மாயாவதியின் பிரச்சாரங்களில் அண்ணல் அம்பேத்கர் அதிகம் இடம் பெறுகிறார். ஆனால், அரசியல் சட்டத்தின் தந்தை உண்மையில் அவரது அரசியலைப் பாராட்டியிருப்பாரா? இடம்: லக்னோ. மே 13, 2007 நடு இரவை கடந்துவிட்டது. மாயாவதி மிகவும் களைப்பாக இருந்தார். உத்திரப் பிரதேச முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்விற்காக, அவர் நாள் முழுவதும் ஆளுநரின் இல்லத்தில் இருந்தார். அய்ம்பது அமைச்சர்களைக் கொண்ட அவரது அமைச்சரவைக் குழு பின் தொடர, லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில், ஒளிப்படக் கருவிகள் மின்ன... அது உண்மையிலேயே ஒரு பிரமாண்டமான நிகழ்வாக இருந்தது. ஒரு தொலைதூர ஓட்ட வீரர் தன் இலக்கை அடைந்ததைப் போன்ற மனநிலையில், பெரும் உற்சாகத்தோடும், அதே நேரத்தில் முழுத்திறனையும் பயன்படுத்தி முடித்த களைப்பிலும் இருந்தார் மாயாவதி. தலையணையில் தலை சாய்த்த அடுத்த நொடியே அவர் கண்ணயர்ந்து விட்டார். அதன் பிறகுதான், அன்று மாலை அம்பேத்கர் பூங்காவில் அவர் மாலையிட்டு வந்திருந்த டாக்டர் அம்பேத்கரின் சிலை உயிர் பெற்று அவருடன் உரையாடத் தொடங்கியது.

டாக்டர் அம்பேத்கரும் மாயாவதியும் தற்பொழுது உரையாடினால், எப்படி இருக்கும் என்பதை அறிவியல் தத்துவவியலாளர் மீரா நந்தா கற்பனை செய்திருக்கிறார். ஆனால், இது வெறும் கற்பனை மட்டுமல்ல; ஆழமான கருத்தியலை உள்ளடக்கியதாக, இன்றைய தலித் அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

Ambedkar
அம்பேத்கர் : மாயாவதிஜி! உங்களை யும் உங்கள் தோழர்களையும் இப்பூங்காவில் இன்று காண்பதற்கு அற்புதமாக இருக்கிறது. என்னுடைய சக இந்தியர்கள் இந்த அளவு உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும், அளவு கடந்த நம்பிக்கையுடனும் வாக்களிக்கச் செல்வதைக் காண்பது, என் மனதுக்கு இதமாக இருக்கிறது.

மாயாவதி : பாபாசாகேப்! உங்களைப் பார்ப்பதில் நான் பெரும் ஆனந்தமடைகிறேன் (அம்பேத்கரின் பாதங்களை குனிந்து தொடுகிறார்).

அம்பேத்கர் : (சில அடிகள் பின்னால் சென்று கைகளைக் கூப்பி வணக்கம் சொல்கிறார்) தயவு செய்து என் முன்னாலோ, வேறு யார் முன்னாலோ, நீங்கள் உங்களைத் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். இது எனக்கு வேறொன்றை நினைவூட்டுகிறது. நீங்கள் மீண்டும் முதலமைச்சராகியிருக்கின்றீர்கள். நீங்கள் பல இடங்களில் என்னுடைய சிலைகளை நிறுவி வருகின்றீர்கள். அதை நிறுத்தி விடுகிறீர்களா? நீங்கள் கடந்த மூன்று முறை ஆட்சியில் இருந்தபோதும் இதைக் கொஞ்சம் அதிகமாகவே செய்துவிட்டீர்கள். வரி செலுத்துபவர்களின் பணத்தைச் செலவழிக்க - என்னுடைய சிலையை எழுப்புவதைவிட, வேறு பல நல்ல வழிகள் இருக்கின்றன.

