தீண்டாதவர்களின் பரிதாபமான நிலையைக்கண்டு மனம் வருந்துவோர் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது “தீண்டாதவர்களுக்காக நாம் ஏதேனும் செய்தாக வேண்டும்” என்று ஓலமிடுவதை வழக்கமாகக் கேட்கிறோம். இந்தப் பிரச்சினையில் அக்கறையுள்ள எவரும் ‘தீண்டத்தக்க இந்துவை மாற்றுவதற்கு நாம் ஏதாவது செய்வோம்’ என்று சொல்லுவதைக் கேட்பது அரிது. மீட்கப்படவேண்டியவர் தீண்டாதவர்தான் என்றே எப்போதும் கருதப்படுகிறது. நற்பணிக் குழு ஒன்றை அனுப்புவதானால் அதைத் தீண்டாதவர்களுக்குத்தான் அனுப்பவேண்டும்.

ambedkar 452தீண்டாதவர்களைத் திருத்திவிட முடிந்தால் தீண்டாமை மறைந்துபோகும். தீண்டத்தக்கவருக்கு எதுவுமே செய்யவேண்டியதில்லை. அவர் மனத்திலும், நடத்தையிலும், ஒழுக்கத்திலும் நலமாயிருக்கிறார். அவர் ஆரோக்கியமாயிருக்கிறார், அவரிடம் எந்தக் கேடும் இல்லை. இவ்வாறு கருதுவது சரிதானா? சரியோ, தவறோ, இந்துக்கள் இந்தக் கருத்தைத்தான் விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். தீண்டாதவர்களின் பிரச்சினைக்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று தங்களைத் தாங்களே திருப்தி செய்து கொள்ள உதவுகிறது என்ற பெரிய சிறப்பு இந்தக் கருத்துக்கு உள்ளது.

இந்த மனப்பான்மை எவ்வளவு இயற்கையானது என்பது, யூதர்களிடம் ‘ஜெண்டைல்’ என்று அழைக்கப்படும் யூதரல்லாதவர்கள் காட்டும் மனப்பான்மையிலிருந்து தெளிவாகும். இந்துக்களைப் போலவே ஜெண்டைல்களும் யூதர் பிரச்சினை என்பது சாராம்சத்தில் ஒரு ஜெண்டைல் பிரச்சினை என்பதை ஒப்புக்கொள்வதில்லை. இந்த விஷயம் பற்றி லூயி கூல்டிங் கூறும் கருத்துக்கள் இதைத் தெளிவாக்குகின்றன. யூதர் பிரச்சினை என்பது சாராம்சத்தில் ஒரு ஜெண்டைல் பிரச்சினை என்று காட்டுவதற்கு அவர் பின்வருமாறு கூறுகிறார்:

“யூதர் பிரச்சினை சாராம்சத்தில் ஒரு ஜெண்டைல் பிரச்சினைதான் என்று நான் எந்த வகையில் கருதுகிறேன் என்பதைக் காட்டுவதற்கு ஓர் எளிமையான உதாரணத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். எனக்கு நெருங்கிய பழக்கம் உள்ள ஒரு பிராணி கலப்படமான வம்சத்தைச் சேர்ந்தது. ஜான் ஸ்மித்துக்கு அது இரு கண்மணிகளைப் போன்றது ’பேடி’க்கு ஸ்காட்ச் டெரியர் நாய்களைப் பிடிக்காது. ‘பேடி’க்கு 20 கெஜ தூரத்துக்குள் அந்த இன நாய் ஒன்று போனால் போதும், அது குரைத்துத் தள்ளும்: சவால்களும் வசைமொழிகளும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் காதைச் செவிடுபடுத்திவிடும். இந்தப் பழக்கத்தில் ஜான் ஸ்மித்துக்குச் சம்மதமில்லை.

எனவே இதைக் கட்டுப்படுத்துவதற்கு அவர் தம்மால் இயன்ற அளவு முயலுகிறார் ‘பேடி’யின் வெறுப்புக்கு உள்ளாகும் பிராணிகள் பெரும்பாலும் சாதுவானவை, தாங்கள் முதலில் வாயைத் திறக்காதவை என்பதால் அவருக்கு இதில் அக்கறை அதிகம். ‘பேடி’யிடம் அவர் மிகுந்த பிரியம் வைத்துள்ள போதிலும், அவரும் என்னைப் போலவே ‘பேடி’யின் இந்த ஒழுங்கற்ற நடத்தைக்குக் காரணம் அதனிடம் ஓரளவுக்கு இருக்கும் முதல் பாவம் தான் என்று கருதுகிறார். இந்த விஷயம் ஒரு ஸ்காட்ச் டெரியர் பிரச்சினை என்றோ, மாலைக் காற்றில் அமைதியாக மோப்பம் பிடித்துக் கொண்டிருக்கும் அண்டை நாயை ’பேடி’ தாக்கினால், அண்டை நாய் அங்கு இருப்பதன் காரணமாக அந்தத் தாக்குதலைத் தூண்டிவிட்டது என்று அதன்மேல் தான் குற்றம் கூறவேண்டும் என்றோ, இதுவரை யாரும் எங்களிடம் சொல்லவில்லை.”

