அறிவு வளர்ச்சிக்கு எதிரான செயல்களையும், பழக்க வழக்கங்களையும், பண்பாட்டுச் செயல்களையும் தமிழினம் செய்து கொண்டிருப்பதால் – வெளிப்படையாகப் பார்க்கும்போது ஏதோ அறிவு வளர்ச்சி பெற்ற இனமாகத் தென்பட்டாலும் – உண்மையில் அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்புகளை நாளும் இழந்து வரும் ஓர் இனமாக மாறி வருவதை எண்ணி வேதனையடையாமல் இருக்க இயலவில்லை.
‘கல்வியின் நோக்கம் சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதுதான்' என்று அய்ன்ஸ்டீன் கூறுகிறார். ஒவ்வொரு நாளும் பள்ளியையும், கல்லூரியையும் விட்டு வெளியே வரும்போது ஆசிரியர் சொல்லிக் கொடுத்த விஷயங்கள் மாணவர்களை சஞ்சலப்படுத்த வேண்டும். எந்தப் புதிய அனுபவமும் ஓர் உணர்வை ஏற்படுத்தும். ஆனால், தமிழ் நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அறிவு வளர்ச்சியை மய்யமாக வைத்துக் கல்வி கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வி, ஜெனிபர் எழுதியுள்ள இந்நூலைப் படித்த பிறகு எனக்கு ஏற்படுகிறது.
அறிவு வளர்ச்சிக்கு எதிரான மதிப்பீடுகள் கல்விக் கூடங்களில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கற்றுத் தரப் படுகின்றன. விலங்குகளிடம் ‘உன் அறிவை வளர்த்துக் கொள்' என்று புத்தர் சொல்லவில்லை. மனிதனைப் பார்த்துதான் கூறினார். ஒருவர் பெற்ற அறிவு மனித சமூகத்தை வளப்படுத்துவதாக இருக்க வேண்டும். ‘சக மனிதன் என் எதிரி, அவனை வீழ்த்தி அழிக்க வேண்டும்' என்ற விலங்கு மதிப்பீடு இந்தப் போட்டி உலகத்தில் பின்பற்றப்படுவதற்கு கல்வி நிலையங்களில் இந்த விலங்கு மதிப்பீடு மறைமுகமாக வளர்த்தெடுக்கப்படுவதுதான் காரணம்.
ஆசிரியரும் மாணவனிடமிருந்து கற்றுக் கொள்ள முடியும். ஆசிரியர் வங்கியில் பணம் போடுபவராகவும், மாணவனின் மூளை அவற்றைச் சேமித்து வைக்கும் சேமிப்புப் பெட்டியாகவும் இருக்கும் நிலை, ஒருபோதும் அறிவுப்பூர்வமான பண்பாட்டுச் செயலாக இருக்க முடியாது. இருவருமே ஆசிரியர்கள்தான்; இருவருமே மாணவர்கள்தான் – என்ற கருத்து இந்நூலைப் படிக்கும் பொழுது ஏற்பட்டது.
கல்வி நிலையங்கள் சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதில்லை. ஒரு மாணவன் 25 ஆண்டுகள் பள்ளியிலும், கல்லூரியிலும் சிந்திக்கப் பழகாமலேயே வாழ்க்கையை இழந்து விடுகிறான். இது, நிச்சயமாக ஒரு தற்கொலைதான். இத்தகைய போக்கினை எதிர்த்து, கடுமையானதொரு போரை நடத்த வேண்டியது ஓர் அவசரத் தேவையாக உள்ளது. இதனை கண்டிப்பாக அரசியல்வாதிகள் செய்யப் போவது இல்லை. கல்வி வியாபாரிகளும் ஒருக்காலும் முன் முயற்சி எடுக்கப் போவது இல்லை. அரசு எப்படிச் செய்ய முடியும்? அதுதான் ஆளும் வர்க்கத்தின் ஒடுக்கும் சக்தியாக மாறி விட்டதே. ஆசிரியர்கள்தான் செய்ய முடி யும். ஆனால், ஜெனிபர் போன்று சிந்திக்கத் துணிந்த ஆசிரியர்கள் நம்மிடையே ஒரு சிலரே இருக்கின்றனர்.
