கு மேலாகவோ, ஒரு சாத்தியமற்ற கனவிற்கு மேலாகவோ இருக்கவே இல்லை.

டாக்டர் அம்பேத்கர் பொதுப் போராட்டங்களைத் தொடங்குவதற்கு முன்பே, கம்யூனிசப் புரட்சி ரஷ்யா போன்ற நாடுகளில் ஒட்டுமொத்த அரசியல் சூழலையும் மாற்றி இருக்கிறது. 1917 இல் நடைபெற்ற அக்டோபர் புரட்சியானது, ரஷ்யாவில் ஜார் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து சோவியத் ரஷ்யாவில் கம்யூனிச ஆட்சியை நிறுவியது. கம்யூனிச புரட்சியின் விளைவு, நடைமுறை சாத்தியமானதாகவும், வெளிப்படையாக அடையக்கூடிய ஒன்றாகவும் அறியப்பட்டது.

அம்பேத்கர், மகாராட்டிரத்தைச் சேர்ந்த தீண்டத்தகாத சாதியான மகர் சாதியை சேர்ந்தவர். அவர்களது பரம்பரைத் தொழிலாக நகரங்களை தூய்மைப்படுத்துதல், இறந்த மிருகங்களின் தோலை உரித்தல், கிராமங்களைப் பாதுகாக்கும் காவல்காரர்கள் போன்றவை ஆகும். வேதங்கள் மூலமாக அறிவுறுத்தப்பட்ட சட்டங்களின்படி, அவர்களுக்கு வேறு தொழிலுக்கான எவ்வித வாய்ப்பும் இல்லை.

அம்பேத்கர் தனது சிறு வயதில், மும்பையில் உள்ள தொழிற்சாலையில் சாப்பாட்டுக் கூடை சுமக்கும் சிறுவனாகப் பணிபுரிந்திருக்கிறார். மும்பையில் இருந்தபோது அவர்கள் மும்பை "கோலல்' எனப்படும் ஒற்றை அறைக் குடியிருப்புகளில் வாழ்ந்தனர். இந்தக் குடியிருப்புகள் பெருநகரங்களில் உள்ள ஏழை, கீழ் ஜாதி, தொழிலாளர்களுக்கானது. சேரியை சேர்ந்த அம்பேத்கர், மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்ற உடனே ஒரு கூலியின் மகளுடன் மணமுடிக்கப்பட்டார். அவருடைய திருமணப் பதிவானது மும்பை மீன் அங்காடியில் அதன் வேலை நேரம் முடிந்த பிறகு நடத்தப்பட்டது. சாக்கடை மீது அதனை மூடுவதற்காக வைக்கப்பட்ட ஒரு பெரிய கல்லின் மீது மணமக்கள் நிறுத்தப்பட்டனர்.

இந்தத் தீண்டத்தகாத சிறுவன்தான் எதிர்காலத்தில் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் இருந்து அறிவியல் முனைவர் பட்டம் பெற்றார். அதற்கு முன்பே வட அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்றிருந்தார். லண்டன் கிரேஸ்இன்-இலிருந்து பார்-அட்-லா பட்டம் பெற்றிருந்தார். பார்ன் பல்கலைக் கழகத்தில் அவர் பொருளாதாரம் படித்திருந்தார். அந்த வகையில் இந்தியாவில் முதன் முதலாக பொருளாதாரத்தில் ஒரு வெளிநாட்டு பட்டம் பெற்றவர் இவரே. ஆனால், இத்தகைய தனித்துவமான திறனும் சாதனைகளும் கொண்ட பேரறிஞரான இவர், தனக்கு சொத்து சுகங்கள் சேகரிக்க முனையவில்லை. மாறாக, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்காகவும், இந்தியாவின் உழைக்கும் வர்க்கத்தினரான "உலக அநாதைகளின்' விடுதலைக்காகவும் இறுதிவரை போராடுவதென உறுதி மேற்கொண்டார்.

பார்ப்பனர்களின் ஆன்மிகப் பிணைப்பில் கட்டுண்டு கிடக்கும் இந்த மக்களை விடுவிக்கத் தான் தவறினால், தன்னைத் தானே சுட்டு மாய்த்துக் கொள்வதாக உறுதி எடுத்திருந்தார். உழைக்கும் வர்க்கத்தினரை ஆளும் வர்க்கத்தினராக மாற்றுவதைத் தன் நோக்கமாகக் கொண்டிருந்தார். உலகின் சர்வாதிகாரிகளில் எவரும் இதுவரை வடிவமைத்திராத அளவிற்கு மிகவும் பழமையானதும் கேடானதுமான ஒரு சுரண்டல் அமைப்பினை எதிர்த்துப் போராடினார். அந்த வகையில் அவர் அதிசிறந்த புரட்சியாளராகவும், சமூக சீர்த்திருத்தவாதியாகவும் இருந்தார். இரண்டு வகையான மறுப்புகளுக்கு எதிராக அவர் போராடினார்.