இதில் யூதர் பிரச்சினைக்கும் தீண்டாதோர் பிரச்சினைக்கும் இடையேமுழுமையான உவமை அமைந்துள்ளது. ஸ்காட்ச் டெரியருக்கு ‘பேடி’ எப்படியோ, அப்படித்தான் யூதருக்கு ஜெண்டைலும், தீண்டாதோருக்கு இந்துவும் இருக்கின்றனர். ஆனால் ஒரு விஷயத்தில் யூதர் பிரச்சினை தீண்டாதோர் பிரச்சினையிலிருந்து வேறுபடுகிறது. யூதர்களும் ஜெண்டைல்களும் எதிர் எதிரான கோட்பாடுகளால் பிரிவுபட்டுள்ளனர் யூதர்களின் மதக்கோட்பாடு ஜெண்டைல்களின் கோட்பாடுகளுக்கு எதிரானது. இந்துக்களும் தீண்டாதோரும் இவ்வாறு முரணான கோட்பாடுகளால் பிரிக்கப்படவில்லை. இவர்களின் சமயக் கோட்பாடு பொதுவானது; ஒரே மாதிரியான சமயப் பிரிவுகளையே இவர்கள் பின்பற்றுகிறார்கள்.

இரண்டாவதாக ஒரு விளக்கம், யூதர்கள் ஜெண்டைல்களிடமிருந்து தனிப்பட்டு இருக்கவே விரும்புகிறார்கள் என்பதாகும்.முதல் விளக்கம், குறுகிய இன்வெறி மனப்பான்மையைச் சுட்டிக்காட்டுகிறது; இரண்டாம் விளக்கம், வரலாற்று உண்மையை அடிப்படையாகக் கொண்டது. கடந்த காலத்தின் ஜெண்டைல்கள் யூதர்களைத் தங்களுடன் ஒன்றிணைத்துக் கொள்வதற்குப் பல முயற்சிகள் செய்தனர். ஆனால் யூதர்கள் இவற்றை எதிர்த்து நின்றுள்ளனர். இதற்கு இரண்டு உதாரணங்களைக் குறிப்பிடலாம்.

முதல் உதாரணம் நெப்போலியனின் ஆட்சியில் நடந்தது. ‘மனிதனின் உரிமைகள்’ யூதர்களுக்கும் உண்டு என்ற பிரகடனத்திற்கு பிரான்சின் தேசிய சபை சம்மதம் அளித்தபின், அஸ்ஸாஸின் வர்த்தக சபையினரும் சமயப் பிற்போக்குவாதிகளும் யூதர் பிரச்சினையை மீண்டும் எழுப்பினார்கள். இதை யூதர்களின் பரிசீலனைக்கே விட்டுவிட நெப்போலியன் முடிவுசெய்தார். அவர், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து யூதப் பிரமுகர்களின் சபை ஒன்றைக் கூட்டினார். யூதர்களைப் பெரும்பான்மை மக்களுடன் ஒன்றிக் கலக்கச் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார், எனவே யூத சமயத்தின் கொள்கைகள், நாட்டின் குடிமக்களாயிருப்பதற்குரிய நிபந்தனைகளுக்கு இணக்கமானவையா என்பது பற்றி இந்தச் சபையின் கருத்தை அறிய அவர் விரும்பினார். 111 பிரதிநிதிகளைக் கொண்ட இந்தச் சபை பாரிஸ் நகர மன்றத்தில் 1806 ஜுலை 26-ஆம் தேதி கூடியது. பன்னிரண்டு வினாக்களுக்கு விடை அளிக்குமாறு இந்தச் சபையிடம் கோரப்பட்டது.

இந்த வினாக்கள் முக்கியமாக யூத தேசபக்திக்கான சாத்தியக்கூறு, யூதர்களும் யூதரல்லாதவர்களும் கலப்புமணம் செய்துகொள்ள அனுமதி உண்டா என்பது, கடும் வட்டி வாங்குவது சட்டபூர்வமானதா என்பது முதலான விஷயங்கள் பற்றிக் கேட்கப்பட்டன. இந்தச் சபை அளித்த பதில்கள் நெப்போலியனுக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தன. இவற்றை ஒரு சட்டமன்றத்தின் ஆணைகளாக வெளியிட வேண்டுமென்று அவர் விரும்பினார். இதர்காகப் பண்டைக்கால ஜெருசலமில் இருந்த ‘சானிட்ரிம்’ என்ற உயர் சபையின் மாதிரியில் அவர் ஒரு சபையைக் கூட்டினார். பிரான்ஸ், ஜெர்மணி, ஹாலந்து, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 71 பிரதிநிதிகளைக் கொண்ட இந்த ‘சானிட்ரிம்’ 1807 பிப்ரவரி 9-ஆம் தேதி ஸ்ட்ராஸ்புர்க் நகரைச் சேர்ந்த ஸின்ஜைம் என்ற ‘ரேபை’ (யூதமத அறிஞர்) தலைமையில் கூடியது. இந்தச் சபை ஒரு சாசனத்தை வெளியிட்டது.