ஒரு காலத்தில் அறிவுக் கூர்மைக்கு விளக்கம் அளித்தவர்கள், ‘பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றல் பெற்றவர்களே அறிவாளிகள்' என்று கூறுகின்றனர். ஆனால் எந்நேரமும் பிரச்சனைகளை ஏற்படுத்துபவனே உண்மையில் அறிவாளி. ஆம்! விஞ்ஞானிகள் மத்தியில், தன்னுடைய விமர்சன அறிவால் கேள்வி கேட்டு பிரச்சனைகளை ஏற்படுத்துபவன் அறிவாளி. உற்றுப் பார்த்தால், எல்லா இடங்களிலுமே அநீதியும் ஓலங்களும் நிலைப் பெற்றிருக்கின்றன. ஆனால், சவக்கிடங்கின் அமைதிபோல் நம் சமூகத்தில் அமைதி நிலவுகிறது. எந்நேரமும் கேள்விகளைக் கேட்டு பிரச்சனைகளை ஏற்படுத்தும் சிந்திக்கத் தெரிந்த மாணவர்களே இப்போதைய தேவை.
தான் உண்டு, தன் வயிறு உண்டு, தன் குடும்பம் உண்டு, திருமணம், காது குத்து, கிரஹப்பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் படித்த வர்க்கம் தன்னுடைய அறிவையும், ஆற்றலையும் விரயம் செய்து கொண்டிருக்கும் வேளையில், ஜெனிபர் துணிந்து சிந்திக்கிறார். சுயமாக சிந்திப்பவர் ‘ஆபத்தானவர்'. இன்றைக்கு ‘ஆபத்தான' மனிதர்கள்தான் தேவை!
தமிழ் மக்களிடம் பாரம்பரிய செயலூக்கத்தை வளர்க்கும் திட்டங்களையே இன்றைய ஊடகங்கள் வலுப்படுத்தி வருகின்றன. இதன் விளைவு, இன்று முன்முயற்சி எடுத்து சமூகத்தை மாற்றக்கூடிய சிந்தனையாளர்களை நாம் காண முடிவதில்லை. படிக்காதவர்கள் எவ்வாறு இந்த சமூக சூழ்நிலையில் செய்வதறியாது ஆளுமை அற்றவர்களாக வாழ்கிறார்களோ, அதே மனநிலையில்தான் படித்தவர்களும் வாழும் அவல நிலையைக் காண்கிறோம். ஒரு பெண் ணின் அறிவு வளர்ச்சி என்பது 1000 ஆண்களின் மடமையைப் போக்கும் அறிவாற்றல் பெற்றது. ஆனால் எந்நேரமும் தொலைக் காட்சி தொடர்களைப் பேராசிரியர்களும், ஆசிரியர்களும் பார்த்து தங்களுடைய வாழ்வை தொலைத்து வருகின்றனர்.
கல்வி விடுதலையை கொடுப்பதற்குப் பதிலாக, அடிமைத்தனத்தை உருவாக்கும் நிலையைப் படித்தவர்களின் வாழ்க்கை முறையைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். வெகுண்டெழுந்து அநீதிக்கு எதிராகப் போராடாமல் அடிமையாக வாழும் முறையே ஒரு ‘பாரம்பரிய வாழ்க்கை முறை'யாகப் போய்விட்டது. பாரம்பரிய அடிமை மனப்பான்மையும், பாரம்பரிய சோம்பேறித்தனமும் ஒரு சமூகத்தின் பண்பாடாக இருந்தால், அதுதான் அச்சமூகத்தின் அவல நிலை.
சாதியும், வறுமையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும், நோய்களும் மக்களை அழிக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், அவற்றை எதிர்த்துப் போராடாமல் வாழ்வதே ஒரு பண்பாடாக, ஒரு தலைமுறை எதிர்வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்லும் போக்கை தற்போதைய இந்தக் கல்வி முறையால் மாற்ற முடியுமா? அடிமைத்தனத்தை வளர்க்கும் கல்வி முறையை பயிலாதவனே தலைவனாகிறான். புரட்சியையும், மாற்றத்தையும் விடுதலையையும் ஏற்படுத்தும் கல்வி முறையைப் பயிலாதவனே அடிமையாகிறான்.
