கறுப்பு மை குறிப்புகள் - 4

தன் எல்லா இழிவுகளையும் திணிப்பதற்கென்றே ஒடுக்கப்பட்ட சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறது இந்த நாடு. பரந்து விரிந்த இந்நாட்டின் கட்டற்ற வளங்களையும், சுகங்களையும் மட்டுமல்ல; ஜனநாயகத்தை நிலைநிறுத்த, ஒடுக்கப்பட்டோருக்கென நடைமுறையில் உள்ள சட்டங்களையும், நலத் திட்டங்களையும்கூட ஆண்டு அனுபவித்து வருகிறது ஆதிக்க வர்க்கம். சாதிய ஒடுக்குமுறை என்னும் கொடுமையால், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உன்னதக் கலைஞர்கள் உருவாகாமலேயே தொலைந்திருக்கின்றனர். உருவானோரும் எங்கும் நிறைந்திருக்கும் சாதியின் கூரிய ஆயுதங்களால் உருக்குலைந்து போயிருக்கின்றனர்.

தீண்டத்தகாதோரை திறமையானவர்களாக ஏற்க மறுக்கும் இந்நாட்டின் சாதியச் சூழலில், வறுமையும் ஒடுக்குமுறையும் மாறி மாறி அழுத்த, அடிமையாகப் பிறந்த ஒவ்வொரு கலைஞனும் அறிவாலும், திறமையாலும் தனிப்பட்ட தன் போர்க்குணத்தாலும்தான் முன்னேறியிருக்கிறார்கள். துச்சமான பார்வைகளையும், கேவலமான நய்யாண்டிகளையும், புறக்கணிப்புகளையும் மீறி தன் அடையாளங்களைப் பதிய வைக்க போராடுவோரை - ஆதிக்கவாதிகளுக்கான இந்த ஜனநாயக நாடு கருணையின்றி கைவிட்டிருக்கிறது.

santhi_370இந்நாட்டில் பிறந்ததற்காகவும், இச்சமூகத்தில் வாழ நேர்ந்ததற்காகவும் - ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட உள்ளமும் வெட்கத்திலும், வேதனையிலும் கொந்தளித்துக் கிடக்கிறது என்பதே உண்மை. கண்ணுக் கெட்டிய உயரங்களையும், கைகளுக்கெட்டிய வெற்றிகளையும் தலித்துகள் தொட்டுவிடாதபடி தடுத்துக் கொண்டே இருக்கிறது ஆதிக்க வர்க்கம். ஒன்றல்ல இரண்டல்ல... சாதிய சவுக்கால் அடித்து வீழ்த்தப்பட்டோர் ஆயிரமாயிரம். தடகள வீராங்கனை சாந்தியும் அதில் ஒருவர். 

வாழ்வின் அடிப்படைத் தேவையான அமைதியை முற்றிலுமாக இழந்துவிட்ட ஓர் உயிர். நான்காண்டுகளுக்கு முன்னர் அந்த பரபரப்பு எழுந்தபோதே சாந்தியை சந்தித்து, மனம்விட்டு உரையாட வேண்டும் என்ற உந்துதல் உண்டானது. ஆனால், அப்போது அவருக்கிருந்த நெருக்கடியில், யாராக இருந்தாலும் தனிமையைத்தான் விரும்பியிருப்பர். ஏற்கனவே ஊடகங்கள் துரத்திக் கொண்டிருந்த நிலையில், வெளிச்சத்தில் முகம் காட்டவே அவர் அச்சப்பட்டு முடங்கியிருந்தார் என்பதுதான் உண்மை. ஆசிய விளையாட்டுப் போட்டியில் எழுந்த சர்ச்சையின்போது, சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையும், பேட்டி என்ற பெயரில் கேட்க வேண்டிய கேள்விகளும், அதற்கு சாந்தி கொடுத்தாக வேண்டிய விளக்கங்களும்கூட அவருக்கு மிகப் பெரிய துன்புறுத்தலாகவே அமையும் என்பதால், அம்முயற்சியைக் கைவிட்டு - "சாந்தியைக் கொண்டாடுவோம்' என்ற கட்டுரையை மட்டும் "தலித் முரசு' இதழில் பதிவு செய்தேன். அப்போதிருந்து பல நூறு முறை சாந்தியை சந்திக்க வேண்டுமென தோன்றியிருக்கிறது. அதற்கு சிறப்பான காரணங்கள் இருந்தன!

