“சமூகத்தில் பல குழுக்கள் இருப்பதைக் கொண்டு அதைக் கண்டனம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், அந்தக் குழுக்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலோ, தன் சொந்த நலன்களில் மட்டும் ஈடுபட்டிருந்தாலோ – அத்தகைய குழுக்களைக் கொண்ட சமுதாயம் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில், இந்த தனிமைதான் சமூக விரோத உணர்வை உருவாக்குகிறது. கூட்டுறவை எட்ட முடியாததாக ஆக்குகிறது.'' – டாக்டர் அம்பேத்கர்

மன்னர்களின் மனைவியரோடு முதலிரவை கழிக்க பார்ப்பனர்கள் உரிமை கோரியதுடன் நிறுத்தாமல் அந்த உரிமையை கீழ்த்தட்டுப் பெண்கள் வரையிலும் செயல்படுத்த முயன்றனர்.இதற்கு அம்பேத்கர் பல எடுத்துக்காட்டுகளைத் தருகிறார். “சமோரின் (சாதியைச் சேர்ந்தவர்) திருமணம் செய்யும்போது தலைமைப் புரோகிதரோ, நம்பூதிரியோ மணப் பெண்ணை அனுபவிக்கும் வரை இவனால் (மணமகனால்) அனுபவிக்க முடியாது. புரோகிதன் விரும்பினால் மூன்று இரவுகளைக்கூட அப்பெண்ணுடன் கழிக்கலாம். ஏனெனில், அப்பெண்ணின் முதல் உடலுறவின் பலன்கள் அவள் வணங்கும் கடவுளுக்கு நைவேத்தியம் செய்யப்பட வேண்டும்'' (ஹாமில்டனின் நூலிலிருந்து மேற்கோள்).

இதில் கவனத்துக்குரிய ஒரு செய்தியும் உண்டு. இந்தப் புரோகிதர்களும் நம்பூதிரிகளும் விருப்பத்தோடு இதை மேற்கொள்ளவில்லையாம்! மன்னன் தன் மனைவியோடு முதலிரவை கழிப்பவனுக்கு பணம் தந்திருக்கிறான். ஆண் விபச்சாரகர்களாக அப்புரோகிதர்களும், நம்பூதிரிகளும் மாறிவிட்டிருந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது.

அன்றைய பம்பாய் மாகாணத்தில் வைணவப் பிரிவு புரோகிதர்கள், தங்கள் இனப் பெண்களின் முதல் இரவு உரிமையை கோரியிருக்கிறார்கள். இது தொடர்பாக 1869இல் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும்கூட தொடரப்பட்டுள்ளது. கேரளத்தில் மலபார் பகுதியில் பிற சாதி பெண்களுடன் முதலிரவு உரிமை வேண்டும் என பார்ப்பனர்கள் கோரியுள்ளனர். சம்மந்தன் தொடர்பு (குச்ட்ஞச்ணஞீடச்ண க்ணடிணிணண்) என்ற பெயரில் பார்ப்பன ஆண்கள், தாழ்த்தப்பட்ட சாதி பெண்களுடன் உறவு கொண்டிருக்கிறார்கள். இந்த உறவின் மூலம் குழந்தை பிறந்துவிடுமானால், அக்குழந்தையின் உரிமையும், பராமரிப்பு பொறுப்பும் தாயையே சாரும். அக்குழந்தை தன் பார்ப்பனத் தந்தையிடமிருந்து எந்தவிதமான உரிமையையும் கோர முடியாது.

கேரள மலபார் பகுதிகளில் உயர்ந்த பார்ப்பனராக தம்மை சொல்லிக் கொண்ட நம்பூதிரிகளின் குடும்பத்தில் இந்த வழக்கம் இருந்தது. நம்பூதிரிகளின் குடும்பத்தில் இருக்கும் மூத்த மகனும், பெண்களும் மட்டுமே நம்பூதிரி வம்ச பெண்ணையும், ஆணையும் மணந்து கொள்ள முடியும். அக்குடும்பத்து இளைய மகன்கள் அனைவரும் நாயர் சமூகப் பெண்களுடன் மட்டுமே உறவு வைத்துக் கொள்ள வேண்டும் (இந்தியாவில் சாதிகள், ஜே.எச். அட்டன், 1973).

