"திரைப்படத்தின் ஆற்றல், நீண்ட காலத்திற்கு ஓடக்கூடிய அதன் நடிப்பியக்கத்திலோ, எளிதில் நெருங்க முடியாத அதன் விலகிய தன்மையிலோ இல்லை. மாறாக, பாத்திரங்களின் அக உலகை ஊடுறுவிப் பார்ப்பதிலும், அப்பாத்திரங்களின் ஆழ்ந்த தன்மைகளையும் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிக்கொணர்வதிலே - வேறெந்த கலைக்கும் இல்லாத சாத்தியங்களைக் கொண்டிருப்பதிலும்தான் இருக்கிறது.''

Periyar, Maniyammai, Ambedkar
- கிளப் பான்பிலோவ், ‘வேலன்டினா' போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களை அளித்த ரஷ்ய இயக்குநர்

வேலூருக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். பேருந்தின் பின் இருக்கையில் ஒடுங்கியபடி உட்கார்ந்து வர ஓர் இடம் கிடைத்தது. கருணையுடன் அந்த இடத்தை வழங்கிய சக பயணிகள், என்னை கடையேழு வள்ளல்களின் கண்கொண்டு பார்த்தனர். நான் ஒரு புன்னகையுடன் கணக்கை தீர்த்துக் கொண்டேன்! பேருந்துகளிலும், தொடர் வண்டிகளிலும் இடம் பிடிப்பதும், பயணம் செய்வதும் ஒரு தனிக் கலை. அப்பயணங்களின் போதுதான் நம்மால் மனிதர்களின் உண்மையான முகங்களைப் படிக்க முடிகிறது.

பேருந்து பொய்கையைத் தாண்டியிருக்கும். ஒரு பயணி வண்டியை நிறுத்தி ஏறினார். பின்னால் இருக்கையில் கடைசியாக அமர்ந்திருந்தவர் ஆர்ப்பாட்டத்துடன் எழுந்து, அவருக்கு தன் இடத்தை அளித்தார். இருவரும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் என்பது, அவர்கள் பேச்சிலே தெரிந்தது. புதிதாக வந்தவர் குடித்திருந்தார். அவர் கைகளில் கற்றையாக துண்டறிக்கைகளைப் போல ஒட்டிகள் (stickers) இருந்தன. கவிழ்த்து வைத்திருந்த அவற்றிலிருந்து சடாரென ஒன்றை எடுத்து திருப்பினார். ‘சிவாஜி' ரஜினி - வெண்ணிறப் பொய் முடியுடன் போலிச்சிரிப்பு சிரித்தார்! ஒரு தரிசனம் போல அப்படத்தைப் பார்த்துவிட்டு, மீண்டும் ஒட்டியை கவிழ்த்து வைத்துக் கொண்டு அங்கிருப்பவர்களைப் பெருமிதத்துடன் பார்த்தார் புதியவர். குடியேற்றத்தில் அவர் இறங்கும் வரை, நான் அவரை அவ்வப்போது கவனித்தபடி வந்தேன்.

அந்த மனிதரின் ரத்தம், சதை, எலும்பு, பேச்சு, நினைவு... எல்லாவற்றிலும் ரஜினி மீதான வெறி நிறைந்திருந்தது. கடிகாரத்தின் பட்டியில் ரஜினி படம். கைப்பேசியின் பின்புறம் ரஜினி படம். அதில் தொலைபேசி அழைப்பு வந்தால், அழைத்திடும் பாடல் ரஜினியின் படப் பாடல். தனக்கு அமர இடம் அளித்த நண்பரோடு அவர் ‘சிவாஜி' பட வெளியீடு பற்றியும், அதன் ஏற்பாடுகளைப் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தார். ரசிகர் மன்ற சிறப்பு முதல் காட்சிக்கு அனுமதி சீட்டுகளை பல ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கியிருப்பதாகச் சொன்னார். தன் சட்டைக்குள்ளே மடித்து வைத்திருந்த இரு உறைகளை எடுத்து, உள்ளிருக்கும் கடிதங்களை பிரித்துப் பார்த்தார்.

தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்திலிருந்து, மாநிலத் தலைவர் சத்தியநாராயணா கையொப்பமிட்டு வழங்கிய கடிதம் அவை. அக்கடிதங்களைக் கொண்டு வரும் ரசிகர்களுக்கு இலவசமாய் ரசிகர் மன்ற சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கும்படி பரிந்துரை செய்திருந்தது. தான் வாழ்வில் பெற்ற பெறர்க்கரிய விருதினைப் போல அக்கடிதங்களை கையாண்ட அவர், மிக ‘நிதானத்தோடு' மடித்து உறையிலிட்டு சட்டைக்குள் திணித்துக் கொண்டார். இடையிலே ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "நான் வேலைக்கு 2 நாள் லீவு போட்டுட்டு வந்துடுவேன். பேனர் வைக்கிறது, போஸ்டர் ஒட்டறது, எல்லாத்தையும் கிட்ட இருந்து பாத்துக்கலாம். பட்டாசு. தோரணம், மாலை, மேளதாளம் எல்லாம் ரெடி பண்ணிடனும். ஊரையே ஒரு கலக்கு கலக்கிப்புடனும். தலைவரு படம்னா சும்மாவா?'' தொலைபேசியில் கட்டளைகளை இட்ட பின்பு தலையை ஒரு சிலிர்ப்பு சிலிர்த்துக் கொண்டார். தீவிரமான ரஜினி ரசிகராகத் தெரிந்த அவருக்கு, வயது நாற்பத்தைந்தை தாண்டியிருக்கும்! என் மனம் கலக்கத்தில் உறைந்து போனது.

குடும்பம் குழந்தைகளோடு, அரசுப் பணியிலிருக்கும் ஒருவருக்கே இப்படி ஒரு திரைப்பட கதாநாயக வெறி இருக்கின்றது எனில், வேலையற்ற அல்லது வேலைசெய்ய மனமின்றி சுற்றிக் கொண்டிருக்கும் ஓர் இளைஞனுக்கு - இந்த வெறியின் தீவிரம் எவ்வளவு அதிகம் இருக்கும்? எவ்வளவு அதிகம் இருக்கின்றது என்பதை ரஜினியின் புதிய திரைப்படம் வெளியான அன்று தமிழகம் கண்டது. காசு செலவின்றி ஊடகங்களால் அளிக்கப்பட்ட விளம்பரங்கள். எந்த நாளேட்டைத் திருப்பினாலும் ‘சிவாஜி' திரைப்படம் பற்றிய செய்திகள். ரஜினியின் கழிவறை மற்றும் படுக்கையறை தவிர்த்த பிற செயல்பாடுகள் எல்லாமே செய்தியாக்கப்பட்டன.

தமிழக முதல்வர் தனிக்காட்சியில் இத்திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கருத்து சொன்னார். ஜெயலலிதா அவர்களும் இப்படத்தைப் பார்த்துவிட்டு, ரஜினியை வானளாவ புகழ்ந்திருந்தார். சன் தொலைக்காட்சி குழுமத்தின் தெலுங்கு அலைவரிசை ஒளிபரப்பில் சந்திரபாபு (நாயுடு) திரைப்படத்தைப் பார்த்ததையும், ரஜினி நன்றி சொல்லி பேசியதையும் தலைப்புச் செய்தியாக்கினார்கள். திரைப்படம் வெளியான அன்று தமிழகம் இதுவரை சந்தித்திராத கீழ்த்தரமான ரசிக மனோபாவத்தின் கேலிக் கூத்துகள் நடந்தன. ரஜினியின் வெட்டுப்படங்களின் (கட்அவுட்) மீது பால் முழுக்கும், பீர் முழுக்கும் செய்யப்பட்டன. திரைப்படம் வெளியான திரைப்பட அரங்குகளை ஒட்டியிருக்கும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உருவானது. காவலர்கள் தடியடி நடத்தினர். ரசிகர் மன்றத்தினர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி அலகு குத்தி தொங்கியபடி வந்தனர். பெண்கள் பால் குடம் எடுத்தனர். கோவிலில் வைத்து பூசை போடப்பட்டு படப்பெட்டி - யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. காலம் மாறிவிடவில்லை.