மாயாவதி : ஆனால், பாபாசாகேப்! நீங்கள்தானே எங்களை வழிநடத்தும் ஒளிவிளக்கு. உங்கள் சிலைகள்தான் தலித் மக்களுக்குப் பெருமையையும், தன்னம்பிக்கையையும் ஊட்டுகின்றன.

அம்பேத்கர் : இம்மக்களின் போராட்டங்கள் என்னை மிகவும் பாதித்திருக்கின்றன. அவர்களுடைய சாதனைகளைக் கண்டு நான் உள்ளபடியே பெருமை கொள்கிறேன். ஆனால், அவர்களுக்கு உணர்வூட்ட என்னுடைய சிலைகள் தேவையில்லை. அவர்களுடைய உணர்வு களைத் தூண்டி விடவும், நெஞ்சுரத்தை அளிக்கவும் - நம்முடைய அரசியல் சாசனமே போதும். நான் என்னுடைய எழுத்துகளாலும், சிந்தனைகளாலுமே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

மாயாவதி : அப்படி என்றால், நாங்கள் உங்களுடைய சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதத்தைக் கண்டு நீங்கள் மிகவும் பெருமைப்பட வேண்டும். நாங்கள் உத்திரப் பிரதேசத்தில் தொடங்கி இருக்கிற சமூகப் புரட்சி என்பது, உங்கள் தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதேயன்றி வேறில்லை. கான்ஷிராம் அவர்கள் தலைவராக இருந்தபோது, பகுஜன் சமாஜ் கட்சியில் இருக்கும் நாங்கள், "பாபா தங்கள் நோக்கம் எதுவோ, அதைக் கான்ஷிராம் முழுமையாக நிறைவேற்றுவார்'' என்று சொல்வோம்.

அம்பேத்கர் : உங்களுடைய இந்த "சமூகப் புரட்சி'யைப் பற்றிதான் நானும் பேச வந்தேன். மாபெரும் கல்விமான்கள் எல்லாம் உங்களை மாஓவுடன் ஒப்பிடுவதை நானும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். இடதுசாரி பத்திரிகையாளர்கள், நீங்கள் பிரமிடு போன்ற சாதி அமைப்பைத் தலைகீழாக கவிழ்த்து விட்டதற்காக உங்களைக் கொண்டாடுவதையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சாதி இணக்கத்தை ஊக்குவித்ததற்காக, வலதுசாரி இந்துத்துவவாதிகள் உங்களைப் புகழ்ந்ததையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், மாயாஜி! உங்களைப் புகழ் பாடும் கூட்டத்தினருடன் நானும் இணைய முடியாது. நான் கனவு கண்ட புரட்சி இதுவல்லவே!

நான் சொல்வதைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். ஒரு ‘சமார்' சாதியைச் சார்ந்தவரின் பெண்ணாகப் பிறந்து, இந்தளவுக்கு உயர்ந்த பதவியை அடைந்திருப்பது கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீண்ட நெடுங்காலமாக வெறும் வாக்கு வங்கிகளாக மட்டும் கருதப்பட்ட தலித் சகோதரர்களை ஒருங்கிணைத்ததற்காக - உங்களையும், கான்ஷிராமையும் நான் பாராட்டுகிறேன். வெற்றி பெறும் ஓர் அரசியல் கூட்டணியை உருவாக்கிய விதத்தில், நீங்களும் உறுதியாக மாபெரும் அரசியல் நுணுக்கத்துடன் செயல்பட்டிருக்கின்றீர்கள். நீங்கள் சிறந்த சதுரங்க ஆட்டவீரர் என்று நான் உறுதிபடக் கூறுவேன். ஆனால்...

மாயாவதி : பாபாசாகேப்! எல்லாம் தங்களின் வழிகாட்டுதல்தான். நாங்கள் உங்களுடைய மாணவர்கள். நாங்கள் அம்பேத்கரியத்தைதான் பின்பற்றுகிறோம்.