எங்கு திரும்பினாலும் இந்தியாவில் துயரங்கள்தான். எதையும் உருவாக்கும் ஆற்றல் கொண்ட மூளை, இந்த சோகங்களுக்கு மூல காரணம் என்ன என்றுதான் சிந்திக்கும். பிறரின் துன்பங்களைக் கண்டு மனசாட்சி உறுத்தும் மனிதன், ஏன் இந்த அவல நிலையை மாற்ற முற்படக்கூடாது? உருவாக்கும் ஆற்றலும், இத்தகைய மனசாட்சியும் உடைய படித்தவர்களை நம் கல்வி நிலையங்கள் உற்பத்தி செய்கின்றனவா அல்லது வெறும் ‘மம்மி, டாடி' என்று ஆங்கிலம் பேசும் அடிமைகளை உற்பத்தி செய்கின்றனவா என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.
கல்வி நிலையங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் மாணவர்களும், ஆசிரியர்களும் தேவை. பிற துறைகளுக்கும் இது பொருந்தும். ஆனால், கல்வி நிலையங்கள் அய்ன்ஸ்டீன்களைத் தாங்கிக் கொள்ளாது. ஆசிரியர்கள் துணிய வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் பாடத்திட்டத்தை கடந்து செயல்பட வேண்டும். இந்நூலாசிரியர் ஜெனிபர் போன்று பாடத்திட்டத்திற்கு எதிராகவும் செயல்பட வேண்டும். இந்த மூன்று வகையில் செயல்பட்டால்தான் மாற்றம் சாத்தியமாகும். இந்தப் புத்தகம் அதற்கு ஓர் ஒளியாக இருக்கிறது.
50 ஆண்டுகளாக ஆலயங்களுக்குப் பலரும் வழக்கம் போல செல்வதைப் பார்க்கிறோம். அதே போல சில ஆடு, மாடுகளும் வழக்கம் போல செல்வதையும் பார்க்கிறோம். புதியவற்றைக் கண்டுபிடித்தேன் என்ற உணர்வு இல்லை. மனிதர்களும் விலங்குகளும் ஆண்டாண்டுகளாக ‘வழக்கம் போல' வாழ்கின்றனர்; செயல்படுகின்றனர். இவ்வாறு ‘வழக்கம்போல' வாழும் பாரம்பரிய வாழ்க்கை முறையையே தலைமுறை தோறும் ‘சொத்தாக' விட்டுச் செல்கின்றனர். இதற்கான தீர்வை எங்கே தேடுவது? கல்வித் தத்துவத்தில்தான் தேட முடியும்.
கார்ல் மார்க்ஸ், அய்ன்ஸ்டீன், அம்பேத்கர், பெரியார் போன்ற சிந்தனையாளர்கள் தங்களுடைய அறிவை, சமூக மாற்றத்திற்குப் பயன்படுத்தினார்கள். ஆனால் அத்தகைய சிந்தனையாளர்கள் ஏன் இப்போது இல்லை? சிந்திப்பதற்கென எந்தப் பயிற்சியும் கல்வி நிலையங்களில் கொடுப்பது இல்லை. அப்படி தப்பித் தவறி சிந்தித்தாலும், எதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்; எப்படி சிந்திக்க வேண்டும்; எந்த எல்லை வரையில் சிந்திக்க வேண்டும் என்ற வரையறையை – இந்திய அரசியல்வாதிகளும், ஆளும் வர்க்கங்களும், கல்வியாளர்களும், ஊடகங்களும் திட்டமிட்டு முறைப்படுத்தியிருக்கின்றனர். ஆனால் இன்றைய அவசரத் தேவை, இந்த வழக்கத்திற்கு மாறுபட்டவர்கள்தான். அதற்கான தத்துவம் தேவை. ஓர் அறிவாளி ஒவ்வொரு நாளும் புதிய வளமான அனுபவங்களைப் பெற வேண்டுமாயின், தான் பெற்ற அறிவை இந்தப் புரையோடிய சமூகத்தை மாற்றப் பயன்படுத்த துணியும் பொழுதுதான்!
இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன் ‘வாழ்க்கையின் நோக்கம்' என்ற கேள்வியை ஆழமாகச் சிந்தித்தால் பதிலாக வருவது என்ன? ஏதோ ஒரு வேலை, திருமணம், பிள்ளைகள், வீடு என்றுதானே பொதுவாக பதில்கள் வரும்! ஆனால் அய்ன்ஸ்டீன் கூறுகிறார்: "ஆழமாக சிந்தித்தால், ஒரு மனிதன் பிற மனிதர்களின் துன்பத்தை நீக்கி மகிழ்ச்சி ஏற்படுத்துவதுதான் வாழ்க்கையின் நோக்கமாக இருக்க முடியும்.'' சக மனிதர்களின் துன்பத்தை நீக்குவதற்கும் மகிழ்ச்சி ஏற்படுத்துவதற்குமான கல்வித் தத்துவம் இந்தியாவில் உள்ளதா? ஒருவரை ஒருவர் வீழ்த்தி சதி செய்து மகிழும் போட்டிப் போடும் முறையைத் தான் இன்றைய கல்வி நிலையங்கள் கற்றுக் கொடுக்கின்றன.
சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கல்வி கொடுப்பது என்பது அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பதற்கு ஒப்பாகும். கல்வி பெற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகத்தின் எதார்த்தத்தையும், விதிகளையும், அவலங்களையும் விளக்கிச் சொல்லும் அறிவு தேவை. அந்த அறிவுதான் ஓர் ஆயுதமாக விளங்க முடியும். அவர்கள் பெற்ற அறிவு, தாங்கள் யார்? தாங்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டோம்? தங்களின் விடுதலை எப்படிப்பட்டது? தங்களின் விடுதலைக்கான போராட்ட வடிவத்தை கண்டறிவது என அனைத்தும் – தங்களுடைய சொந்த அறிவு கொண்டே விளக்கிச் சொல்லும் ஆற்றல் பெற்றவர்களாக வளரும்போதுதான் கல்வி விடுதலை அளிக்கும் ஆற்றல் பெற்ற கருவியாக மாறும்.
ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு போன்ற பல்கலைக்கழகங்களில் உச்சக்கட்ட அறிவு பெற்ற ஒடுக்கும் வர்க்கத்தின் குழந்தைகள், தங்களுடைய அறிவினால் சமூகத்தைக் குழப்புவதோடு படிப்பறிவு, உழைக்கும் மக்கள் மற்றும் தலித்துகளின் போராட்டத்தை எளிதில் திசை திருப்பி அவர்களை விரக்தி அடைய வைத்து விடுகின்றனர். அவர்கள் பெற்ற அறிவை, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக் காகப் போராடுபவர்கள் பெற முயல்வோம். இத்தகைய கல்வியை இன்றைய நம் கல்விக்கூடங்கள் கொடுப்பதே இல்லை. தான் பெற்ற கல்வி அறிவின் மீது எத்தனைப் பேர் பெருமிதம் அடைகின்றனர்? எத்தனைப் பேருக்கு சுயமரியாதை உணர்வை அது அளித்திருக்கிறது? எத்தனைப் பேருக்குச் சுயசிந்தனை ஆற்றலை அது வளர்த்திருக்கிறது?
இந்த உலகத்தின் நிகழ்வுகளைத் தானே விளக்கிச் சொல்லும் பொழுது, ஒரு மனிதனின் வார்த்தையில் ஆற்றல் பிறப்பதை உணர்கிறான். ஆனால், அவன் சார்ந்த நிறுவனம் விளக்கிச் சொல்லும்பொழுது, அவன் சிந்திக்கும் ஆற்றலை அடகு வைத்தவனாகிறான். தானே விளக்கிச் சொல்வதற்கு மூளையைப் பயன்படுத்த வேண்டும். ஆழமாக சிந்திக்க வேண்டும். மாறுபட்டுச் சிந்திக்க வேண்டும். விமர்சனக் கண்ணோட்டத்துடன் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு நிகழ்விலுமுள்ள முரண்பாடுகளையும் தொடர்புகளையும் கண்டுபிடிக்க மூளையைக் கசக்க வேண்டும். இத்தகைய மூளைப் பயிற்சியை எத்தனை கல்வி நிலையங்கள் இன்று அளிக்கின்றன?