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊர் திரைக் கொட்டகைகளில், எம்.ஜி.ஆர். படங்களுக்கு பெண்கள் கைகளிலேயே கற்பூரம் கொளுத்தி ஆரத்தி எடுப்பதைப் பார்த்திருக்கிறேன். அதைப் போலவேதான் இன்றும் நடக்கிறது. இத்தனை ஆண்டுகால வளர்ச்சியில் உலகம் எத்தனையோ மாற்றங்களைக் கண்டிருக்கிறது. ஆனால், ரசிக மனோ பாவங்களும், தமிழர்களின் திரை அறிவும் மாறவேயில்லை. மாற முற்பட்டாலும் இங்கிருக்கும் புற சக்திகள் விடுவதில்லை. திரைப் படம் ஒரு கலையாக இங்கே இல்லை. அது அரசியல் பெருமுதலாளிகள், தமது சுரண்டல் பணத்தை முதலீடு செய்யும் வணிகம்; மக்களை ஏமாற்றும் ஆன்மிகம் ஆகியவற்றின் கூட்டுச் சதியாக இருக்கிறது. அதிகாரம், ஆபாசம், அடிமைத்தனம், மூடபழக்கங்கள், சாதியம், பெண் அடிமைத்தனம் ஆகியவற்றின் கூட்டுத் தொகையாக விளங்குகிறது.

வணிகத் திரைப்படத்தின் வரவேற்பும் ஆர்ப்பாட்டமும் இப்படி இருக்க, மக்களுக்கான திரைப்படங்களின் நிலையோ வேறு மாதிரி இருக்கிறது. அண்மையில் வெளிவந்த ‘பெரியார்' திரைப்படத்திற்கு இருந்த வரவேற்பைப் பற்றி நாம் ஒப்பீடு செய்து பார்க்கலாம். பத்து நாட்களுக்கு மேல் ஓடவில்லை அப்படம், எங்கள் ஊர் திரையரங்குகளில். அம்பேத்கர் திரைப்படம் ஒரு வாரம் மட்டுமே திரையரங்குகளில் ஓடியதாக, மும்பை நண்பர்கள் சொல்லி அறிந்து கொண்டேன்.

அண்மையிலே ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு பகுதிகளுக்கு தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்கென வந்திருந்தார் தங்கர் பச்சான். ‘பெரியார்' படத்தின் ஒளிப்பதிவினை தங்கர்பச்சான்தான் செய்திருந்தார். ‘ஒன்பது ரூபாய் நோட்டு' என்கின்ற தனது நாவலை திரைப்படமாக உருவாக்கி வருகிறார் அவர். சத்தியராஜ் அப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். எங்கள் ஊரில் படப்பிடிப்பு நடந்தபோது, நான் தங்கர் அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன். படபிடிப்பினைப் பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. இளையோர், முதியோர் என எந்தப் பாகுபாடும் இல்லை. எல்லோரும் ஆண்களே. ஒப்பீட்டளவில் பெண்கள் சிலரும் வந்திருந்தனர். காவலர்களாலும், நலம் விரும்பிகளாலும் கூட்டத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

தங்கர்பச்சான் அக்கூட்டத்தைப் பார்த்தபடி வேதனையோடு என்னிடம் சொன்னார் : "படப்பிடிப்பை பார்க்க வந்த இவ்வளவு கூட்டமும், ‘பெரியார்' படத்தைப் போய் பார்த்திருந்தா எவ்வளவு மகிழ்ச்சியா இருந்திருக்கும்? இங்க நடிக்க வந்திருக்கிற சத்தியராஜ் தானே அதிலேயும் நடிச்சிருக்காரு?!'' தங்கர் பச்சான் அவர்களின் கேள்வியில் இருக்கும் முரண் சுவையும், வேதனையும் எல்லோரையும் பாதிக்கக் கூடியது. ஆனால், என்ன செய்ய? தமிழக திரைப்பட ரசிகர்களின் மனோபாவம் பழக்கப்படுத்தப்படாமல், வளர்க்கப்பட்ட செல்லப் பிராணிபோல இருக்கிறது. தன் மகனை சிறுவயதிலிருந்தே பக்குவப்படுத்தி, பயிற்றுவித்து வளர்க்காமல் விட்டுவிட்டு, காலம் கடந்த பின்பு அமர்ந்து கவலைபட்டுக் கொண்டிருக்கும் தந்தையைப் போலத்தான் இந்த நிலைமை.