அம்பேத்கர் : ஆனால், நீங்கள் எதை ‘அம்பேத்கரிசம்' என்று அழைக்கின்றீர்களோ, அதைக் கண்டு நான் சங்கடப்படுகிறேன். என்னுடைய தத்துவத்தின் சோகமான கேலிச்சித்திரமாகவே நான் இதைக் கருதுகிறேன். என்னைப் பொறுத்தளவில், ஜனநாயகம் என்பது, சடங்குப்பூர்வமான சமத்துவமோ, காலம்தோறும் நடைபெறும் தேர்தல்களோ அல்ல. உண்மையான ஜனநாயகம் என்பது, சகோதரத்துவம். இணைந்து வாழும் ஓர் கூட்டு வாழ்க்கை. தன்னுடைய சக குடிமக்களை மதிக்கும் பாங்கு. நம்முடைய சமூகத்தில் இத்தகைய ஜனநாயகம் வேரூன்ற வேண்டுமெனில், இயற்கையானதாகவும், நல்லிணக்கம் கொண்டதாகவும் தோன்றும் அனைத்து வகையான ஜாதி, வர்க்க மற்றும் பாலியல் நம்பிக்கைகளும் தகர்க்கப்பட வேண்டும். ஜாதியை அழித்தொழிப்பது என்று இந்தப் பொருளில் தான் நான் குறிப்பிடுகிறேன். எனவே, ‘அம்பேத்கரிசம்' என்று நீங்கள் பெயரிட்டுள்ள எனது தத்துவம், தேர்தலில் வெற்றி பெறுவது பற்றியது மட்டும் அல்ல. அது, சுதந்திரம், சமத்துவம், நீதி மற்றும் சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை அடித்தளமாகக் கொண்ட புதியதொரு சமூகத்தை உருவாக்குவதேயாகும். உங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது, என்னுடைய ‘ஜாதி ஒழிப்பு' நூலை தூசி தட்டி எடுங்கள். அச்சிறிய நூலில் நான் என்னுடைய தத்துவத்தின் சாரத்தை அளித்திருக்கிறேன்.

தலித்துகள் இந்த நாட்டின் ‘ஆளும் வகுப்பினராக' மாற வேண்டும் என்பதற்காக, அவர்கள் கூட்டணிகளை உருவாக்க வேண்டும் என்பது உண்மைதான். எடுத்துக்காட்டாக, என்னுடைய சுதந்திரத் தொழிலாளர் கட்சியில், நாங்கள் அனைத்து சாதிகளையும் சேர்ந்த தொழிலாளர்களுடனும், விவசாயிகளுடனும் இணைந்து பணியாற்றினோம். மேலும், விழிப்புணர்வு பெற்ற பார்ப்பனர்களும் ‘இரு பிறப்பாளர்'களும் (பிற ஆதிக்க சாதியினர்) பல்வேறு தருணங்களில் எனக்கு உதவி புரிந்தனர். நான் அவர்களுடைய கூட்டணியை நாடியது, அவர்கள் எனக்கு வாக்குகளைப் பெற்றுத் தருவார்கள் என்பதற்காக அல்ல; அவர்கள் என்னுடைய சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காகத்தான்!

இதற்கு மாறாக, வெறும் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதே உங்களுடைய கட்சியின் உச்சபட்ச குறிக்கோளாக இருக்கிறது. அதற்காக யாருடன் இணைந்திருக்கிறீர்கள் என்பது குறித்து நீங்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவர்களை நீங்கள் எப்படி கவர்ந்திழுத்தீர்கள்; உங்களிடம் கிடைத்திருக்கும் அந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகின்றீர்கள் என்பது குறித்தெல்லாம் நீங்கள் கவலைபட்டதாகத் தெரியவில்லை. முதலாளித்துவம், பார்ப்பனியம் மற்றும் மத மூடநம்பிக்கைகளை எல்லாம் முறியடிக்க, விரிவான மாற்று செயல்திட்டங்கள் எங்கே? இதற்கான அறிகுறிகளைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை.

