கீற்றில் தேட...

பெண்கள் இன்றைய தினம் சமூகத்தின் மனித இனத்தில் சரிபாதியாக உள்ளனர். அவர்களைப் பற்றிய நமது பார்வையும், சிந்தனைகளும் என்னவாக உள்ளது என்பதைப்பற்றி நாம் மறுபரிசீலனை செய்யவும், மாற்றிக்கொள்ளவும் வேண்டிய தருணம் இது. அது என்ன எப்போதும் இல்லாததருணம். இப்போது வந்துவிட்டது. தற்போது பெண்கள் மீதான வன்முறை கண்கூடாகத் தினசரி எவ்வித மாற்றமின்றி நாம் காலைக்கடன்கள் கழிப்பது போன்ற நடந்து கொண்டே உள்ளன.  ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு, பெண்கள் மீதான வன்முறைகளை, நம் முன் போட்டு உடைக்கின்றன. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் ஒருவழக்கில் கவலை தெரிவித்துள்ளது.

நிர்பயா தொடங்கி ஸ்வாதி, வினோதினி, அஸ்வினி என்ற பட்டியலில் நிர்மலாதேவி வரை பெண்கள் மீது ஆசிட்வீச்சு•, படுகொலை, பாலியல் வல்லுறவு, பாலியல் தூண்டல் என வன்முறைச் சம்பவங்கள் நீண்டு கொண்டே போகின்றன. சமீபத்தில் வந்த ஒருகொடூரமான செய்தி. கல்லூரி மாணவி அஸ்வினியை அவர் பயிலக்கூடிய கல்லூரியின் வாசலில்  வைத்தே கழுத்தை அறுத்துக் கொன்று விட்டார். அழகேசன் என்ற வாலிபர். இது தொடர்பான நிகழ்வுகளாக பேராசிரியர் நிர்மலாவின் நடவடிக்கைகள், மதிப்பிற்குரிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் கன்னத்தைத்தட்டி மகிழ்ந்தநிகழ்வு......... என பல பட்டியல்கள் நீண்டு கொண்டே போகின்றது.

நாம் அனைவருமே பெண்கள் மீதான வன்முறைகள் நிகழும் போதெல்லாம் ஆத்திரம் கொள்கிறோம். ஆயாசப்படுகிறோம். கண் கலங்குகிறோம். மிகக்காத்திரமாக நமது எதிர்ப்பைச் சமூக ஊடகங்களில்  காண்பிக்கிறோம். சில இடங்களில் காவல்துறையும் நீதிமன்றங்களும் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. பெண்களை வன்முறைகளில் இருந்து பாதுகாக்கக் கூடிய சட்டங்கள் பல வகைகளில் உள்ளன. அதன் நீட்சியாக சட்டங்களில் பல திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்கமிசன்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் போன்றவை பல நேரங்களில் கண்துடைப்பு நடவடிக்கைகளாகத் தேய்ந்து போகிறது.

பல இடங்களில் பொது மக்கள் மிகஆத்திரம் கொண்டு தன்னிலை மறந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தாங்களே தண்டனை தரும் விதமாக தாக்குதல்களை மேற்கொண்ட நிகழ்வுகளும் உள்ளன. இத்தகைய சூழலில் நமது கேள்வி, மேற்கண்ட முறைமைகள் மூலமாக மட்டுமே இத்தகைய வன்முறைகளுக்குத் தீர்வாகி விடுமா? இதுபோன்ற விசயங்கள்,  நிகழ்வுகள் இத்துடன் முற்றுப் புள்ளியாகின்றதா என்றால் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஆம். இது தான் தீர்வு எனில் வன்முறைகள் மீண்டும் மீண்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதுவும் வயதுக்கு வந்தபெண்கள் மீதான வன்முறைகள் பரிணாம வளர்ச்சி அடைந்து ஆசிபா போன்ற எட்டுவயதுப் பெண்குழந்தைவரை நீண்டுகொண்டே போகிறது. ஆசிபா என்ற பெண்குழந்தையைப் பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்திய நபர்கள் பிஜேபி என்ற கட்சியைத் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவருமே ஆண்களாகவே உள்ளனர்.

இதுபோன்ற பாலியல் வன்முறைகள் பல்வேறு பரிமாணங்களில் பெண்கள்மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டே உள்ளது. நேரடியாகப் பொதுமக்களும் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனை களை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வழங்கிக் கொண்டே உள்ளனர். இவையே தீர்வாகி விடுமா? பெண்களின் மீதான வன்முறைகுறைந்து, பின்னர் நின்று விடுமா? என்றால் இல்லை என்ற ஒப்புதலையே நாம் தர வேண்டியுள்ளது.