முதலாவதாக பார்ப்பனிய மநுவாதி சமூக அமைப்பின்படி சமூக கலத்தலும், அடிப்படை மனித அடையாளமும் மறுக்கப்பட்ட மக்களுக்கு அதை மீட்டெடுத்து கொடுப்பதற்காக அவர் போராட வேண்டியிருந்தது. இரண்டாவதாக, தீண்டத்தகாதவர்கள் மற்றும் சூத்திரர்களின் மனித அடையாளத்தை மீளுறுதி செய்தபின் அவர்களுடைய அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளுக்காக அவர் போராடினார். இந்தத் தனித்துவமான போராட்டக் களத்தில் அவர் தன்னைச் சுற்றி இருந்த இந்திய மற்றும் அய்ரோப்பிய ஆளும் வர்க்கத்தினருக்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. அம்பேத்கர் இறந்தபோது இரங்கல் செய்தி விடுத்த பண்டிட் ஜவகர்லால் நேரு, “எந்த ஒரு மனிதரும் எதிர்த்துப் போராடி இருக்க வேண்டிய ஓர் அமைப்பிற்கெதிராக அம்பேத்கர் போராடினார்” என்று நினைவு கூர்ந்தார்.

தெய்வீக அடிமைகளான இந்தியாவின் உழைக்கும் வர்க்கத்தினருக்காக, அம்பேத்கர் சோர்வற்ற போராட்டத்தை முன்னெடுத்தார். பார்ப்பனியத்தின் வேத மற்றும் அரசியல் வழியான சர்வாதிகாரத்திலிருந்து தனது நாட்டின் அடிமைகளை, "பலன்பெறாத உழைப்பாளிகளை' விடுவிக்க அவர் போராடினார். தொலைநோக்காளர் மோசசின் நினைவாக, "இந்தியாவின் மோசஸ்' என அம்பேத்கர் அழைக்கப்படுகிறார். எகிப்தின் பரவோஸ்களின் அடிமைத் தளையிலிருந்து தனது மக்களை விடுவித்து, செங்கடலுக்கு அப்பால் இருக்கக்கூடிய அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட நிலத்திற்கு அவர்களை மோசஸ் இட்டுச் சென்றார். மோசசுக்கு மாறாக, அம்பேத்கர் ஆபத்தான கடல்களை கடக்கவில்லை. "மகாத்மா'வின் புகழ்மிக்க சாகும் வரையிலான உண்ணாவிரதத்தின் விளைவாக தீண்டத்தகாதோர் பெரும் படுகொலைக்கு ஆளாக நேரக்கூடிய அச்சுறுத்தலே அந்த ஆபத்தான கடல். தீண்டத்தகாத வேட்பாளர்களுக்கு தீண்டத்தகாத மக்கள் மட்டுமே வாக்களிக்கக்கூடிய உரிமையை அவர் விட்டுக் கொடுக்குமாறு அம்பேத்கருக்கு அழுத்தம் தரப்பட்டது.

லண்டன் வட்டமேசை மாநாடுகளில் இந்துக்களுக்கு எதிரான கடினமான போருக்குப் பின் சாதி அடிப்படையிலான இந்து சமூக அமைப்பில், "தனித் தொகுதிகளுக்கான' தேவை குறித்த அவரது கோரிக்கையை அழுத்தமாக வெளிப்படுத்துவதில் அவர் வெற்றி பெற்றார். ஆனால், இந்தியாவின் ஆளும் சாதிகளின் சகித்துக் கொள்ளமுடியாத எதிர்ப்பின் காரணமாக "தீண்டத்தகாதோரின் விடுதலைக்கான முதல் சட்டத்தை' அவர் விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

காங்கிரஸ்காரர்களின் மீது ஏற்பட்ட எரிச்சலின் காரணமாகவோ, ஏமாற்றத்தின் விளைவாகவோ அவர் இந்து கம்யூனிஸ்டுகளுடன் இணையக்கூடும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் இந்து கம்யூனிஸ்டுகளிடமிருந்து எந்த உதவியும் கேட்கவில்லை. டாக்டர் அம்பேத்கர் மார்க்சியத்திற்கு ஆதரவானவராக அறியப்பட்டாலும், அவர் மார்க்சிஸ்டுகளுடன் இணைந்து செயல்படாதது என்பது, பார்ப்பனிய தலைவர்களின் கீழான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் விளைவையும், எதிர்காலத்தையும் அவர் சரியாகவே கணித்திருந்தார் என்றே தோன்றுகிறது.