திரைப்படத்தை, தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கூட்டம் எப்போதுமே ஆதிக்க சாதி பெரு வணிகக் கூட்டம். அதைத் தமது அரசியலுக்காகப் பயன்படுத்த நினைத்தோர் பயன்படுத்திவிட்டு எறிந்து விடுகிறவர்களாகவே இருந்தனர். அதிகாரத்துக்கு வர நினைத்தோர் அதைத் தனது வழியாக மட்டுமே நினைத்துக் கொண்டனர். வழியின் இருமருங்கிலும் கழிந்து வைத்திருந்ததை அவர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டும், கண்களை மூடிக் கொண்டும் சகித்துக் கொண்டனர். பலர் அதை பணம் மற்றும் புகழுக்கான களமாக எண்ணினர். பெரும்பாலானோர் அதை ஒரு கலையாக நினைக்கவேயில்லை. அதன் ஆற்றலைப் புரிந்து கொள்ளவே இல்லை. எனவே, தமிழ் சினிமா பிச்சை எடுக்கும் யானையாக மாற்றப்பட்டு வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறது.

திரைப்படத்தின் மாபெரும் ஆற்றலை புரிந்து கொண்டு, அதைத் தமது கருத்தியல் பரப்புக் களனாக மாற்றிக் கொண்ட சோவியத் யூனியன் முதல் இன்றைய ஈரானிய படங்கள் வரையிலான வரலாற்றை நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சோவியத் புரட்சிக்குப் பின்பு திரைப்படத்தைப் பற்றி தவறான கண்ணோட்டத்தினைக் கொண்டிருந்த லெனின் அவர்கள் – ‘போர்க் கப்பல் போடெம்கின்', ‘தாய்' ஆகிய திரைப்படங்களைப் பார்த்த பிறகு தனது கருத்தினை மாற்றிக் கொண்டிருக்கிறார். புரட்சிக்குப் பிறகான சோவியத் சமூகத்தில் திரைப்படம் ஓர் ஆற்றல் வாய்ந்த கருத்தியல் ஊடகமாக இருந்திருக்கிறது. மக்களை கலக்கமடையச் செய்த வினாக்களுக்கு உரிய விடைகளை திரைப்படத்தின் வழியாக அறிந்து கொண்டிருக்கிறார்கள். பொழுதுபோக்குக்காக அல்லாமல் கருத்தியல் தெளிவும், புதிய கல்வியும், சமூக அரசியல் பாடமும் படிக்க சோவியத் மக்கள் திரைப்பட அரங்குகளுக்குச் சென்றிருக்கிறார்கள்.

டிகா வெர்டோவ், லேவ் குளேசேவ், அலெக்சாண்டர் டோவ்சென்கோ, புடோவ்கின், செர்ஜி அய்சான்ஸ்டைன் என்ற பல திரைப்படைப்பாளிகள் உலக திரைப்படத்தையே ஆதிக்கம் செய்பவர்களாக - சோவியத் சினிமாவிலிருந்து உருவாகியிருக்கிறார்கள். "சோவியத் சினிமா புரட்சியிலிருந்து தொடங்கியது. புரட்சிகரமான சமூகத்தினை புதுப்பிப்பதில் பங்காற்றுகிறது'' என்கிறார் சியாம் பெனகல். இங்கே சமூகப் புரட்சியும் இல்லை. திரைப்புரட்சியும் இல்லை. குறைந்தபட்சம் திரைப்பட ரசனையையும், ஒரு படத்தை எப்படி பார்ப்பது என்ற அடிப்படையையும் கூட நாம் வளர்த்தெடுக்கவில்லை.

இப்பணிகளை செய்யாத வரை ‘சிவாஜி'க்கு ஆர்ப்பாட்டமும், ‘பெரியார்', அம்பேத்கர் திரைப்படங்களுக்கு பாராமுகமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். தமிழ்ப் படைப்பாளிகளும், கலைஞர்களும், சிந்தனையாளர் களும், மாற்று அரசியல் தோழர்களும், திரைப்படத்தை குறித்து கவலை கொள்ள வேண்டும். கவலை கொண்டு அந்தத் துறையில் நுழைந்த பிறகு, தன்னை அத்துறையின் அத்தனை சீரழிவுப் போக்குகளோடும் இணைத்துக் கொள்வதே வழக்கமாக இருந்து வருகிறது. அப்படி இல்லாத உண்மையான அக்கறையாக இருக்க வேண்டும். மாற்றுச் செயல்பாடுகள் இன்றயை திரைப்படத்தின் சீரழிவு கலாச்சார இடத்தை நீர்த்துப் போகச் செய்யும்.