மதங்களும் சாதியும் வாழ்வியல் நெறியாகவும், பண்பாட்டுக் குறியீடாகவும் ஆக்கப்பட்டிருப்பதைப் போலவே, பாலின மாறுபாடுகளும், விருப்பங்களும்கூட, வறட்டுத்தனமான பண்பாட்டு வட்டத்திற்குள் வளைக்கப்பட்டிருக்கின்றன. பகுத்தறிந்து பார்த்தால் மட்டுமே இவற்றுள் இருக்கும் பிறழ்வுகளையும் சிக்கல்களையும் ஒருவரால் புரிந்த கொள்ள இயலும். மதத்தையும், அது உருவாக்கிய சாதிப்படி நிலையையும் புரிந்து கொள்ள முடிந்தவர்களால்கூட, மனிதரின் பாலியல் மாறுபாடுகளை அறிய முடிவதில்லை. அறிவார்ந்த சமூகத்திடம்கூட பாலினப் புரிதலில் நிலையானதோர் ஊனம் இருக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெருமைக்குரிய பதக்கங்களை வென்றும், பாலியல் சோதனையில் தோல்வியடைந்ததாக இழிவுபடுத்தவும்பட்ட சாந்தி, வறுமையும் ஒடுக்குமுறையும் நிறைந்த தலித் சமூகத்தில் பிறந்ததும் - அவருடைய வாழ்வைப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை அதிகப் படுத்துகிறது. பெரும் முயற்சிகளுக்குப் பிறகு அண்மையில் சாந்தியை சந்திக்கும் சூழல் அமைந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சியில் சவுந்தரராஜன் - மணிமேகலை தம்பதியினரின் மூத்த மகளாகப் பிறந்தவர் சாந்தி. குறுகிய ஓட்டு வீட்டில் வசித்து, கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர், ஆண் குழந்தை ஆர்வத்தில் அடுத்தடுத்து மூன்று மகள்களையும், அய்ந்தாவதாக ஒரு மகனையும் பெற்றனர். ஒரு வேளை பசியாற்றிய பழைய சோற்றை பங்கிட்டுக் கொள்வதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. கொஞ்சம் சோறும் நிறைய தண்ணீரும் கலந்து நீராகாரம்தான் சாந்தி அறிந்த ஒரே உணவு வகை! கத்தக்குறிச்சியின் தலித் குடியிருப்புகளில் வாழ்ந்த எல்லோருமே ஒருவேளை உணவிற்கு அல்லல்பட்டவர்கள்தான். அதுவும் கிடைக்காத நாட்களில், பகல் முழுவதும் பட்டினி கிடந்து விட்டு இரவு வேளையில், உயர்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிக்குச் சென்று, வீட்டிற்கு வெளியே நின்று இறைஞ்சி கேட்டு உணவு வாங்கி வருவது வழக்கம். மிக நிச்சயமாக, அதுவும் பழைய சோறாகத்தான் இருக்கும்.

சாந்தி : “பசி வாட்டுறப்போ எப்படியாவது ஒருவாய் சோறு கிடைக்காதாங்கற ஏக்கம்தான் நிறைஞ்சிருக்கும். அது எங்கயிருந்து வருதுனெல்லாம் ஆராயத் தோணாது. எங்களுக்கு விவரம் தெரியல. ஆனா, வீடு வீடா போய் சோறு வாங்குவது, அப்பா அம்மாவுக்கு அவமானமா இருந்திருக்கலாம். வேலை செஞ்சுட்டு கூலி வாங்குற மாதிரிதான் இதுவும் ரொம்பா இயல்பான விஷயமா எங்களுக்கு இருந்துச்சு. நல்ல சோறு கிடைக்குமாங்கற எதிர்பார்ப்பு, எஸ்.சி. குழந்தைகளோட அதிகபட்ச கனவுன்னு சொல்லலாம்.’

