ஒரு குற்றவியல் வழக்கின் விசாரணை, நீதிமன்றத்தில் எவ்விதம் நடைபெற வேண்டும் என்பது குறித்து சென்ற இதழில் வெளியான இக்கட்டுரைத் தொடரில் விரிவாகப் பார்த்தோம். ஒவ்வொரு வழக்கு விசாரணையிலும் சாட்சிகள், சாட்சியங்கள் வழக்கின் முடிவிற்கு அடிப்படையாக அமைபவை என்பதையும் கண்டோம். ஒவ்வொரு சாட்சியின் நீதிமன்ற விசாரணையும் முதல் விசாரணை, குறுக்கு விசாரணை மற்றும் மறு விசாரணை என வகைப்படுத்தப்பட்டுள்ளதையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் குறித்து ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற விசாரணை குறித்த அம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங்களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும் பொழுதுதான் அவற்றின் முழுமையான பரிமாணங்களை உணர முடியும்.
வன்கொடுமை வழக்குகளைப் பொருத்தவரையில், இன்று பரவலாக அறியப்பட்டதும் முன் உதாரணமாகத் திகழ்வதுமான மேலவளவு வழக்கின் சாட்சிகளின் சாட்சியங்களைக் கொண்டு விளங்கிக் கொள்ள முற்படலாம். இந்த அடிப்படையில்தான், மேலவளவு வழக்கின் சாட்சிகளின் சாட்சியங்களைத் தொகுத்து பின்வருமாறு தருகிறோம் :
அ.சா 1 : கிருஷ்ணன் (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை :
நான் மேலவளவு தெற்கு நகர் காந்தி நகரில் வசிக்கிறேன். நான் இந்து பறையர் வகுப்பைச் சேர்ந்தவர். எதிரிகள் அனைவரையும் எனக்கு தெரியும். பாரதிராஜா, மனோகரன் எதிரிகளைத் தவிர, மற்ற எதிரிகள் அம்பலக்காரர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். எதிரிகளுக்கும் எங்களுக்கும் விரோதம். மனோகரன், பாரதிராஜா ஆகியோர் அம்பலக்காரர்களுக்கு சப்போட்டாக இருந்ததால், அவர்கள் இரண்டு பேர்களும் எங்களுக்கு விரோதம். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மேலவளவு பஞ்சாயத்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக தனி பஞ்சாயத்தாக ஆக்கப்பட்டது. அம்பலக்காரர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை தேர்தலில் நிற்கக்கூடாது என்று சொன்னார்கள். 1996ஆம் ஆண்டுக்கு முன்னால் கள்ளர் வகுப்பைச் சேர்ந்த 1 ஆவது எதிரி அந்த பஞ்சாயத்தில் தலைவராக இருந்தார். எங்களை நிற்கக்கூடாது என்று சொன்னதினால் தேர்தல் நடைபெறவில்லை.
இரண்டாவது முறை மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அரசாங்க அதிகாரிகள் வந்து நீங்கள் தேர்தலில் நில்லுங்கள் உங்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். இவ்வழக்கில் இறந்த முருகேசன் என்பவர் நாமினேசன் தாக்கல் செய்து விட்டு வந்த அன்று இரவு சேவகமூர்த்தி, த/பெ. ஊமையன், பாண்டியம்மாள் க/பெ.சின்னகாளை, காஞ்சிவனம் த/பெ. நல்லையன் ஆகியோரின் வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த சம்பவம் நடந்ததால் வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் என்று தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, முருகேசன் நாமினேசன் தாக்கல் செய்யப்பட்டு போதுமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அந்த முறை அம்பலக்காரர்கள், கள்ளர்கள் ஓட்டுப் பெட்டியை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். ஓட்டுப் பெட்டி இல்லாததால் ஓட்டு எண்ணிக்கை தடைப்பட்டது.
