மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் பேசும்போது, பிரிட்டிஷ் இந்தியாவின் மக்கள் தொகையில் அய்ந்திலொரு பங்கினரது - இது இங்கிலாந்து அல்லது பிரான்சின் மக்கள் தொகைக்குச் சமமானது - கண்ணோட்டத்தை எடுத்துரைப்பதாகக் கூறினார். இவர்கள் பண்ணையாள் அல்லது அடிமையின் நிலைமைக்குத் தற்போது தாழ்த்தப்பட்டு விட்டனர். தற்போதுள்ள அரசாங்கத்துக்குப் பதிலாக, மக்களால் - மக்களைக் கொண்டு - மக்களால் நடத்தப்படும் மக்கள் அரசாங்கங்கள் ஏற்பட வேண்டும் என்று தீண்டத்தகாதவர்கள் விரும்புகிறார்கள் என்று அனைவரின் ஆச்சரியத்துக்கிடையே கூறினார். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி குறித்து தீண்டத்தகாதவர்களின் போக்கில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மிகவும் வியப்பான, பெரும் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிப் போக்கு எனலாம் என்று குறிப்பிட்டார்.

மேலும், தமது கருத்தை நியாயப்படுத்தும் வகையில், கண்களில் ஒளிவீச பின்வருமாறு அம்பேத்கர் கூறினார்; “நமது இன்றைய நிலைமையை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்துக்கு முன்னர் இந்திய சமூகத்தில் இருந்த நமது நிலைமையுடன் ஒப்பிடும்போது - நாம் முன்னேறிச் செல்வதற்குப் பதிலாக, நாம் நல்ல காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்னர் தீண்டாமையின் காரணமாக அருவருக்கத்தக்க நிலைமையில் இருந்தோம். இந்த அவல நிலையை அகற்ற பிரிட்டிஷ் அரசாங்கம் ஏதேனும் செய்ததா?

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னர் கிராமத்தின் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாதவர்களாக இருந்தோம். அவ்வாறு நாம் தண்ணீர் எடுக்கும் உரிமையை பிரிட்டிஷ் அரசாங்கம் நமக்குப் பெற்றுத் தந்ததா?

“பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னர் நாம் கோயிலுக்குள் நுழைய முடியாதவர்களாக இருந்தோம். பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னர் காவல் படையில் சேர நமக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் நம்மைக் காவல் படையில் சேர அனுமதிக்கிறதா? பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னர் ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்ய நமக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த வாய்ப்பு இப்போது நமக்கு இருக்கிறதா? இந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் ‘ஆம்' என்று நாம் பதிலளிக்க இயலாத நிலையில் இருக்கிறோம். நமக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமைகள், காயங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. பிரிட்டிஷ் ஆட்சி வந்து 150 ஆண்டுகள் ஆகியும் இந்தக் காயங்கள், புண்கள் இன்னும் ஆற்றப்படவில்லை.”

“அந்த அரசினால் யாருக்கு என்ன நன்மை?” என்று அம்பேத்கர் மாநாட்டில் வினவினார். இதைக் கேட்டதும் பிரிட்டிஷ் பிரதிநிதிகள் ஒருவர் மற்றொருவர் முகத்தை நோக்கினர். இந்தியப் பிரதிநிதிகளிடம் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. டாக்டர் அம்பேத்கர் தொடர்ந்து பேசினார் : “ தொழிலாளிகளுக்கு ஒரு வாழ்க்கைச் சம்பளத்தையும், மதிப்புடன் கூடிய வேலை நிலைமைகளையும் முதலாளிகள் மறுத்து வந்தனர் என்பதை அந்த அரசு உணரவே செய்தது. நிலச்சுவான்தார்கள் மக்களைக் கசக்கிப் பிழிந்து வந்ததையும் அரசு உணரவே செய்தது. இருந்த போதிலும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் வாழ்க்கையில் பல ஆண்டுகளாகத் துன்ப துயரங்களை ஏற்படுத்தி வந்த சமூகத் தீமைகளை அது அகற்றவில்லை. இந்தத் தீமைகளை அகற்றுவதற்கு அதனிடம் சட்டப்பூர்வமான அதிகாரங்கள் இருந்தபோதிலும், ஏற்கனவே இருந்து வந்த சமூக, பொருளாதார வாழ்க்கைச் சட்டத்தை அது திருத்தவில்லை. ஏனெனில், அதனுடைய தலையீட்டுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தும் என்று அது அச்சமடைந்தது.”