மாயாவதி : ஆனால், பாபாசாகேப்! காலங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இப்போதெல்லாம் எல்லா அரசியல் கட்சிகளும் பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அதற்கு ‘சமூகக் கூட்டணி' என்று பெயர். ஏன், வெகு அண்மையில் சீக்கியர்களை இன்றளவும் இந்துக்களாகவே கருதும் பா.ஜ.க.வின் உதவியுடன் அகாலி தளம் பஞ்சாபில் ஆட்சிக்கு வந்ததே! காங்கிரஸ் கட்சி இத்தனை ஆண்டுகளாக அதிகாரத்தில் இருப்பதற்குக் காரணம், அது பார்ப்பனர்கள், முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளை உள்ளடக்கிய ஒரு பெரிய முகாமை உருவாக்கியிருப்பதால்தானே! உங்களுக்கே தெரியும், தலித்துகள் உ.பி.யில் 21 சதவிகிதம் மட்டுமே இருக்கிறார்கள். எனவே, ஒரு பெரிய முகாமை நாம் உருவாக்கி அதில் தலித்துகளைப் பொறுப்பாக வைக்காதவரை, நாம் ஒருபோதும் அதிகாரத்திற்கு வர முடியாது.

அம்பேத்கர் : நீங்கள் சொல்வது நூறு சதவிகிதம் சரி மாயாவதி! "அரசியல் மிக விந்தையான இணையர்களை உருவாக்குகிறது'' என்ற பழமொழியைப் போல, அனைத்துப் பெரிய அரசியல் கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அனைத்து வகையான ஒப்பந்தங்களையும் போடுகிறார்கள். ஆனால், எல்லாரும் அப்படி செய்கிறார்கள் என்பதற்காக, அது சரியாகி விடாது. இத்தகைய குதிரை பேரங்கள், ஜனநாயகத்திற்கு இழுக்கை ஏற்படுத்தி விடும். அடித்தளத்தில், இந்த நாடு இன்னும் சட்டங்களின் நாடாக ஆகிவிடவில்லை. மாறாக, அதிகாரத்தில் இருக்கும் மனிதர்களுடைய விருப்பு வெறுப்புகளின் தயவில் இருக்கும் நாடாகவே இருக்கிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் நிர்பந்தங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்தப் போட்டியில் ஏன் அம்பேத்கரிசத்தின் அடிப்படைக் கருத்தையே பலி கொடுக்கிறீர்கள்? சாதி அடிப்படையிலான திறமையான கணக்குகள்தான் - அரசியல் அதிகாரத்திற்கான வழிமுறை என்றும், அதுதான் அம்பேத்கரிசம் என்றும் நீங்கள் விளக்கம் அளித்தால், நான் ஒரு அம்பேத்கரிஸ்ட் அல்ல. அம்பேத்கரிசம் என்பது, தேர்தல் வெற்றிகளைக் கடந்து பலவற்றை உள்ளடக்கியது. அது ஒரு சமத்துவ, பகுத்தறிவான, பண்பாட்டு விழுமியங்களை உருவாக்குவதுடன் தொடர்புடையது. அது, நமது அரசியல் ஜனநாயகத்தை ஒரு மதச்சார்பற்ற சமூக ஜனநாயகமாக மாற்றுவது. "ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடுகளும் நிறைந்து கிடக்கும் நம்முடைய சமூக அமைப்பை சீர்திருத்தக்கூடிய அரசியல் ஜனநாயகமே நம்மிடம் உள்ளது...'' என்று நாடாளுமன்றத்தில் நான் காங்கிரஸ்காரர்களுக்கு நினைவூட்டியதைப் போல...

