சமநீதி எழுத்தாளர் ஏபி. வள்ளிநாயகம் அவர்களுக்கு, தமிழகத்தின் பல இடங்களிலும் நினைவேந்தல் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வு பற்றிய செய்திகள் "தலித் முரசி'ல் தொடர்ந்து இடம்பெறும். இந்த இதழில் "தலித் முரசு' சார்பில் 16.6.2007 அன்று சென்னையில் நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில் பங்கேற்றோர் ஆற்றிய உரை இடம் பெறுகிறது.

A.P.Vallinayagam
யாக்கன் : "நாம் எல்லாம் இன்றைக்கு அண்ணன் வள்ளிநாயகம் எழுத்தை வாசிக்கிறோம். அவரைப் பற்றி அறிந்திருக்கிறோம். அதை எல்லாம்விட, மறைக்கப்பட்ட தலித் தலைவர்களுடைய வரலாற்றை நாம் மெல்ல மெல்ல அறிந்து கொண்டிருக்கிறோம்;. மெல்ல மெல்ல வரலாற்றில் பதிவு செய்து கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் சொன்னால், அதற்கு அடித்தளமாக விளங்கியவர் அண்ணன் வள்ளிநாயகம் அவர்கள். அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு விரிவான தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது "தலித் முரசு'. அண்ணன் வள்ளிநாயகம் தயாரித்த குறிப்புகளில் தலைவர்களின் பட்டியல் 100அய் தாண்டுகிறது. பல்வேறு இயக்கங்கள், பல்வேறு கொள்கைகள், பல்வேறு தத்துவங்களின் வாயிலாக அவர் பயணித்தபோது, இறுதியில் அவர் வந்து சேர்ந்த இடம் தலித் அரசியல். அதையும் கடந்து பவுத்த அரசியலில் போய் நின்றார். அவர் வாழ்க்கையில் நான் அறிந்தவரை அவர் மிகவும் வேதனையோடு, மன உளைச்சலோடு, எப்போதும் மன நிம்மதி அற்றவராகவே இருந்து வந்தார். அதற்குக் காரணம், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை அல்ல, தனிப்பட்ட சூழல் அல்ல. சமூகத்தினுடைய சூழல்.

"முன்பெல்லாம் பொதுவாழ்க்கையில் ஈடுபடுகிறவர்கள் மீது மக்கள் மரியாதை வைத்திருப்பார்கள். இப்போதெல்லாம் நான் பொது வாழ்க்கையில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதற்கு அவமானமாக இருக்கிறது' என்று அவர் சொன்னார். பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் மீது மக்கள் கொண்டிருக்கக்கூடிய கருத்து நம்மீதும் வந்து விழுகிறது. எனவே, ஓடி ஒளிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எழுத்தோடு நிறுத்திவிடலாம். பொது இடங்களுக்குச் செல்வது, பொது நிகழ்வுகளில் பங்கேற்பது, பொதுக் கூட்டங்களில் பங்கேற்பது என்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கருதிக் கொண்டிருந்தார். அந்த அளவிற்குப் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும்; சமூக அக்கறையோடு இருக்க வேண்டும்; தன்னொழுக்கத்தோடு இருக்க வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக, மிக அழுத்தமாக இருந்தவர். எனவேதான் அவர் ஏற்றுக்கொண்ட தத்துவத்திற்கும், அவர் காணக்கூடிய சமூக ஒழுங்குகளுக்கும் நடைமுறைகளுக்கும் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகள், பாரதூரங்களைக் கண்டுதான் அவர் மிகப்பெரிய மனவேதனையுற்றார் என்று சொல்ல வேண்டும்.

