திராவிடர் இயக்க - தமிழ் இயக்க இளைஞர்களே! மாணவமணிகளே! சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!

தமிழகத்தை, 1956 நவம்பர் 1 முதல் தனிமொழி மாநிலமாகப் பெற்றோம். அது வரையில் தி.மு.க. தேர்தலில் ஈடுபடவில்லை. 1957 முதல் தேர்தலில் ஈடுபட்டது. 1962 தேர்தலில் 50 இடங்களைப் பெற்ற தி.மு.க., 1967 தேர்தலுக்குள் “தனித் திராவிட நாடு” பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டது.

1967இல் தமிழக ஆட்சியைப் பிடித்த தி.மு.க., உயர்நிலைப் பள்ளிகளில் மூன்று மொழிகளில் ஒன்றாக இந்தி கற்பிக்கப்பட்டதை நீக்கியது; தமிழ்நாடு சென்னை மாநிலம் என்று அழைக்கப்பட்டதைத் தமிழ்நாடு எனச் சட்டப்படி மாற்றியது; சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் வகையில் சட்டம் இயற்றியது.

1965இல், “இந்தி இந்தியாவின் ஆட்சிமொழி” என்பதை எதிர்த்து மாணவர்கள் தொடங்கிய போராட்டத்தில், தி.மு.க. ஈடுபட்டு முழு வீச்சில் போராடியது. அதனால், அடுத்து 1967இல் நடைபெற்ற தேர் தலில் இந்தி எதிர்ப்புப் போராட்ட உயிர் ஈகங்கள்தான் தி.மு.க.வை தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது.

முதலமைச்சராக இருந்த அறிஞர் சி.என். அண்ணாதுரை, 1969இல் முதிராச் சாவு எய்தினார்.

1969 பிப்பிரவரி முதல் 1976 சனவரி முடிய கலைஞர் மு. கருணாநிதி முதலமைச்சராக விளங்கினார்.

1977 முதல் 1987 வரையில், நடிகர் ம.கோ. இராமச்சந்திரன் முதலமைச்சராக விளங்கினார். அவர் மறைவையொட்டி, ஒரு முப்பது நாள் சானகி இராமச்சந்திரன் முதலமைச்சராகச் செயல்பட்டார்.

1989 தேர்தல் முதல் 2016 சட்டமன்றத் தேர்தல் வரையில் கலைஞர் மு.கருணாநிதி, செல்வி. ஜெ. செயலலிதா என, மாறி மாறி முதலமைச் சர்களாக விளங்கினார்கள். இப்போது வரையில் இந்த இரண்டு திராவிட வாக்குவேட்டைக் கட்சிகளும்

1. “மாநிலத்தில் சுயஆட்சி அல்லது தன்னாட்சி” வர, என்ன செய்தன?

2.“இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி” என்பதை எதிர்த்து, அரச மைப்பில் கண்ட எல்லா இந்திய மொழிகளும் இந்திய ஆட்சி மொழிகளாக வந்திட என்ன செய்தன? எப்போதாவது, ஏன் நாடாளுமன்றத்தில் அதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து விவாதம் நடைபெறச் செய்து, அதை நிறைவேற்ற இவர்கள் வழிகாணவில்லை?

3. மய்ய அரசு அதிகாரப் பட்டியலில் (Union List) அடங்கிய தேசியக் கல்வி நிறுவனங்கள் தவிர்த்த - மற்ற ஒட்டுமொத்தக் கல்வித் துறையும் மாநில அரசுப் பட்டியலில் (State List) 3-1-1976 வரையில் இருந்தது. அதன்பிறகு பொது அதிகாரப் பட்டியலுக்கு (Concurrent List)) மாற்றப்பட்டது.

1977க்குப் பிறகு படிப்படியாக எல்லாக் கல்வித் துறை அதிகாரங்களையும் மய்ய அரசு பிடுங்கிக் கொண்டது.

இதை மாற்றிடவும் மீண்டும் கல்வித்துறை மாநிலப் பட்டியலுக்கு வந்து சேர்ந்திடவும், 1977 முதல் 39 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்த இரண்டு திராவிடக் கட்சிகளும் செய்தது என்ன?

