டிசம்பர் 3, 1984. கதிரவன் உதிப்பதற்கு இன்னும் சிலமணி நேரங்கள் இருக்கின்றன. நல்ல பனி மூட்டம் – ஆழ்ந்த உறக்கத்திற்குத் தோதுவாக. போபால் நகரின் குடிசைப் பகுதியிலுள்ள மக்கள் திடீரென விழித்தெழுகின்றனர். மிளகாய் வற்றல் எரிவது போல நாற்றம் நாசியில் நுழைந்து உடலைத் தாக்குகிறது. அவர்களுக்கு விஷயம் புரியவில்லை. எனினும், ஏதோ பேராபத்து நெருங்குகிறது என்பதை அவர்களது உள்ளுணர்வு கூற, குழந்தைகளை வாரி அணைத்தபடி தாய்மார்கள், அவர்களது கணவர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என திசையறியாது எங்கோ ஓடுகிறார்கள். படுக்கையிலிருந்து எழ முடியாதவர்கள் ஏறத்தாழ ஒரு நொடியில் மரணத்தைத் தழுவுகின்றனர். தப்பியோடி வந்தவர்கள் பலர் தெருக்களில் ஈக்களைப் போல விழுந்து மடிகின்றனர். இன்னும் பலர் மருத்துவமனையின் வாசலைத் தட்டியதுடன் சரி.

போபாலிலிருந்த (இன்னும் இருக்கிறது) "யூனியன் கார்பைட்' தொழிற்சாலையிலிருந்து கசிந்து வந்த 27 டன் மெதில் அய்சோசையனேட் வாயுவுக்கு – "செவின்' என்னும் பூச்சிக்கொல்லியைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சையனைடைவிட 500 மடங்கு நச்சுத்தன்மையுள்ள அந்த ரசாயன வாயுக்கு – 72 மணி நேரத்தில் பலியானவர்கள் ஏறத்தாழ 8000 பேர். அதன் பிறகு அந்த நச்சு வாயுவால் நுரையீரல், இதயம், மூளை ஆகியவற்றுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பால் ஏறத்தாழ 15,000 பேர் மாண்டனர்.

அச்சமயம் கர்ப்பிணிகளாக இருந்தவர்களில் மூன்றிரண்டு பகுதியினருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. பிள்ளைப்பேறுக்கு ஆசைப்பட்டவர்களும் முழு கர்ப்பிணிகளும் பிரசவித்தவை – கால், கையில்லாத, பார்வையில்லாத, உடல் உறுப்புகள் திரிபடைந்த "குழந்தைகள்'தான். இன்றும்கூட போபால் நகரில் பிறக்கும் ஒவ்வொரு 25 குழந்தைகளிலொன்று தலை சிறுத்தோ, இடுப்பிற்குக் கீழ் ஏதுமற்ற சதைப் பிண்டமாகவோதான் இருக்கிறது. "அம்னஸ்ட்டி இன்டர்நேஷன'லின் மதிப்பீட்டின்படி, அந்த வாயுவால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் கடுமையான நோய்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அந்தத் தொழிற்சாலையின் கழிவுகள் புதைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகில் உள்ள நீர்நிலைகளில் உள்ள நீரைப் பயன்படுத்தியதால், மேலும் 30 ஆயிரம் பேர் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மத்தியப் பிரதேச அரசாங்கமோ, போபால் உள்ளூராட்சி அமைப்புகளோ, அந்தக் கழிவுகள் புதைக்கப்பட்ட இடங்களைக் கண்டறிந்து அவற்றைத் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவில்லை. எனவே, இன்றும்கூட அங்கு ஆடுமாடுகள் மேய்கின்றன; குடிசைப் பகுதி குழந்தைகள் விளையாடுகின்றனர். "போபால் மெடிகல் அப்பீல்' என்னும் தொண்டு நிறுவனம், 1984இல் அந்தப் பேரழிவு நேர்ந்தபோது சிறுவர்களாக இருந்தவர்கள், தற்சமயம் மூளை, தைராய்ட், நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் குற்றுயிரும் குலையுமாக நாட்களை ஓட்டி வருகிறார்கள் எனக் கூறுகிறது.

போபாலில் இருந்த யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட்டின் தாய் நிறுவனமாக இருந்தது, அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் இருந்த "யூனியன் கார்பைட்'. அந்தத் தாய் நிறுவனத்துடன் இந்திய அரசாங்கம் "நீதிமன்றத்துக்கு வெளியே' செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 47 கோடி டாலர் அந்த நிறுவனம் தர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், இறந்து போனவர்கள், நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை முறையே 3810,1,02,000 என்னும் கணக்கின்படியே அந்தத் தொகை தீர்மானிக்கப்பட்டது. அதாவது இறந்து போனவர்களின் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சராசரியாக வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் மிக அதிபட்சம் 1000 அமெரிக்க டாலராகும். அதாவது கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அவர் நாளொன்றுக்கு 11 சென்ட் பெற்று வந்திருக்கிறார் (அமெரிக்க டாலரின் இன்றைய மதிப்பு ரூ.47க்கும் குறைவு; நூறு சென்ட் சேர்ந்தால் ஒரு டாலர்).