அவர் நம்பியவை எதுவும் சமூகத்தில் நடைபெறவில்லை. அவர் நம்பியது எதையும் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவேதான் அவர் சமூகத்தைக் கண்டு அச்சமுறத் தொடங்கினார். சமூகத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று எண்ணினார். கடைசி காலங்களில் அவருக்கு மிகவும் நிம்மதியைக் கொடுத்தது எதுவென்று சொன்னால் - "விடுதலை இயக்க வேர்களும், விழுதுகளும்' என்ற கட்டுரைதான். மிகவும் மன ஒப்புதலோடு ஒரு தீவிர அக்கறையோடு அவர் அதைச் செய்து வந்தார். அவர் அந்த செய்திகளையெல்லாம் தொகுத்த விதத்தைப் பற்றி நீங்களெல்லாம் அறிவீர்களானால் மிகவும் பெருமைப்படுவீர்கள். நம்மோடு வாழ்ந்தவர் அவர். பட்டிதொட்டிகளெல்லாம் சென்றார். ஒரு தகவலிலிருந்து இன்னொரு தகவல், இன்னொரு தகவலிலிருந்து மற்றுமொரு தகவல் என்று ஒவ்வொரு வார்த்தையாக அவர் சேகரித்து வந்தார். அந்த அக்கறை இங்கிருக்கிறவர்களுக்கு வருமா என்று நம்மை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

அவருடைய எழுத்துகளை வளர்கின்ற இளைய தலைமுறையினர் மதிப்பதில்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால், தலித் எழுத்தாளர்கள் அல்லது சமூக மாற்றத்திற்காக எழுதக்கூடிய எழுத்தாளர்கள் யாரும் அவர் வாழும் காலத்தில், அவருடைய எழுத்து மீது மதிப்பு வைக்கவில்லை. அவர் ஆற்றிய அரும் பணிகளுக்காக அவர் பாராட்டப்பட்டது மிகவும் குறைவு. அண்மையில் தலித் ஆதார மய்யம் மட்டும்தான் அவருக்கு "விடுதலை வேர்' என்ற பட்டத்தை வழங்கியது. வேறு எந்த அமைப்புகளும், வேறு எந்த நிறுவனங்களும் மரியாதை செய்யவில்லை. அதை என்னிடம் சொல்லி அவர் ஆதங்கப்பட்டிருக்கிறார். இவ்வளவு உழைக்கிறோம், இவ்வளவு தேடிச் செல்கிறோம், இவ்வளவு பதிவு செய்கிறோம். தலித் வரலாற்றையே உருவாக்கிக் காட்டுகிறோம். ஆனாலும், சமூகம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. வாசிக்கிறார்கள். அதோடு போய் விடுகிறார்கள். ஏனென்றால், அவரைக் கடந்து அந்நிகழ்வுகளுக்கு ஒத்தாசையாக அதைப் பதிவு செய்ய வேண்டுமென்றோ, அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென்றோ எந்த தலித் அமைப்பு களும் ஈடுபடவில்லை. எந்த நிறுவனங்களும் பணியாற்றவில்லை. எனவேதான் அதை வாசித்துவிட்டு அந்த அளவில் நிறுத்தி விடுகிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொண்டார். அது உண்மைதான். அதை மக்களிடம் கொண்டு செல்வதற்கான வேலைகளைக்கூட அவரே செய்வதாகி விட்டது. இன்றைக்கு அவருடைய இடத்தை நாம் எப்படி சரி செய்யப் போகிறோம் என்ற மிகப் பெரிய கேள்வி நம்முன் எழுந்து நிற்கிறது.

