யெவ்கெனி யெவ்டுஷெங்கோ (10.07.1933 - 01.04.2017)
ஒவ்வொரு நாட்டிலும் பிறக்கவும்
அயல்நாட்டுத்துறை அலுவலகங்கள்
அனைத்தையும்
பீதியில் ஆழ்த்துவதற்கு
அனைத்து நாடுகளுக்குமான
கடவுச்சீட்டைப் பெறவும் விரும்புகிறேன்
ஒவ்வொரு பெருங்கடலிலும் உள்ள
ஒவ்வொரு மீனாகவும்
தெருவோரப் பாதைகள்
அனைத்திலும் திரியும் நாயாகவும்
இருக்க விரும்புகிறேன்
எந்த விக்கிரகங்களுக்கும் முன்னால்
தலைவணங்கவோ
ஆர்த்தடாக்ஸ் திருச்சபையால்1
ஈர்க்கப்பட்ட ஹிப்பியாக இருக்கவோ
எனக்கு விருப்பமில்லை
ஆனால், பய்கால்2 ஏரியின் ஆழத்தில் குதித்து
தண்ணீரிலிருந்து
வேறெங்கேனும் மேலெழும்பி மூச்சுவிட விருப்பம்.
அந்த இடம்
ஏன் மிஸிஸிப்பியாக3 இருக்கக்கூடாது?
எனது நேசத்துக்குரிய பேரண்டத்தில்
தன்னந்தனியான காட்டுச் செடியாக
இருக்க விருப்பம்,
ஆனால் கண்ணாடியில்
தனது முகத்தையே முத்தமிடும்
நுண்ணிய நார்ஸிஸாக4 அல்ல.
கடவுளின் பல படைப்புகளில்
ஏதோவொன்றாக இருக்க விரும்புகிறேன்
அசிங்கமான கழுதைப்புலியாகவும்கூட
ஆனால் ஒருபோதும் கொடுங்கோலனாக அல்ல
கொடுங்கோலனின் பூனையாகக்கூட அல்ல.
எங்கும் எந்த இடத்திலும் மனிதனாகவே
மறுஅவதாரமெடுக்க விரும்புகிறேன்:
பாராகுவே நாட்டுச் சிறைகளில்
சித்திரவதைக்கு உள்ளானவனாக
ஹாங்காங் நகரக் குடிசைப் பகுதிகளிலுள்ள
வீடற்ற குழந்தையாக
பங்களாதேஷில் உயிருள்ள எலும்புக்கூடாக
திபெத்தில் புனித யாசகனாக
கேப்டவுனில்5 கறுப்பனாக.
ஆனால் ஒருபோதும்
ராம்போவின்6 படிமத்தில் அல்ல.
என்னால் வெறுக்கப்படுபவர்கள்
மாய்மாலவாதிகள் மட்டுமே,
கெட்டியான இனிப்புத் திரவத்தில்
ஊறவைக்கப்பட்ட
கழுதைப் புலிகள் அவர்கள்.
உலகிலுள்ள அனைத்து
அறுவை சிகிச்சை மருத்துவர்களின்கீழும்
படுக்க விரும்புகிறேன்
கூன் விழுந்தவனாய், பார்வையற்றவனாய்,
அனைத்து நோய்களாலும்
புண்களாலும் தழும்புகளாலும்
அவதிப்படுபவனாய்,
போரால் பாதிக்கப்பட்டவனாய்
சிகரெட் துண்டுகளை
அள்ளிப் போடுபவனாய்
இருக்க விரும்புகிறேன்
அசுத்தமான நுண்ணுயிரியாக
மேன்மையானவன் என்ற எண்ணம்
என்னுள் புகாமலிருப்பதற்காக
மேட்டுக்குடியினருடன் சேர்வதை
நான் விரும்பவில்லை
கோழைத்தனமான மந்தையுடன்
இணைவதையும்
அந்த மந்தையின் காவல் நாயாகவோ
அந்த மந்தையால் பாதுகாப்பளிக்கப்படும்
இடையனாகவோ இருப்பதையும்
விரும்பவில்லை.
