"வாய்மையே வெல்லும்' என்று அரசு லச்சினையில் பொறித்து வைத்துக் கொண்டு, நேர்மையாக செயல்படும் அரசு அதிகாரிகளைப் பழிவாங்குவதுதான் - தமிழக அரசின் லட்சியமாக இருக்கிறது! 1990 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கு வந்த சி. உமாசங்கர் என்ற மூத்த அலுவலர், அவர் நேர்மையாக செயல்பட்ட ஒரே காரணத்திற்காக - தி.மு.க. அரசால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல் முறைகேடுகளை கண்டித்ததால், முன்பு உமாசங்கர் பழிவாங்கப்பட்டார். அதற்குப் பிறகு அவருடைய திறனையும் நேர்மையையும், இத்தனை ஆண்டுகளாக முதல்வர் பயன்படுத்திக் கொண்டார். தற்பொழுது தி.மு.க. அரசின் ஊழல் முறைகேடுகளை உமாசங்கர் கண்டித்ததால், அவரையே பழிவாங்கத் துணிந்திருக்கிறார் முதலமைச்சர்.

ஊழல், முறைகேடு என்று வந்துவிட்டால், நேர்மையான அதிகாரிகளைப் பழிவாங்குவதில் திராவிடக் கட்சி அரசுகள், ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. "உமாசங்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருக்கிறார்' என்ற பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில், அரசின் ஊழல் ஒழிப்புத் துறை அவரை விசாரிக்க முற்பட்டது. இது, சட்டத்திற்குப் புறம்பானது என்று அரசுக்கு எதிராக துணிச்சலுடன் வழக்கு தொடுத்திருக்கிறார் உமாசங்கர். கடந்த இரு ஆண்டுகளில் தி.மு.க. அரசின் பல துறைகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டுபிடித்ததால், இவரை வெவ்வேறு துறைகளுக்கு அரசு தொடர்ந்து மாற்றம் செய்து வந்தது. வேறு எந்த வகையிலும் அவரைப் பழிவாங்க முடியாததால், அவர் போலி சான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்திருக்கிறார் என்றொரு போலியான குற்றச்சாட்டினை வைத்திருக்கிறது.

தமிழக அரசுப் பணிகளில் உள்ள தலித் பணியிடங்களில் போலிச் சான்றிதழ் கொடுத்து சேர்ந்துள்ள தலித் அல்லாதவர்கள், ஆயிரக்கணக்கில் இன்றளவும் பணியில் இருக்கின்றனர். இத்தகைய "ஜாதி திருடர்கள்' மீதெல்லாம் எந்த கிரிமினல் நடவடிக்கையும் மேற்கொள்ள தயாரில்லாத அரசு, உண்மையான சாதி சான்றிதழுடன் பணியில் இருக்கும் உமாசங்கரை, அவருக்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, இக்குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறது. இதற்கான விலையை தி.மு.க. அரசு கொடுத்தே ஆக வேண்டும். உமாசங்கரின் தந்தை கிறித்துவர் என்றும், அதனால் அவர் தலித் அல்ல என்றும் எவ்வித ஆதாரங்களுமின்றி குற்றம் சுமத்தியிருக்கிறது.

பட்டியல் சாதியினருக்குரிய உரிமைகளைப் பெற, கால் நூற்றாண்டிற்கும் மேலாக தலித் கிறித்துவர்கள் போராடி வருகின்றனர். தலித் கிறித்துவர்களுக்கு பட்டியல் சாதியினருக்குரிய இடஒதுக்கீட்டை அளிக்க ஆவன செய்ய வேண்டும் என்று, முதல்வர் பிரதமருக்கு அண்மையில்கூட கடிதம் எழுதியிருக்கிறார். மறுபுறம், அதையே குற்றச்சாட்டாக்கி ஒரு தலித் அய்.ஏ.எஸ். அலுவலரை இடைநீக்கம் செய்து, முரண்பாட்டின் மொத்த உருவமாக செயல்படுகிறார்.

ஒரு தலித், தான் எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதை அவன்தான் முடிவு செய்ய வேண்டும். அது அவனுக்குரிய பிறப்புரிமை. வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது. இந்த உரிமையைத் துய்க்க தற்பொழுது சட்டப்படி அனுமதி இல்லை என்றாலும், நியாயப்படி இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஏறக்குறைய இதேபோன்றதொரு சாதி சான்றிதழ் குற்றச்சாட்டு நீதிபதி அசோக்குமார் மீது சுமத்தப்பட்டு, அ.தி.மு.க. அரசு அவருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை மறுக்க முயன்றபோது, தி.மு.க. அரசு அதை கண்டித்தது. மேலும், "ஸ்பெக்ட்ரம்' ஊழலை மறைப்பதற்கு, மத்திய அமைச்சர் ஆ. ராஜா ஒரு தலித் என்பதால்தான் பழிவாங்கப்படுகிறார் என்று கூறும் முதல்வர், இன்று தன் அரசு மீதான ஊழலை மறைப்பதற்காக, ஒரு தலித்தை பழிவாங்கத் துடிப்பது என்ன நியாயம்?

தலித்துகளின் பிறப்பை சந்தேகப்படுத்துவதையே திராவிடக் கட்சி அரசுகள், தங்கள் வழக்கமாகக் கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். "மைனாரிட்டி அரசு' என்றால் முதல்வருக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. அதுபோல் தான் "மைனாரிட்டி' தலித்துகளை சந்தேகப்படுவதும்! தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்திற்கு உமாசங்கர் அளித்துள்ள கடிதத்தில், தி.மு.க. அரசு மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் கடமை முதலமைச்சருக்கு உண்டு. தி.மு.க. அரசின் அதிகார நிழலால் தாம் தாக்கப்படக் கூடும் என்பதால், மய்ய அரசின் பாதுகாப்பு தனக்கு வேண்டும் என்று உமாசங்கர் கோரிக்கை வைத்திருக்கிறார். ஒரு தலித், அய்.ஏ.எஸ். அதிகாரியே ஆனாலும் அவர் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற நிலை நீடிப்பது, தமிழ்நாட்டிற்கே பெருத்த அவமானம்.

ஒரு நேர்மையான அதிகாரிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை, நேர்மையில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் தட்டிக் கேட்க முன்வர வேண்டும். உமாசங்கரின் இடைநீக்கத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லை எனில், இதனால் அவமானப்பட்டு நிற்கப் போவது உமாசங்கர் அல்ல; தமிழக அரசுதான்.

Pin It