இப்போது 2016 மே 16 அன்று நடைபெறும் தேர்தல் நேரத்தில், திராவிட - தமிழின உணர் வுள்ள இளைஞர்களும் மாணவ மணிகளும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இவை பற்றிச் சிந்தியுங்கள்!

இச்செய்திகளில், இவர்கள் இதுவரை பூண்ட பொய்க்கோலத்தை இப்போது அம்பலப்படுத் துங்கள்.

இவை மட்டுமா?

இன்றைக்கு உள்ள அரசமைப்புச் சட்டப்படி, தமிழ்நாட்டில் தமிழ்மொழி வழியில் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகப் படிப்பு வரையில் எல்லாத் துறைக் கல்வியையும் தர முழு அதி காரம் தமிழக அரசுக்கு இருக்கிறது.

அப்படி இருந்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் உயர் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், கலைக் கல்லூரிகள், தொழிற் படிப்புக் கல்லூரிகள், அரசுசார் பல்கலைக்கழகங்கள் இவற்றில் 1977 முதல் இன்று வரையில் முற்றிலுமாகத் தமிழ் வழியில் கல்வி தர ஏற்ற சட்டங்களைச் சட்டமன்றில் நிறைவேற்றி - நூற் றுக்கு நூறுமாக அதை நடைமுறைப்படுத்தாதது ஏன்?

இதை நீங்களும் கற்றறிந்த மேதைகளும் தமிழ்ப் பெருமக்களும் ஏன் என்று கேட்காமல், வேறு யார் கேட்பது? எப்போது கேட்பது? இவர் களிடம் இப்போது கேட்காமல், நாளைக்கு எப் படிக் கேட்பீர்கள்?

உலகத்தில் உள்ள 220க்கு மேற்பட்ட சுதந்தர நாடுகளில்-எந்த நாட்டிலாவது தன் தாய் மொழியில் அல்லாமல் வேற்று மொழிவழியில் ஒருவன் கல்வி கற்கிறானா?

யுனைடெட் கிங்டம் (United Kingdom) என்கிற பிரிட்டிஷ் அரசில் ஆங்கிலம், அய்ரிஷ், ஸ்காட்ஸ், வெல்ஸ் என நான்கு வெவ்வேறு மொழிகளைப் பேசும் பிரிவுகள் அடங்கி இருக்கின்றன. அவர் கள் எல்லோரும் ஆங்கில மொழி வழியிலா படிக்கிறார்கள்? இல்லை. அவரவர் தாய்மொழி வழியில் மட்டுமே படிக்கிறார்கள்.

அய்ரோப்பிய ஒன்றியத்தில் (European Union) கிட்டத்தட்ட 27 தனிச் சுதந்தர நாடுகள் இருக் கின்றன. அந்நாட்டு மொழிகளுக்கு எழுத்து வடிவம் - அதாவது நெடுங்கணக்கு a, b, c, d தான். ஆனால் அவரவர் மொழி வேறு வேறு; உச்சரிப்பு முறை வேறு வேறு. அவரவர் தாய் மொழி வழியில் தான் எல்லாத் துறைப் படிப் பையும் அங்கெல்லாம் படிக்கிறார்கள்.

இந்தியாவிலுள்ள - தமிழகத்தில் உள்ள படித்த மடையர்களும், வயிற்றுப்பாட்டுக் கல்வியாளர் களும், தனியார் கல்வி நிறுவன வணிகக் கொள்ளையர்களும் தாம், ஆங்கில மொழி வழியில் மழலையர் வகுப்பு முதல் கலை, பொது அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம், கணினி இயல் எல்லாக் கல்வியையும் கற்றுத் தருகிறார்கள். அப்படிக் கற்றவர்களில் பெரும்பாலோர் திறன்வாய்ந்தவர்களாக (Talented) இல்லையே அது ஏன்? ஏன்? ஏன்?

தாய்மொழி வழியில் கற்காதவன் எதையும் புரிந்து கொள்ளமாட்டான். பாடத்தை மனப்பாடம் செய்வான் - அதைத் தேர்வில் வாந்தியெடுப்பான் - மதிப்பெண் பெறுவான் - தேர்ச்சியுறுவான்.