டாக்டர் அம்பேத்கர் இவ்வாறு பிரகடனம் செய்தார்: “நாட்டின் சிறந்த நலன்களுக்கு குறைவற்ற ஈடுபாடு செலுத்துபவர்களை அதிகாரத்தில் கொண்ட ஓர் அரசு நமக்கு வேண்டும். கீழ்ப்படிதல் எங்கு முடிவடைந்து எதிர்ப்புத் தொடங்கும் என்பதைத் தெரிந்துள்ளவர்களை, நீதியும் எதார்த்த நிலைமையும் மிக அவசரமாகத் தேவைப்படுத்துகிற சமூக, பொருளாதார வாழ்க்கை முறையைத் திருத்துவதற்கு பயப்படாதவர்களை அதிகாரத்தில் கொண்ட ஓர் அரசு நமக்கு அவசியம் இல்லை.

டொமினியன் அந்தஸ்துக்கான கோரிக்கையை டாக்டர் அம்பேத்கர் ஆதரித்துப் பேசினார். ஆனால், புதிய அரசமைப்புச் சட்டத்திற்கான அரசியல் ஏற்பாடு தனிச் சிறப்புடையதாக அமைக்கப்பட்டாலொழிய, தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் அதனால் பலன் பெறுவார்களா என்பது குறித்து தமது அய்யப்பாட்டை தெரிவித்தார். அந்த அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது, ஒரு பக்கம் மரியாதை உயர்ந்து கொண்டு போவதும், மறுபக்கம் அவமதிப்பும் இகழ்ச்சியும் அதிகரித்துக் கொண்டு போவதுடன் கூடியதும், சாதி ஏற்றத் தாழ்வுகளும் கொண்ட இந்திய சமூகம் சமத்துவமும் சகோதரத்துவமும் தழைப்பதற்கு எவ்வித வாய்ப்பும் அளிக்கவில்லை என்பதையும் அறிவு ஜீவிகள் மேல்தட்டிலிருந்து தோன்றியவர்கள் என்பதையும், அவர்கள் குறுகிய சாதி மனப்பான்மைகளைக் கைவிடவில்லையென்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். எனவே, நாமே முயன்றால் அல்லாமல் வேறு யாரும் நம்முடைய குறைகளைப் போக்க முடியாது என்றும், மேலும் “நாம் அரசியல் அதிகாரம் பெற்றாலன்றி, நாம் அவற்றைப் போக்க முடியாது என்றும் நாங்கள் உணர்கிறோம். இந்த அற்புதத்தை நிகழ்த்துவதற்கு, தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் நீண்ட காலம் காத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்!” என்று அவர் வலியுறுத்தினார்.

இந்திய முட்டுக்கட்டையைப் பற்றிக் குறிப்பிடுகையில், அரசியல் தத்துவ ஞானத்தின் மகத்தான ஆசான் என்று அவர் கருதிய எட்மண்ட் பர்க்கின், “படை பலத்தை பயன்படுத்துவது தற்காலிகமானதுதான்” என்ற சொற்களை அம்பேத்கர் நினைவு கூர்ந்தார். தனது ஒளிவீசும் உரையின் முடிவில் அம்பேத்கர், பிரிட்டிஷ் அரசுக்கும், அந்த மாநாட்டில் கண்ணாமூச்சி விளையாட்டில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் கடும் எச்சரிக்கையை விடுத்தார். “நாட்டின் இன்றைய மனப்பக்குவத்தில், பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத எந்த அரசமைப்புச் சட்டமும் செயல்படுத்தப்பட முடியாது என்பது போதுமான அளவு உணரப்படவில்லை என்று நான் கருதுகிறேன். நீங்கள் தேர்வு செய்வதற்கும், இந்தியா அதை ஏற்றுக் கொள்வதற்குமான காலம் மலையேறி விட்டது. இனி ஒருபோதும் அது திரும்பி வராது. உங்களுடைய புதிய அரசமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தர்க்க நியாயத்திற்கு மாறாக, மக்களின் ஒப்புதல்தான் அதற்கு உரைகல்லாக இருக்க முடியும்.” என்று அம்பேத்கர் கூறினார்.

அந்த உரையில் அவருடைய அச்சமற்ற தொனியும், துணிவான விமர்சனமும் மாநாட்டில் ஓர் அதிசயத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. மாநாட்டின் முன் தெளிவான முறையில் டாக்டர் அம்பேத்கர் விவரங்களை முன்வைத்த வெளிப்படைத் தன்மையும், அச்சமற்ற தன்மையும் பிரதிநிதிகளைப் பெருமளவு கவர்ந்தது. டாக்டர் அம்பேத்கரின் உன்னதமான உரைக்காக அவர்கள் அவரைப் பாராட்டினார்கள்.