பார்ப்பனர்களை பஞ்ச கவுட பார்ப்பனர் (வட இந்திய பார்ப்பனர்), பஞ்ச திராவிட பார்ப்பனர் என பொதுவாக இரு பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். மகாராட்டிரா, ஆந்திரா, திரõவிடா, கர்நாடக, குர்ஜார், கன்யா குப்ஜா, கவுடா, உத்கலா, மைதிலி, காஷ்மீர், மலபார், ரஜபுதனா, நேபாள், மத்திய இந்தியா, வங்கம் ஆகிய மரபார்ந்த இந்தியாவின் பகுதிகளில் 450க்கும் மேற்பட்ட உட்பிரிவுகளோடு பார்ப்பனச் சாதிகள் உள்ளன. இங்கு குறிப்பிடப்படும் பட்டியலில் கடைசியாக இடம்பெற்றுள்ள ஆறு பகுதிகளில் இருக்கும் பார்ப்பனர்களில் உட்பிரிவுகள் இல்லை என்று சொல்லப்படுகிறது. இவற்றில் மேலும் உட்பிரிவுகள் உண்டு (450இல்). மலபார் பகுதி நம்பூதிரிகளும், வங்கத்தின் குலின் (ஓதடூடிண) களும் தம்மை மிக உயர்ந்த பார்ப்பனர்களாக சொல்லிக் கொள்கின்றனர். மகாராட்டிரத்தைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனர்களும் தங்களை மிக உயர்ந்த பார்ப்பனர்களாக சொல்லிக் கொள்கின்றனர்.

வங்கத்தின் குலின் பார்ப்பனரிடையே பலதார மணமுறை வழக்கத்தில் உண்டு. இப்பிரிவு பார்ப்பன ஆண்கள், எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம். பெரும் மணக்கொடை தந்து பெண்ணின் தந்தை மகளை மணமுடித்து தர வேண்டும் என்பது நடைமுறை. அந்த மணக்கொடையை (வரதட்சிணை) எடுத்துக் கொண்டு திருமணத்துக்குப் பிறகு வேறொரு பெண்ணிடம் போய்விடும் ஆண்களே அதிகம். இப்படி ஓர் ஆண் இருபது பெண்கள் வரை மணந்த கதையும்கூட உண்டு என்கின்றன ஆய்வு நூல்கள். இவ்வழக்கத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் குலின் இனப் பெண்கள் மிகவும் பரிதாபத்துக்குரிய கைமை வாழ்க்கையை மேற்கொள்ளத் தள்ளப்பட்டு விடுவர். தம் இனப் பெண்களின் மீது பார்ப்பனர்கள் திணித்த கைம்பெண் வாழ்முறைகளும், சதியும், பிற சடங்குகளும் கொடுமையானவை.

கோயில்களோ, அரண்மனைகளோ, சமூகவெளிகளோ எங்கும் பார்ப்பனர்கள் தமது உயர் சாதி தகுதியை வைத்துக் கொண்டு – மிக உயர்ந்த அதிகாரங்களையும், ஆடம்பரங்களையும், கோரிக்கைகளையும் பெற்றிருக்கிறார்கள் என்பதை வரலாற்று நூல்கள் அனைத்துமே சொல்கின்றன. இந்த நிலை சமகாலத்திலும்கூட தொடர்கிறது. கருவறைக்குள் உறவு வைத்துக் கொண்டால் செல்வம் கொழிக்கும் என்று சொல்லி பெண் பக்தர்களை வசப்படுத்திக் கொண்ட காஞ்சிபுரம் அர்ச்சகரின் அண்மைக் கதை நீண்ட கால வரலாறின் தொடர்ச்சிதான். புட்டபர்த்தி சாயிபாபா, ஜெயேந்திரன் உள்ளிட்ட எந்த சாமியாரை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலானவர்களோடு இதுபோன்ற கதைகள் பிணைந்தே கிடக்கின்றன.