மகிழ்ச்சியை விரும்புகிறேன்
ஆனால் மற்றவர்களின் மகிழ்ச்சியை
விலையாகக் கொடுத்து அல்ல
சுதந்திரத்தை விரும்புகிறேன்
ஆனால் சுதந்திரமற்றவர்களை
விலையாகக் கொடுத்து அல்ல.
உலகிலுள்ள எல்லாப் பெண்களையும்
நேசிக்க விரும்புகிறேன்
நானே ஒரு தடவையாவது
பெண்ணாக இருக்கவும் விரும்புகிறேன்
இயற்கை அன்னை ஆண்களுக்குக்
குறையன்றைக் கொடுத்துவிட்டாள்...
ஆண்களுக்கு அவள்
தாய்மையைக் கொடுத்திருந்தால்?
மாசுமருவற்ற குழந்தை
அவனது நெஞ்சுக்குக் கீழே அசையுமானால்
ஆண் ஒருவேளை அத்தனை
கொடூரமானவனாக இருக்கமாட்டான்.
மனிதனின் அன்றாட உணவாக
இருக்க விரும்புகிறேன்
சொல்லப் போனால்
துக்கம் அனுட்டிக்கும்
வியத்நாமியப் பெண்ணுக்குக்
கைப்பிடிச் சோறாக
நேப்பிள்ஸ் நகரத் தொழிலாளர்களின்
உணவு விடுதியில்
மலிவான மதுரசமாக
மனிதனின் அன்றாட உணவாக
அல்லது
வளையம் போல் நிலாவைச் சுற்றிவரும்
மிகச் சிறிய பாலாடைக்கட்டித் துண்டாக:
அவர்கள் என்னை உண்ணட்டும்
அவர்கள் என்னைப் பருகட்டும்
எனது சாவு மட்டுமே சிறிது பயன்படட்டும்.
எல்லாக் காலங்களையும்
சேர்ந்தவனாக இருக்க விரும்புகிறேன்
எத்தகைய சாமர்த்தியசாலி நான் என்று
வரலாறு அதிசயிக்கும் அளவுக்கு
அதைத் திகைக்க வைக்க விரும்புகிறேன்.
நெஃபெர்டிட்டியை7 ட்ரொய்காவில்8
உட்கார வைத்து
பூஷ்கினிடம் 9அழைத்துவர விரும்புகிறேன்
ஒரு கணத்தின் வெளியைப் பன்மடங்கு பெருக்கி
ஒரே நேரத்தில்
சைபீரிய மீனவனுடன் வோட்கா பருகவும்
ஹோமர், தாந்தே, ஷேக்ஸ்பியர்
ஆகியோருடன் அமர்ந்து
கோகோ-கோலாவைத் தவிர
வேறு எதனையேனும் அருந்தவும்
காங்கோவில் முரசுகளின் ஒலிக்கு ஆடவும்
ரெனோவில்10 வேலை நிறுத்தம் செய்யவும்
கோபாகபானா கடற்கரையில்11
பிரேஸிலியப் பையன்களுடனும்
தோல்ஸ்தாயுடனும்
பந்தைத் துரத்திச் செல்லவும் விரும்புகிறேன்.
ஒவ்வொரு மொழியையும்
பூமிக்கு அடியில் பாயும்
இரகசிய நீரோட்டங்களையும் அறியவும்
அனைத்து வேலைகளையும்
ஒரே நேரத்தில் செய்யவும் விரும்புகிறேன்
ஒரு யெவ்டுஷெங்கோ வெறும் கவிஞன்தான்.