குறைந்தபட்சம், அமெரிக்க நீதிமன்றங்கள் அந்த நாட்டிலுள்ள ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலை மாசுகளால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு வழங்கும் இழப்பீட்டு விகிதத்தைக் கருத்தில் கொண்டாலும்கூட, யூனியன் கார்பைட் போபாலில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தது 10 பில்லியன் டாலராவது கொடுத்திருக்க வேண்டும். இந்தத் தொகையும்கூட, இறந்துபோன, பாதிக்கப்பட்ட, தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறவர்களுக்குப் போதவே போதாது.

யூனியன் கார்பைட் நிறுவனத்தைப் பற்றிய ஒரு தகவலை அமெரிக்காவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த the bublic citizen என்னும் பத்திரிகையின் 1986 அக்டோபர் இதழில் மார்க் டி. கிராஸ்மன் என்பவர் எழுதிய கட்டுரை வெளிப்படுத்தியது. அதாவது, மேற்கு வர்ஜீனியாவிலிருந்த யூனியன் கார்பைட் நிறுவனத்திற்குச் சொந்தமான ட்ரக் வண்டியொன்று, அங்கிருந்த தொழிற்சாலையிலிருந்து வாயுக் கசிவு ஏற்படுகிறதா என்பதைக் கண்டறிய ஒவ்வொரு நாளும் நான்கு முறை ரோந்து வரும்; அந்த வண்டியிலுள்ள தொழிலாளர்களின் வேலை, அசாதாரணமான மணம் காற்றில் வருகிறதா என்பதை முகர்ந்தறிவதுதான். ஒவ்வொரு ரோந்தின் போதும் அவர்கள் பத்து முறை மேலும் விரிவான ஆய்வுகளைச் செய்வர். அதாவது வண்டியை நிறுத்திவிட்டு ஆழமாக மூச்சு இழுப்பர். மனிதர்களைச் காட்டிலும் அதிக நுண்ணுணர்வுடன், நுட்பமாக வாயுக் கசிவுகளைக் கண்டறியும் கருவிகளை, அறிவியல் கருவிகள் செய்யும் தொழிற்கூடங்கள் அப்போதும் தயாரித்து வந்தன. ஆனால், யூனியன் கார்பைட் நிறுவனமோ தொழிலாளிகளை மோப்ப நாய்களாகப் பயன்படுத்தியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சுரங்கத் தொழிலாளிகள், சுரங்கங்களில் நச்சு வாயு இருக்கிறதா என்பதைக் கண்டறிய, கூண்டுகளில் அடைக்கப்பட்ட குருவிகளுடன் குழிக்குள் இறங்குவார்களாம். குருவிகள் செத்தால், அங்கே நச்சு வாயு இருக்கிறது என்று அர்த்தம்!

அமெரிக்கத் தொழிலாளிகளையே இப்படி மனிதக் குருவிகளாக வைத்திருந்த யூனியன் கார்பைட், மூன்றாம் உலக சேரித் தொழிலாளிகளான போபால் ஏழைகள் மீது எத்தகைய அக்கறை கொண்டிருந்திருக்கும் என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல. அதாவது 1986 டிசம்பர் 3 கறுப்பு விடிகாலையில் போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில், நச்சு வாயு கசிவைத் தடுப்பதற்காக வைத்திருந்த ஆறு தடுப்பு ஏற்பாடுகள் ஒன்றுகூட வேலை செய்யவில்லை.

யூனியன் கார்பைட் நிறுவனத்தை சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவிலுள்ள "டோவ் கெமிகல்' நிறுவனம் விலைக்கு வாங்கி அதைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆக, "சட்டப்படி' டோவ் கெமிகல்ஸ், யூனியன் கார்பைட் நிறுவனம் அல்ல என்றும் போபால் பேரழிவுக்குத் தான் பொறுப்பேற்க முடியாது என்றும் கூறுகிறது. ஆனால், அதற்குப் பொறுப்பு உள்ளதா, இல்லையா என்பதை இந்திய நீதிமன்றங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

போபால் பேரழிவுக்குக் காரணமான யூனியன் கார்பைட் நிர்வாக இயக்குநர் வாரன் ஆண்டெர்சன் மீதும் வேறு சில நிர்வாகிகள் மீதும் இந்திய நீதிமன்றங்களால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, கால் நூற்றாண்டு முடிந்துவிட்டது. அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள கிரிமினல் குற்றச்சாட்டுகள் திரும்பப் பெறப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்களின் சாவுக்குப் பொறுப்பேற்க வேண்டிய அந்தக் குற்றவாளிகளைக் கைது செய்து கொண்டு வர, இறையாண்மையுள்ள இந்தியாவால் இதுவரை முடியவில்லை. கிளிண்டனைச் சந்தித்த வாஜ்பாயியோ, ஜார்ஜ் புஷ்ஷையும், ஒபாமாவையும் சந்தித்த மன்மோகன் சிங்கோ, வாரன் ஆண்டெர்ஸனைத் தேடிக் கண்டுபிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒருபோதும் கோரியதில்லை.

இதற்கிடையே, யூனியன கார்பைட் நிறுவனத்தின் மீது இந்திய நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்வது தொடர்பாக, டோவ் கெமிகல் நிறுவனத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்குமிடையே பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடந்து கொண்டிருப்பதை "அம்னஸ்டி இன்டர்நேஷனல்' சுட்டிக் காட்டியுள்ளது. இதுதான் "ஹமாரா ஹிந்துஸ்தான்!'

- எஸ்.வி.ஆர்.

Pin It