இத்தகையசூழலில் தான் நாம் காத்திரமாகச் சிலவிசயங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. மேலும், பெண்களைப் பற்றி நாம் கொண்டுள்ள பிம்பக் கட்டமைப்புகளை, சிந்தனைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம்இது. பெண்களைப் பற்றிய சிந்தனைக்கட்டமைப்பு என்பது இங்கு என்னவாக உள்ளது. பெண் என்றால் இன்ன வேலைதான் செய்வாள். ஆண் என்றால் இன்ன வேலைதான் செய்வாள்.

உதாரணத்திற்கு நான்கு பணிகளை நாம் எடுத்துக் கொள்வோம். காவல்துறை அதிகாரி, மருத்துவர், செவிலியர், வீட்டு வேல செய்பவர் என எடுத்துக்கொண்டால், நம் கண்முன் வருவதுதல் இரண்டு பதவிகளான  காவல்துறை அதிகாரி, மருத்துவர் ஆகியோர் ஆண் பாத்திரங்களையும், செவிலியர், வீட்டு வேலை செய்பவர் என்ற பாத்திரங்கள் பெண்களாகவும் மட்டுமே புனைவு செய்யப்பட்டுள்ளது  நமது சிந்தனை.

இத்தகைய கீழான சிந்தனையை மாற்ற வேண்டிய தருணம்இது. பெண்கள் வீட்டு வேலை செய்ய மட்டுமே லாயக்கானவர்கள் என்ற ஆணாதிக்கச் சிந்தனையின் விளைவே இத்தகையபெண்கள் மீதான வன்முறைகளாகும். பெண்கள் வீட்டு வேலை செய்பவள். ஆணுக்கு •சுகமூட்டுபவள் போன்ற சிந்தனைகள் ஆபத்தானதாகும். இத்தகைய சிந்தனைகள் நமது மனங்களில் கெட்டிப்பட்டு போய்விட்ட நிலையில் தான், அதன் செயல்பாட்டு விளைவாக ஆசிபா எனும் சிறுமியை வன்புணர்வு செய்வதும், பேரா. நிர்மலாதேவி ஆண்களின் இச்சைக்கு பெண்களை இணங்கச்செய்வதும், அழகேசன்கள் அஸ்வினிகளைக்கழுத்தறுத்துக்கொல்வதும்நிகழ்கின்றன.

செயல்பாட்டினைக் கண்டு துணுக்குறும் நாம் அதன் மூலமான சிந்தனையை, கருத்தியலை அடையாளம் காண்பதில்லை. அடையாளம் கண்டால்தான் உணர்ந்து நீக்க முடியும். அதற்குரிய வழிவகைகளைச் செய்ய முடியும். பெண் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், தனக்குக் கீழானவள் பெண் என்ற எண்ணத்தின் விளைவுதான் வன்முறையாக உருவெடுக்கிறது. அத்தகைய வன்முறைகள் வன்புணர்வாக, வல்லுறவாக, சீண்டல்களாக, பெண்களை உளவியல் ரீதியாகக் காயப்படுத்துவதாக, பரிணாமம் பெறுகின்றன.

விளையாட்டுக்கள்கூட பெண்களுக்கு வேறாகவும், ஆண்களுக்கு வேறாகவும், உடைகள் வெவ்வேறாகவும், பணிகள் வெவ்வேறாகவும், பழக்கவழக்கங்கள் வெவ்வேறாகவும், உழைப்பு வெவ்வேறாகவும் இச்சமூக அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலை மாற வேண்டும். பெண்களை வெறுமனே போகப் பொருளாக மட்டுமே காண்பிப்பதாகவும், ஆண்களை ஏமாற்றுபவர்கள் பெண்கள் என்பதாகவும் சித்தரித்துக் காட்டுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.

ஆண் / பெண்ஆக இரண்டு பாலினத்திலும் நிருபர்கள் உள்ளனர். அனைவருமே வினா தொடுக்கின்றனர். மதிப்பிற்குரிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஏன் ஆண் நிருபரைக் கன்னத்தில் செல்லமாகத் தட்டிப் பாராட்டவில்லை? பெண் என்பதால் மட்டும், அதுவும் இளம் பெண், குறைந்த வயதுப் பெண் என்பதால் அவரைத் தொட்டுப் பாராட்டும் ஆணாதிக்க மனோபாவம் வெளிப்படுகிறது. வயது முதிர்ந்தபெண்நிருபரைக் கன்னத்தில் தட்டிப் பாராட்டுவாரா புரோகித்? பெண்ணை போகப் பொருளாக, ஒருபொருளாக மட்டுமே காணும் மனோபாவமே அவரை அதை செய்யத் தூண்டியுள்ளது.