அவர் இறந்ததை அவருடைய குடும்பம் தாங்கிக் கொள்ளும். அதிலிருந்து மீண்டுவிடும். ஆனால், இன்று தலித் அரசியலைப் பேசுகிறவர்கள், சமூக மாற்றத்திற்காகப் போராடுகிறவர்கள், அவருடைய இடத்தை எப்படி சரி செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரமிது. அவர் மிகப்பெரிய ஒரு வரலாற்றை, திருப்பத்தை உருவாக்கினார் என்று நான் சொல்வேன். நீங்கள் இன்னும் பத்தாண்டு காலம் கழித்துப் பார்க்க வேண்டும். வள்ளிநாயகம் எழுதிய ஒவ்வொரு எழுத்தும் வரலாறாகப் போகிறது; ஆவணமாகப் போகிறது. எனவேதான் இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு வள்ளிநாயகம் அவர்கள், எந்த அளவுக்கு மிக முக்கியமான பணியாற்றியிருக்கிறார் என்பதை தலித் அரசியல் உலகம் அறியப் போகிறது. அந்த அளவுக்கு மிகத் துடிப்பாக, மிக ஆழமாகப் பணிகளைச் செய்து வந்தவர். அவர் இறுதியாக அம்பேத்கருடைய பவுத்தத்தில் வந்து நின்றார். தனது வாழ்க்கையை அப்படி மாற்றவும் செய்தார். ஏனென்றால், இந்த இந்திய சாதிய சமூகத்தில் மிக முழுமையான விடுதலையை, அம்பேத்கரிய பவுத்தம்தான் பெற்றுத் தரும் என்று அவர் நம்பினார். அந்த அடிப்படையில் அவர் பணியாற்றத் தொடங்கினார். அவருடைய கடைசி நூல்கூட "அம்பேத்கருடைய ஆசான் புத்தர்' என்ற நூல்தான். அதற்குப் பிறகு ஏராளமான திட்டங்களை வைத்திருந்தார். அவருடைய பட்டியலில் இருந்த நூல்கள் பல. அவற்றில் மிக முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் தேக்கம்பட்டி பாலசுந்தர்ராஜ். எனவே, அவர் விட்டுச் சென்றிருக்கின்ற பணியை நாம் எவ்வகையில் நிறைவேற்றப் போகிறோம் என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டும்.

Azhakiya Periyavan
நான், "மாற்றுப் பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் பேரவை' நடத்திய இரங்கல் கூட்டத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். அதை இப்போதும் கூற விரும்புகிறேன். மதிப்பிற்குரிய அண்ணன் வள்ளிநாயகம் விட்டுச் சென்ற பணி இமாலயப் பணி. அந்தப் பணியை செய்வதற்கு, இன்றைக்கு ஆய்வு நோக்கில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய இளம் எழுத்தாளர்கள் மிகத் தீவிரமாக முன்வர வேண்டும். அவர் எழுதி வைத்திருக்கக்கூடிய பட்டியல்களை எப்போது வேண்டுமானாலும் தோழர் ஓவியா அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். அந்தப் பணியினைத் தேடிச் சென்று, தொடர்ச்சியாக அந்த விடுதலை இயக்க வேர்களும், விழுதுகளும் என்ற தொடர் இடையில் நின்று போய் விடாதபடி செய்ய வேண்டியது நம் வரலாற்றுக் கடமை.''

அழகிய பெரியவன் : "இங்கு தோழர் குறிப்பிட்டது போல, தன்னுடைய அறிவு மேதமையை அல்லது தன்னுடைய சிந்தனை ஆற்றலை அல்லது தன்னுடைய எழுத்தாளுமையை - யாரிடமும் திணிக்காத அல்லது காட்டிக் கொள்ள விரும்பாத ஓர் உண்மையான ஆளுமையாகத்தான் தோழர் வள்ளிநாயகம் அவர்கள் இருந்தார். குறிப்பாக தோழர்களே! தமிழகத்திலே எழுத்தாளர்களுடைய நிலைமை இன்று எப்படி இருக்கிறது? நான் பொதுவாக எழுத்தாளர்கள் என்று எல்லோரையும் சொல்வதற்கு விரும்பவில்லை. குறிப்பாக, அரசியல் சார்ந்து கருத்தியல் நிலையிலே ஒரு சரியான நிலைப் பாட்டினை எடுத்துக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கக்கூடிய எழுத்தாளர்களுடைய நிலைமை என்பது, இன்றைக்கு எப்படி இருக்கிறது என்பதை நாம் யோசிக்கிறபொழுதுதான் வள்ளிநாயகம் அவர்களுடைய இறப்பை, இந்தச் சமூகம் எப்படி எதிர்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி புரிந்து கொள்ள முடியும் என்று நான் கருதுகிறேன்.