சுயமாக சிந்திக்கும் மனிதனிடம் சுயமரியாதையும், தன்னம்பிக்கையும் இருப்பதற்கான காரணத்தை உணரலாம். இந்த சிந்தனை ஆற்றல் பெற்றவர்கள்தான் செழுமையான பண்பாட்டை உருவாக்கும் ஆற்றல் பெற்றவர்களாகத் திகழ முடியும். அவர்கள் செயல்கள் அனைத்தும் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும்.
ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறையை எதிர்க்கும் புரட்சியாளர்களாக மாற வேண்டும் எனில், அவர்கள் சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் நடைமுறையில், ‘ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கொடுக்கத்தான் நாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம்' என்று கூறிக்கொள்ளும் மத நிறுவனங்களுக்கு அதிகாரம் ‘கல்வி முறை'யன்று; ‘ஒடுக்கப்பட்டவர்களை ஒடுக்கும் கல்வி'தான்.
நாம் வாழும் சமூகம் முரண்பாடுகள் நிரம்பிய சமூகமாக இருக்கிறது. அநீதிக்கும் நீதிக்கும் எதிரான போராட்டம் இடையறாது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உண்மைக்கும் பொய்மைக்கும் எந்நேரமும் போராட்டம் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதில் நடுநிலை எடுப்பது என்பது அநீதிக்கு துணை புரிவது. இது, அறிவியலுக்கு எதிரானது. கல்வியும் நடுநிலை வகிக்க நம்மைத் தூண்டுவதாக இருப்பது அபத்தமானது. சுரண்டுபவர்களுக்கான கல்வியை சுரண்டப்படுபவனும் பெற்றால், சுரண்டும் கலையைத் தானும் பெற்று, முன்னேறிய பிறகு தனக்குக் கீழ் உள்ளவனைத்தான் சுரண்டுவான். புரட்சிகரமான கல்வியை, மாற்றத்திற்கான கல்வியைப் பெற்றவன், புரட்சிக்கும் மாற்றத்திற்கும்தான் அறிவைப் பயன்படுத்துவான்.
புரட்சிக்கு எதிரான கல்வியைத் திணிப்பது என்பது, கல்வியை ஓர் அடிமைப்படுத்தும் சக்தியாக மாற்ற முயல்வதற்குச் சமம். இறைப்பணி ஆற்ற வந்துள்ளோம் என்று கூறிக்கொண்டு, ஆயிரக்கணக்கான கல்வி நிலையங்களை வைத்து – அடிமைக் கல்வியையும், அடிமை ஒழுக்கத்தையும், அறநெறியையும் எண்ணற்ற மத நிறுவனங்கள் இன்று திட்டமிட்டே நடத்தி வருகின்றன. அவர்கள் நடத்தும் பள்ளியிலிருந்து ஒரு வால்டேரும், ஒரு மார்க்சும், ஒரு அம்பேத்கரும், ஒரு பெரியாரும் உருவாவதில்லை. ஆங்கிலம் பேசும் அடிமைகளும், வஞ்சகர்களுமே உருவாகின்றனர்.
நாம் வாழும் சமூகம் மாற வேண்டும்; இந்தக் கல்வி நிலையங்கள் அதற்குத் தடையாக இருந்தால், அவற்றை இழுத்து மூட வேண்டும் அல்லது கல்வி நிலையங்களுக்குச் சென்று படிக்காமல் புத்தர் போன்று போதி மரத்தின் கீழ் உட்கார்ந்து சிந்திப்பது நல்லது. புத்தர் தன் வாழ்க்கையை நம் பள்ளிகளில் இழக்கவில்லை. ஒருவகையான நெருக்கடிக்கு நிலவும் சமூக அமைப்பு இன்னும் நெருக்கடிக்குத் தள்ளப்பட வேண்டும். அதற்குக் கல்வி மாபெரும் ஆற்றலாக மாற வேண்டும். எந்திரங்கள் பொருட்களைத் தான் உற்பத்தி செய்ய முடியும். தானே புதிய ஒன்றைச் செய்ய முடியாது. கல்வி புதிய மனிதர்களையும், சமத்துவப் பண்பாட்டையும், அறநெறிகளையும் உருவாக்கவில்லை என்றால், தயவுசெய்து அக்கல்வியைப் படிக்காமல் இருந்தால் நல்லது.