கிறித்துவ மதம் அய்ரோப்பாவில் நுழைந்தபோது ரோம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகள் பெரும் துன்பத்தில் இருந்தன. மக்களுக்குப் போதிய உணவு கிடைக்கவில்லை. அந்நேரத்தில் ஏழை மக்களுக்கு "கிச்சடி' உணவு வழங்கப்பட்டது. கிறித்துவை யார் பின்பற்றினார்கள்? ஏழை களும் ஒடுக்கப்பட்ட மக்களும்தான் பின்பற்றினார்கள். ஏழைகளும் அடித்தள வகுப்பினருமே கிறித்துவர்களாக மாறினார்கள். "பிச்சைக்காரர்களின் மதமே கிறித்துவம்' என்று கிப்பன் கூறுகிறார். கிப்பன் தற்போது உயிருடன் இருந்தால், அய்ரோப்பாவில் உள்ள அனைவருடைய மதமாக கிறித்துவம் எப்படி மாறியது என்றும் கூறியிருப்பார்.
பவுத்தம் 'மகர்' மற்றும் 'மாங்கு'களின் மதம் என்று சிலர் சொல்லலாம். பார்ப்பனர்கள் கவுதமரை 'போ கவுதம்' 'அரே கவுதம்' என்று அழைத்து புத்தரை கேலி செய்தனர். அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ராமன், கிருஷ்ணன், சங்கரன் போன்ற சிலைகள் எல்லாம் வெளிநாடுகளில் விற்கப்பட்டால், எந்தளவுக்கு விற்கப்படும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக, புத்தருடைய சிலை விற்பனைக்கு வைக்கப்பட்டால், அங்கு ஒரு சிலைகூட எஞ்சியிருக்காது. இந்தியாவில் எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும், உலகில் உள்ளவர்களுக்கு புத்தரை மட்டும்தான் தெரியும்!
நாங்கள் எங்கள் பாதையைப் பின்பற்றுகிறோம். நீங்கள் உங்கள் பாதையை பின்பற்றிக் கொள்ளுங்கள். நாங்கள் ஒரு புது வழியை கண்டறிந்திருக்கிறோம். இன்றைய நாள் நம்பிக்கைக்குரிய நாள். இந்த வழி - மேம்பாட்டிற்கான, முன்னேற்றத்திற்கான வழி. இது ஒன்றும் புதிய பாதையும் அல்ல. இந்தப் பாதையை நாங்கள் எங்கிருந்தும் கடனாகப் பெறவில்லை. இந்தப் பாதை இங்குள்ள பாதைதான். அது முழுக்க முழுக்க இந்தியாவின் பாதைதான். இந்தியாவில் பவுத்த மதம் இரண்டாயிரமாண்டுகளாக நீடித்திருந்தது. உண்மையில் சொல்லப் போனால், நாம் முன்பே பவுத்தத்தை ஏன் தழுவவில்லை என்பதற்காக வருந்துகிறோம். புத்தர் வலியுறுத்திய கொள்கைகள் காலத்தால் அழியாதவை. ஆனால், புத்தர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. காலம் மாற மாற, கொள்கையிலும் மாற்றம் காண வழியிருக்கிறது என்றார் அவர். இத்தகையதொரு பெருந்தன்மையை வேறு மதத்தில் காண முடியாது.
பவுத்த மதம் அழிவதற்கான முக்கியக் காரணமாக முஸ்லிம்களின் படையெடுப்பைக் குறிப்பிடலாம். முஸ்லிம்கள் தங்கள் படையெடுப்பின்போது புத்தருடைய சிலைகளை அழித்தார்கள். பவுத்த மதத்தின் மீதான முதல் தாக்குதல் இது. அவர்களின் படையெடுப்பைக் கண்டு அஞ்சி பவுத்த பிக்குகள் வெளியேறினர். சிலர் திபெத்துக்கும் சிலர் சீனாவிற்கும் சிலர் பிற இடங்களுக்கும் தப்பிச் சென்றனர். மதத்தைப் பாதுகாக்க பொதுமக்கள் தேவை. வடமேற்குப் பகுதியில் "மிலிந்தா' என்ற மாபெரும் அரசன் இருந்தான். இந்த அரசன் எப்பொழுதும் விவாதங்களையே நடத்திக் கொண்டிருப்பான். அவன் இந்துக்களிடம் தன்னுடன் விவாதிப்பதற்கு யாராவது இருந்தால், அவர்களை தன்னுடன் வந்து விவாதிக்கச் சொல்லி வலியுறுத்துவான். அவன் எழுப்பிய பல்வேறு விவாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் போய்விட்டது. ஒரு முறை அந்த அரசன் பவுத்த மக்களோடு விவாதம் புரிய எண்ணினான். யாராவது ஒரு பவுத்தரை விவாதத்திற்கு அழைத்து வருமாறு கூறினான். பவுத்தர்கள் நாகசேனனை அழைத்து, தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த விவாதத்தில் பங்கேற்கும்படி அழைத்தனர்.
நாகசேனன் படித்தவர். முதலில் அவர் ஒரு பார்ப்பனராக இருந்தவர். நாகசேனனுக்கும் மிலிந்தனுக்கும் இடையில் என்ன விவாதம் நடைபெற்றது என்பதை நூலின் மூலம் அனைவரும் அறிவோம். அந்த நூலின் பெயர் "மிலிந்தா பான்கா'. மிலிந்தா ஒரு கேள்வியை எழுப்பினான். இந்த மதம் ஏன் அழிந்தது? இதற்கு பதிலளித்த நாகசேனன் மூன்று காரணங்களைக் கூறினார். முதல் காரணம், குறிப்பிட்ட அந்த மதம் முதிர்ச்சியற்றது. அந்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஆழமற்று இருந்தன. அது ஒரு தற்காலிக மதமாக இருந்ததால், அது குறுகிய காலமே வாழ்ந்தது. இரண்டாவது காரணம், படித்த மதப் பிரச்சாரகர்கள் இல்லையெனில் இந்த மதம் அழிந்துவிடும். படித்த நபர்கள் மதத்தின் கொள்கையைப் பரப்ப வேண்டும். அந்த மதத்தின் பிரச்சாரகர்கள் எதிரியுடன் விவாதத்திற்கு தயாராக இல்லாதபொழுது, அந்த மதம் அழிந்துவிடும். மூன்றாவது காரணம், அந்த மதமும் கொள்கைகளும் படித்த மக்களுக்காக மட்டுமே இருந்தது. சாதாரண மக்களுக்கு கோயில்களும், வழிபடும் இடங்களும் உள்ளன. அவர்கள் அங்கு சென்று இயற்கையை மீறிய சக்தியை வணங்குகின்றனர்.
பவுத்தத்தை தழுவும்பொழுது, இந்த காரணங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். பவுத்த மதக் கொள்கைகள் தற்காலிகமானவை என்று யாரும் சொல்லிவிட முடியாது. இன்று 2500 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒட்டுமொத்த உலகமும் அனைத்து பவுத்த கொள்கைகளையும் மதிக்கிறது.
(15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை)