தண்டனையிலும் வர்ணாசிரமம்!

Thikar Jail
இந்திய சிறைகளில் 3,58,177 குற்றவாளிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் இருப்பதாக அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பெண்களின் எண்ணிக்கை 14,000 இந்திய சிறைகளின் கொள்ளளவு 2,48,439. ‘பதினைந்து ஆண்டுகளாக சிறையில் வாடும் பெண்களை, மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்து விடலாம்' என்று பெண்களுக்கான நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், நல்ல பரிந்துரைகள் மட்டும் வழக்கம்போல சிறைப்படுத்தப்பட்டு விடும். தேசிய மனித உரிமை ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி (டிசம். 2005), அல்லலுறும் 14,000 பெண்களில் 12.5 சதவிகிதப் பெண்கள் இளம் தாய்மார்கள். மேற்கு வங்கத்தில்தான் அதிகளவில் குழந்தைகளுடன் பெண்கள் சிறையில் வாடுகின்றனர்.

இவ்வரிசையில் அதற்கடுத்து இருப்பது உத்திரப் பிரதேசமும், ஜார்கண்டும்தான். இந்தத் தகவல்களை ‘அவுட்லுக்' ஏடு (25.6.07) வெளியிட்டுள்ளது. அண்மையில் நம்முடைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மரண தண்டனைக்கு எதிராகவும், சிறையில் பல ஆண்டுகளாக வாழும் முதியவர்களை விடுவிக்கலாம் என்றும் பரிந்துரைத்திருந்தார். இருப்பினும், அரசு நிர்வாகமும், பொதுப்புத்தியும் இக்கருத்துக்கு எதிராக இருக்கிறது. ஆனால், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி சங்கராச்சாரி மட்டும் வெளியே சுதந்திரமாக அருளாசி வழங்குவதை, பொதுப் புத்தியும் அரசும் அனுமதிக்கிறது. ஒருபுறம் குழந்தைகளுடன் பெண்கள் சிறையிலும்; மறுபுறம் பெண்களுடன் (இருந்த) சங்கராச்சாரி வெளியிலும். அதுதான் மநுதர்மம்.

ஜாதி உற்பத்தி 24 X 7

மக்களை அளவுக்கு அதிகமான போதையில் ஆழ்த்துகின்ற தொலைக்காட்சிகள் போதாதென்று, இந்து ஆன்மிகத்திற்காகவென்றே ‘பிருந்தாவன்' என்றொரு தொலைக்காட்சி 25.6.07 அன்று சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. அதைப் பத்தோடு பதினொன்று என்று நினைப்பதால்தான் அதற்கு எதிராக யாரும் பேசவில்லை. ஆனால், தற்பொழுது இருக்கின்ற எல்லா தொலைக்காட்சிகளை விடவும் இது பயங்கரமானது. ஏனெனில், இது ஜாதியை உற்பத்தி செய்வதோடு, அதை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் உதவுகிறது. அதில் குழந்தைகள் ஆன்மிகம், ராமாயணம், மகாபாரதம், இதிகாசம், புராணக் கதைகள், சமயச் சொற்பொழிவுகள், ராசிபலன்கள், சாய் பஜன், தினசரி வழிபாடுகள் போன்றவற்றை முழு நேரமும் ஒளிபரப்புகிறார்களாம்.

இத்தொலைக்காட்சியை, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவருமான ரத்தினவேல் பாண்டியன் தொடங்கி வைத்துப் பாராட்டியிருக்கிறார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தாங்கள் ஏன் பிற்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பது, மிகப்பெரிய பதவிகளை வகித்த பிறகும் கூட தெரிவதில்லை என்பது வெட்கக்கேடனாது. இந்நாட்டின் கல்விமுறையும் பிற்படுத்தப்பட்ட நிலையைக் களைவதாக இல்லை என்பதும் கேவலமானது. இந்துத்துவத்திற்கு/இந்து தேசியத்திற்கு மிகமிக அடிப்படையாக இருப்பது இந்து ஆன்மிகம்தான். அது கடவுள், சடங்குகள், சமயச் சொற்பொழிவுகள், கீதை உபன்யாசங்கள் என்ற பெயரில் - பிறப்பு முதல் இறப்பு வரை சர்க்கரை தடவிய நஞ்சுபோல மக்கள் சிந்தனையில் ஆழமாக வேரூன்றப்படுகிறது.

ஜாதியின் வேர்கள் இதில் ஒளிந்திருப்பதை நுணுக்கமாகப் புரிந்து கொள்ளாதவரை, அதன் வெளிப்பாடுகளான - ஏற்றத்தாழ்வுகளையோ, பெண்ணடிமைத்தனத்தையோ, தலித்துகள் மீதான வன்கொடுமைகளையோ ஒருபோதும் தடுத்துவிட முடியாது. புரிந்து கொண்ட பிறகுதானே அதை அழிப்பதற்கு செயலாற்ற முடியும்? சமூக ஆர்வலர்களுக்குக்கூட, இத்தகைய கேடுகள் ஆன்மிகத்தின் பேரால் மறைந்திருப்பதால் இனம் காண முடிவதில்லை. அதற்கு அம்பேத்கரும், பெரியாரும் தேவைப்படுகிறார்கள் - படமாக அல்ல; பாடமாக. இத்தகைய ஜாதி பயங்கரவாதத்தை அகிம்சை முறையில் மக்களின் சிந்தனையில் விதைக்கும் ஆன்மிகத் தொலைக்காட்சியின் நோக்கம் என்ன தெரியுமா? உலக அமைதியைப் பரப்புவதாம்! தேசியம், ஆன்மிகம், காந்தியம்... இவற்றையெல்லாம் சுரண்டிப் பார்த்தால்தான் - அதன் பின்னால் அதிநவீன வசதிகளுடன் ஒளிந்திருக்கும் பார்ப்பனியத்தைக் கண்டுபிடிக்க முடியும். இக்கவர்ச்சி ஒளியில் மயங்குபவர்களின் நிலை விட்டில் பூச்சி நிலைதான்!