சத்துக் குறைபாட்டினால் எலும்பும் தோலுமாகவே எல்லா குழந்தைகளும் வளர்ந்தன. உடுத்த உடையும் குடிக்க கஞ்சியும் இல்லாத நிலையிலும் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் உறுதியாக இருந்தனர் - சவுந்தரராஜனும் மணிமேகலையும். கத்தக்குறிச்சியிலிருந்து அய்ந்து கிலோ மீட்டர் தொலைவிலிருந்த ராமசாமி தெய்வானையம்மாள் மேல்நிலைப் பள்ளியில் சாந்தியும் சகோதரர்களும் படித்தனர். அய்ந்து கிலோ மீட்டரையும் நடந்தே கடக்க வேண்டியிருந்தது. இலங்கையில் வாழ்ந்தவரான சாந்தியின் தாத்தா முத்தையாவிற்கு, விளையாட்டில் குறிப்பாக ஓட்டத்தில் ஆர்வமிருந்தது. சாந்தியின் திறமையை முதலில் கண்டறிந்ததும் உறுதியாக நம்பிக்கையூட்டியதும் அவர்தான். ஏழாம் வகுப்பு வரை வீட்டிலேயே பயிற்சி மேற்கொள்ள முத்தையா ஊக்கப்படுத்தினார். வீட்டுக்கு அருகிலிருந்த சிறிய இடத்திலும், வயல்வெளியிலும் ஓட்டப் பயிற்சி செய்தார் சாந்தி.

சாந்தி : “காலையிலும் மாலையிலும் பயிற்சி செய்ற பழக்கம் இருந்துச்சு. பசங்களோட சேர்ந்து விளையாடாம தனியா ஓடிட்டிருந்தா கிண்டல்தானே பண்ணுவாங்க. நான் எதையும் காதுல போட்டுக்க மாட்டேன். பி.டி. உஷா பற்றி தாத்தா சொல்லியிருந்ததால, அப்பவே எனக்குள்ள ஒரு லட்சியம் உருவாகிடுச்சுனு சொல்லலாம். பள்ளிக் கூடத்துல விளையாட்டுப் போட்டிகள்ல நான்தான் ஜெயிப்பேன். பரிசா கிடைக்குற சோப்பு டப்பாவும், டிபன் பாக்சும்தான் என்னோட அதிகபட்ச ஆர்வம். வீட்டுக்கு சின்னச் சின்னதா ஏதாவது பொருள் கொண்டு வந்து கொடுக்குறதுல ஒரு சந்தோஷம் இருந்துச்சு.’ 

பத்தாம் வகுப்பிலிருந்துதான் முறைப்படியான பயிற்சி சாத்தியப்பட்டது. விளையாட்டு ஆசிரியரான பழனிவேல், சாந்தியின் தனித் திறமையை கவனித்து பயிற்சியளிக்கத் தொடங்கினார். ஒடுக்கப்பட்ட சூழலில் சேரியில் வளரும் சிறுவர்களுக்கு கிடைக்கும் சிறு வழிகாட்டலும் ஊக்கமும் - இருண்டு கிடக்கும் அவர்களின் எதிர்காலத்தின் மேல் விழும் ஒளிக்கீற்று. தனக்கு கிடைத்த ஒரே ஊன்றுகோலை இறுகப் பற்றிக் கொண்டதால், சாந்தியின் சாதனைகள் பள்ளியிலேயே தொடங்கின. வேங்கடகுளம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படித்தபோது, முதன்முறையாக மாநில அளவிலான போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று, தன் கணக்கைத் தொடங்கினார்.

சாந்தி : “ரொம்ப சந்தோஷப்பட்ட நாள் அதுன்னு சொல்லலாம். வாழ்க்கையில பெரிசா எந்த மாற்றமும் உண்டாகலன்னாலும் என் லட்சியத்தை நோக்கி நான் போயிட்டிருக்கேன்னு புரிஞ்சது. அப்பவும் என்னோட மிகப் பெரிய கவலையாவும் தடையாவும் இருந்தது என்னோட வறுமை, ஊட்டச் சத்துள்ள உணவு. கிராமத்துக் குழந்தைகளுக்கு இயற்கையா இருக்குற உடல்/மன வலிமை எனக்குமிருந்ததால சாதிக்க முடிஞ்சதுன்னாலும், புரதச் சத்துக்காக முட்டையும் பாலும் மிகப் பெரிய கனவாவே இருந்துச்சு! என்னோட குடும்பச் சூழல்ல அதையெல்லாம் நான் எதிர்பார்க்க முடியாது. கூட விளையாட வர்ற பசங்கள்லாம் திடமா ஆரோக்கியமா இருக்கிறப்போ நான் மட்டும் கறுத்து, மெலிஞ்சு சுருங்கிப் போயிருந்தேன். தாழ்த்தப்பட்ட, ஏழைக் குடும்பத்துல பிறந்ததுக்காக நான் வருத்தப்பட்டது அப்போதுதான்.’

