.
இந்து மத பயங்கரவாதம் மீண்டும் இந்திய/தமிழக சூழலை ஆக்கிரமிக்கத் தயாராகிறது. எல்.கே. அத்வானி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது; மோடியின் வெற்றி மற்றும் அண்மையில் ஒரிசாவில் நிகழ்த்தப்பட்ட மதக் கலவரம் - இவற்றை எல்லாம் அதற்கான அறிகுறிகளாகக் கொள்ள முடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி "மரண வியாபாரி' நரேந்திர மோடியின் ஆசியுடன் அரங்கேறுவதற்கான கூறுகள் தென்படுகின்றன. இந்நிலையில், "தி.மு.க. தலைமையிலான கூட்டணி மதவாத சக்திகளை எதிர்த்துப் போரிடும்' என்று உறுதியாக நம்புவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் 23.1.08 அன்று கோயம்புத்தூரில் தெரிவித்துள்ளார்.

 


ஜெயலலிதா முன்னிறுத்தும் "இந்து இந்தியா' பயங்கரத்தை, மதச்சார்பற்ற தி.மு.க. கூட்டணி கட்டுப்படுத்துமா? மதச்சார்பற்ற அரசியல் கூட்டணிதான் இத்தகைய மதவாத சக்திகளை கட்டுப்படுத்தும் என்று ஒவ்வொரு தேர்தலின்போதும்சொல்லப்படுகிறது. ஆனால், நடைமுறை வேறாக இருக்கிறது. சென்ற முறை தி.மு.க., பா.ஜ.க. அணியில் இருந்தது. அப்போது அ.தி.மு.க.தான் மதச்சார்பற்ற அணி! இன்று அந்த இடத்திற்கு தி.மு.க. வந்திருக்கிறது என்பதைத் தவிர அதில் வேறொன்றுமில்லை. நாளைக்கு மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டால், தி.மு.க.வும் அதன் கூட்டணிகளும் அங்கு செல்வதற்கு ஒருபோதும் தயங்க மாட்டார்கள். மதவாத அணியின் பக்கம் கம்யூனிஸ்டுகள் இருந்ததில்லை என்பதற்காக அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

அரசியல் கட்சிகள் மட்டுமே மதவாதத்தை முறியடித்துவிடும் என்பதில் உண்மையில்லை. அவை பரந்துபட்ட மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம்; ஆட்சியை கைவசம் வைத்திருக்கலாம். ஆனால் அது மட்டுமே போதாது. சாதி -மதவெறியை எதிர்ப்பதற்கான ஒரு பண்பாட்டுத் தளம்/கூட்டணி கட்சிகளைக் கடந்து உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில், இந்து பண்பாடுதான் பயங்கரவாதத்தை புனிதப்படுத்துகிறது. ஆனால், இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு சக்திகள் முன்வைக்கும் பண்பாடு, இந்து பண்பாட்டுக்கு நேர் எதிரானதாக இல்லை. அது வெறும் அரசியல் சார்ந்ததாகவோ அல்லது மாற்றுக் கலைகள், விழாக்கள், திரைப்படங்கள் தொடர்புடையதாகவோ மட்டுமே இருக்கிறது. சாதிய – இந்து பண்பாட்டை நேரடியாக எதிர்க்காமல், நாட்டுப்புறக் கலைகளையும் நவீன கருத்தாக்கங்களையும் கொண்டு இந்து பயங்கரவாதத்தை முறியடிக்க முடியாது.

இந்துத்துவ பயங்கரவாத செயல்கள் தற்பொழுது ("தெகல்கா' புலனாய்வு) அம்பலப்படுத்தப்பட்டதுபோல, ஒரு நூறு ஆண்டு கால வரலாற்றில் அம்பலப்படுத்தப்படவில்லை. "மதசார்பற்ற' காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும் - இதற்கு மூலகாரணமான மோடியும் பிற கொலைகாரர்களும் சுதந்திரமாகத் திரிகிறார்கள். இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் பண்பாட்டளவில் தங்களை இந்துக்களாக கருதிக் கொள்ள அனுமதிக்கப்படும் வரை, சிறுபான்மை மக்களை எதிரிகளாக சித்தரிப்பதும், இந்து பயங்கரவாதம் நியாயப்படுத்தப்படுவதும் தொடரும். அதனால்தான் 2000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டாலும், அது அலட்சியப்படுத்தப்படுகிறது.

"குஜராத் தெகல்கா புலனாய்வு'கூட, இந்து பயங்கரவாதத்தின் உற்பத்திக் கேந்திரமான பார்ப்பனியத்தை தோலுரிக்கவில்லை. அதனால் இது வெறும் மோடி, பா.ஜ.க. மற்றும் சங்பரிவாரங்களுக்கு எதிரானதாக மட்டுமே சுருக்கப்பட்டு விட்டது. அது அரசியல் கட்சிகளுக்கு எதிரான பிரச்சினையாக மட்டுமே - ஊடகங்களால் திரிக்கப்பட்டது. இவையெல்லாம் அரசியல் சதித் திட்டத்தின் விளைவே என்றும், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால், மக்கள் அதை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்றும் எளிய விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. பார்ப்பனர்களும் முற்போக்கு முகமூடி அணிந்து, இந்து மதவாதத்தைக் கண்டிப்பவர்களாகவே வலம் வருகின்றனர்.

சமத்துவமற்ற சாதிய - இந்து தர்மத்திற்கு எதிரான சமத்துவமும் பகுத்தறிவுமே பண்பாட்டுக்கான அடையாளம். சாதிய ஏற்றத் தாழ்வுகளையும் இந்து மத இழிவுகளையும் கேள்விக்குள்ளாக்குவதே முதன்மையான பண்பாட்டு செயல்பாடுகளாக இருத்தல் வேண்டும். பண்பாட்டுப் போர், ஆதிக்கத்தை அத்தனை நிலைகளிலும் முறியடிப்பதாக இருக்க வேண்டும். இது, நீண்டகால செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட சமூக, பண்பாட்டு இயக்கங்களால்தான் இது சாத்தியமாகும். இதை அரசியல் கட்சிகள் செய்யும் என்று எதிர்பார்ப்பது, கொள்ளிக் கட்டையை தலையில் சொரிந்து கொள்வதற்கு ஒப்பானதே!

அன்பார்ந்த வாசகர்களே!

இழப்புகளை சுமந்து கொண்டே, உங்களுடைய பங்களிப்பை எதிர்பார்த்து பிப்ரவரி 2008 இல் "தலித் முரசு' 12 ஆம் ஆண்டில் நுழைகிறது. "தலித் முரசு' வளர்ச்சிக்கான பல்வேறு முயற்சிகளின் ஒரு கட்டமாக, பிப்ரவரி முதல் இதழின் விலையை 6 ரூபாயிலிருந்து 8 ரூபாயாக உயர்த்துகிறோம். வாசகர்கள் மற்றும் இதழ் விற்கும் ஆர்வலர்கள் தொடர்ந்து ஆதரவு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஆண்டுக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ஓர் இதழ் : ரூ. 8
ஆண்டுக் கட்டணம் : ரூ. 100

 

Pin It