Santhiஜாதியின் நாக்குகள் மிக நீளமானவை, நகங்கள் மிகக் கூர்மையானவை. அதன் அருவருப்பான எல்லைக்குள் நுழையாமல் தப்பிக்க, எவ்வளவுதான் எதிர்த்துப் போராடினாலும் அகப்பட்டுக் கொள்ள நேர்வது, இந்த ஆதிக்க சமூகத்தின் தீரா அவலம். மெத்தப் படித்திருந்தாலும், சிகரம் தொட சாதனைகள் புரிந்திருந்தாலும் சாதியை உதிர்த்துவிட்டு, ஒருவரை அங்கீகரிப்பதென்பது இங்கு மிகவும் கடினம். அப்படி சாதிக்கக் கிளம்பிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த எத்தனையோ திறமைசாலிகளை - சாதனையாளர்களை இந்த சாதியச் சமூகம் தன் காலடியில் மிதித்து நசுக்கி அழித்திருக்கிறது. ஆம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாந்தியைச் சுற்றிப் பின்னப்பட்ட சதிவலை அத்தகையதே!

பாலினத்தில் பெண். ஜாதியில் தாழ்த்தப்பட்டவர். பொருளாதாரத்தில் ஏழை. இந்த முப்பெரும் தடைகளையும் மீறி சாந்தி சாதிக்கத் துடித்தது பெரிய ஆச்சர்யம். புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தில் செங்கல் சூளையில் கல்லறுக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு மூத்த மகளாகப் பிறந்த சாந்தி, ‘நியாயமாக'ப் பார்த்தால் தானும் ஒரு கூலித் தொழிலாளியாகி, குடும்ப பாரத்தைத் தாங்கியிருக்க வேண்டும்; அல்லது படிப்பை நிறுத்திவிட்டு, பெற்றோருக்கு பாரமின்றி திருமணம் முடித்திருக்க வேண்டும். சாதி ஆதிக்கச் சமூகம் - தலித் மக்களுக்கு, ஏற்றத்தாழ்வைப் போற்றும் சமூகம் - ஏழைகளுக்கு, ஆணாதிக்கச் சமூகம் - பெண்களுக்குத் தரும் முடிவு அதுதான். ஒரு வேளை சோற்றுக்குக்கூட வழியற்ற நிலையிலும் விளையாட்டில் சாதிக்க வேண்டுமென்ற விதையை மனதில் ஊன்றி வளர்த்தெடுத்ததுதான் சாந்தி இன்று சாதனை நாயகியாக நிமிர்ந்து நிற்பதற்கான முழு முதல் காரணம்.

வயிறு பசிக்கும்போது எதில் கவனம் செலுத்த முடியும்? சாந்தி தன் இலக்கில், லட்சியத்தில் உறுதியாக நின்று அதில் தன் முழு ஆற்றலையும் ஈடுபடுத்தினார். விடா முயற்சியின் பலனாக உழைப்பிற்கான அங்கீகாரம் - மெல்ல மெல்லக் கிடைக்கத் தொடங்கியது. பள்ளியில் தனித்து நின்று, மாநில அளவில் சாதித்து, தேசிய அளவை எட்டியது வரை சாந்தியின் உழைப்பு அசாத்தியமானது; வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று சாதனைகளை நிகழ்த்தினார். ‘ஏஷியன் ட்ராக் அண்ட் பீல்ட்', தெற்காசிய விளையாட்டுப் போட்டி, ‘கிராண்ட் பிரிக்ஸ்' எனப் பதக்கங்களை அள்ளிக் குவித்தார்; புதிய சாதனைகளை உருவாக்கினார். அப்போதெல்லாம் சாந்தி என்ற ஒரு சாதனையாளர் இருப்பதாகவே இந்த சமூகம் கண்டுகொள்ளவில்லை; நம்பிக்கை நட்சத்திரமாகக் கொண்டாடவில்லை.

கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த மாதம் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்றபோதுகூட, அவரை யாரும் உன்னிப்பாக கவனிக்கவில்லை. அவருடைய சாதனையை மெச்சி தமிழக அரசு பதினைந்து லட்சம் ரூபாய் பரிசை அறிவித்தபோதுகூட, சாந்தி அந்தளவுக்கு பிரபலமாகவில்லை. ஆனால், ‘பாலினச் சோதனையில் தோல்வியடைந்தார்' என்ற செய்தி வந்தவுடன் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு சாந்தியைக் குற்றவாளியாக முன்னிறுத்தின. ‘சாந்தி ஏமாற்றுக்காரர்' என்ற பிம்பத்தை உருவாக்கப் பெரும் சிரத்தை எடுத்தன. ஆதிக்க சாதி ஊடகங்களின் சுரணையற்றப் போக்கு தெள்ளத் தெளிவானது. பாலினக் குறைபாடென்பது அவமானத்துக்குரியதென அவை சித்தரித்தன. ‘புகழைப் பின்தொடர்ந்த அவமானம்' என்ற தலைப்பில் அவை வெளியிட்ட செய்திகள் அனைத்தும் மனிதப் பண்புக்கு முற்றிலும் எதிரானவை.

தொடர்ந்து உடலை வருத்தி உழைக்கும் ஒரு பெண்ணுக்கு, ஆணுக்குரிய ஹார்மோன்கள் கூடுதலாகச் சுரப்பது இயல்பானதே என்கிறார்கள் மருத்துவர்கள். சிகிச்சை மூலம் சரிசெய்யக் கூடிய சாதாரண குறைபாடு இதுவெனவும் அவர்கள் விளக்குகிறார்கள். பொதுமக்களுக்கு இதைத் தெளிவுபடுத்த வேண்டிய ஊடகங்களோ, சாந்தி ஆணா பெண்ணா என்று பட்டிமன்றமே நடத்தின. சாந்தி பாலினச் சோதனையில் தோல்வியடைந்ததை விவரித்த சி.என்.என். நிருபர் சற்றும் சலனமின்றி - ‘சாந்தி ஓர் ஆண்' என்று குறிப்பிட்டு செய்தியை முடித்தார். உடலை வருத்தி இலக்கை எட்டிய சாந்தியின் சாதனையை காற்றில் பறக்கவிட்டு, அவர் ஆணா? பெண்ணா? என வாதிடத் தொடங்கிவிட்டது சமூகம். இதே பிரச்சனை ஒரு ஆதிக்க சாதி பெண்ணுக்கு நேர்ந்திருந்தால், அதை இந்த ஊடகங்கள் இவ்வளவு கீழ்த்தரமாகவா அணுகியிருக்கும்?!

‘சாந்தி பாலினச் சோதனையில் தோல்வியடைந்தார்' என்று மட்டுமே ஆசிய விளையாட்டுக் குழு கூறியிருக்கிறது. ஆனால், அது குறித்த விளக்கங்கள் தரப்படவில்லை. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே பாலினச் சோதனைக்கு தடைவிதிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது சாந்திக்கு அதைச் செய்திருப்பது திட்டமிட்ட சதியில்லாமல் வேறென்ன? புகாரின் அடிப்படையில் பாலினச் சோதனை செய்யலாமெனில் - புகார் கொடுத்தது யார், எடுக்கப்பட்ட சோதனைகள் என்னென்ன, அவற்றின் முடிவுகள் யாவை என்பது பற்றியும் முழுமையான செய்திகளை வெளியிட வேண்டும். அதுதான் நியாயம். அரைகுறை உண்மைகள், பொய்யைவிட ஆபத்தானவை.

சாந்தி விஷயத்தில் அதுதான் நடந்தது. இதனால் சாந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை, விளையாட்டுத் துறையில் அவருடைய எதிர்காலம் என இரண்டுமே கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அசாத்திய உடல்பலத்தோடு நெஞ்சுரமும் இருப்பதால்தான், சாந்தி இதை தைரியமாக சந்தித்தார். பதக்கம் தன்னிடம்தான் இருப்பதாகவும் அதைத் திருப்பித் தரப்போவதில்லை எனவும் அறிவித்தார். ‘ஆம்பளையா? பொம்பளையா?' என்ற தராதரமற்ற கேள்விகளுக்கெல்லாம் அவர் நின்று பதில் சொல்லிக் கொண்டிருக்கவில்லை.