28.12.1996 தேதியன்று மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த முறை முருகேசன் தேர்தலில் நின்று ஜெயித்தார். பதவி பிரமாணம் செய்தது தவிர, அந்த அலுவலகத்திற்குள் முருகேசன் உள்ளே நுழைய முடியவில்லை. அம்பலக்காரர் சமுதாயம், முருகேசனை தலைவராக இருக்க விடவில்லை. ஓட்டுப்பெட்டியை எடுத்துக்கொண்டு போனதற்காக அம்பலக்காரர் சமுதாயத்திற்கு தண்டனை கிடைத்தது. இவ்வழக்கில் உள்ள இரண்டு எதிரிகள் ஓட்டுப்பெட்டியை எடுத்துக் கொண்டு போன வழக்கில் தண்டனை பெற்றவர்கள் அவர்கள் 3ஆவது மற்றும் 21 ஆவது எதிரிகள் (பொன்னய்யா மற்றும் செல்வம் ஆவார்கள்) 30.6.1997 அன்று என் வேலை விஷயமாக மதுரை கலெக்டர் சேவகமூர்த்தி, நித்தியானந்தம், பாண்டியம்மாள், காஞ்சிவனம் எல்லோரும் இருந்தார்கள். என்னைப் பார்த்ததும் தலைவர் முருகேசன் கூப்பிட்டார். 3 பேர்களுடைய வீடுகள் தீப்பற்றி எரிந்ததற்காக நஷ்டஈடு கேட்பதற்காக, மாவட்ட ஆட்சித் தலைவரைப் பார்க்கப் போகிறோம் வாருங்கள் என்று முருகேசன் கூப்பிட்டார்.
அன்று கலெக்டர் அலுவலகத்தில் இல்லை. கலெக்டர் அலுவலகத்தின் வாசலில் 8 ஆவது எதிரி மனோகரன் கேட்டார். நித்தியானந்தம், கே.என்.ஆர். பஸ்ஸில் போவதாக சொன்னார். மனோகரன் போன் பேசும் பக்கம் போய்விட்டார். மற்ற நாங்கள் அனைவரும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தோம். நான், தலைவர் முருகேசன், உப தலைவர் மூக்கன், சேவகமூர்த்தி, செல்லத்துரை, பாண்டியம்மாள், மூர்த்தி, பூபதி எல்லோரும் கே.என்.ஆர். பஸ்ஸில் ஏறினோம். பஸ் மேலூர் வந்தது. மேலூரில் அந்த பஸ் இரண்டு நிமிட நேரம் நின்றது. மேலூரில் எங்கள் இனத்தைச் சேர்ந்த குமாரும், சின்னய்யாவும் அதே பஸ்ஸில் ஏறினார்கள். அம்பலக்காரர் இனத்தைச் சேர்ந்த தலைவர் அழகர்சாமி முதல் எதிரி, துரைபாண்டி 2ஆவது எதிரி, மணிகண்டன் 5ஆவது எதிரி , ஜோதி 4ஆவதுஎதிரி, (தற்பொழுது வழக்கில் ஜெயராமன், மணிவாசகம் 6ஆவது எதிரி, ஆகிய எல்லோரும் அதே பஸ்ஸில் ஏறினார்கள். 1, 2, 4, 5, 6 எதிரிகளை சாட்சி அடையாளம் காட்டுகிறார். சுமார் 2.45 மணிக்கு மேலவளவு அக்ரஹாரம் கள்ளுக்கடை அருகே கே.என்.ஆர். பஸ் வந்தது. 2 ஆவது எதிரி துரைபாண்டி பஸ்ஸை நிறுத்தச் சொல்லி டிரைவரிடம் சத்தம் போட்டார். பஸ்ஸை அதே இடத்தில் டிரைவர் நிறுத்தினார். ராமர் தலைமையிலிருந்த நீதிமன்றத்தில் உள்ள எதிரிகள் பஸ்ஸை ஆயுதங்களுடன் வந்து வழிமறித்தார்கள். அழகர்சாமி (முதல் எதிரி) முருகேசனை ஈனப்பயலான உனக்கு எதற்கு தலைவர் பதவி, எதற்கு நஷ்டஈடு என்று சொல்லி முருகேசனின் வலது தோளில் வெட்டினார். பஸ்ஸிலிருந்த ஜனங்கள் சிதறி ஓடினார்கள். அழகர்சாமி, முருகேசனின் தலையைப் பிடித்து தலை துண்டாகும்படி வெட்டினார். 1ஆவது எதிரி முருகேசனின் தலையை எடுத்துக்கொண்டு மேற்குப்புறமாக ஓடினார். இறந்து போன ராஜாவை 40 ஆவது எதிரி ராமர் வெட்டினார். இறந்து போன செல்லதுரையை, 5 ஆவது எதிரி மணிகண்டன் வெட்டினார். சேவகமூர்த்தியை 6ஆவது எதிரி மணிவாசகம் வெட்டினார். உபதலைவர் மூக்கன் பஸ்ஸிலிருந்து இறங்கி கிழக்கு முகமாக ஓடினார். 4ஆவது எதிரி ஜோதி, அவரை வெட்டினார். பஸ்ஸிலிருந்து இறங்கி பூபதி மேற்கு முகமாக ஓடினார். அவரை 3ஆவது எதிரி பொன்னைய்யா வெட்டினார்.