திருச்சி ஜே.ஜே. கல்லூரியில் பி.பி.ஏ. படிக்க சேர்ந்தார் சாந்தி. மகளின் எந்த முடிவையும் தடுக்காமல் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தனர் பெற்றோர். இதனால் எந்நேரமும் பயிற்சியிலேயே கழிந்தன பொழுதுகள். சாதிக்க வேண்டும் என்ற வெறி உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது. 2002 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்று, சர்வதேசக் களத்திற்குள் நுழைவதற்கான தகுதியைப் பெற்றார். அடுத்த ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற "ஏஷியன் ட்ராக் அண்ட் பீல்ட்' போட்டிகளுக்கு தேர்வானார் சாந்தி. வெளிநாட்டுப் பயணத்திற்கான தங்கும் மற்றும் பயணச் செலவுகளை விளையாட்டுத் துறை ஏற்றுக் கொண்டிருந்தாலும், நல்ல உடைகளோ, சொந்த செலவிற்கு பணமோ இன்றி வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு கிளம்பினார். அய்யாயிரம் மீட்டரில் முதல் பரிசு, எண்ணூறு மீட்டரில் இரண்டாம் பரிசு, நானூறு மீட்டரில் மூன்றாம் பரிசு என மூன்று பரிசுகளைப் பெற்றிருந்தும், சாந்தியின் ஒடுக்கப்பட்ட மனம் அதைக் கொண்டாட முடியவில்லை.

சாந்தி : “வெறும் ரெண்டாயிரம் ரூபா எடுத்துட்டுப் போனேன். எங்க அப்பா அம்மானால அதுதான் முடிஞ்சது. அதையே கடன் வாங்கிதான் கொடுத்தாங்க. நான் ஜெயிப்பேன்னு நிச்சயமாகத் தெரியும். ஏன்னா தினமும் காலையிலயும் மாலையிலயும் பத்து கிலோ மீட்டர் ஓடுவேன். பயிற்சியை யும் முயற்சியையும் சரியா செஞ்சேன். மூணு பதக்கங்களை வாங்கியும் அங்க நான் தனியாவே இருந்தேன். என்கூட வந்த மற்ற போட்டியாளர்கள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கல. என்னாலயும் அவங்களோட இயல்பாகப் பழக முடியல. போட்டி நேரம் போக ஷாப்பிங் போவாங்க. நிறைய செலவு செய்வாங்க. என்னால அது முடியாது. என்னோட அறையிலேயே அடைஞ்சு கிடப்பேன். ரெண்டாயிரம் ரூபாயோட போன நான், 39 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையா கொண்டு வந்தேன். என்னை தவிர்த்தவங்க ஒரு மெடல்கூட வாங்கல. பரிசுப் பணத்தை செலவு செய்யாம அப்படியே கொண்டு வந்து வீட்டுல கொடுத்தேன். சந்தோஷப்பட்டாங்க. அவங்களுக்கு அது பணம்; கொஞ்ச நாளைக்கு நல்ல சாப்பாடு சாப்பிடலாம் அவ்ளோதான். ஆனால், என் சாதனையோட மதிப்பை புரிஞ்சுக்க யாருமே இல்øலயேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்.’