மாயாவதி : ஆனால், நம்முடைய சமூக அமைப்பை சீர்திருத்தவே நாங்கள் அதிகாரத்தை நாடுகிறோம். பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த நாங்கள் சாதியை ஒழிக்க உறுதி பூண்டுள்ளோம். ஆனால், நாங்கள் நடைமுறை ரீதியாக சிந்திக்கிறோம். சாதியத்தை முடிவுக்குக் கொண்டுவர சாதி கணக்கீடுகளை நாங்கள் நம்புகிறோம். உயர் சாதியினரை - எங்களுடைய நடுநாயக மான தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் ஏழை முஸ்லிம்கள் ஆகியோரை ஆதரிக்க வைப்பதன் மூலம் - ஒரு ‘சர்வஜன் சமாஜத்'தை நாங்கள் கட்டமைக்கிறோம். அது, ஒரு மாபெரும் முகாமாக தலித் தலைமையிலான அனைத்து சாதிகளையும் உள்ளடக்கிய வானவில் கூட்டணியாக இருக்கிறது.

அம்பேத்கர் : கோட்பாட்டளவில் எல்லாமே பிரமாதமாக இருக்கிறது. ஆனால், வருத்தத்திற்குரிய உண்மை என்னவெனில், ‘சர்வஜன் சமாஜ்' என்று சொல்லக்கூடிய சகோதர உணர்வு இந்தியாவில் நிலவவில்லையே! சதுர்வர்ணம் என்ற சொற்பிரயோகத்தை நாம் விட்டுவிட்டாலும்கூட, படிநிலைப்படுத்தப்பட்ட சமூகத்தை நியாயப்படுத்தும் உளவியல் சிந்தனை இன்றளவும் நிலவுகின்றதே!

மாயாவதி : சாதிய பாகுபாடுகள் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் இருப்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், இதை முறியடிக்கவே நாங்கள் தலித் தலைமையில் அனைத்து சாதிகளையும் ஓரணியில் கொண்டு வருகிறோம். அப்பொழுதுதான் அனைவருக்குமான சமத்துவக் கதவுகளைத் திறக்க முடியும்.

அம்பேத்கர் : உங்களுடைய கடந்தகால வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால்கூட, சாதி ரீதியான கூட்டணிகள், சாதியத்தை ஆழப்படுத்தியுள்ளதே ஒழிய, அதைக் குறைக்கவில்லை. நீங்கள் முதலமைச்சராக இருக்கும்போது, உங்களுடைய தலித் சமூகத்தை நீங்கள் அக்கறையுடன் கவனித்துக் கொண்டீர்கள்; முலாயம் சிங் பதவியில் இருந்தபோது, அவர் பங்குக்கு யாதவர்களை அவர் கவனமாகப் பார்த்துக் கொண்டார். நீங்கள் மீண்டும் முதலமைச்சராக ஆனபோது, தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்டங்களை உறுதியாக நடைமுறைப்படுத்தினீர்கள். ஆனால், உங்களுடைய பா.ஜ.க. ‘கூட்டணி'யினர் அதிகாரத்திற்கு வந்தபோது, அவர்கள் உடனடியாக அச்சட்டங்களைத் தளர்த்தினர். நீங்கள் 2002இல் மூன்றாவது முறை முதல்வராகப் பொறுப்பேற்றபோது, பா.ஜ.க.வின் ஆதரவை தக்கவைத்துக் கொள்ள - குஜராத்தில் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கு எதிராக செய்த இனப்படுகொலையைக்கூட மன்னித்து விட்டீர்கள். இவ்வளவு நடந்ததற்குப் பிறகு, நான் ஏன் உங்களுடைய வெற்றியைக் கொண்டாட முடியவில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

மாயாவதி : இதற்கு முந்திய தருணங்களில் எல்லாம் பகுஜன் சமாஜ் கட்சி அரசு, குறைந்த நாட்களே பதவியில் இருந்தது. இம்முறை, நாங்கள் அய்ந்து ஆண்டுகள் பதவியில் இருக்க முடியும் என்பதால், நாங்கள் அதிகளவில் நன்மை செய்பவர்களாக இருப்போம்.