நான் கீழே இறங்கி ஓட முயற்சித்தேன். சின்னய்யாவும், குமாரும் பஸ்ஸில் உள்ள வேறு ஒரு வாசல்படியாக வெளியே வர முயற்சித்தார்கள். சின்னய்யாவை 16ஆவது எதிரி கரந்தமலை, வலது கன்னத்தில் பட்டாக்கத்தியால் வெட்டினார். குமாரை, தமிழன் 19ஆவது எதிரி, மற்றும் 29ஆவது எதிரி அசோகன் ஆகியோர்கள் வெட்டினார்கள். தலையில்லாத முருகேசனின் பிணம், ரோட்டில் கிடந்தது மற்றும் வெட்டுப்பட்டவர்கள் கீழே விழுந்து கிடந்தார்கள். நான் மேலவளவு காலனிக்கு பயந்துகொண்டு ஓடிப்போய்விட்டேன். காலனி மக்களிடம் நடந்த விஷயத்தை சொன்னேன். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் மூவரும் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று சொன்னதின் பேரில் மூன்று சைக்கிளில் மேலூர் ஆஸ்பத்திரிக்கு குறுக்கு வழியில் சென்றோம். மேலூர் ஆஸ்பத்திரியில் எங்களுக்கு முதல் உதவி அளித்தார்கள்.
மேலூர் மருத்துவமனையில் ஒரு காரில் எங்களை மதுரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள். மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளித்தார்கள். அரைமணி நேரம் கழித்து மேலூர் ஆய்வாளர் மருத்துவமனைக்கு வந்தார். அவர் நான் சொன்னதை எழுதிக் கொண்டார். அதை அவர் என்னிடம் படித்துக் காண்பித்தார். நான் அதில் கையெழுத்துப் போட்டேன். அ.சா.ஆ.1 நான் கொடுத்த ஸ்டேட்மெண்ட் முதல் எதிரி அழகர்சாமி என்னிடம் காட்டப்படும் பட்டாக்கத்தி போன்ற பட்டாக்கத்தியை துரைபாண்டி வைத்திருந்தார். 1ஆம் தேதி டி.எஸ்.பி. அவர்கள் என்னை விசாரித்தார்கள். ஒருவாரம் நான் உள்நோயாளியாக இருந்தேன். கருப்பன், கல்யாணி, மாயவர், பெரியவர், ஆகிய நான்கு பேரும் இந்த சம்பவத்தை பார்த்தார்கள். அவர்களையும் எதிரிகள் மிரட்டியதால் அவர்கள் அருகில் வரவில்லை.
1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :
மேலவளவு காலனியில் சுமார் 400 குடியிருப்பு வீடுகள் உள்ளன. எங்கள் காலனியில் உள்ள எங்கள் இன மக்களுக்கு விவசாய நிலங்கள் உள்ளன. எங்கள் ஊரிலிருந்து வேலை விஷயமாக மேலூர் மற்றும் ஊர்களுக்கு தினந்தோறும் சிலர் செல்வார்கள். மூன்று முறை எலக்ஷன் அறிவித்து நடத்தாமல் மூன்றாவது முறைதான் எங்கள் இன முருகேசன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனது புகாரிலோ போலிஸ் விசாரணையிலோ முருகேசன் நாமினேசன் தாக்கல் செய்து அன்று இரவே மூன்று வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அந்த மூன்று வீடுகளில் சொந்தக்காரர்களின் பெயர்களை குறிப்பிட்டு சொல்லவில்லையென்று சொன்னால் சரிதான். எதிரிகள் 40 பேர்களும் எங்கள் ஊரில் குடியிருப்பதால் அவர்களை நான் பார்த்திருப்பதினால், அவர்களை எனக்கு தெரியும். ஒரு சில எதிரிகளின் தகப்பனார்களின் பெயர்கள் எனக்கு தெரியும். ஒரு சில எதிரிகளின் தகப்பனார்களின் பெயர்கள் எனக்கு தெரியாது. பஸ் நின்று நாங்கள் வெளியே ஓடும்வரை 5, 6 நிமிடங்களில் சம்பவம் முடிந்துவிட்டது. பஸ்ஸுக்குள் நின்று கொண்டேதான் அந்த 5, 6 நிமிடங்களில் நான் சம்பவத்தை பார்த்தேன். நான் வெட்டு வாங்கிய பிறகு கொஞ்ச நேரம் நின்ற பிறகுதான் ஓடினேன். எங்கள் ஊர்க்காரர்கள் தவிர வெளியூர்காரர்களும் சம்பவம் நடக்கும்போது இருந்தார்கள். சம்பவம் நடக்கும்போது எந்த வாகனமும் போகவில்லை. அந்த கட்டத்தில் எனக்கு தெரியாத நபர்கள் யாரும் இல்லை.