ஒன்று, இங்கு எழுத்தாளன் என்பவன் திரைப்படம் சார்ந்தவனாக இருக்க வேண்டும். அப்போது அவன் எழுதுகிற எல்லா குப்பைகளையும் எழுத்துகளாக மிகுந்த மேதமை கொண்ட பெட்டகங்களாக இங்கே இருக்கக்கூடிய கூட்டம் கொண்டாடும். அத்தகைய நிகழ்வு களுக்கு முதல்வர்கூட வருகிறார். அமைச்சர்கள் வருகிறார்கள். அவர்கள் சொல் விளையாட்டு என்று சொல்லக்கூடிய அடிப்படையிலே சில வார்த்தைகளைப் போட்டு, மிக ஆபாசமாக எழுதப்பட்ட வரிகளைக்கூட மெச்சி, இரண்டு மூன்று மணிநேரம் அந்த நிகழ்ச்சி நடக்கிறது. இன்னொரு பக்கம் நாம் பார்த்தோம் என்று சொன்னால், அதிகார அரசியல் சார்ந்து எந்த எழுத்தாளன் இயங்கிக் கொண்டிருக்கிறானோ, அவன் கட்டாயமாக ஏதோ ஒரு விஷயத்திற்கு அடிவருடியாக இருக்க வேண்டும். அவனுக்கு சுயமரியாதை இருக்கக் கூடாது. அவனுக்கு ஒரு தன்னம்பிக்கையோ - கருத்துத் தெளிவோ - சிந்தனையோ இருக்கக் கூடாது. அப்படியாக இருக்கக்கூடிய எழுத்தாளனுக்கு இங்கே மதிப்பு இருக்கிறது, மரியாதை இருக்கிறது.

ஆனால், வள்ளிநாயகம் போன்று கருத்தியல் சார்ந்து எழுதிக் கொண்டிருக்கக்கூடிய எழுத்தாளனுக்கு, இங்கே எப்படியான மரியாதை இருக்கிறது? மக்கள் மத்தியிலே அவர் என்றைக்குப் பேசப்படுகிறார்; ஏற்றுக் கொள்ளப்படுகிறார் என்கின்ற விஷயங்களென்பது, இங்கு ஆழமான விவாதத்திற்குரிய ஒன்று. தோழர்களே! இரண்டு புத்தகங்களை எழுதிய அல்லது மூன்று புத்தகங்களை எழுதியவர்களுடைய இழப்புகளெல்லாம், ஏதோ தமிழ் எழுத்தே செத்து விட்ட மாதிரியாக இங்கே துக்கித்து கொண்டாடப்பட்டது. அதுவே அவர்களுக்கான மிகப் பெரிய அடையாளமாக மாற்றப்பட்டது. அவர்களுடைய படங்கள் தாங்கிய புத்தகங்கள், இதழ்கள் வெளிவந்தன. அண்மையிலேகூட வெளிவந்திருக்கிறது. ஆனால், வள்ளிநாயகத்தின் எழுத்தென்பது இந்த பத்திரிகைகளிலே எப்படியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை நாம் மிக கவனமாக யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

உங்களுக்கு மணிரத்னம் என்ற இயக்குநரைத் தெரியும். அவருடைய சகோதரர் சமீபத்திலே இறந்து போய்விட்டார். அவருடைய பங்களிப்பு என்பது, இந்தச் சமூகத்திலே எதுவுமே கிடையாது. ஒரு பார்ப்பனக் குடும்பத்திலே வந்தவர். சில திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு உதவியாக இருந்தவர். ஆனால், அவருடைய இறப்பு என்பது "இந்து' நாளேட்டினுடைய "தேசிய பக்க'த்திலே ஒரு நீளமான செய்தியாக வருகிறது. யோசித்துப் பாருங்கள். வள்ளிநாயகத்தினுடைய பங்களிப்பு என்பது இங்கே இருக்கக்கூடிய வணிக நாளேடுகளிலே ஒரு சின்ன பெட்டிச் செய்தியாகக்கூட வரவில்லை என்று சொன்னால் - ஒரு வெட்கங்கெட்ட, சுரணையற்ற மக்களாக, ஒரு நாடாக நாம் இருந்து கொண்டிருக்கிறோம். இதற்கு யார் பொறுப்பேற்க முடியும் என்கின்ற கேள்விகளை எழுப்பிக்கொள்ள வேண்டும்.