அம்பேத்கர் தீர்வை அலட்சியப்படுத்தாதீர்

சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தனித் தொகுதி பஞ்சாயத்துகளில் உள்ள 33 கிராமங்களில், தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 40 தனித் தொகுதி பஞ்சாயத்துகளில் உள்ள கோயில்களில், தலித்துகள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. 48 பஞ்சாயத்துகளில் சாவு செய்தி சொல்வதற்கும், செத்த மிருகங்களை அகற்றவும் - தலித்துகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், துணை சுகாதார நிலையங்களிலும் நியாய விலைக் கடைகளிலும், பள்ளிகளிலும் - தலித்துகளுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது. 11 பஞ்சாயத்துகளில் பெண்கள் கழிப்பிடங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேறு சில பஞ்சாயத்துகளில் தலித்துகளுக்கு முடிவெட்டிக் கொள்ளவும் அனுமதி இல்லை. மேற்குறிப்பிடப்பட்டுள்ளவை எல்லாம் தனித்தொகுதி பஞ்சாயத்து தலைவர்கள், பகிரங்கமாக கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலங்கள். அதுமட்டும் அல்ல. அவர்களும் இத்தகைய தீண்டாமைக்கு ஆட்பட்டுள்ளனராம்! இத்தகு தீண்டாமைக் கொடுமைகளை ‘எவிடன்ஸ்' என்ற அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது (‘தி இந்து', 25.6.07). அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு சுதந்திரமான ஒரு குழுவை அமைத்து, ‘தீண்டாமை கிராமங்கள்' என அறிவிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தலித்துகளுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளைப் பட்டியலிட்டு - அரசுக்கும், ‘ஜாதி இல்லை' என சாதிக்கும் இந்து சமூகத்திற்கும் ஆதாரத்துடன் சொல்வது ஒரு வழிமுறை. ஆனால், வன்கொடுமைகளைப் பட்டியலிடுவது மட்டுமே, ஒருபோதும் வன்கொடுமைகளைத் தடுத்துவிடாது. பரபரப்புக்காக வன்கொடுமைகளைப் பட்டியலிட பத்திரிகைகளும் தயார்தான். ஆனால், இதற்கான தீர்வுகளைக் காணவும், வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளுக்குமே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

இன்றல்ல, பல நூற்றாண்டுகளாக தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகள் இழைக்கப்பட்டு வருகின்றன என்பதை யார் மறுக்க முடியும்? இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறை தலித் ஒருவர் வன்கொடுமைக்கு ஆளாகிறார் என்று அண்மையில் வெளிவந்த அரசு ஆவணங்களே சான்று பகர்கின்றன. எனவே, தீண்டாமைக்கு எதிராக மட்டுமே செயல்படுவது பயனளிக்காது. ஏனெனில், ஜாதி அமைப்பை சிதைத்தாக வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்து கிறார். இத்தீர்வு மட்டும் சமூக ஆர்வலர்களாலும், இயக்கவாதிகளாலும் கவனமாகத் தவிர்க்கப்படுகிறது. சமூக மாற்றத்தில் உண்மையான அக்கறை உள்ளவர்கள், சாதி அமைப்பைத் தகர்ப்பதற்குரிய பணிகளில் அல்லவா முழு வீச்சுடன் இறங்க வேண்டும்?

ஜாதி - சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும்

அண்மையில் மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட மூன்று முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் முக்குலத்தோர் சாதியினர். காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராசேந்திரன், செல்லூர் கே. ராசு - அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. வேட்பாளர் கே. சிவமுத்துக்குமார் ஆகிய அனைவருமே பிரமலைக்கள்ளர்கள். அதிலும் ஒரு வர்ணாசிரமம்; பார்ப்பன ஜனதா கட்சி, சசிராமன் என்ற பார்ப்பனரை நிறுத்தியது. இவர்களுடைய வெற்றிக்கு அக்கட்சிகளில் உள்ள அனைத்து சாதியினரும் உழைப்பதுதான் - ஜனநாயகம் என்று போற்றப்படுகிறது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது, கையூட்டு, கள்ள ஓட்டு என்றெல்லாம் மாறி மாறி குற்றம் சுமத்தும் கட்சிகள் எதுவும் - ‘ஜாதி அரசியல்' பற்றி மட்டும் வாய் திறப்பதில்லை. நம்ம ‘சமத்துவப் பெரியார்' இதை எல்லாம் கண்டு கொள்வதே இல்லை.

ஜாதியை ஒழிப்பதற்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்கிறார்கள். ஆனால், அரசியல் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களும், 2011இல் ஆட்சியைப் பிடிப்போம் என்பவர்களும், கம்யூனிஸ்ட் மற்றும் தலித் கட்சியினரும் - அரசியலில் இருக்கும் ஜாதியை எப்படி ஒழிக்கப் போகிறார்கள்? அரசியல் அதிகாரத்தில் கோலோச்சும் ஜாதியை ஒழிக்க, (ஜாதி) சர்வாதிகாரம் வேண்டும் என்பார்களோ?!
Pin It