நான் ஊருக்குப் போய் சேரும்போது பொது இடத்தில் சின்னைய்யா, குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பொது இடத்திலிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் பெண்களும் இருந்தார்கள். அந்தக் கட்டத்தில் இறந்தவர்களின் மனைவிகளோ, குழந்தைகளோ யாரும் இல்லை. ஊருக்கு சென்ற பிறகு 5, 6 நிமிடத்தில் நான் ஆஸ்பத்திரிக்கு கிளம்பிவிட்டேன். ஊரிலிருந்து ஊர்க்காரர்கள் மூன்று சைக்கிளில் எங்கள் மூவரையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள். அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவர் எங்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்துதான் பார்த்தார். மருத்துவர் எங்கள் மூவரையும் காயம் எப்படி ஆனது என்று தனித்தனியாக கேட்டார். காயம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி மொத்தமாக சொன்னோம். ஒரே மருத்துவர்தான் மதுரை ஆஸ்பத்திரியில் எங்கள் மூவரையும் பார்த்தார். மதுரை ஆஸ்பத்திரியில் மருத்துவர் என்னை கேட்டார். நான் சொன்னேன். எங்கள் ஊரிலிருந்து மேலூர் ஆஸ்பத்திரிக்கு போவதற்கு முன்பு எங்கள் ஊர் பீட் காவலர் இரண்டு பேர்களிடம் நடந்த சம்பவத்தை சொன்னேன்.
கலெக்டர் ஆபிசுக்கு போவதற்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுக்க வேண்டுமென்று எண்ணம் இருந்தது. அன்று திங்கட்கிழமை பொதுமக்கள் மனு கொடுக்கும் நாள், கலெக்டர் இல்லாத காரணத்தினால்தான் மனு ஒன்றும் கொடுக்காமல் திரும்பி வந்தேன். வீடு தீப்பற்றி எரிந்தது குறித்து முருகேசன் ஒரு மனுவை பி.ஏ.விடம் கொடுத்தார். ஆய்வாளரிடம் நான் புகார் கொடுத்தபோது அந்த இடத்தில் சின்னய்யாவும், குமாரும் இருந்தார்கள். 30.6.1997 ஆம் தேதியன்று, காவல் துறை துணை கண்காணிப்பாளர் அவர்களுடைய வாகனத்தில் மேலூருக்கு கூட்டி வந்தார்கள் என்று சொன்னால் அது சரியல்ல. சா.பொ.1அய் முதல் எதிரி பயன்படுத்தினார் என்று நான் பொய் சொல்கிறேன் என்றால் சரியல்ல. பஸ்ஸிலே நானே பிரயாணம் செய்யவில்லை என்று சொன்னால் அது சரியல்ல.
2, 3, 8, 11, 16, 18, 20இலிருந்து 23ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :
ஆய்வாளர் என்னை விசாரித்தார். என்னிடமிருந்து பெற்ற வாக்குமூலத்தை எனக்கு படித்துக்காட்டி என்னிடம் கையெழுத்து பெற்றார். எல்லா எதிரிகளின் பெயர்களும் எனக்கு தெரியும். அழகர்சாமியின் மருமகன் குணசேகரன் எங்கள் இனத்தை சேர்ந்த செல்வராஜ் ஆகிய இருவரும் என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று மிரட்டி, ஒரு அம்மா கேட்பார்கள் அதற்கு ஆமாம் என்று பதில் சொல்லுங்கள் என்று சொன்னதின் பேரில் அந்த அம்மா என்னைக் கேட்க "ஆமாம்' என்று சொல்லி கையெழுத்துப் போட்டேன். அதை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள். ஆபிசரிடம் என்னை மிரட்டியவிஷயத்தை நான் சொல்லவில்லை. எதிரிகள் தரப்பு சான்றாவணம் 1–தான் ரிட் பெட்டிசன் நெம்பர் 273/99இல் சாட்சி. கிருஷ்ணனின் அபிடவிட் (ஜெராக்ஸ் சான்றிட்ட நகல்) அரசு வழக்கறிஞர் ஆட்சேபனைக்குட்பட்டு மேற்படி ஆவணம் குறியீடு கொடுக்கப்பட்டது. என்னிடம் மிரட்டி கையெழுத்து வாங்கியது குறித்து இன்றுதான் முதன் முதலாக சொல்கிறேன்.