இதையொட்டியே தங்களின் விருப்பத்திற்கு மாறாக, தான் விரும்பும் ஆணைக் காதலித்தால், திருமணம்செய்துகொண்டால், அந்தப் பெண்ணைத் தம் மகள், சகோதரி என்றுகூடப் பார்க்காமல் ஆணவக்கொலை செய்யும் ஆணாதிக்ககருத்தியல் கொண்ட பெற்றோர்களையும் நாம் பார்க்க முடிகிறது. இந்தஆணாதிக்க மனோபாவமே, தன்னைக் காதலிக்கும் பெண் வேறொருவரை மணம் செய்துகொண்டாலும், தன் காதலை ஏற்காத பெண், வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று கொலை செய்கிற, ஆண்களைப் பார்க்கிறோம்.

இந்தஇரண்டு மனோபாவமும் ஒன்றுதான். பெண்கள் தங்களின் உடல்மீதான உரிமை மறுப்பு தான் இத்தகைய மேற்கண்ட இரண்டு செயற்பாடுகளும் ஆகும். மேலும், நாம் சமூக நீதி மூலமாகப் பெண்களை, பணியில் அமர்த்திவிட்டோம். ஆனால் அவர்கள் உரிய சமத்துவத்தை இன்னும் எய்தாமலேயே உள்ளனர். சமூகநீதி மூலம் பெற்றகல்வியை, பணியை அனுபவிக்காமல் ஆணாதிக்கக் கருத்தியல் மூலமாக அடிவாங்கிக் கொண்டே உள்ளனர்பெண்கள். உயரதிகாரியாக பி.வ. / தா.வ. / மி.பி.வ. இருந்தாலும், பியூன் பார்ப்பனராக இருந்தால் அவருக்கு மட்டுமே சமூக மதிப்பு உண்டு. உயரதிகாரிக்கு இருக்காது. அதுபோன்ற பெண்கள் தங்களுக்கு உரிய சமூகநீதி மூலமாகப் பெற்ற பலன்களை அனுபவிக்கவிடாமல் ஆணாதிக்கத்திற்குப் பலியாகிக் கொண்டே உள்ளனர். அத்தகையவர்களைத் தான் பேரா.நிர்மலாதேவி மூலமான பெண்கள், மதிப்பிற்குரிய பன்வாரிலால் புரோகித்திடம்  கன்னடி வாங்கிய பெண்கள், ஆசிபா போன்ற சிறுமிகள், நிர்பயாக்கள் … ஸ்வாதிகள் … வினோதினிகள்  ஸ்வினிகள் எனக் கூறிக்கொண்டே போகலாம்.

இதற்கு மாற்றுகளை, நாம் சட்டங்கள், மூலமாகத் தேடுவதைவிடுத்து, சிந்தனை மாற்றங்கள்  மூலமாகவே நடைமுறைப்படுத்து முடியும். அதுவும் இப்போதுள்ள இளம்தலைமுறை வாயிலாகவே இதனை நாம் செயல்படுத்த வேண்டும். பாலினம் மற்றும் பால் குறித்தும்,  பாலின சமத்துவம் குறித்தும், மாணாக்கரின் வயது, வகுப்புவாரியாகப் பயிற்றுவிக்க வேண்டும். கல்விக்கூடங்களில் இருந்துதான் தீர்வை தொடங்க வேண்டும். இத்தகைய சிந்தனைக்கல்வியைப பள்ளிகள் மட்டும் கற்றுக்கொடுத்தால் போதாது. நமது கெட்டித் தட்டிப்போன  குடும்ப அமைப்பும் சொல்லித்தர வேண்டும்.

எனவே குழந்தை முதற்கொண்டு குடும்பம் முதற்கொண்டு இத்தகைய சிந்தனை மாற்றுக் கல்வியைத் தொடங்க வேண்டும். இத்தகையபாலியல் சமத்துவக்கல்விமூலமாக மட்டுமே நிரந்தரத் தீர்வை நோக்கி நகர முடியும். அதன் மூலமான மனோபாவ மாற்றம் நடத்தை மாற்றமாகப் பரிணமிக்கும். இதுவன்றி மற்ற முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராகவே முடியும். இத்தகைய அடிப்படை மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமாகத்தான் அஸ்வினிகளையும், ஆசிபாக்களை காக்க முடியும்.