இந்தியத் துணைக் கண்டத்தில் பார்ப்பனர்கள் இவ்வளவு மேலாதிக்கத்தையும், தனியதிகாரத்தையும் பெருவதற்குக் காரணம் – இந்து மதமும் அதன் அடிப்படையான சாதிய கட்டமைப்பும்தான். இந்தியாவில் இருந்த அனைத்து வகையான வழிபாட்டு முறைகளும் இந்து மதத்துக்குள் அடக்கப்பட்டு விட்டன. வெகுமக்களின் குலச்சாமிகளும், நாட்டார் சிறு தெய்வங்களும்கூட இதற்குத் தப்பவில்லை. வேத மதமான பார்ப்பன மதமே இன்று இந்து மதமாக நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. அம்மதத்தின் தலையாக பார்ப்பனர்கள் தம்மை அறிவித்துக் கொண்டனர். இந்து மதத்தை தமது இருப்புக்கானதோர் வலுவான ஊடகமாக அவர்கள் வைத்துக் கொண்டனர். பார்ப்பனர்களின் சுயநல செயல்திட்டமான பார்ப்பனியம் இங்கே வெகுமக்களின் இயங்கியல் சட்டமாக மாற்றப்பட்டு விட்டது. அம்பேத்கர் பட்டியலிடும் பார்ப்பனியத்தின் ஏழு செயல்களை இங்கே கவனத்தில் கொள்வது பொருத்தமாக இருக்கும் :

1. ஆட்சி செய்வதற்கும், மன்னனை கொல்வதற்கும் பார்ப்பனர்களுக்கு உரிமையுண்டு என்பதை நிலைநிறுத்தியது. 2. பார்ப்பனர்களை சிறப்புரிமை கொண்ட ஒரு வர்க்கமாக ஆக்கியது. 3. வர்ணத்தைச் சாதியாக மாற்றியது. 4. பல்வேறு சாதிகளிடையே மோதல்களையும், சமூக எதிர்ப்புணர்வையும் தோற்றுவித்தது. 5. சூத்திரர்களையும், பெண்களையும் இழிந்த நிலைக்குத் தள்ளியது. 6. பன்மப்படி நிலையிலான, சமத்துவமற்ற அமைப்பை உருவாக்கியது. 7. மரபு ரீதியாகவும், நெகிழ்ச்சி கொண்டதாகவும் இருந்த சமூக அமைப்பை, சட்டத்துக்குட்பட்டதாகவும், இறுக்கமானதாகவும் ஆக்கியது ("பார்ப்பனியத்தின் வெற்றி', அம்பேத்கர்).

அம்பேத்கர் பட்டியல் இடுகின்ற பார்ப்பனியத்தின் செயல் திட்டங்களில் ஒன்றுகூட இம்மி பிசகாமல் நடந்து வருகின்றன என்பதை இன்றும் நம்மால் நடைமுறையில் பார்க்க முடிகிறது.

பழங்காலம் தொட்டு இன்றுவரையில் நமது கவனத்துக்கு வந்து போகும் ஆளுமைகளின் பெயர்களில் பாதிக்கும் மேற்பட்டவை பார்ப்பனர்களின் பெயர்கள்தான். தெனாலிராமன், பீர்பால், ராமாநுஜர், சங்கரன், ஜான்சி ராணி லட்சுமிபாய் என்ற பழங்காலத்துப் பெயர்களானாலும் சரி; திலகர், நேரு, சுப்பிரமணிய பாரதி, ரமண மகரிஷி, ராஜாஜி, மேதா பட்கர், இந்திரா நூயி, ஜெயலலிதா, சாரு மஜும்தார், பிரசாந்தா, அசோகமித்ரன், மாதவன், டெண்டுல்கர் போன்ற சமகாலப் பெயர்களானாலும் சரி; பல்வேறு துறைகளிலும் பார்ப்பனர்களின் பெயர்களே முன்னிறுத்தப்படுகின்றன. நமது கவனத்தின் இண்டு இடுக்குகளிலும்கூட அவர்களின் பெயர்களே நிரப்பப்படுகின்றன. காட்சி மற்றும் எழுத்து ஊடகங்களின் வழியே ஆழமாகப் பதிய வைக்கப்படுகின்றன.