அவன், தான் கற்றதை அடுத்தவனுக்குத் திறம்படச் சொல்லித்தர முடியாது; சுய மாகச் சிந்திக்க முடியாது; புதிய கருத்துக் களையோ, கண்டுபிடிப்புகளையோ உரு வாக்க முடியாது.

இரண்டு திராவிடக் கட்சி ஆட்சிகளும் - இவர் களின் தொங்கு சதைகளாக நேற்று வரை இருந்த எல்லாக் கட்சிக்காரர்களும் இந்த ஈன நிலை மைக்குப் பொறுப்பு ஆவார்கள்.

ஆட்சி என்பது தலைமைச் செயலகம், மாவட்ட அளவிலான பல துறை அலுவலகங்கள், வட்டம் - குறுவட்டம் - ஊராட்சி எல்லாம் அடங்கியவை தான். இங்கெல்லாம் தமிழில் மட்டுமே ஆவணங்கள் - குறிப்பேடுகள் - ஆணைகள் - மடல்கள் - பட்டியல்கள் எல்லாம் இருக்க வேண்டும். இவை அப்படி இல்லையே! ஏன்?

இதில் எந்தக் கட்சிக்கும் உள்ளார்ந்த அக்கறை இல்லை; இதை நிறைவேற்றித் தீரவேண்டும் என்ற உறுதிப்பாடும் எந்தக் கட்சிக்கும் இல்லை.

உயர்நீதிமன்றத்தில், இந்துக் கோவில்களில், மற்ற வழிபாட்டு இடங்களில் தமிழ் இல்லை.

இலக்கிய - இலக்கண வளம் மிக்க - சொற் களஞ்சியம் நிரம்பி வழிகிற செம்மொழி, நம் தமிழ்மொழி. அவரவர் தாய்மொழி அவரவர்க்கு உயிரானது. நம் தாய்மொழியான தமிழ், நம் ஒவ்வொருவர்க்கும் உயிரானது.

நம் தமிழை வாழ வைக்காதவர்கள் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்து, மேலும் மேலும் செல்வந்தர்களாக - செல்வாக்கு உள்ளவர்களாக ஆனதை, நாம் எல்லோ ரும் நேரில் கண்டோம்.

இத்தோடு நமக்கு நல வாழ்வு வந்துவிடுமா?

வேளாண்மைக்கும், குடிநீருக்கும் இந்த ஏப்பி ரல் மாதமே தண்ணீர் தட்டுப்பாடு வந்துவிட்டது.

இந்தியாவிலுள்ள மொத்தம் 670 மாவட்டங் களில், 10 மாநிலங்களிலுள்ள 254 மாவட்டங் களில், 2,55,923 ஊர்களில் உள்ள 33 கோடி மக்கள் இன்று குடிநீரின்றித் தவிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக் கல், பெரம்பலூர், அரியலூர், காவிரிப் பாசனக் கடைமடைப் பகுதிகளில் உள்ள மக்கள் ஒரு போகம் கூடப் பயிரிட நீரின்றி, குடிக்க நீரின்றித் தத்தளிக்கிறார்கள்.

தமிழகத்திலும், ஆந்திராவிலும் பெரிய, சிறிய ஏரிகள் அதிகம்.

தமிழகத்தில் பெரிய, சிறிய ஏரிகள் 41,000 உள்ளன.

2015 நவம்பர், திசம்பர் வெள்ளப் பாழுக்கு திருவள்ளூர், சென்னை, கடலூர், தஞ்சை, தூத் துக்குடி, புதுவை முதலிய மாவட்டங்கள் இரை ஆயின.

இப்போது நிலத்தடி நீர் சென்னையில் மட்டும் உயர்ந்திருக்கிறது. ஆனால் தாமிரபரணி, வைகை, கொள்ளிடம், காவிரி, தென்பெண்ணை, வெள் ளாறு, சின்னாறு, பாலாறு இவற்றை - கடந்த 49 ஆண்டுகளாக ஆண்ட திராவிடக் கட்சிகள் - 15, 20 அடி ஆழத்துக்கு மணல் அள்ளி அள்ளி ஆளும்கட்சி - எதிர்க்கட்சி இருதரப்பாரும் கூட்டுச் சேர்ந்து ஆறுகளைப் பாழடித்துவிட்டார்கள்.