திரைப்பட யானை பிச்சை எடுப்பதை விட்டுவிட்டு, மூட அரண்களைத் தகர்க்க வரும்.

********
அடித்தட்டு மக்கள் தொகுப்பின் கடைநிலையில் இருக்கும் மக்கள் கூட்டமான அருந்ததியர்கள், சாதிய சமூகத்தின் பிடியிலிருந்து எல்லா வகையிலும் விடுதலை பெறுவதுதான் - தலித்துகளின் விடுதலைக்கான முன்நிபந்தனை. தலித்துகளின் பேரெழுச்சி, கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் பல துறைகளில் தமிழகத்திலே நடந்திருக்கிறது. ஆனால், அவைகளால் மாற்றம் பெறாமல் அல்லது மிகக் குறைந்த அளவிலான மாற்றங்களோடு அருந்ததியர் சமூகம் இருந்து வருகிறது.

இன்னும் மலம் அள்ளும் கொடுமை முடிவுக்கு வரவில்லை. கல்வி நிலையிலும், பொருளாதார நிலையிலும் அருந்ததியர்கள் மிகவும் பின்தங்கியே இருக்கின்றனர். கந்து வட்டி கொடுமையிலே உழல்வதுடன் சாதிய சமூகத்தின் மரபு சார்ந்த கட்டாயப் பணிகளான சுடுகாட்டுப் பணிகள், செருப்பு தைத்தல் உள்ளிட்ட ஏவல் பணிகளை செய்து வருகின்றனர். அவர்களின் வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்டு, பெருமரத்தின் கீழ் வளரும் நிழல் பயிராய் குன்றிப் போயிருக்கும் சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அம்மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் திரட்டி பேரணியினை நடத்தியிருக்கிறது. இது சமூக மாற்றத்தை தொடக்கப் புள்ளியிலிருந்து தொடங்குவதற்கான மிகச் சரியானதொரு அணுகுமுறை.

தொடக்கக்காலம் தொட்டே அடிப்படை யான சமூக மாற்றத்தில் அக்கறை செலுத்தி வரும் அரசியல் அமைப்பு என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மீண்டும் ஒரு முறை நிரூபணம் செய்திருக்கிறது. அருந்ததியர்களின் பல்வேறு அரசியல் அமைப்புகளை ஒருங்கிணைத்து, பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சூன் 12 அன்று நடத்திய அணிவகுப்பு, சென்னையை குலுக்கியதுடன் அரசின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. மனித மலத்தை மனிதர் அள்ளும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். துப்புரவுப் பணியாளர்களின் வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஷிப்ட் முறையை அத்தொழிலில் அறிமுகப்படுத்த வேண்டும்.

சுடுகாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூலி நிர்ணயம் செய்ய வேண்டும். செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கான நலவாரியத்தை அமைக்க வேண்டும். நிலவிநியோகம், தொகுப்பு வீடு, பொருளாதார உதவிகள் உள்ளிட்ட அரசு சலுகைகளில் அருந்ததியர் களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கடனுதவி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் முதல் வருக்கு அளிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு, தூய்மைப் பணி செய்வோர் நலவாரியத்தை முன்னமே அமைத்திருப்பதையும், மலமள்ளும் தொழிலை ஒழிக்க கொள்கை முடிவு எடுத்திருப்பதையும் கவனத்தில் கொள்ளும்போது, மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது. துப்புரவுப் பணியும், சுடுகாட்டுப் பணிகளும், மலமள்ளும் தொழிலும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டியதே அன்றி - மாற்றங்களோடு, முறைப்படுத்தலோடும் நிரந்தரமாக் கப்படக் கூடியது அல்ல. அதை நோக்கியே இக்கோரிக்கைகளை தொடர் செயல்பாடுகளில் முறைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அருந்ததியர் வாழ்நிலையை ஆராய அமைக்கப்படும் குழு முடிவுகளின் அடிப்படையில், அரசு உள் இடஒதுக்கீடு தொடர்பான முடிவுகளை உறுதியாகவும், விரைவாகவும் எடுக்க வேண்டும்.