அம்பேத்கர் : ஆமாம், ஆமாம். இம்முறை உங்களுடைய ‘உயர் சாதி' கூட்டணியினர், வெறுமனே வெளியில் இருந்து உங்களுக்கு ஆதரவு அளிக்காமல் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு பகுதியாகவே இருக்கின்றனர். ஆனால், உங்கள் கட்சியின் சின்னத்தில் இருந்து வெற்றி பெற்றதாலேயே, அவர்கள் இந்து பெரும்பான்மை தத்துவத்தையும், இந்து பழமைவாதத்தையும் கைவிட்டு விட்டார்களா? நீங்கள் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதாக நினைத்துக் கொண்டிருப்பதைப் போலவே, அவர்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்வது உங்களுக்குத் தெரியவில்லையா?

மாயாவதி : அவர்கள் அவ்வாறு கருதலாம். ஆனால், ஒரு தலித் முதலமைச்சர் தலித்துகளுக்கு அளிக்கும் புத்துணர்வை நீங்கள் குறைத்து எடைபோடுகிறீர்கள். நான் அதிகாரத்தில் இருந்தபோதெல்லாம், தலித்துகள் பாதுகாப்பாகவும், அதிக நம்பிக்கையுடனும் காணப்பட்டனர். என்னுடைய பதவியேற்பு நிகழ்வின்போது, அனைத்துப் பார்ப்பன அமைச்சர்களும் என்னுடைய பாதத்தைத் தொட்டு வணங்குவதைக் கண்டு, தலித் மக்கள் எவ்வளவு பெருமிதம் கொண்டார்கள் என்பதை நீங்கள் கவனித்தீர்களா?

அம்பேத்கர் : தங்களில் ஒருவர் அதிகாரத்தில் இருக்கும்போது, தலித்துகள் அதிக நம்பிக்கை பெறுகிறார்கள் என்பது, நமது ஜனநாயகம் எத்தனை மேலோட்டமாக இருக்கிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. பார்ப்பனர்கள் உங்கள் காலில் விழுவதைக் கண்டு நீங்கள் பெருமைப்படவோ, ஆதரிக்கவோ முடியாது. யாரும் யார் காலிலும் விழாத ஒரு சமூகத்தையே நான் எதிர்நோக்குகிறேன்.

மாயாவதி : உங்களுக்கு காலில் விழுவதெல்லாம் பிடிக்காது. ஆனால், மக்களுடைய எண்ணங்களை நாம் மதிக்க வேண்டும். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பலமிக்க சவர்ணர்கள், நம்முன் மண்டியிடுவது சாதாரண விஷயம் அல்ல. இத்தகைய குறியீடுகள் முக்கியமானவை. அவை ஒருவித அதிகாரத்தை அளிக்கின்றன. ஆனால், நம்முடைய சமூகப் புரட்சி இத்தகைய குறியீடுகளை எல்லாம் கடந்ததாகும். நாங்கள் அதிகாரத்திற்கு வந்தபோதெல்லாம், சாலை, மின்சாரம், குடிநீர், பள்ளிகள் என ஆயிரக்கணக்கான அம்பேத்கர் கிராமங்களுக்கு செய்திருக்கிறோம். ‘அம்பேத்கர் ரோஜ்கர் யோஜனா' மூலம் நிலமற்ற தலித்துகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கி இருக்கிறோம். ஒரு தலித் அதிகாரத்தில் இருந்தால்தான் அவர்களுடைய தேவைகள் எல்லாம் நிறைவு செய்யப்படும் என்று தலித்துகள் புரிந்து கொண்டுள்ளனர். அதனால்தான் அவர்கள் மீண்டும் மீண்டும் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள்.