இதனால் முதலில் குடிநீர்ப் பஞ்சம் வந்து விட்டது. இது, போர்க்கால விசையில் நீக்கப்பட, இனிவரப்போகும் அரசை நாம் எல்லோரும் நெருக்கிட வேண்டும்.

வேளாண்மை ஒரு போகம் பாசனப் பகுதி யில் நடைபெற ஏதுவாக - ஏரிகளைத் தூர்வாரத் தவறியவர்களும், தூர்வாரியதாக அதிகாரி களைக் கையாளாள்களாக ஆக்கிக் கொண்டு, பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஏரிகளைத் தாம் பாளங்கள் போல் ஆக்கியவர்களும் திராவிடக் கட்சியினரே!

வனத்துறைத் தோப்புகளை வனத்துறை அதி காரிகளின் துணையுடன் வெறுங் கானகங் களாக ஆக்கி, மழை வராமல் தடுத்தவர்களும், சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தியவர்களும் இவர்கள் தாம்.

பாலங்கள், சாலைகள், கட்டடங்கள் கட்டும் - அமைக்கும் ஒப்பந்தக்காரர்கள் அமைச்சர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - அதிகாரிகள், ஆகி யோர் கூட்டணி அமைத்துக் கொண்டு, இவற்றை வீணடித்தவர்கள் நம்மை ஆண்ட இவர்களே!

தனியார் நடத்தும் 540க்கும் மேற்பட்ட பொறி யியல் கல்லூரிகள், 20 மருத்துவக் கல்லூரிகள், 3000க்கு மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள், மற்ற கல்வி நிறுவனங்களை நடத்துவோர் நேற்று வரையிலும் இன்றும் இலக்கம், கோடி வரை யில் பணக் கொள்ளை அடிக்கவும், அவர்கள் ஆங்கில மொழி வழியில் பாடங்களைக் கற்பிக் கவும் துணை போன அதிகாரம் படைத்த கும்ப லினர் இவர்களே!

தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்புக்குமேல் பெரிய பட்டப் படிப்பும், தொழிற் படிப்பும் படித்தவர்கள் ஏறக்குறைய ஒரு கோடி ஆண்களும் பெண்களும் எந்த வேலையும் இன்றித் தவிக்கின்றனர்.

தமிழகத்தில் ஒரு வகுப்புக்கு ஓர் ஆசிரியர் - ஒவ்வொரு பாடத்துக்கும் ஓர் ஆசிரியர் என, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சில இலக்கம் பேர், இது வரையில் வேலைக்கு அரசினால் அமர்த்தப் பட்டிருக்க வேண்டும்.

அப்படி வேலைக்கு அமர்த்த பல இலட்சம், இடம் மாறுதல் பெறச் சில இலட்சம் ரூபா கைக் கூலி என்பது, 1990களிலேயே தமிழகத்தில் வழக்கத்துக்கு வந்துவிட்டது.

இந்த அட்டூழியங்களைச் செய்து பணக்கொள்ளை அடித்தது போதாமல், 45 ஆண்டுகளுக்குமேல் 6800க்கு  மேற்பட்ட சாராயக் கடைகளைத் திறந்து, 7.5 கோடி மக்களில் 5 கோடி மக்களை மிடாக்குடியர்களாக ஆக்கியவர்கள் - வள்ளுவத் தைக் கற்ற டாக்டர் கலைஞர், புரட்டு(சி) நடிகர் ம.கோ. இரா., கவர்ச்சி நடன நாயகி செல்வி செயலலிதா ஆகியோரே!

தமிழகத்திலுள்ள 64 பொதுத்துறை நிறு வனங்களும், இந்தியாவிலுள்ள 247 பொதுத் துறை நிறுவனங்களும் - அந்த ஒவ்வொரு துறை யிலும் உயர் பொறுப்பில் இருந்த பார்ப்பனர் - காயஸ்தர் - நாயர் - வேளாளர் போன்ற மேல் சாதிக்காரர்களால் 1991 முதல் கொள்ளையடிக் கப்பட்டு இழப்புக்கு ஆளாக்கப்பட்டுவிட்டன.