santhi_340ஒரே போட்டியில் 5000, 800, 400 மீட்டர்களில் பதக்கங்கள் வெல்வது அசாதாரணமான செயல். எவருமே கணிக்காத சூழலில் சாந்தியின் சாதனை அமைந்தது. எந்த சந்தேகங்களோ, சர்ச்சைகளோ இன்றி பதக்கங்களைப் பெற்று வந்தார். இந்த இமாலய வெற்றிக்குப் பின்னான இரண்டாண்டுகள், கவனத்தை மீண்டும் பயிற்சியின் பக்கம் திருப்பியதில், 2005 ஆம் ஆண்டு முழுவதும் வெற்றி மாலைகள் சாந்தியின் மேல் விழுந்து கொண்டே இருந்தன. தென்கொரியாவில் 800 மீட்டரில் வெள்ளிப்பதக்கமும், தாய்லாந்தில் இரண்டு தங்கங்களையும், கிராண்ட் ப்ரிக்ஸ் போட்டிகளில் தாய்லாந்தில் நடைபெற்ற முதல் ஆசியப் போட்டியில் தங்கத்தையும், அதே ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளியையும் வென்றார். இத்தனை வெற்றிகளுக்குப் பின்னர்தான் தன் லட்சியத்தை அடைந்து கொண்டிருக்கும் பூரிப்பு கொஞ்சமாக அவருள் பூத்தது. எந்த விளையாட்டு வீரருக்கும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே அதிகபட்ச இலக்கு என்பதால், சாந்தியும் அதை குறி வைத்தே இயங்கிக் கொண்டிருந்தார்.

சாந்தி : “ஊருக்குள்ள எனக்குனு ஒரு மரியாதை உருவாகி இருந்துச்சு. எல்லோரும் அன்பாவும் மரியாதையாவும் பார்க்க ஆரம்பிச்சாங்க. 2005 முழுக்க பதக்கங்களா வாங்கிட்டிருந்தேன். எங்க ஓட்டு வீட்டுக்குள்ள அதை வைக்குறதுக்குதான் இடமில்லை. 2005 ஆம் வருஷத்தோட விளையாடவே முடியாமப் போகும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் அவங்க ஓடி முடிச்சதுக்கப்புறம் சிறுநீர் பரிசோதனை செய்வாங்க. போதை மருந்து, ஊக்க மருந்து சாப்பிட்டது உறுதியாச்சுன்னா, அடுத்த ரெண்டு வருஷத்துக்கு விளையாட முடியாது. ஒவ்வொரு முறையும் இந்த பரிசோதனையை தைரியமா செஞ்சுக்குவேன். போட்டி நாட்கள்ல தலைவலி மாத்திரைகூட எடுத்துக்க மாட்டேன். ஏன்னா நாம் சாதாரணமா எடுத்துக்குற வலி நிவாரணிகள்லகூட ஸ்டீராய்ட்ஸ் இருக்கலாம். கஷ்டப்பட்டு பெற்றதை கவனக்குறைவுனால இழந்துடக் கூடாதில்லையா?’

ஊக்க மருந்து விஷயத்தில் இத்தனை கவனமாக இருந்த சாந்தி, உடல் கூறு தேர்வில் தோற்றுப் போவோம் என அதுவரையும் நினைத்திருக்கவில்லை! 2005 டிசம்பரில் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, 800 மீட்டரில் வெள்ளிப் பதக்கம் வென்றபோது, இந்திய ஊடகங்கள் அவரை வாழ்த்தின. அடுத்த ஒரு வாரத்தில் எல்லாமே தலைகீழாய் மாறியது. பெண்ணென்று பொய் சொல்லி சாந்தி ஏமாற்றிவிட்டதாகவும், பாலினச் சோதனையில் தோல்வியடைந்துவிட்டதாகவும் ஊடகங்கள் அறைகூவ, அந்த அலறல்களுக்கு நடுவே உடைந்து நொறுங்கிப் போனார் சாந்தி.