********

தடையற்ற அன்னிய வர்த்தகம். தடையற்ற ஆபாசம். தடையற்ற அதிகாரம். தடையற்ற ஒடுக்குமுறை என்று ஒரு பக்கம் சமூகச் சூழல் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் சில வகையான தடைகள் சட்ட அங்கீகாரமின்றியும், சட்ட அனுமதியுடனும் விதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சாதியத் தடைகளும், பெண்களுக்கான தடைகளும் சட்ட அங்கீகாரமின்றியே திணிக்கப்படுகின்றன. மதம் சார்ந்த தடைகள் சட்ட அங்கீகாரத்துடன் விதிக்கப்படுகின்றன. மனித சமூகத்துக்கு விரோதமான இத்தகு தடைகளில் சில வெகுகாலமாக இருந்து வருபவை. அவை அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அண்மையில் இதுபோன்ற சில தடைகள் விதிக்கப்பட்டிருப்பதை நாளேடுகளின் வழியே அறிந்திருக்கலாம். அவற்றில் சில வினோதமான தடைகளும்கூட!

குருவாயூர் கோயிலில் பிற மதத்தினர் நுழையத் தடை, அய்யப்பன் கோயிலில் பெண்கள் நுழைய நிலவும் தடையை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நடிகை ஜெயமாலா மீது விசாரணை, திருப்பதி கோயில் இருக்கும் பகுதியில் வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தவும், விற்கவும் தடை, திருப்பதி கோயில் இருக்கும் பகுதிகளில் பிற மதத்தினர் தம்முடைய பரப்புரையை செய்யவோ, வழிபாடு நடத்தவோ தடை தி குடமுழுக்கு, திருமணம், புதுமனை புகுதல் ஆகிய நிகழ்வுகளில் தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு தமிழகத்தில் தடை.

எல்லா மதங்களும் அன்பை போதிக் கின்றன என்றால் எல்லாரும், எல்லா இடங்களுக்கும் செல்ல அனுமதிக்கவோ, மறுக்கவோ அவசியம் இல்லை. ஆனால், இந்தியாவில் போலியான மதச்சார்பின்மையும், மத ஒற்றுமையும் தானே நிலவுகிறது. இந்து மதத்தின் அடிப்படையான சனாதன தர்மத்தை மிகக் கடுமையாய் நிலைநிறுத்தும் நோக்கிலேயே இத்தகைய தடைகள் விதிக்கப்படுகின்றன. இதற்கு சட்டமும், அரசும் துணை போகின்றன. குருவாயூர் கோயில் விடயத்திலும், அய்யப்பன் கோயில் விடயத்திலும் செய்வதற்கு ஒன்றுமில்லை; அது அவர்களின் மதம் தொடர்பான விவகாரம் என்று கேரளாவில் இருக்கும் ‘கம்யூனிஸ்ட்' அரசு சொல்லிவிட்டது. பெண்களை கோயிலுக்குள் நுழைய தடை செய்வது, பொதுவுடைமை பேசும் அந்த அரசுக்கு முக்கியமில்லை!

திருப்பதி கோயில் பகுதிகளில் பிற மதத்தினர் மதப்பரப்பலை செய்வதையும், வழிபாட்டினை நடத்துவதையும் தடை செய்யும் அரசாணையை ஆந்திர அரசு பிறப்பித்துள்ளது. கோயில் வளாகத்தில் பிறமத பரப்பலை செய்பவர்கள், இந்துக்களன்றி வேறு எவரும் இல்லை. வழிபாடு நடந்து கொண்டிருந்த பாபர் மசூதிக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து, ராமன் சிலையை வைத்தவர்கள் அவர்கள் என்பதை நாடு அறியும். ராமனின் இன்னொரு அவதாரமாக கருதப்படும் பெருமாளின் கோயிலுக்குள் அல்ல, அந்த கோயிலைச் சுற்றியுள்ள மலைப் பகுதியிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் பிற மதப் பரப்பலையும் வழிபாட்டையும் செய்யக் கூடாது என்று அரசு தடைவிதித்துள்ளது!