"தலித் முரசு' இதழிலே என்னுடைய "மீள்கோணம்' பக்கத்திலே சந்திரமோகன் என்று சொல்லக்கூடிய ஓவியர் தாக்கப்பட்ட செய்தியை நான் பதிவு செய்திருக்கிறேன். இது "இந்து' பத்திரிகையிலே தொடர்ச்சியாக வெளிவந்தது. இங்கே இருக்கக்கூடிய ஆங்கிலப் பத்திரிகைகளிலே எல்லாம் வந்தது. கடைசியாக அக்கட்டுரையை இப்படி நான் முடித்திருந்தேன். எழுத்தாளர்கள், கலைஞர்கள் மத்தியிலே மிகக் கடுமையான ஒரு மவுனம் தமிழகத்திலே நிலவிக் கொண்டிருக்கின்றது; அது எந்த மாதிரியான மவுனம் என்று எனக்குத் தெரியவில்லை என்று சொன்னேன். அது உண்மை தான். ஒரு மனிதன் தாக்கப்பட்டால் மட்டுமல்ல, ஒரு மனிதன் புறக்கணிக்கப்பட்டால் மட்டுமல்ல, ஒரு மனிதன் இறந்தே போனால் கூட இந்தச் சமூகம் திரும்பியே பார்க்காத ஒரு சமூகமாக இருந்து கொண்டிருக்கிறதே என்று நினைக்கிறபோது, மிகுந்த வேதனையாக இருக்கிறது.

சீனுவா ஆச்சுபே என்ற எழுத்தாளனின் பேட்டி யுனெஸ்கோ கூரியரிலே வெளிவந்தது. அதிலே அவர் மிக அற்புதமாக சொல்லியிருப்பார். ஒடுக்கப்பட்டவர்கள் அல்லது வேட்டையாடப்பட்டவர்கள், தங்களுடைய வரலாறுகளைத் தாங்களே எழுதிக் கொள்ளாமல் இருக்கின்றவரைக்கும் - அவர்களுடைய வரலாறு என்பது, வேட்டையாடுகிறவர்களுடைய வரலாறாகத்தான் இருக்கும் என்று அவர் சொல்லியிருப்பார். அது உண்மைதான். வள்ளிநாயகத்தினுடைய மிகப் பெரிய பங்களிப்பு எதுவாக இருக்கும் என்று சொன்னால், அது ஒடுக்கப்பட்ட மக்களுடைய தலைவர்களை அவர் அகழ்ந்தெடுத்து எழுதிய அந்த வரலாறுகள் என்றுதான் சொல்ல முடியும். ஓர் ஆய்வு நோக்கிலே பழைய தலைவர்களை எடுத்து எழுதுவது மிகுந்த கடுமையான வேலை. என்னைப் பார்ப்பதற்காக புதுடெல்லியில் இருந்து சகானா என்றொரு ஒரு ஆய்வு மாணவர் வந்திருந்தார். அந்தப் பெண்மணி என்னிடம் பேசுகிறபோது ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். ஒரிசாவிலே பயணம் மேற்கொண்டு இருந்தபோது ஒரு 500 ஆண்டுகால வரலாறுகளை உள்ளடக்கிய பதிவுகளை பார்ப்பனக் குடும்பங்கள் வைத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, பழங்குடியினருக்கு அப்படியான எந்தவொரு பதிவுகளும் வரலாறுகளுமே இல்லை. இது, மிகுந்த வருத்தத் தையும் வேதனையையும் தரக்கூடியதாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.