பிரிட்டிஷ் பிரதமரிடம் அது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது. மாநாடு முழுவதிலும் மிக உன்னதமான சொற்பெருக்குகளில் இது ஒன்று என இந்த உரையை ‘இந்தியன் டெய்லி மெயில்' வர்ணித்தது. இந்த மாநாட்டில் ஒரு மனிதர் அவருடைய உரையினால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் நிறைவான வியப்புணர்வுடனும், திருப்தியுடனும், உயர்வான பாராட்டுடனும் தனது அரச மாளிகைக்குத் திரும்பினார். அவருடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அன்றையப் பேச்சாளருக்காகத் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளும, செலவழித்த பணமும் நிறைவெய்தின என்று அவர் தனது அரசி மனைவியிடம் கூறினார். அது ஒரு சாதனை, ஒரு புகழ்மிக்க வெற்றி! இவ்வாறு வியந்து பாராட்டியவர் மேன்மை தாங்கிய பரோடா மகாராஜாவைத் தவிர வேறு யாருமல்ல! அவர், தனது நெருக்கமான நண்பர்களுக்காக லண்டனில் அளித்த ஒரு சிறப்பு இரவு விருந்துக்கு டாக்டர் அம்பேத்கரை அழைத்திருந்தார்.

டாக்டர் அம்பேத்கரின் ஆற்றல் வாய்ந்த உரையின் தாக்கம் பத்திரிகைகளின் மீது கூட பெருமளவாக இருந்தது. ஆங்கிலப் பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் இந்தத் தலைவரின் மீது கவனம் செலுத்தினர். லார்ட் சைடன்ஹாம், ஓட்வியர் போன்ற ஆங்கிலேயே ராஜதந்திரிகளும், டாக்டர் அம்பேத்கரின் நாகபுரி உரையைக் கடுமையாகக் கண்டித்து ‘ஸ்பெக்டேட்டர்' இதழில் கருத்துத் தெரிவித்தனர். மற்றவர்களும் இப்பொழுது, டாக்டர் அம்பேத்கர் ஒரு தேசியவாதிஎன்று முழுமையாக ஒப்புக் கொண்டனர். எனவே அவர்கள், இந்தியாவின் புரட்சிகரத் தலைவர்களில் அவரும் ஒருவர் என்று கிசுகிசுக்கத் தொடங்கினர்.

விரிவடைந்த கூட்டத்தில் பொதுவான விவாதத்திற்குப் பின்னர், மாநாடு ஒன்பது துணைக் குழுக்களை நியமித்தது. டாக்டர் அம்பேத்கர், அனேகமாக எல்லா முக்கியத் துணைக் குழுக்களிலும் - கூட்டாட்சிக் கட்டமைப்புக் குழுவைத் தவிர - உறுப்பினராக இடம் பெற்றிருந்தார். சிறுபான்மையோர் துணைக்குழு ஆகியவற்றில் இந்தியாவிலிருந்தும் இங்கிலாந்திலிருந்துமான பிரபல நுண்ணறிவாளர்களுடன் அவர் இணைந்து பணியாற்றினார்.

பாதுகாப்புக் குழுவின் அறிக்கையின் மீதான விவாதத்தின் போது, திறமை மற்றும் அவசியமான தகுதிகளைப் பெற்றிருப்பது ஆகிய கண்ணோட்டங்களுடன் ஏற்புடைய முறையில், அனைத்து இந்தியர்களும் ராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் வாதிட்டார். தனது குறிக்கோளை சாதிப்பதற்கு டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய மிக முக்கியமான பணி, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பண்பாடு, சமய மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அடிப்படை உரிமைகள் பிரகடனத்தைத் தயாரித்ததாகும். மிகுந்த உழைப்புடனும், அரசியல் அறிவுக் கூர்மையுடனும் அவர் அந்தத் திட்டத்தைத் தயாரித்து, வருங்கால இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்காக அதை சிறுபான்மையோர் துணைக் குழுவிடம் அளித்தார். “ஒரு தன்னாட்சி இந்தியாவின் வருங்கால அரசமைப்புச் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களைப் பாதுகாப்பதற்கான அரசியல் பாதுகாப்புகள்” என்று அத்திட்டத்திற்குத் தலைப்பிடப்பட்டிருந்தது.

Pin It