அம்பேத்கர் : இவையெல்லாம் நேர்மறையான திட்டங்கள்தான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தலித்துகளும் பிற சாதிகளைச் சார்ந்த ஏழைகளும், மத சிறுபான்மையினரும் இந்நாட்டின் குடிமக்கள். ஒரு நல்ல வாழ்க்கைக்கான அனைத்து அடிப்படை உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களுடைய நலன் அதிகாரத்தில் இருப்பவர்களின் சாதியையோ, இனத்தையோ சார்ந்து இருக்கக் கூடாது. நான் கனவு கண்ட ஜனநாயகத்தில் கொள்கைகள், பகுத்தறிவின் அடிப்படையில் சமத்துவத்தை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்டன.

Mayavathi
மாயாவதி : உங்களுடைய ஜனநாயகம் மிகவும் நன்றாக இருக்கிறது. இருப்பினும், எங்களைப் போன்ற அரசியல்வாதிகள் நடைமுறை சிக்கல்களைப் பற்றியல்லவா கவலைப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு விஷயத்திற்காகவாவது, நீங்கள் எனக்கு முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும். நாங்கள் மதச்சார்பின்மையைப் பாதுகாக்கிறோம். நான் அதை ஒரு மிக முக்கியமானதொரு சாதனையாகப் பார்க்கிறேன். பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து பகுஜன் சமாஜ் கட்சி பார்ப்பன வாக்குகளைப் பறித்துள்ளது. எங்களுடைய உத்திரப்பிரதேச மாதிரியை தேசியமயமாக்கினால், பா.ஜ.க.வை அழித்துவிடலாம்.

அம்பேத்கர் : பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதாயங்கள் பா.ஜ.க.விற்கான இழப்புகள்தான் என்பது உண்மையே. இந்து தேசியவாதிகளுக்கு நீங்கள் ஓர் அதிர்ச்சியை அளித்திருப்பது கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், இரண்டு காரணங்கள் இன்னும் என்னை வாட்டுகின்றன. 1. உங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது நீங்கள் வெளிப்படையாக கடவுள்களைப் பற்றி பேசியது, மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னம் முதலில் கணேசனாக மாறி, பின்னர் அதிலிருந்து இந்து திரிசூலமாக வடிவெடுத்தது, என்னை வருத்தமடையச் செய்தது. தேர்தல் லாபங்களுக்காக கடவுள்களை பா.ஜ.க. பயன்படுத்துவது தவறு எனில், அதையே பகுஜன் சமாஜ் கட்சி செய்தாலும் தவறுதானே. தலித்துகளும் சூத்திரர்களும் வழிபட காலங்காலமாக அனுமதி மறுக்கப்பட்ட இந்து கடவுள்களுக்கு, பகுஜன் சமாஜ் கட்சி முக்கியத்துவம் அளிப்பது, அடிப்படையிலேயே போலித்தனமானது. நீங்கள் தற்போது பா.ஜ.க.வை இக்கட்டில் நிறுத்தியுள்ளீர்கள். உண்மைதான். ஆனால், பொது நோக்கில் பொருந்தக்கூடிய ஒரு மதச்சார்பின்மை தத்துவத்தை முன்னெடுக்கத் தவறிவிட்டீர்கள்.

மாயாவதி : மிகுந்த மரியாதையோடு, பாபாசாகேப்! நீங்கள் மீண்டும் நடைமுறை ரீதியாக மதிப்பிடுவதை விட்டு மாபெரும் கொள்கைக் கோட்பாடுகளோடு பார்க்கின்றீர்கள்.

அம்பேத்கர் : நம்முடைய செயல்பாடுகளை மாபெரும் கொள்கைக் கோட்பாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்துதானே மதிப்பிட முடியும்? வேறு எதற்காக இந்தக் கொள்கைகளும் கோட்பாடுகளும் இருக்கின்றன? ‘மதச்சார்பின்மை'யை நான் பாதுகாக்கிறேன் என்று நீங்கள் சொல்வதை, நான் கொண்டாட முடியாததற்கு இரண்டாவது காரணத்தைக் கூறுகிறேன். கிராமங்களில் நிலமற்ற தலித் தொழிலாளர்களைப் பார்ப்பனர்கள் அதிகாரம் செய்வதில்லை என்ற காரணத்தாலேயே, அவர்கள் சூத்திர நிலவுடைமையாளர்களுக்கு எதிராக - உங்களின் இயல்பான கூட்டணியாகின்றனர். பார்ப்பனர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையில் நேரடியான பொருளாதார முரண்பாடுகள் இல்லை என்பதால், கொள்கை ரீதியான முரண்பாடுகளும் இல்லை என நினைக்கிறீர்கள்.