இந்திய விளையாட்டுத் துறையில் இருக்கிற அளவுக்குப் பிரச்சனைகள், போட்டி,பொறாமைகள், பாரபட்சங்கள் வேறொரு துறையில் இருக்குமா என்பது சந்தேகமே! தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, முழுக்க முழுக்க அது கேரளத்துக்காரர்களின் ஆதிக்கக் கரங்களுக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறதென்றுதான் சொல்ல வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் இவ்வளவு முரண்டு பிடிக்கிறது கேரளா. ஆனால், இங்கு விளையாட வரும் கேரள வீரர்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடோ விதி முறைகளோ இன்றி, பணத்தை வாரி இரைக்கிறது தமிழகம். பி.டி. உஷா தொடங்கி, இன்றைய அஞ்சுபாபி ஜார்ஜ் வரை எத்தனை வீராங்கனைகளுக்கு கோடிக்கணக்கில் அள்ளி வழங்குகிறது அரசு?!

திறமையும் உழைப்பும் தன்னம்பிக்கையும் நிறைந்த எத்தனையோ தமிழக வீரர்கள் வறுமையைக் கடக்க முடியாமல் முட்டை, கொண்டைக் கடலை போன்ற அத்தியாவசியப் உணவுப் பொருட்களைக் கூட வாங்க முடியாமல் விளையாட்டைக் கை விடுகின்றனர். தமிழக விளையாட்டுத் துறை மொத்தமாக கேரள அதிகாரிகளின் ஆதிக்கத்தில் இருப்பதால், தங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக தமிழக வீரர்கள் வருத்தத்தில் குமுறுகின்றனர். மாநில அளவில் சாதனை புரிந்த நம் வீரர்கள், தேசிய அளவிலானப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கையில், அவை எந்த சிரமமுமின்றி கேரள வீரர்களுக்குப் போய் சேர்கிறது.

இந்நிலையில் சாந்தி மீது புகார் எழுப்பியதும்கூட, ஒரு கேரள வீராங்கனை தான் என்று கூறப்படுகிறது. அதனாலேயே இப்படியொரு அவதூறு கிளப்பப்பட்டது. அதை இந்திய தேசிய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் மறுக்கவில்லை, கண்டிக்கவில்லை. தமிழக - வீராங்கனை ஒருவர் பதக்கம் வாங்கியதால் ஒட்டுமொத்த கவனமும் இனி திசை திருப்பப்படும் என்ற பதற்றத்திலேயே - இப்படியொரு பழி சுமத்தப்பட்டதாக முன்னாள் தமிழக வீரர்கள் கொந்தளிக்கிறார்கள். ஏற்கனவே கேரள வீராங்கனை களை விடவும் திறமைசாலிகளாக இருந்த சோலைமதி, பாண்டீஸ்வரி போன்றோர் மீது இதே புகாரை எழுப்பி, அவர்களை ஓரங்கட்டியதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ‘தங்க மங்கை' என தமிழகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய கேரள வீராங்கனை பி.டி. உஷா, ஓட்டப் பந்தய வீரர்களுக்கான தன்னுடைய பயிற்சிப் பள்ளியை கேரளத்தில்தான் நிறுவியிருக்கிறார். பயிற்சிக்கான நிதியும், வேலைவாய்ப்பும், சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புக்கும் மட்டுமே தமிழகம். அதனால் கிடைக்கும் பலன் அனைத்தையும் கேரளத்தில் அறுவடை செய்யவே அவர்கள் விழைகின்றனர்.

Santhi
இந்த பாரபட்ச அரசியலைக் கடந்து முட்டி மோதி மாநில அளவிலானப் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்களுக்கு, குறைந்தபட்சம் சில ஆயிரங்களைக்கூட செலவு செய்யத் துணியாது, தமிழக அரசு அஞ்சு பாபி ஜார்ஜ் மாதிரியான கேரளத்துக்காரர்கள், அமெரிக்காவில் பயிற்சி பெறுவதற்தான செலவு அனைத்தையும் ஏற்றுக் கொள்வது - நம் வீரர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியேயன்றி வேறென்ன? போட்டிகளில் பங்கேற்க தமிழக வீரர்கள் முன் பதிவு செய்யப்படாத ரயில்களில்தான் அழைத்துச் செல்லப்படுகின்றனர். உணவு, சீருடை என அனைத்து செலவுகளையும் தாங்களாகவே பார்த்துக் கொள்கின்றனர். சாந்தியும்கூட அப்படியெல்லாம் துன்பப்பட்டு வந்தவர்தான்.