யூதர்கள் பிரான்சைத் தங்கள் தாய்நாடாகவும், அந்நாட்டின் குடிமக்களைத் தங்கள் சகோதரர்களாகவும் கருதவேண்டும் என்றும், அந்நாட்டின் மொழியைப் பேசவேண்டும் என்றும் இந்தச் சாசனம் கூறியது. யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்களுக்குள் கலப்பு மணம் செய்து கொள்வதைச் சகித்துக்கொள்ளவேண்டும் என்றும், ஆனால் இத்தகைய கலப்பு மணங்களுக்கு யூதர்களின் திருச்சபையான ‘ஸினகாக்’ ஒப்புதல் அளிக்காது என்றும் இந்தச் சாசனம் கூறியது. யூதர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்குமிடையே கலப்பு மணங்களை யூதர்கள் ஏற்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இவற்றைச் சகித்துக்கொள்ள மட்டுமே யூதர்கள் இணங்கினார்கள்.

இரண்டாம் உதாரணமாகக் குறிப்பிடத்தக்கது, 1795 –இல் படேவிய குடியரசு அமைந்தபோது என்ன நடந்தது என்பதாகும். யூதர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் என்று எழுச்சி மிக்க யூதர்கள் சிலர் வற்புறுத்தினார்கள். ஆனால் இவர்கள் இவ்வாறு குடியுரிமையை அதிக அளவில் பெறுவதற்குச் செய்த முயற்சியை ஆம்ஸ்டர்டாம் யூத சமூகத் தலைவர்களே எதிர்த்தார்கள். சமமான குடியுரிமைகள் பெறுவது யூத சமயத்தைப் பாதுகாப்பதற்கு இடையூறாகும் என்று அவர்கள் அஞ்சினார்கள். தங்கள் சகோதர யூதர்கள் தங்கள் சமயத்தின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து குடியுரிமையைக் கைவிடுவதாக அவர்கள் அறிவித்தார்கள். யூதர்கள், சமுதாயத்தின் உறுப்பினர்களாக வாழ்வதைவிட அன்னியர்களாக வாழ்வதையே விரும்பினார்கள் என்பதையே இது காட்டுகிறது.

ஜெண்டைல்கள் கூறும் விளக்கங்களின் மதிப்பு என்னவாயிருந்தாலும், யூதர்கள் விஷயத்தில் தங்களுடைய இயற்கைக்கு முரணான மனப்போக்கிற்குக் காரணம் காட்ட வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதையாவது உணர்ந்திருந்தார்கள். ஆனால் இந்துக்கள், தீண்டாதவர்களைத் தாங்கள் நடத்தும் விதத்தை நியாயப்படுத்தும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதை ஒருபோதும் உணரவில்லை இந்துக்களுக்கு உள்ள பொறுப்பு மிகவும் அதிகம். ஏனென்றால் தீண்டாமையை நியாயப்படித்திக் கூறுவதற்குப் பொருத்தமான காரணம் எதுவும் இல்லை. தீண்டாதவர் தொழுநோயாளி என்றோ, ஒழுக்கத்தில் இழிந்தவர் என்றோ காரணங்கூறி அவரை விலக்கிவைக்க வேண்டும் என்று இந்து கூறமுடியாது. தமக்கும் தீண்டாதவருக்கும் இடையே சமய முரண்பாடு இட்டு நிரப்ப முடியாத பெரிய இடை வெளியாக உள்ளது என்றும் அவை கூறமுடியாது. தீண்டாதவர்தான் இந்துக்களுடன் இணைந்து வாழ விரும்பவில்லை என்றும் அவர் காரணம் கூற முடியாது.

தீண்டாதவர்கள் விஷயம் அப்படியில்லை. அவர்களும் வேறொரு பொருளில் மற்றவர்களிடமிருந்து தனிமையாக உள்ள வெளிப்புற மக்களாக உள்ளனர். ஆனால், அவர்கள் தனியாக இருப்பது, பிரித்து வைக்கப்பட்டிருப்பது, அவர்களுடைய விருப்பத்தால் அல்ல. கலந்து வாழ விரும்பவில்லை என்பதற்காக அவர்கள் தண்டிக்கப்படவில்லை. இந்துக்களுடன் ஒன்றாகச் சேர்ந்து இருக்கவேண்டும் என்று விரும்புவதனால் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். வேறு விதமாகச் சொன்னால், யூதர்களின் பிரச்சினையும் தீண்டாதோரின் பிரச்சினையும் இந்தப் பிரச்சினைகள் மற்றவர்களால் உருவாக்கப்பட்டவை என்ற அளவில் ஒரே மாதிரியானவை என்றாலும் – சாராம்சத்தில் வெவ்வேறு விதமானவை. யூதர்கள் தாமாகவே விரும்பித் தனித்து வாழ்கிறார்கள். தீண்டாதோர் கட்டாயமாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். தீண்டாமை சுமத்தப்பட்டுள்ளது, தெரிந்தெடுக்கப்பட்டதல்ல.

(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 9, இயல் 1)