அம்பேத்கர் விளக்குகிறார் : “பொருளாதார நோக்கில் வரலாறு' என்ற தத்துவத்தை மார்க்ஸ் உருவாக்கினார். அதன் தன்மை குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பொருளாதார நோக்கில் வரலாறு எனும் தத்துவம் முழுமையாக உண்மையில்லை எனில் அதற்கு காரணம், உழைக்கும் வர்க்கம் தான் சார்ந்திருக்கக்கூடிய வாழ்வின் நிலைகளை நிர்ணயிக்கக்கூடிய பொருளாதார உண்மைகளை அளிக்கத் தவறிவிட்டன என்பதே ஆகும். மனித இனத்தின் நிர்வாகம் குறித்த எழுத்துகளில் தங்களை பரிச்சயப்படுத்திக் கொள்ள உழைக்கும் வர்க்கம் தவறிவிட்டது. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அனைவரும் ரூசோவின் சமூக ஒப்பந்தம், மார்க்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை, 13 ஆம் போப் லியோவின் தொழில் நிலைகள் குறித்த சுற்றறிக்கை மற்றும் விடுதலை குறித்த ஜான் ஸ்டூவர்ட் மில்லின் எழுத்துகள் ஆகியவற்றில் தங்களைப் பரிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். நவீன காலத்தின் சமூக மற்றும் அரசாங்க அமைப்புகள் குறித்த அடிப்படை ஆவணங்களில் நான்கு மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.”

அம்பேத்கர் மேலும் விவரிக்கிறார் : “ரஷ்யாவின் கம்யூனிச சர்வாதிகாரம், மிக அற்புதமான சாதனைகளைப் புரிந்திருப்பதாக கூறப்படுகிறது. அதை ஒருவரும் மறுப்பதற்கில்லை. அதனால்தான் அனைத் துப் பின்தங்கிய நாடுகளுக்கும் ரஷ்ய சர்வாதிகாரம் நன்மை பயக்கும் என நான் கூறுகிறேன். ஆனால், இது நிரந்தர சர்வாதிகாரத்திற்கு சாதகமான வாதமாகாது. மனித இனத்திற்கு பொருளாதார மதிப்பீடுகள் மட்டும் போதாது. அதற்கு ஆன்மிக மதிப்பீடுகளும் தேவையாகவே இருக்கின்றன.”

மார்க்சின் தத்துவத்தின் மீதான நம்பகத்தன்மை குறித்து அவர் முழு நம்பிக்கை கொண்டிருந்தபோதும், அதிகாரப்படுத்துதல் மற்றும் விடுதலை பெறச் செய்தல் ஆகியவற்றின் மீது அந்த இயக்கத்தின் தாக்கம் குறித்தும் அந்தத் தத்துவத்திற்கு தனது ஆதரவு குறித்தும் அவர், “ஜனநாயகத்தை பாதுகாப்பானதாக ஆக்குவதற்கு குறைந்த காலத்திற்கு சர்வாதிகாரம் இருப்பது நன்மை பயக்கக்கூடும். இதற்கு அசோகர் ஒரு சான்றாக இருக்கவில்லையா?” என்றார். இந்து கம்யூனிஸ்டுகளிடமிருந்தும் அவர்களது இயக்கத்திடமிருந்தும் டாக்டர் அம்பேத்கர் லட்சக்கணக்கான மைல்கள் விலகி இருந்தார். அவர்கள் குறித்து அவர் மிகுந்த அச்சமும், விழிப்புணர்வும் கொண்டிருந்தார். அதனால், பார்ப்பனிய சோசலிச தலைவர்களான மது லிமாயி போன்றவர்களின் பெரும் முயற்சிகளும் கூட, சோசலிச முகாமில் அவரை இணைய வைக்க முடியவில்லை.

இருப்பினும், அவர் தோழர் ஸ்டாலினுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முயன்று அதில் பெருமளவு முன்னேற்றமும் அடைந்தார். தோழர் ஸ்டாலின் மறைந்த அன்று கூட, டாக்டர் அம்பேத்கர் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முழு நாளும் பட்டினி இருந்தார். இந்திய உழைக்கும் வர்க்கத்தினர் மனித அடையாளமே மறுக்கப்பட்டனர். டாக்டர் அம்பேத்கர் தனது "மகத் - குள' இயக்கத்தின் மூலம் தீண்டத்தகாதவர்கள் மற்றும் சூத்திரர்களின் மனித அடையாளத்தை மீட்டெடுத்தார்.

எஸ்.கே.பிஸ்வாஸ்

தமிழில் : பூங்குழலி