‘‘கனவுகளைக் கொளுத்தி

யாகம் நடத்தும் நெருப்புகள்

எரியும் எங்கள் வயிற்றின்

வெம்மைக்கு நிகரானதல்ல.''

தனைகளால் நெய்யப்பட்ட பாதைகளில், வாழ்க்கை என்னும் வண்டியில் துன்பங்களையே கடக்கும் வாழ்க்கை தலித்துகளுடையது. நவீன வாழ்வின் செம்மைகளைக் காணும் தன்மைகள் கொண்டது தற்போதைய வாழ்வு என்ற வாதம் கூட, சாதியத்தின் நவீன தாக்குதல்களால் நசுங்கிக் கிடக்கிறது. அப்படி ஒருவாழ்வுதான் பழநியுடையது.

பழநி, தமிழாசிரியர். அதற்கான அத்தனைத் தகுதிகளும் அவருக்குண்டு. கூடுதலாக, இன - மொழி அடையாளத்தினூடே திராவிட இயக்கப் பற்றும் கொண்டவர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் அவருடைய வாழிடம். மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் பிறந்து, எப்படியாவது படித்திட வேண்டும் என்னும் உத்வேகம் கொண்டு படித்தவர். தமிழ் மீதிருந்த பேராவலால் எப்படியாவது தமிழõசிரியராகிட வேண்டும் என்ற ஆர்வத்தால் தமிழில் பி.லிட்., எம்.ஏ. பட்டங்களைப் பெற்று, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ‘பண்டிட்டு'க்கான பட்டயப் படிப்பையும் முடித்தார்.

ஆம்பூரில் இந்து கல்விச் சங்கம் என்ற நிறுவனம், 75 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. சாதி இந்துக்களால் நடத்தப்படும் இச்சங்கம், ஆம்பூரில் புகழ்பெற்ற பள்ளியாக இருக்கும் - இந்து மேனிலைப் பள்ளியையும், இந்து பெண்கள் மேனிலைப்பள்ளியினையும், இந்து ஆரம்பப் பள்ளியையும் நடத்தி வருகிறது. இந்நிறுவனத்திற்கு பள்ளி அமைக்க முதன் முதலில் ஒரு முஸ்லிம்தான் தன்னுடைய இடத்தினை கல்விப் பணிக்கென கொடையாக அளித்தார்.

இக்கல்விச் சங்கம் நடத்துகின்ற இந்து மேனிலைப் பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் சார்பில் 2003ஆம் ஆண்டிலிருந்து 16.9.2008 வரை, மிகக் குறைந்த ஊதியத்தில் தமிழாசிரியராக அர்ப்பணிப்போடு பழநி பணியாற்றினார். அதே இடத்தில் இயங்கும் இந்து மகளிர் மேனிலைப் பள்ளியில், ஓர் இடைநிலை ஆசிரியை 2006ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்ற பிறகு அவ்விடம் காலியானது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவ்விடத்திற்கு பட்டதாரி ஆசிரியரை நியமிக்கும் எண்ணத்துடன் 5.9.2008 அன்று ஒரு விளம்பரத்தை இந்து கல்விச் சங்கம் அதன் அப்போதைய செயலாளர் காந்திராஜ் பெயரில் கொடுத்தது. அதில் ‘ஆசிரியர் தேவை - ஆண் / பெண் தமிழாசிரியர் பி.லிட்., (தமிழ்) - எஸ்.சி.'என்று விளம்பர வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதிலிருந்தே இது தலித்துகளுக்கான பொதுப்பிரிவில் போடப்படும் வேலை என்பதை, எந்தவித அரசு சட்டவிதி விளக்கங்களுமின்றியே புரிந்து கொள்ள முடியும்.

பழநியும் இந்த விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பித்து, நேர்காணலில் பங்கேற்று தேர்ச்சியும் பெற்றார். 17.9.2008 நாளிட்ட வேலை நியமன ஆணை, செயலாளர் காந்திராஜ் அவர்களின் கையெழுத்தோடு பழனிக்கு கொடுக்கப்பட்டது. இதற்கு நன்கொடையாக ரூபாய் 1 லட்சம் கோரப்பட்டுள்ளது. தன்னுடைய ஏழ்மைச் சூழலைப் பொருட்படுத்தாமல், வட்டிக்கு வாங்கி (ஆம்பூர் கிளை பாரத ஸ்டேட் வங்கியில் ‘செயலாளர் இந்து கல்வி சங்கம், ஆம்பூர்' என்னும் பெயருக்கு, இரண்டு முறை அய்ம்பதாயிரம் என ஒரு லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கு 10948057116 - என்னும் எண்ணுக்கு) செலுத்தியுள்ளார் பழநி. 17.9.2009 முதல் பள்ளியின் நிரந்தர வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு வேலையும் செய்து வந்திருக்கிறார்.

பணிக்கான ஏற்பாணையைப் பெறுவதற்கு, மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு உடனடியாக பள்ளி நிர்வாகம் பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால் எந்தக் காரணமுமின்றி அப்பணி மிகத்தாமதப்படுத்தப்பட்டது. ஏற்பாணையின்றியும், சம்பளமும் வாங்காமல் பழநி அப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். பள்ளி நிர்வாகம் காலந்தாழ்த்தி பரிந்துரைத்ததை மாவட்ட கல்வி அலுவலகம் ஏற்கவில்லை. இதற்கிடையில் அப்பணியிடத்திற்கான இனச் சுழற்சி, தலித் பெண்களுக்கானதாக மாறிவிட்டது என அறிவிக்கப்படுகிறது.