சாந்தியின் பெற்றோர் கண்ணீருடன் சொன்னது போல், ‘அது பயிற்சியால் கட்டுக்குள்ளிருக்கும் உடலல்ல; பசியால் இளைத்த உடல்'. அன்றாடம் பசியை விரட்டுவதே பெரும் சவாலான நிலையில், சாந்தி தன் திறமையை இந்த அளவுக்கு செதுக்கியதும், சற்றும் தளராமல் விடாப்பிடியாக வெற்றிகளைக் குவித்ததும் இணையற்ற சாதனை இல்லையா?! ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து பயிற்சியை முடித்த பிறகு கொடூரமாகப் பசிக்கும் வயிற்றை, அவர் எப்படி ஆற்றுப் படுத்தியிருப்பார்? எங்கோ குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து கொண்டு, வறுமையை இந்தியாவின் ‘தலையெழுத்தாக'வும், சாதியைப் புனிதமாகப் போற்றுகின்றவர்களுக்கும் - சாந்தியின் பெயரைச் சொல்லக்கூட அருகதையில்லை. தியாகத்துக்கு இணையான அந்த சாதனையைக் கொண்டாட மனமில்லாமல் இந்தச் சமூகம் அவரை கேலிக்குள்ளாக்கியிருக்கிறது.

இங்கு நாம் வருத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம் பெண்கள் அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும், தமிழ் தமிழ் என உயிரை விடுகிறவர்களும் - சாந்திக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகக் கோபப்படாமல் இருப்பதுதான். இவர்கள் அனைவரும் ஒன்று கூடி தோள் கொடுத்திருந்தால், சாந்தி இச்சூழலை தெம்போடு எதிர் கொண்டிருக்க முடியும். பெண்கள் அமைப்புகள் எல்லாம் வாய்மூடி இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் துணிச்சலான முடிவு ஒன்றே சாந்திக்கு பக்க பலமாகத் துணை நின்றிருக்கிறது. ஒருவேளை தமிழக அரசு பரிசுப் பணத்தைத் தராமல் புறக்கணித்திருக்குமானால், இந்த ஊடகங்களும், சமூகமும் சாந்தியை நிச்சயம் கூறு போட்டிருக்கும். ஒரு தனி மனிதரின் மனிதாபிமானமிக்க முடிவு ஒன்றே, சாந்தியை மிகப் பெரிய இழிவிலிருந்து காத்திருக்கிறது. ‘பெரியார் பயிற்சிப் பட்டறையிலிருந்து வந்ததே அதற்கான காரணம்' என்று முதல்வர் அதற்கு விளக்கமும் கொடுத்திருக்கிறார். பெண்கள் அமைப்புகள் தொடங்கி, சமூகமே பெரி யாரை கற்றுத் தெளிய வேண்டியதன் அவசி யத்தைதான் இச்சூழல் உணர்த்துகிறது.

சாந்தி பெண் என்பதில் சந்தேகம் ஏற்பட்டதால் தான் பெண்கள் அமைப்புகள் கண்டுகொள்ளவில்லையா? அல்லது சாந்தியின் பிரச்சனை பெண்ணியப் பிரச்சனையில்லையா? பாலினத்தில் ஒரு சில குறைபாடுகள் இருப்பதாலேயே ஒருவரைப் புறக்கணிக்க நேருமெனில், இச்சமூத்தில் ஒரு பகுதியினரை நாம் ஒதுக்கித் தள்ள வேண்டியிருக்கும். ஹார்மோன் குறைபாடுகளுக்காக எத்தனைப் பெண்கள், ஆண்கள் சிகிச்சை எடுக்கின்றனர். மாத விலக்காகாதவர்களும், கருத்தரிக்க இயலாதவர்களும் பெண்கள் இல்லையென சொன்னால், அது எவ்வளவு மூடத்தனமோ அந்தளவு மூடத்தனமே சாந்தியின் மீதான அவதூறும்.

பாலினக் குறைபாடு உள்ளவரை, தலித் என்றோ, தமிழர்கள் என்றோ, மனிதர்கள் என்றோ இச்சமூகம் ஆதரிக்காதா? சாந்தி பிரச்சனையில் தலித் அமைப்புகள், தமிழ்த் தேசியவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் காத்த கொடூரமான அமைதி, வன்மையான கண்டனத்திற்குரியது. இந்நிலையில், சாந்திக்கு மாபெரும் பாராட்டுக் கூட்டம் நடத்துவதாக திராவிடர் கழகம் அறிவித்திருப்பது, ஆறுதலளிப்பதாக இருக்கிறது.

