ஊழல், ஒரு முக்கியப் பிரச்சனையாக விவாதிக்கப்படுகிறது. ஊடகங்கள் நாள்தோறும் இதை தலைப்புச் செய்தியாக்குகின்றன. இருப்பினும், இவை ஊழலைத் தடுக்கவில்லை! ஆள் - பணம் - சூழலுக்கேற்ற விகிதாச்சாரத்தில் தான் ஏற்றத்தாழ்வு இருக்கிறதே தவிர, ஒட்டுமொத்த இந்தியாவே ஊழல்மயமாகி இருக்கிறது. அது அரசியல்மயமாகியும், அதுவே இந்தியர்களின் பண்பாடாகவும் மாறியிருக்கிறது. அதனால்தான் இந்நாட்டின் தலையாய சமூகப் பிரச்சனைகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அதன் வெளிப்பாடான ஊழல் மட்டுமே தேசியப் பிரச்சனையாக்கப்பட்டிருக்கிறது.

உலகிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல் ஒன்று இருக்குமானால், அது மனிதனின் கழிவுகளை சகமனிதன் கையால் அள்ளி, தலையில் சுமக்கும் கொடுமையாகத்தான் இருக்க முடியும். அதைவிட மோசமானது, அதை ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்களே செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது! இன்றளவும் இந்தியாவில் 3 லட்சம் பேர் கையால் மலமள்ளும் வேலையை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். ஆனால் இக்கொடுமை, என்றாவது ஒரு நாள் தேசிய ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகி இருக்கிறதா?

அமெரிக்க அதிபரை வரவேற்க இந்தியா தயாராகிக் கொண்டிருந்த தருணத்தில், 20 மாநிலங்களிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான மக்கள், கையால் மலமள்ளுவதை முற்றாக ஒழிக்க உறுதியேற்று - ஒரு மாதமாக நடத்தி வந்த பேரணியை நவம்பர் 1, 2010 அன்று தலைநகர் தில்லியில் நிறைவு செய்தனர். ஏற்கனவே இத்தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்கள் அதை உதறிவிட்டு, பெருந்திரளாக இப்பேரணியில் பங்கேற்றனர். அவர்கள் முன்வைத்த முழக்கங்கள் : “எங்களுக்கு மாண்புமிக்க வாழ்க்கை வேண்டும்’ - “கையால் மலமள்ளுவதை முற்றாக ஒழிக்க வேண்டும்’ - “இத்தனை ஆண்டுகளாக எங்கள் மீது இதைத் திணித்த அரசும், சமூகமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.’ அவர்கள் கூலி உயர்வு கேட்கவில்லை; பணிமூப்பு கேட்கவில்லை; கையுறையும் காலுறையும் கேட்கவில்லை. அவர்கள் கேட்பது சுயமரியாதை, மானமுள்ள வாழ்வு.

ஒரு அருந்ததிராயின் கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராட, இங்கே காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை - இயக்கங்கள், ஊடகங்கள், மனித உரிமையாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஆனால், குரலற்ற இம்மக்களுக்காகப் பேசவும், போராடவும் அவர்களைத் தவிர யார் இருக்கிறார்கள்? கையால் மலமள்ளும் தொழிலை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட "சபாய் கரம்சாரி அந்தோலன்' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெசவாடா வில்சனின் ஒருங்கிணைப்பில்தான், சமூக மாற்றத்திற்கான இத்தேசியப் பேரணி நடைபெற்றது. அரசிடம் மறுவாழ்வுக்கான உதவியைக் கோரும் முன்பாக, தங்கள் அளவில் இதிலிருந்து விடுபடுவதுதான் இப்பேரணியின் நோக்கம். சாதி - தீண்டாமை என்பதை, அதனால் பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனையாக மட்டும்தான் சமூகம் பார்க்கிறது. ஆனால், இது ஒட்டுமொத்த சமூகத்தின் மீது படிந்துள்ள கறை என்பது உணரப்படவில்லை. பொது சமூகத்திற்கான பிரச்சனையாக இது மாற்றப்படும்போதுதான் சமூக மாற்றம் சாத்தியமாகும்.

தன் சொந்த நாட்டில் உள்ள 25 கோடி மக்களை அடிமைகளாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் வைத்துக் கொண்டு, அய்.நா. அவையின் பாதுகாப்பு குழுவில் நிரந்தர உறுப்பினராவதற்கும் - தன்னை ஒரு வல்லரசாகக் காட்டிக் கொள்வதற்கும் இந்திய அரசு கூச்சப்பட வேண்டும். அரியானா மாநிலத்தின் அம்பாலா நகராட்சியில் காலம் முழுக்க மலமள்ளி வந்த 60 தலித்துகள், தாங்கள் மலமள்ளுவதற்குப் பயன்படுத்திய கூடையை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு எரித்தனர். மறுவாழ்வு திட்டம் என்ற பெயரில், உலர் கழிப்பிடங்களை துடைப்பத்தால் பெருக்கி, அள்ளும் வேலை அவர்களுக்கு அளிக்கப்பட்டதைக் கண்டித்துதான் இதைச் செய்தனர். ஆனால், இவர்களைப் பணி இடைநீக்கம் செய்த மாவட்ட நிர்வாகம் சொன்ன காரணம் என்ன தெரியுமா? “அவர்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை; சோம்பேறித்தனமாக இருந்ததால் தண்டிக்கப்பட்டனர்.’ சட்டம் தடை செய்துள்ள இந்த வேலையை செய்ய மறுத்ததற்கு, வெட்கங்கெட்ட அரசு கொடுத்துள்ள தண்டனை இது!

 கையால் மலமள்ளும் பணியை கோடி ரூபாய் கொடுத்தாலும், வேறு சாதியினர் செய்ய முன்வருவார்களா? ஆனால், கையால் மலமள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு உடலுழைப்பை, காலங்காலமாக செய்து வரும் தலித் மக்களை, இந்து சமூகம் வெவ்வேறு வழிகளில் குற்றவாளியாக்குகிறது. இந்நாட்டைத் தங்கள் உழைப்பால், சமூகத் தொண்டால் முன்னேற்றவே தலித்துகள் தன்னலமற்று போராடுகின்றனர். பிறப்பு என்ற விபத்தின் அடிப்படையினாலான ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமூகத்தை அனைத்து நிலைகளிலும் ஜனநாயகப்படுத்துவதையே தலித்துகள் தங்கள் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.