நம்பிக்கை, சடங்குகள், மாயை மற்றும் உள்ளார்ந்த பழக்க வழக்கங்கள் இவற்றின் ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடுகின்றீர்களோ என்று நான் அஞ்சுகிறேன். சாதி மற்றும் பாலின படிநிலைகளுக்கு அடிப்படையாக இருக்கும் ‘ஆத்மா' மற்றும் ‘மறுபிறப்பு' போன்றவற்றை நகர்ப்புற இடைநிலை வகுப்பினரோ, நிலமுள்ள விவசாயிகளோ மறுபரிசீலனை செய்ததாகத் தெரியவில்லை. ஏதாவது நடந்திருக்கிறது என்றால், அது நவீன இந்து குழுக்களும் பாரம்பரிய பண்டிதர்களும் மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் முலாம் பூசி தற்பொழுது அளிக்கின்றனர். எனவேதான் தலித்துகள் எப்பொழுதுமே பகுத்தறிவுக் கருத்துகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். அப்பொழுதுதான் அவர்கள் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை முறியடிக்க முடியும். என்னுடைய ‘புத்தரும் அவர் தம்மமும்' நூலின் செய்தி இதுவே.

உங்களுக்கு சாமர்த்தியமாக வாக்களித்த பார்ப்பன சமூகத்தினர், உங்கள் மாநிலத்தில் நிறைந் துள்ள வேத பாடசாலைகள், ஆசிரமங்கள் மற்றும் கோயில்களில் பழமைவாத சமூக மதிப்பீடுகளையும், மூடப்பழக்கங்களையும் பிரச்சாரம் செய்தே உயிர் பிழைக்கின்றனர். அவர்களுக்குத் தற்பொழுது தங்களுடைய அரசாங்கத்தில் ஒரு பங்கு கிடைத்திருப்பதால், கல்வி மற்றும் பண்பாட்டுத் தளங்களில் பழமைவாத செயல்திட்டத்தை நுழைப்பதற்கு, அரசே உதவ வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்களா? இந்து தேசியத்திற்கான உற்பத்திக் கேந்திரமாக இருப்பது, இந்து பழமைவாதம்தான் என்பது என்னுடைய பணிவான கருத்து. எனவேதான் இந்துத்துவ சக்திகளை நீங்கள் ஒதுக்கி வைக்க முடியுமா என்று நான் கவலைப்படுகிறேன்.

மாயாவதி : நான் அனைத்து வகையான மதவாத செயல் திட்டங்களையும் தடுத்து நிறுத்துமளவுக்கு வலிமையாக இருப்பதாக உணர்கிறேன். மதச்சார்பின்மையே எங்கள் செயல்திட்டம். நான் எத்தகைய இந்துத்துவப் பிரச்சாரத்திற்கும் ஆதரவாக இருக்க மாட்டேன்.

அம்பேத்கர் : மாயாவதிஜி! அனைத்து அதிகாரமும் தங்களுக்கே. உங்களுக்கும் உங்கள் உத்திரப்பிரதேச மக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்! எனக்கு நேரமாகிறது. எனவே, நான் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். ஆனால், நான் என்றும் உங்களுடன் உணர்வால் கலந்திருப்பேன்.

(அம்பேத்கரின் குரல் மெதுவாக தேய, சிலை மீண்டும் கல்லாக மாறுகிறது. அந்த அதிகாலை நேரத்தில் மாயாவதி எழுந்து அமர்ந்து தனது கனவைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகிறார்.)
Pin It