படித்த, நகரவாசிகளுக்குத் தெரியாத மனித நேயத்தை கத்தக்குறிச்சி கிராம மக்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். சாந்தி பிரச்சனையை அவர்கள் எதிர்கொண்ட விதம் வியப்பூட்டுகிறது. சாந்தி எப்படி ஊரில் தலைகாட்டப் போகிறார் என்பதுதான் மனித நேயமுள்ளவர்களின் முதல் பதற்றமாக இருந்தது. ஆனால், எந்தவித சர்ச்சைக்கும் இடமளிக்காமல் கத்தக்குறிச்சி மக்கள் - சாந்தியையும் அவர் குடும்பத்தையும் வாஞ்சையோடு அரவணைத்துக் கொண்டது, நாகரிக சமூகம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். இப்படியொரு வரவேற்பைதான் தமிழகமும் இந்திய நாடும் சாந்திக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், கல்லெறியாத குறையாக ஊடகங்கள் அவரை விரட்டின.

தலித் மக்கள் மீது ஏவப்படும் வன்முறைகள் பற்றி ஒரு வரி வாசிக்கத் துணியாத இந்த ஊடகங்கள், ஒரு தலித்தின் சாதனையைக் கொச்சைப்படுத்துவதை திருவிழாவைப் போலக் கொண்டாடித் தீர்க்கின்றன. இந்நிலையில் நாம் எப்படி தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்துவது, வேற்றுமையில் ஒற்றுமையைப் பாராட்டுவது? தலித் மக்களை எப்போதும் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் சாதி இந்து ஊடகங்களுக்கு மாற்றாக, மக்களுக்கான ஊடக வெளியை உருவாக்க வேண்டியதே இப்போதைய தேவை. பேசத் தெரிகிறவர்களும் எழுத முடிகிறவர்களும் நிருபர்களாகிவிடும் போக்கு அழிந்து - சமூக அறிவும், வேரிலிருந்து நுனிவரையுள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் மனித நேயமுள்ளவர்களும், மனித உரிமையில் நம்பிக்கை கொண்டவர்களும் ஊடகங்களுக்குப் படையெடுக்க வேண்டும்.

வன்கொடுமைகளுக்கு எதிராகக் களமிறங்குவதும்/இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளைப் போராடிப் பெறுவதும் - தலித் விடுதலைக்கு வழிவகுக்கும் என்பது உண்மைதான். அதே நேரத்தில், சாந்தி போன்ற தனி மனிதர்கள், சமூகம் தன் மீது திணித்த அத்தனைத் தடைகளையும் தகர்த்தெறிந்து நிகழ்த்தும் சாதனைகளும் - தலித் விடுதலைக்கு கண்டிப்பாக வலுசேர்க்கும் என்பதையும் உணர வேண்டும். சாந்தியின் வெற்றியைக் கொண்டாடி மகிழ வேண்டிய நாம், ஆதிக்கவாதிகளின் அவதூறுகளை நம்பி அவரை அலட்சியப்படுத்தி விட்டோம். தலித் தலைவர்கள் எவரும் சாந்தியைப் பாராட்டி அறிக்கைகூட விடாதது வேதனையளிக்கிறது. வன்கொடுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் நினைத்துப் புலம்புவதற்கு மட்டுமா தலித் மக்கள்! ஒருவர் நிகழ்த்திய சாதனையைக் கொண்டாட மனமற்றவர்களாக நாம்? சாந்திக்கு இந்த நேரத்தில் கொடுக்கப்படும் ஊக்கமும் தன்னம்பிக்கையும் - தாழ்ந்த சாதியென்ற தாழ்வு மனப்பான்மையில் முடங்கிக் கிடக்கும் இளைஞர்களைத் தன்னம்பிக்கையுடன் விழித்தெழச் செய்யும்.

தலித் விடுதலை - போராட்டங்களால் மட்டும் உருவாக்கப்படுவதல்ல; அது சாதனைகளால் அழகுபடுத்தப்படுவதும் கூட!
Pin It