இரண்டாவது யெவ்டுஷெங்கோ
தலைமறைவுப் போராளி, ஏதோ ஓரிடத்தில்
அது எந்த இடம் எனச் சொல்ல மாட்டேன்,
பாதுகாப்புக் காரணங்களுக்காக
மூன்றாவது யெவ்டுஷெங்கோ
பெர்க்ளி பல்கலைக்12 கழக மாணவன்
நான்காமவன், ஜாலியான ஜார்ஜியக் குடிகாரன்,
ஐந்தாமவன் அலாஸ்காவில் எஸ்கிமோ குழந்தைகளின்
ஆசிரியனாக இருக்கக்கூடும்
ஆறாமவன், ஏதோவொரு நாட்டில்,
அடக்கத்தோடு சொல்லப்போனால்,
ஏன் ஸியராலியோனிலும்கூட13
இளம் குடியரசுத் தலைவனாக
ஏழாமவன், தொட்டிலில் இன்னமும்
கிலுகிலுப்பையை ஆட்டிக் கொண்டிருப்பவனாக14
பத்தாவது... நூறாவது...
நான் நானாக இருப்பது எனக்குப் போதுமானதல்ல
படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும்
அதேபோன்ற இன்னொன்றுண்டு
ஆனால், கார்பன் காகிதத்தைப்
பயன்படுத்துவதில் கடவுள் கருமி
அவரது விண்ணுலகப் பதிப்பகம்
என்னை ஒப்பில்லாத
ஒரே ஒரு பிரதியாக்கியது
ஆனால், நான் கடவுளின் சீட்டுகளைத்
தாறுமாறாகக் கலைத்துப் போடுவேன்
அவரைக் குழப்பத்தில் ஆழ்த்துவேன்
எனது வாழ்நாளின் இறுதிவரை
ஆயிரம் பிரதிகளாக இருப்பேன் -
என்னைக் கண்டு
பூமியும் பரபரவென இயங்குவதற்கு,
உலக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
நடத்தப்படுகையில்
கணினிகளுக்குப் பித்துப் பிடிப்பதற்கு.
மனிதகுலமே
உனது தடையரண்கள்
எல்லாவற்றிலும் போர் புரிவேன் -
சக்தி தீர்ந்து களைத்துப் போன நிலவாக
ஒவ்வொரு இரவிலும் மரணித்து,
புதிதாகப் பிறந்த சூரியனாய்
ஒவ்வொரு காலையிலும் மீண்டும் பிறப்பேன்
என் மண்டையோட்டில் சாகாவரம் பெற்ற
மென்புள்ளியன்றைக் கொண்டவனாய்.
சாதுரியமான ஸைபீரிய ஃப்ரான்ஸ§வோ வியோனாக15
நான் இறக்கும்போது
பிரான்ஸிலோ, இத்தாலியிலோ
மண்ணுக்குக் கீழே என்னைக் கிடத்தாதீர்கள்
ஆனால், ரஷிய ஸைபீரிய மண்ணில்16
இன்னும் பசுமையாக இருக்கும் குன்றில் -
ஒவ்வொருவரும் நானே
என்பதை நான் முதன் முதலில் உணர்ந்தது
அங்குதான்.
1. ஆர்த்தடாக்ஸ் திருச்சபை: ரஷியாவிலும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் செல்வாக்குப் பெற்றுள்ள கிறிஸ்தவ மதப் பிரிவு
2. பய்கால்ஏரி (Lake Baikal) : ரஷியநாட்டின் ஸைபீரியப் பகுதியில் உள்ள மிகப் பெரும் ஏரி.
3. அமெரிக்காவின் தென் மாகாணங்களிலொன்று.