சாந்தி : “முதல்ல எனக்கு எதுவுமே புரியல. தோஹாவுல 800 மீட்டர் பந்தயத்துல வெள்ளிப் பதக்கம் ஜெயிச்சதோட என்னோட போட்டிகள் முடிஞ்சது. மற்ற வீரர்கள் விளையாடிட்டிருந்தாங்க. நான் என்னோட அறையிலயே இருந்தேன். ரெண்டு நாள் கழிச்சு. என்னை பரிசோதனை செய்யணும்னு கூட்டிட்டுப் போனாங்க. ரத்தம், சிறுநீர், பொது உடல் பரிசோதனைகளும் பண்ணாங்க.  என்னோட பயிற்சியாளர்கிட்ட எதுக்கு இந்த பரிசோதனைன்னு கேட்டேன். என்னோட அறையில் தங்கியிருந்த சக வீராங்கனைகள், என் மேல புகார் செஞ்சிருக்குறதா சொன்னார். குழப்பமா இருந்தது. பதக்கத்தோட நான் நாடு திரும்பினேன். ஒரு வாரம் கழிச்சு டி.வி. செய்திகள்ல பார்த்துதான் என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். என்னோட பயிற்சியாளர் ரஷ்யக்காரர். பெங்களூருவில் இருக்கார். அவர்கிட்ட விளக்கம் கேட்க முடியாதுங்கறதால விட்டுட்டேன். ஆனா என் வாழ்க்கை, லட்சியம், கனவு இந்த ஒரு விஷயத்துனால நொறுங்கிப் போச்சு. அதுவரைக்கும் இருந்த சாந்தியா அதுக்கப்புறம் நான் வாழவே முடியல.’

பாலினச் சோதனையில் தோல்வி என்ற முதல் செய்தி வந்தபோது, காரைக்குடியில் தன் மாமா வீட்டில் இருந்தார் சாந்தி. தொடர்ச்சியாக தொலைக்காட்சி செய்திகளில், சாந்தி ஆணா, பெண்ணா என்ற விவாதம் நடந்ததால், செய்திச் சேனல்களை தற்காலிகமாகத் தடை செய்து வைத்தனர் சாந்தியின் உறவினர்கள். கல் தடுக்கி விழுந்திருந்தால் அத்தனை காயம் ஏற்பட்டிருக்காது. சாந்தி சரிந்ததோ மலை உச்சியிலிருந்து! தனித்த உழைப்பாலும் முயற்சியாலும் வெற்றியின் உயரங்களில் ஏறிக் கொண்டிருந்த நேரம் இப்படியொரு சரிவு, எத்தனை பெரிய வலியை உண்டாக்கியிருக்கும்?! பெண்ணாகப் பிறந்து, பெண்ணாகவே உணர்ந்து, பெண்ணாகவே வாழ்ந்து வந்த நிலையில், சில சோதனைகள் பெண்ணில்லை என விலக்கி வைக்க, அகதியைப் போன்ற கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார் சாந்தி.

சாந்தி : “நான் பொண்ணுதான். ஒரு பொண்ணாதான் பிறந்தேன். அதனாலதான் எனக்கு சாந்தினு பேர் வச்சாங்க. நான் பிறந்தப்போ, என்னோட உறவினர்களும் ஊர்க்காரர்களும் வந்து பார்த்தாங்க. என்னை வேறு எப்படி நிரூபிக்கச் சொல்றீங்க? பெண்ணுக்குனு விதிக்கப்பட்ட அடையாளங்களோட இருக்குறதுக்காக, உடலில் அட்டைகளைப் பொருத்திக்கிட்டு என்னால திரிய முடியாது. கருப்பை இல்லேன்னா பொண்ணில்லையா? பருவமெய்தலேன்னா பொண்ணில்லையா? பருவமெய்தாமலேயே திருமணம் செஞ்சுகிட்டு வாழ்றவங்கள எனக்குத் தெரியும். உங்களோட விதிமுறைகளும் சோதனைகளும் என்னை பெண்ணில்லனு சொன்னா, அதை நான் ஏத்துக்கணுமா?  என் பாலினம் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. சிகிச்சை எடுத்துக்குறதுக்கு நான் நோயாளி இல்ல. எனக்கு தோணுச்சுனா திருமணம் செஞ்சுக்குவேன்; இல்லேன்னா தனியாவே இருப்பேன். அதை வச்சு என் பாலினத்தை யாரும் உறுதி செய்ய முடியாது. இந்த சமுதாயத்துல எப்பவுமே நான் தலைநிமிர்ந்து வாழ முடியாத நிலையை உருவாக்கிட்டாங்க. ஆம்பளையா, பொம்பளையானு என் காதுபட கிண்டல் செய்றவங்களை தினமும் கடந்து போறேன். என் வாழ்க்கை முழுசும் தொடரப் போற கொடுமையான கேள்வி இது.’

- அடுத்த இதழிலும்