நான் ஜே.ஜே. தாஸ் அவர்களைப் பற்றி எழுதுவதற்காக கிட்டத்தட்ட 30, 40 பேர்களைச் சந்தித்தேன். அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்தவர்களிடம்கூட, அவர் நடத்திய பத்திரிகையின் ஓர் இதழ்கூட இல்லை. அதனுடைய அட்டையின் ஒளிப்பட நகல் மட்டுமே இன்று இருந்து கொண்டிருக்கிறது. இப்படித்தான் நம்முடைய வரலாறுகள் இருக்கின்றன. ஜே.ஜே. தாஸ் இறந்து ஒரு 50, 60 ஆண்டுகள்தான் ஆகியிருக்கும். ஆனால், அந்தக் கட்டுரை வெளிவந்த பிறகு இப்படி எழுதியிருக்கிறீர்கள், அப்படி எழுதியிருக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகின்ற போக்கெல்லாம் இருந்தது. நான் எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்று சொன்னால், எத்தனை ஆளுமைகளைத் தோண்டியெடுத்து ஏபி. வள்ளிநாயகம் அவர்கள் எழுதியிருக்கிறார். அவர் எத்தனை எதிர்ப்புகளைச் சந்தித்திருக்க வேண்டும்; எத்தனை சவால்களை சந்தித்திருக்க வேண்டும்.

ஏபி. வள்ளிநாயகம் அவர்கள் ஒரு கருத்தியல் ஆயுதத்தைக் கூர்தீட்டி, நம்மிடம் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். மிகச் சரியாக அதைச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், எர்னஸ்டோ கார்டினல் என்று சொல்லக்கூடிய ஒரு கவிஞன் - ஒரு போராளியை, போராட்டக் குழுவிலே இருக்கக்கூடிய ஒருவரைப் புதைக்கும்போது - அதற்காக ஒரு கவிதையை அவர் எழுதுகிறார் :

நீங்கள் செய்தது வேறு ஒன்றுமல்ல;
ஒரு விதையைப் புதைத்ததுதான்

அந்தக் கவிதை அப்படியாகத்தான் முடிகிறது. எனவே, விதையைப் போன்ற ஒரு விஷயத்தை, ஒரு ஆலமரமாக வளரக்கூடிய விதைகளை வள்ளிநாயகம் இனம் காட்டிவிட்டுப் போயிருக்கிறார். ஒரு மிகப் பெரிய விருட்சமாக வளரக் கூடிய ஒரு ஆயுதத்தைத்தான் தோழர் அவர்கள் இங்கே நம்முடைய தமிழுக்கு கையளித்து விட்டுப் போயிருக்கிறார்; தலித் மக்களுக்கு கையளித்து விட்டுப் போயிருக்கிறார் என்று நான் மிக உறுதியாக நம்புகிறேன். ஓர் அற்புதமான ஹைக்கூ கவிதை -

Yakkan
வீழ்ந்த மலர்
கிளைக்குத் திரும்புகிறதா
அட! வண்ணத்துப்பூச்சி

இந்தக் கவிதை ஜென் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. கிளையிலிருந்து மலர் உதிர்கிறபோது, ஒரு வெற்றிடம் உருவாகிறது. அந்த வெற்றிடத்தை இயற்கை அப்படியே விட்டுவிடுவதில்லை. ஒரு பட்டாம்பூச்சி அங்கே போய் உட்காருகிறபோது, அந்த இடம் நிரப்பப்படுகிறது என்று சொல்லக்கூடிய ஒரு தத்து வார்த்த அம்சம் அந்தக் கவிதைக்குள்ளே இருக்கிறது. "ஏபி' என்று சொல்லக்கூடிய ஒரு மலர் விழுந்துவிட்ட பிறகும்கூட, அவருடைய தத்துவமே; எழுத்தே அங்கே பட்டாம்பூச்சியாக உட்கார்ந்து, அவருடைய இடத்தை நிரப்பியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்த மட்டிலே அவருடைய நினைவுகளுக்கு வீரவணக்கத்தை செலுத்தி விடைபெறுகிறேன்.