4.நார்ஸிஸஸ் (Narcissus): மிக அழகானவன் என்று கிரேக்க இதிகாசங்களில் சொல்லப்படும் வேடனான நார்ஸிஸஸ க்குத் தனது அழகைப் பற்றிய கர்வம்அதிகம். அதனால்தான் அவன் தன்னைக் காதலித்தவர்கள் அனைவரையும் உதாசீனப்படுத்தி வந்தான். இதனால் ஆத்திரமுற்ற கிரேக்கக் கடவுளான நெமெஸிஸ், தனது மந்திரசக்தியால் நார்ஸிஸை ஒரு குளத்துக்கு வரச் செய்தான். அந்தக் குளத்து நீரில் பிரதிபலித்த தனது முகத்தின் அழகிலேயே லயித்து மயங்கிய நார்ஸிஸால் அங்கிருந்து வரவே முடியவில்லை. அந்த பிம்பத்துக்கு ஈடான அழகிய முகம் வேறெங்கும் இல்லை என்று கருதிய அவனுக்கு உயிர் வாழும் ஆசை இல்லாமல் போய்விட்டது. சாகும் வரை அந்தப் பிம்பத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான். தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்கிற சுயமோகிகளைக் குறிக்க ‘நார்ஸிஸஸ்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
5. கேப்டவுன் (Cape Town): தென்னாப்பிரிக்காவின் தலைநகரம்.
6. ராம்போ: அமெரிக்க ஆணாதிக்க, ஆண்-மைய, இராணுவ வல்லமைக்கான குறியீடு. ராம்போ பாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் ஸில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த படங்கள் 1960 முதல் 1980கள் வரைஅடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருந்தன.
7.நெஃபெர்டிட்டி (Nefertiti): மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட அரசி.
8.ட்ரொய்கா (Troika): கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டு தொடக்கம்வரை ரஷியாவில் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுவந்த, மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட சக்கர வண்டி.
9.பூஷ்கின் (Alexander Pushin) உலகப் புகழ்பெற்ற 19ஆம் நூற்றாண்டு ரஷியக் கவிஞர்.
10. ரெனோ (Renault): இதே பெயருடைய கார்களைத் தயாரிக்கும் பிரெஞ்சுத் தொழிற்சாலை.
11. கோபாகபானா கடற்கரை (Copacabana Beach): பிரேஸில் நகரமான ரியோ டி ஜெனிரோவிலுள்ள புகழ்பெற்ற கடற்கரை.
12. பெர்க்ளி பல்கலைக்கழகம்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள பெர்க்ளி நகரத்திலுள்ள பல்கலைக்கழகத்தின் சரியான பெயர் ‘கலிபோர்னியா பல்கலைக்கழகம்’. ஆனால், இது பொதுவாக ‘பெர்க்ளி பல்கலைக்கழகம்’ என்றே அழைக்கப்படுகின்றது.
13. ஸியராலியோன் (Sierra Leone) : மேற்கு ஆப்பிரிக்க நாடு.
14. இக்கவிதையின் ஆங்கில மொழியாக்கத்திலுள்ள “the seventh would still be shaking a rattle in his stroller” என்பது “ஏழாமவன், இன்னமும் தொட்டிலில் கிலிகிலுப்பை ஆட்டிக் கொண்டிருப்பவனாக” எனத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. Ôஸ்ட்ரோல்லெர்’ (stroller) என்பது குழந்தைகளை உட்காரவைத்து சிறிது நேரம் உலாவச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் சிறிய (சக்கர) தள்ளுவண்டி. ஏழாவது யெவ்டுஷெங்கோ, இன்னும் குழந்தையாகவே இருக்கிறான் என்பதற்காக இக்கவிதையில்’ ஸ்ட்ரோல்லெர்’ குறிப்பிடப்படுகிறது. நம் நாட்டில் குழந்தைகளுக்கான ‘ஸ்ட்ரோல்லெர்’ மிக அரிதாகவே உள்ளது.
15. ஃப்ரான்ஸ வா வியோன் (Francois Villon):): 15ஆம் நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிஞர்; துணிச்சலான குற்றச்செயல்களுக்காக சிறைவாசம் புரிந்தவர்.
16. அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்திலுள்ள டுல்ஸா நகரத்தில் காலமான யெவ்கெனி யெவ்டுஷெங்கோவின் உடல் ரஷியாவின் சைபீரியப் பகுதியிலுள்ள அவரது சொந்த ஊரான ஸிமாவுக்கு (Zima) எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.