இந்து சனாதனவாதிகளுக்கு ஏற்பவே அவர்களால் நடத்தப்படும் அரசும் நடந்து கொள்கிறது. ஆகம விதிகளும், இந்து சட்டமும் சனாதன தருமம் என்று சொல்லப்படும் மனு தர்மத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அது முழுமையாக செயல்படுத்தப்படும் கோவில் வளாகத்தில், யார் நுழைந்தாலும் அவர்களுக்கான இடம் அவ்விதிகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. அபிஷேக் பச்சன், அய்ஸ்வர்யா இணையர்க்கு சிறப்புப் பார்வை அனுமதி வழங்கியதற்காக கண்டனங்களை சந்தித்தது திருப்பதி கோயில் நிர்வாகம். உடனே விதிகளைத் திருத்தி தம்மை நேர்மையானதாக காட்டிக் கொண்டது. ஆனால், இந்த நிர்வாகம் தான் தலித் குடியரசுத் தலைவர் பதவியேற்றதும் முதல் மரியாதைகளைத் திருத்தி, சாதிய மேலாண்மையை அரண் செய்து கொண்டது. நேர்மையான நிர்வாகம் எனில், சிறப்புப் பார்வை விதிகளே தேவையில்லை என்று தூக்கி எறிய வேண்டும். ஆனால், அப்படி நடப்பதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை. இந்திய பெருவணிக சுரண்டல் முதலாளிகள், காணிக்கை என்ற பெயரில் அளிக்கும் கள்ளப் பணத்தில் இயங்குகிற பார்ப்பன தேவஸ்தான நிர்வாகம், தன் சனாதன தன்மையைப் பாதுகாத்துக் கொள்ள எத்தனை தடைகளையும் விதிக்கும். அதற்கு ஆந்திர அரசும் துணை போகும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழகத்தில் சட்டம் இயற்றியிருக்கும் சூழிலில் தான் தேவாரம் பாட, உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது (‘தினகரன்' சூன் 25). நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர்கள் தொடர்ந்த வழக்கில் யாகமும், வேள்வியும் நடத்தி தேவாரம் பாடுவதற்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் கருவறைக்குள்ளே பார்ப்பனர் அல்லாதார் நுழைவதற்கும், சமஸ்கிருதம் தவிர்த்த பிறமொழிகளைப் பாடுவதற்குமான தடை, ஏதோ ஒரு வடிவத்தில் இங்கே உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களிலும் நிலவுகிறது.

தமிழக அரசு தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று முன்பு கொண்டுவந்த சட்டம், ஆகம விதிகளின்படி - தவறு என்று பார்ப்பனர்களால் வாதாடி முடக்கப்பட்டது. தர்ம சாஸ்திரங்களாக கருதப்படும் சுருதிகள் (நான்கு வேதங்கள்), ஸ்மிருதிகள் (மனுஸ்மிருதி), அர்த்தசாஸ்திரம், ஆச்சாரங்கள், பாரம்பரியமாக நிலவும் விதிகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றையே இந்து சட்டமாக கருதுகிறார்கள். இவற்றுள் முதல் ஆதாரமான தர்ம சாஸ்திரங்களில் இடம்பெறும் எல்லா வகையான நூல்களும் - இந்து சனாதன தர்மத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. கர்மவினை, நால்வர்ண கோட்பாடு, ஆசிரம கோட்பாடு, புருஷார்த கோட்பாடு ஆகியவை இந்து சட்டத்தின் வழிகாட்டு நெறிகளைப் போல விளங்குபவையாகும். அவற்றின்படி, எல்லா மனிதர்களும் பிறப்பின் அடிப்படையில் சூத்திரர்களாகத்தான் இருக்கிறார்கள். புனித வேத நூல்களைக் கற்பதன் மூலம் பார்ப்பனர்கள் மட்டுமே இரு பிறப்பாளர்களாக மாறுகிறார்கள். பார்ப்பனர்கள் அல்லாதோர் சூத்திரர்களாகவே இந்து சட்டத் தொகுப்புகளின்படி கருதப்படுகின்றனர். அவர்கள் பேசும் சமஸ்கிருதமே ‘தேவ பாஷை' மற்றவை ‘நீச பாஷை' என்றும் அவர்களால் இந்து சட்டத் தொகுப்பை காட்டி வாதிடப்படுகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 25, 26 ஆகியவை ஒவ்வொரு இந்தியருக்குமான மத சுதந்திரத்தை அளிக்கின்றன. இந்தப் பிரிவினையே பூசைகள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் விதிகள் என்று விரிவாக்கம் செய்து, தமக்கான பாதுகாப்பு வளையமாக இந்துத்துவவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு நீதிமன்றங்களும் துணை நிற்கின்றன. இந்து சாதிய அடிப்படையைத் தகர்க்கின்ற வகையிலான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதே, இத்தகு தடைகளை உடைப்பதற்கு ஏற்ற வழியாக இருக்கும்.
Pin It