அரசுப் பணிகளில் தமிழ்நாட்டில் 69 விழுக் காடு, 1980, 1989 முதல் நடப்பில் உள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோர் பங்கு 50; பட்டியல் வகுப்பினர் - பழங்குடியினர் பங்கு 19.

ஆனால் மற்ற எல்லா மாநிலங்களிலும் 1994 முதல்தான், மாநில அரசுகளில், பிற்படுத்தப் பட்டோருக்கு 27ரூ இடஒதுக்கீடு தரப்படுகிறது. 1970 முதல், பட்டியல் - பழங்குடி வகுப்பினர்க்கு விகிதாசாரம் உண்டு.

இவை பற்றி, படித்த இளைஞர்களும், மாணவ மணிகளும், ஒடுக்கப்பட்ட எல்லா வகுப்பினரும் ஒன்றை உணர வேண்டும்.

தொடர்வண்டித் துறை, அஞ்சல் துறை - தொலைப்பேசித் துறை, காப்பீட்டுத் துறை - தேசிய மயமாக்கப்பட்ட 22 வங்கிகள் துறை, பல்கலைகள் இவையெல்லாம் மிகப் பெரிய வேலை வாய்ப்பு உள்ள நிறுவனங்கள். இவை மய்ய அரசு நிறுவனங்கள்.

இவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்குப் பெயர ளவுக்கு, 1994 முதல், இடஒதுக்கீடு அளிக்கப் படுகிறது. இது பெரிய ஏமாற்று வேலை. எத னால்?

பழைய சென்னை மாகாணத்தில், நீதிக்கட்சி ஆட்சியில் அரசு வேலையிலும், அரசுக் கல்வி யிலும் 1928 முதல் 100 விழுக்காடு இடங்களும் - முற்பட்ட வகுப்பு உள்ளிட்ட எல்லா வகுப்பு களுக்கும் பங்கிட்டுத் தரப்பட்டன. இந்தப் பங் கீட்டு முறை வெள்ளையர் ஆண்ட 1947 வரை யிலும், காங்கிரசு ஆட்சியில் 1954 வரையிலும் நீடித்தது.

1955க்குப் பிறகு இங்கு இம்முறை மாறியது.

இப்போது என்ன நமக்குத் தேவை?

இந்திய அரசின் எல்லாக் கல்வியிலும், எல்லா வேலையிலும் 100 விழுக்காடு இடங்களையும்; மாநில அரசுகளின் எல்லாக் கல்வி யிலும், எல்லா வேலையிலும் 100 விழுக்காடு இடங்களையும்;

1.எல்லா மதங்களிலும் உள்ள பிற்படுத் தப்பட்டோருக்கு;

2. எல்லா மதங்களிலும் உள்ள முற்பட்டோ ருக்கு;

3. பட்டியல் வகுப்பினருக்கு;

4. பட்டியல் பழங்குடியினர்க்கு - அவரவர் மக்கள் தொகை விழுக்காட்டுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுக்க வகை செய்து, அரசமைப்புச் சட்ட விதிகளைத் திருத்துங்கள் என, நாம் இந்திய அரசிடம் கோரிப் போராட வேண்டும். தமிழ்நாட்டு அரசினரும் போராடிடக்கோரி, நாம் போராட வேண்டும்.

இளைஞர்களும் மாணவ மணிகளும் தாம் மொத்த மக்கள் தொகையில் கணிச மான பகுதியினர்.

நீங்கள் தான் கண்தெரிந்த வழிகாட்டிகள்! நீங்கள் தான் வருங்காலப் பெரியவர்கள்! நீங் கள் தான் வருங்கால சமூகத் தலைவர்கள்!

நாம் முயன்றால் முடியும் - ஒன்றுபட்டு நாம் போராடினால் எதையும் சாதிக்க முடியும் - முடியும் எனத் தன்னம்பிக்கை கொள்ளுங்கள்!

வாக்குக் கேட்க வருவோரை, இவை பற்றிக் கேளுங்கள்!

நாம் வெகுமக்கள். நம்மை இதுகாறும் ஏய்த்த வர்கள், தேர்தல் கட்சியினர்!

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!

1-5-2016               - வே. ஆனைமுத்து

Pin It