அய்யங்கார், சாரி, ஆச்சாரி, ராவ், முகர்ஜி, பானர்ஜி, சாட்டர்ஜி, பண்டிட், கங்குலி, கோகல், சக்ரபர்த்தி, ராய், ரே, ராய்சவுத்ரி, மஜும்தார், குல்கர்னி, தேஷ்பாண்டே, ஜோஷி, திலக், கோகலே, கார்வே, ராணடே, சவர்க்கர், அகர்க்கர், பாவே இப்படி பிரபலமானவர்களின் பின்னொட்டாக வருகிற பெயர்களை நாம் சொல்லிக் கொண்டே போனால் – உங்கள் மனத்திரையில் அரசியலிலும், இலக்கியத்திலும், விளையாட்டிலும், திரைப்படத்திலும், பொதுச் சேவையிலும், தொழில் துறையிலும் புகழ் பெற்றவர்களின் முகங்கள் சடார் சடார் என மாறும். அம்முகங்கள் எல்லாமே பார்ப்பன முகங்களே. அவர்களின் பெயர்களாகவே நம் மனதில் நிலைத்துவிட்ட இப்பின்னொட்டுகள் யாவுமே பார்ப்பனச் சாதி உட்பிரிவுகளின் பெயர்களே!

இந்தியச் சமூகத்தில் பல்வேறு சமூகக் குழுக்கள் இருக்கின்றன. அவற்றில் பார்ப்பனச் சமூகமும் ஒன்று. அது தனது அறிவாலும், அர்ப்பணிப்பாலும், உழைப்பாலும் இந்த நிலையை அடைந்திருக்கிறது. அதில் தவறேதும் இல்லை என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் இந்தியச் சமூகம் நாய் குதறிய சடலமாக நாறிக்கிடப்பதற்கு பார்ப்பனியமே காரணம் என்பதை கவனத்தில் கொண்டால், அம்முன்னேற்றத்தின் உண்மை விளங்கும்.

"உண்மையான சமூகம் என்பது ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, உடனடியான, குறிப்பான பல்வேறு லட்சியங்களைக் கொண்ட சில குழுக்களின் தொகுப்பே சமூகம் ஆகும்' என்கிறார் அம்பேத்கர். இச்சமூகக் குழுக்களின் ஒத்திசை வும், ஒற்றுமையுமே அச்சமூகத்தை மேம்படுத்தும். ஆனால் இந்தியச் சமூகத்தில் நடந்திருப்பது அதுவல்ல. சமூக சமத்துவம் அற்ற நிலையே உருவாகியுள்ளது. இதற்கு காரணம் பார்ப்பனியம் ஒவ்வொரு குழுவையும் தனிமைப்படுத்தி சாதி வட்டத்துக்குள் அடைத்ததுதான்.

"சமூகத்தில் பல குழுக்கள் இருப்பதைக் கொண்டு அதைக் கண்டனம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், அந்தக் குழுக்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலோ, தன் சொந்த நலன்களில் மட்டும் ஈடுபட்டிருந்தாலோ அத்தகைய குழுக்களைக் கொண்ட சமுதாயம் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில், இந்த தனிமைதான் சமூக விரோத உணர்வை உருவாக்குகிறது. கூட்டுறவை எட்ட முடியாததாக ஆக்குகிறது' ("பார்ப்பனியத்தின் வெற்றி', அம்பேத்கர்) என்று விளக்குகிறார் அம்பேத்கர். பார்ப்பனச் சமூகமும், அதற்குக் கீழுள்ள இடைத் தட்டுச் சமூகங்களும் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டு சுயநலத்துடன், தம் சொந்த நலன்களுக்காக ஒடுக்கப்பட்ட மக்களை சுரண்டும் வேலையையும் அடிமைப்படுத்தும் வேலையையும் பல நூற்றாண்டுகளாக இங்கே செய்து வருகின்றன. இந்தியச் சமூகக் குழுக்களில் தன்னை உச்சாணிக் கொம்பில் இருத்திக் கொண்டு இந்த சுரண்டலுக்குத் துணை நிற்கிறது பார்ப்பனியம்.

இந்திய மண்ணில் சாதி ஒழிப்பு இயக்கங்களும், அரசியல் கட்சிகளுமே வந்துவிட்டன. சாதிக்கு எதிரான கருத்துத் தெளிவு உருவாகியிருக்கிறது. புலே தொடங்கி அம்பேத்கர் வரை எண்ணற்றோர் சமூகப் புரட்சிக்காகப் போராடி இருக்கின்றனர். இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இன்று அரசியலில் உள்ள எல்லோரும் உண்மையாகவோ போலியாகவோ சமூக நீதி பேசுகிறவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் இன்று பார்ப்பன மேலாதிக்கம் ஒழிந்துவிட்டதா? பார்ப்பனியம் நசுக்கப் பட்டு விட்டதா? இல்லை என்பதே விடை.