அபிடவிட்டில் பொய்யான குற்றவாளிகள் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், சி.பி.அய். விசாரணை வேண்டுமென்றும் நான் அபிடவிட் தாக்கல் செய்துள்ளேன் என்றால் அது சரியல்ல. என்னை பலாத்காரமாக கூட்டிக்கொண்டு போய் மிரட்டி என்னிடம் கையெழுத்து வாங்கப்பட்டது என்று சொன்னால் சரிதான். எங்கள் ஊரிலிருந்து மேலூர் ஆஸ்பத்திரிக்கு மாலை 4.30 மணியளவில் போய் சேர்ந்தேன். எங்கள் ஊரில் இருந்த போலிசிடம் கும்பலாய் வந்த 30 பேர்கள் வெட்டினார்கள் என்று சொன்னேன். நான் கொடுத்த ரிப்போர்ட் (அ.சா.ஆ.1) சொன்ன நேரத்தில் சொன்ன தேதியில் கொடுக் கப்படவில்லை என்று சொன்னால் அது சரியல்ல. எங்கள் சங்கத் தலைவர்களின் ஆலோ சனையின்பேரில் அ.சா.ஆ. 1 பிற்பாடு தயார் செய்யப்பட்டது என்று சொன்னால் அது சரியல்ல. மதுரை கலெக்டர் அலவலகத்தின் மனோகரன் என்னைப் பார்த்து எப்போது ஊருக்குப் போகிறீர்கள் என்று என்னை கேட்டது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
7, 9, 12, முதல் 15, 17, 24, 26 மற்றும் 28ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :
மனோகரன் நித்தியானந்தத்திடம் என்ன பேசினார் என்ற விபரம் எனக்கு தெரியும். போலிசார் என்னிடம் புகார் பெற்றபோது நித்தியானந்தம் பேசி விபரத்தை சொல்லி உள்ளேன் என்றால் சரிதான். மனோகரன் அன்று எங்கள் நடவடிக்கைகளை கண்காணிக்க வந்தான் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. முருகேசனுக்கு குத்து விழுந்தவுடன் பஸ்ஸில் இருந்த அனைவரும் பீதி அடைந்து ஓடினார்கள். நான் பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடவில்லை. நான் ஊருக்கு போவதற்கு முன்னால் சின்னைய்யாவும், குமாரும் ஊரில் இருந்தார்கள். நான் ஊருக்குள் போவதற்கு முன்னாலேயே இந்த சம்பவம் பற்றி தெரிந்துள்ளது. அப்போது அண்ணாதுரை காவல் உதவி ஆய்வாளர் 7 எழுதாத பேப்பரில் என்னிடம் கையெழுத்து வாங்கிச் சென்றார் என்றால் அது சரியல்ல என்று மூன்று பேர்களுக்கும் காவல் நிலையம் போய் புகார் கொடுக்க வேண்டுமென்று தோன்றவில்லை.
நாங்கள் அப்பொழுது மிரண்டு போய் குழப்பத்தில் இருந்தோம். நான் சம்பவத்தை பார்க்காததால்தான் நான் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கவில்லையென்று சொன்னால் அது சரியல்ல. வேறு சம்பவத்தில் எனக்கு ஏற்பட்ட காயத்தை இந்த சம்பவத்தில் எனக்கு காயம் ஏற்பட்டதாக 7 வெற்றுப் பேப்பரில் என்னிடம் போலிசார் கையொப்பம் பெற்று, அம்பேத்கர் சங்கத் தலைவர்கள் கூடி அந்தப் பகுதியில் உள்ள முக்கியமான அம்பலக்காரர்கள் எல்லோருடைய பேரிலும் இந்த வழக்கைப் பொய்யாக ஜோடித்துள்ளேன் என்றால் சரியல்ல. விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து என்னையும் என்னுடன் சேர்ந்த 12 சாட்சிகளையும் கொண்டுபோய் அடைத்து வைத்து, அவர்கள் சொன்ன தின்பேரில் நான் சாட்சி சொல்கிறேன் என்றால் சரியல்ல. அந்த இயக்கத்திற்கு பயந்துதான் நான் பொய் சாட்சி சொல்கிறேன் என்றால் சரியல்ல.
29 முதல் 39 வரை எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை : நான் சொன்ன மாதிரி சொன்ன இடத்தில், சொன்ன எதிரிகளால், நான் சொன்ன நேரத்தில் எனக்கு காயங்கள் ஏற்படவில்லையென்று சொன்னால் அது சரியல்ல. நான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவர் மீது குற்றம் சாட்டுபவர் என்று சொன்னால் சரியல்ல.
- சாட்சிகள் தொடரும்
- சு. சத்தியச்சந்திரன்
(இக்கட்டுரை தலித் முரசு டிசம்பர் 2009 இதழில் வெளியானது)