உடனே இந்து கல்விச் சங்கம், பழநிக்காக அந்தப் பணியைப் போட வேண்டும் என வற்புறுத்துவதைப் போல, மாவட்ட கல்வி நிர்வாகத்தை தலித் ஆண்களுக்காக மாற்ற வேண்டும் எனக் கோரியது. இத்தனை ஆண்டுகளாக பள்ளி நிர்வாகத்தை நடத்துகின்றவர்களுக்கு, பெண்களுக்கான இனச்சுழற்சியை ஆண்களுக்காக கோரமுடியாது எனத் தெரிந்திருந்தும், பழியை கல்வி நிர்வாகத்தின் மேல் போட வேண்டும் என்பதற்காகவும், அதற்கு பழநியைப் பயன்படுத்திக் கொண்டு பழநியை அப்பணிக்குத் தேர்ந்தெடுத்ததாக மாவட்ட கல்வி அதிகாரிக்குத் தெரிவிக்க, அவரும் இவர்கள் நினைத்ததைப் போல அதை மாற்றக்கூடாது என 9.1.2009 அன்று ஒரு கடிதம் அனுப்பி, எஸ்.சி. பெண்ணைத்தான் அப்பணிக்கு போட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.

ஆனால் அந்த ஆணையின் அடிப்படையில் தலித் பெண் எவரையும் போடவில்லை. ஒரு பிற்படுத்தப்பட்ட பெண்ணிடம் ஏற்கனவே வேலை தருவதாக பணம் பெற்றுக் கொண்ட இந்து கல்விச் சங்கம், அப்பணியிடத்திற்கு வேலை போடுவதாக மீண்டும் பணம் பெற்றுக் கொண்டு, அந்தப் பெண்ணுக்கு வேலை அளிக்கப்பட்டது. பணி ஏற்பாணை குறித்த காலத்தில் அனுப்பப்பட்டு சம்பளம் வாங்கித்தரப்பட்டது. இப்போது அப்பணியிடத்திற்கான இனச்சுழற்சி மாறவில்லை.

தான் வேலை இழந்து கொண்டிருப்பதை அறியாமலேயே பள்ளி நிர்வாகம் தனக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பிக் கொண்டிருந்திருக்கிறார் பழநி. பிறகுதான் இத்தகைய சதி அவருக்குத் தெரியவந்தது. 14 மாதங்கள் நிரந்தர ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு வேலை செய்த பழநியை, அதில் கையெழுத்திடக்கூடாது என பள்ளி நிர்வாகம் தடுத்தது. வேண்டுமானால் ‘பழையபடியே குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்; பிறகு பணிக்காலியிடம் வரும்போது போடுகிறோம்' என்று பழநியிடம் தெரிவித்தது. ஆனாலும் அதை ஏற்கமறுத்து, கையெழுத்துப் போடாமலேயே மாணாக்கர்களின் நலன் கருதி தன்னுடைய வேலையை தொடர்கிறார் பழநி.

இந்து கல்விச் சங்கத்தில் ஏற்பட்ட சில குளறுபடிகளால் செயலாளர் பதவியிலிருந்து விலகிவிட்டார் காந்திராஜ். புதிய பொறுப்பாளர்கள் வந்தவுடன் பாடம் நடத்திக் கொண்டிருந்த பழநியை, அவர்களும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய வற்புறுத்த, அவர் மறுக்க - ‘வேலை இல்லை வெளியே போ' என்று கழுத்தைப் பிடித்து வெளியேற்றியுள்ளனர். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான பழநி உடல் நலம் கெட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். தற்பொழுது யாருடைய ஆதரவுமின்றி சிக்கித் தவிக்கிறார். கடன் கொடுத்தவர்கள் வட்டி கேட்டு துன்புறுத்துகின்றனர். எந்த வேலையும் இல்லாமல் மிகவும் அல்லலுறும் தலித் வாழ்க்கை பழநியுடையது.

பழநியின் இந்த நிலையிலிருந்து நமக்கு சில கேள்விகள் இருக்கின்றன. தலித்துகளுக்கான பொதுப் பிரிவு என்று விளம்பரம் செய்து ஒருவரை தேர்ந்தெடுத்த பிறகு, அவருக்கான ஏற்பாணையை ஏன் குறித்த நேரத்தில் பள்ளி நிர்வாகம் வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை?

 அப்படி செய்யாததால், அவ்விடம் எஸ்.சி. பெண்களுக்கான இனச்சுழற்சிக்கு வந்துவிட்டது. ஆனால் அவ்விடத்திற்கு ஏன் தகுதியான எஸ்.சி. பெண்ணை பணிநியமனம் செய்யவில்லை? பழநிக்காகத்தான் என்றால், இனச்சுழற்சியை மாற்ற முடியாது என்று பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாதா? இப்படி ஏதெனும் முன்னுதாரணம் உண்டா?

 அப்படியெனில் எஸ்.சி. பெண்களையும் போடக்கூடாது என்பதற்கு, கல்விச் சங்கம் முனைப்பாக இருந்திருக்கிறது என்று புரிகிறதல்லவா?

 பழநி என்ற தலித் ஆணுக்கும் வேலைதரக்கூடாது, தலித் பெண்ணுக்கும் வேலை தரக்கூடாது என்ற இந்து கல்விச் சங்கத்தின் சாதிய ஆதிக்க மனோபாவம், சாதிய வன்முறைக்கு சற்றும் குறைந்ததல்லவா?

 ஓ.சி. இனச்சுழற்சியில் போடப்பட்டவருக்கு மட்டும் பள்ளி நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் ஏற்பாணையை வாங்கித் தந்தது ஏன்? கேள்விகள் பெருகிக் கொண்டே போகின்றன. ஆனால், இவற்றுக்கெல்லாம் ஓர் ஒற்றைச் சொல்லைத்தான் பதிலாக்க முடியும் : ஜாதி வெறி. 

- நம் செய்தியாளர்

Pin It