இன்றும் இந்தியாவில் 90 சதவிகித பெரும் பணக்காரர்கள் பார்ப்பனர்களே. இந்தியா விடுதலையடைந்தது தொடங்கி இன்றுவரையிலான பிரதமர்களில் 90 சதவிகிதத்தினர் பார்ப்பனர்கள்தான். 1950 முதல் 2000 வரையிலான நீதித்துறை வரலாற்றில் 47 சதவிகிதத்தினர் முதன்மை நீதிபதிகளாகவும், 40 சதவிகிதத்தினர் துணை நீதிபதிகளாகவும் இருந்துள்ளனர். (சென்னை மாகாணத்தின் முதல் உயர் நீதிமன்ற "இந்திய' நீதிபதி ஒரு பார்ப்பனர்தான். வெள்ளை நீதிபதிகள் பலர் எழுதிய புகழ் பெற்ற பல தீர்ப்புகள்கூட உதவியாளர்களாக இருந்த பார்ப்பனர்களால் எழுதப்பட்டதே).

1984 வரை நாடாளுமன்றத்தில் 20 சதவிகித உறுப்பினர்கள் அவர்களாகத்தான் இருந்தனர். இந்திய ஆட்சிப்பணி, மிக உயர்ந்த அரசு நிர்வாகப் பணி ஆகியவற்றில் பார்ப்பனர்களே அதிகம். பெரும்பாலான அரசு ஆலோசகர்களும், அமைச்சுசெயலாளர்களும் பார்ப்பனர்களே. "ரா' எனும் உளவுத் துறை, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி, விண்வெளி அறிவியல் துறை ஆகியவற்றில் பார்ப்பனர்களே நிறைந்துள்ளனர் (இத்துறைகளில் இடஒதுக்கீடு வேறு இல்லை) பொருளாதாரம், வருவாய், சட்டம் என எடுத்துக் கொண்டாலும் முக்கியப் பதவிகளை பார்ப்பனர்களே கையில் வைத்துள்ளனர். அரசுத் துறை பணிகளில் 37.17 சதவிகிதம் இடங்களை பார்ப்பனர்கள் வைத்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

சோமநாதர் கோயில், திருப்பதி கோயில், காமாட்சி கோயில், அக்ஷர்தம், வைஷ்ணவதேவி ஆலயம், மகாலட்சுமி, காசி விஸ்வநாதர், பூரி ஜெகநாதன் கோயில் என எல்லாமே பார்ப்பனர் கையில்தான் (பார்ப்பனிய மண்ணில் 90 ஆண்டு மார்க்சியம், எஸ்.கே. பிஸ்வாஸ், அதர் புக்ஸ், 2008). இன்றும் நிலைமை இப்படி இருக்கிறது. அதனால்தான் வெட்ட வெட்டத் துளிர்க்கும் விஷச் செடியாக உள்ள பார்ப்பனியத்தை எதிர் கொள்வதே இந்தியாவின் வரலாறாக இருந்திருக்கிறது என்கிறார் அம்பேத்கர். அவர் பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையிலான ஜீவ மரணப் போராட்டமே இந்திய வரலாறு என்கிறார். பார்ப்பனியத்தை சாய்ப்பதில் எண்ணற்ற இயக்கங்கள் இங்கு எழுந்துள்ளன. தத்துவங்கள் உருவாகியுள்ளன. பார்ப்பனியம் அவற்றுள் சிலவற்றை உள்வாங்கிச் செறித்திருக்கிறது. சிலவற்றைக் கண்டு மிரண்டிருக்கிறது; நிலை குலைந்திருக்கிறது. பவுத்தமும், அம்பேத்கரியமும், பெரியாரியமும்தான் பார்ப்பனியத்துக்கு அவ்வாறான மிரட்சியை தந்தவை. நிர்மூலமாக்க நிற்பவை.

- அழகிய பெரியவன் 

Pin It