தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் மதுரையில், தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலின் எண்ணிக்கை புயல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

தலையில் 18 தையல்களுடன் முருகன்மதுரை மாவட்டத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து "தீண்டாமை ஒழிப்பு முன்னணி' 2007ஆம் ஆண்டு கள ஆய்வை மேற்கொண்டது. ஆயிரக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கிய மதுரை மாவட்டத்தில் இந்த ஆய்வு 44 கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டன. தீண்டாமையின் வடிவங்கள் பலவகையில் இக்கிராமங்களில் இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்தது. பொதுக் குளம், கிணறு, குடிநீர்க் குழாய்கள், தேநீர்க்கடைகள், சமுதாயக் கூடம், சிகை திருத்தம், சலவைக் கூடம், பேருந்து நிறுத்தம், அஞ்சல் நிலையம், ரேசன் கடை, கிராம சபைக் கூட்டங்கள், பள்ளிக்கூடம், பொதுத் தெருக்கள், கோயில் வழிபாடு, திருவிழாக்கள் ஆகியவற்றில் தலித்துகளுக்கு எதிரான நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில் உள்ளன என்றும் அறியப்பட்டது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் இந்த அறிக்கை, மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டதோடு மட்டுமின்றி, செய்தியாளர்கள் மத்தியிலும் வெளியிடப்பட்டது. ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்பதற்கு, நாகமலைப் புதுக்கோட்டை அருகே உள்ள வடிவேல் கரையில் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களே சான்று. ""மலம் அள்ளவும், பிணம் புதைக்கவும், தப்படிக் கவுமே பிறப்பெடுத்த சக்கிலியன் பட்டப் படிப்பு படிப்பதா, எங்கள் முன்னால் சைக்கிள் ஒட்டுவதா?'' என்ற கேள்வியோடு எழுந்த சாதிவெறி பேயாட்டத்தில் தலையில் 16 தையல்கள் போடும் அளவிற்கு பெரும் தாக்குதலை முருகன் எதிர்கொண்டுள்ளார்.

மதுரையில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வடிவேல்கரையைச் சேர்ந்தவர் அம்மாவாசி. இவர், வடிவேல் கரை ஊராட்சியில் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் "தோட்டி' வேலை செய்து வருகிறார். 600 குடும்பங்கள் வசிக்கக்கூடிய இந்த கிராமத்தில் தலித் குடும்பங்களின் எண்ணிக்கை 75. கல்வியறிவு மறுக்கப்பட்ட இச்சமூகக் குழந்தைகள், இந்தத் தலைமுறையில்தான் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். சாதிய மேலாதிக்கத்தாலும், குலத் தொழிலாலும் காலங்காலமாக கல்வி மறுக்கப்பட்ட தலித்துகள், வடிவேல்கரை கிராமத்தில் படிப்பது சாதி இந்துக்களின் கண்களை உறுத்துகிறது.

கல்வி நிலையம் சென்று கொண்டே வயிற்றுப்பாட்டுக்கு தப்படிக்கும் குழந்தைகள், பள்ளிக்குச் செல்லும் போது சாதி இந்து தெருவில் செருப்புப் போட்டு செல்ல முடியாததால், கண்மாய்க்குள் விழுந்து விடுகின்றனர். 75 தலித் குடும்பங்களில் பட்டம் படித்த ஒரே நபரான அம்மாவாசியின் மகன் முருகன் மீது உள்ள காழ்ப்புணர்வு காரணமாகவே, அவரைக் கொலை செய்யும் நோக்கில் ஆகஸ்ட் 13 அன்று ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தினர். இதனால் பாதிக்கப்பட்ட முருகன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தலைக்காய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முருகன் மீது தாக்குதல் நடத்தியவர்கள், தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டு காவல் நிலையம் நோக்கிச் செல்ல, முருகன் மற்றும் அவருடைய தந்தை அம்மாவாசி மீது கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்துள்ளது காவல் துறை. தாக்குதல் நடத்திய ஆனந்த், லெட்சுமணன், சிலம்பரசன் ஆகிய ஆதிக்க சாதியினர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்த காவல்துறை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஆதித்தமிழர் அமைப்பு ஆகியவற்றின் கண்டன சுவரொட்டிக்குப் பிறகே, ஒப்புக்கு ஒருவர் மீது மட்டும் வழக்கைப் பதிவு செய்து தனது மேலாதிக்க விசுவாசத்தைக் காட்டியுள்ளது. ஆதிக்க சாதியினரால் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முருகன், எம்.காம். படித்து முடித்து விட்டு தற்போது பி.எட். படித்து வருகிறார்.

இந்நிலையில், காந்தி நகர் பகுதியில் உள்ள அருந்ததியர் குழந்தைகளுக்கு மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரை இலவசமாக "டியூசன்' எடுத்து வருகிறார். மலம் அள்ள நிர்பந்திக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு முருகன் பாடம் கற்றுத் தருவதா என்ற மநுவின் பேரப்பிள்ளைகள், முருகன் டியூசன் நடத்தும் இடத்திற்கு வந்து சத்தம் போடுவது, சீட்டு விளையாடுவது, தெரு விளக்கை அணைப்பது என அட்டகாசம் புரிந்து, கடைசியில் கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ""தோட்டி மகனுக்கு என்னடா படிப்பு'' எனக் கேட்டவாறே, அவர்கள் தன்னைத் தாக்கியதாக முருகன் கூறுகிறார்.

இதற்கு முன்பு 2007ஆம் ஆண்டு முருகனின் சகோதரர் அழகுப்பாண்டியின் மீது சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தியதும், அதனால் மூவர் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத் தகுந்தது. அழகுப்பாண்டி சைக்கிளில் சென்ற போது மூவர் வழி மறித்து நின்று கொண்டு செல்லவிடாமல் தடுத்துள்ளனர். "அண்ணே, விலகிக் கோங்க'' என்று அழகுப்பாண்டி சொல்ல, அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த ஆதிக்க சாதியினர், ""சக்கிலிச்சிக்காடா நாங்க பிறந்தோம்'' என்று கூறியவாறே அழகுப்பாண்டியை அடித்துத் துவைத்துள்ளனர்.

தலித்துகள் செருப்புப் போட்டு நடக்கக்கூடாது; சைக்கிளில் செல்லக்கூடாது என்ற சாதி இந்துக்களின் சட்டங்கள் மீறப்படும்போது, அதை மீறுகின்றவர்கள் மீது கொலை வெறித்தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ள முருகனை எப்படியேனும் வெளியேற்றி, கைது செய்ய வேண்டும் என பல்வேறு முயற்சிகளை ஆதிக்க சாதியினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாகமலைப் புதுக்கோட்டையில் இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. தோட்டி மகன் படிக்கலாமா எனக் கேட்டு அருந்ததியர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியவே முடியாது என்று கூறி, ஆதிக்க சாதியினருக்கு ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசம் காட்டி வருகிறது தமிழகக் காவல் துறை.

 

Pin It