****

"ஜாதியற்றவராக வாழ்ந்தவர் ஏபி''

போராட்டமே வாழ்க்கையென வாழ்ந்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் மிகப்பெரிய குறையே, தன் போராட்ட வரலாற்றைப் பதிவு செய்யத் தெரியாததும் தவறுவதும்தான். இம்மாபெரும் பிழையைச் சரி செய்தவர், சமநீதி எழுத்தாளர் வள்ளிநாயகம் அவர்கள். இப்போராளிக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு, ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் 24.6.2007 அன்று கோவையில் எழுச்சியுடன் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, பேரவையின் அவைத் தலைவர் களப்பிரர் தலைமை வகித்தார்.

பேரவைப் பொதுச் செயலர் நீலவேந்தன், அருந்ததியர் விடுதலையே அனைவர்க்கும் விடுதலை எனும் முழக்கத்தில் மாறுபாடில்லாதவர் வள்ளிநாயகம். சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமே இல்லாமல் வாழ்ந்து காட்டிய தலைவர். அவர் காண விரும்பிய சாதி ஒழிந்த சமத்துவமான, மூடநம்பிக்கையற்ற சுரண்டலற்ற சமுதாயம் அமைக்க - நம்மை இழப்பதே நாம் அவருக்கு செலுத்தும் வீரவணக்கம் என்றார். தொடர்ந்து பேசிய பெரியார் தி.க. பொதுச் செயலாளர் கு. ராமகிருட்டிணன், திராவிடர் கழகத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியது மற்றும் தி.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, வள்ளிநாயகம் அவர்களுடன் பணியாற்றியது உள்ளிட்ட நினைவு களைப் பகிர்ந்து கொண்டதோடு, தோழர் வள்ளிநாயகம் அவர்களின் எழுத்துப் பணியையும், சமூகப் பணியையும் பெருமையுடன் கூறினார்.

ஏபி. வள்ளிநாயகத்தின் மகன் ஜீவசகாப்தன், சூத்திரர்களின் அடிமைநிலையைப் போக்குவதற்காக பார்ப்பனர்களை எதிர்த்துப் போராடியதால் பஞ்சமர்களாக்கப்பட்ட வரலாற்றைச் சொல்லி - தீண்டாமை, சாதி ஒழிய போரிட்ட தனது தந்தை இறுதிவரை சாதியற்றவராக வாழ்ந்ததோடு, தன்னையும் சாதியற்றவராகவே வளர்த்ததாக குறிப்பிட்டார். அவர் அருந்ததியர் விடுதலைப் போராட்டத்தில் அதிக அக்கறை கொண்டிருந்ததால்தான் ஆதித்தமிழர் பேரவையின் ஓர் அங்கமாக இருந்தார் என்றும், தன்னுடைய குடும்பத்தார் நினைவேந்தல் கூட்டங்களை நடத்தும் முன்பே 6 அமைப்புகள் நினைவேந்தல் கூட்டங்களை நடத்தியுள்ளது, அவர் அமைப்புகளையே சொந்தமாக நினைத்து வாழ்ந்ததற்குரிய அங்கீகாரம் என்றார்.

நிறைவாக, பேரவை நிறுவனர் அதியமான் தமது வீரவணக்க உரையில், பசியோடும் பட்டினியோடும் நடந்து திரிந்து இயக்கப் பணியாற்றும் தோழர்களை, தன்னுடைய நகைச்சுவை உணர்வால் பசியையும் சோர்வையும் மறக்கச் செய்யும் ஆற்றல் படைத்தவர் வள்ளிநாயகம். தான் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பெண்களுக்கும் அருந்ததியர்களுக்கும் உரிய முக்கியத்துவத்தை அளித்து, அதனாலேயே சமநீதிப் போராளி என்று பெயர் பெற்றõர். சேரிகளில் நிகழும் ஒவ்வொரு வன்முறையும், தீண்டாமைக் கொடுமையும், இழிவுகளும் பார்ப்பனியம் வெல்வதையும், பார்ப்பனிய எதிர்ப்பில் முகிழ்த்த பவுத்தம் தோற்பதையுமே காட்டுகிறது. எனவே, பவுத்த மீட்டுருவாக்கத்தை உறுதிப்படுத்த முயல்வதே அவருக்கு நாம் செலுத்தும் வீரவணக்கம் என்றார்.
Pin It