“இந்துக்களிடையே அர்ச்சகர்கள் ஒழிக்கப்படுவது நல்லது. ஆனால், அது சாத்தியமில்லை எனில், அர்ச்சகர் தொழில் பரம்பரைத் தொழிலாக இருப்பதையாவது ஒழிக்க வேண்டும். இந்து மதத்தவன் என்று தன்னைச் சொல்கிற எந்த சாதியைச் சேர்ந்தவராயினும் அவருக்கு அர்ச்சகர் ஆகும் உரிமை இருக்க வேண்டும். அர்ச்சகர் தொழிலுக்கான அரசுத் தேர்வு எழுதி, சான்றிதழ் பெறாத எவரும் அர்ச்சகர் தொழில் செய்யக் கூடாது என்று சட்டமியற்ற வேண்டும். சான்றிதழ் பெறாத அர்ச்சகர் நடத்தும் சடங்குகள் செல்லாது என்று அறிவித்துவிட வேண்டும். அர்ச்சகர் அரசு ஊழியராக ஆக்கப்பட வேண்டும். திறமை எள்ளளவும் தேவை இல்லாத ஒரே தொழில் அர்ச்சகர் தொழில் ஒன்றுதான். இந்து அர்ச்சகர் தொழில் மட்டுமே சட்டத்துக்கு உட்படாத ஒரே தொழிலாக இருந்து வருகிறது. இந்துக்களில் அர்ச்சகராக இருக்க, அர்ச்சகர் சாதியில் பிறந்திருப்பதே போதுமானது என்ற நிலை இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது.

இவையெல்லாமே கேவலமாக இருக்கிறது. மக்களின் அறிவையும், ஒழுக்கத்தையும் சீரழிக்க, கடவுள் கட்டவிழ்த்து விட்டுள்ள பெரும் பீடையே அர்ச்சகர் வகுப்பு. நான் மேலே சுருக்கமாகக் கூறியது போன்ற சில சட்ட திட்டங்களால் அர்ச்சகர் வகுப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இந்த நடவடிக்கை, பார்ப்பனியத்தை ஒழிக்கவும், பார்ப்பனியத்தின் மறுவடிவமான சாதியை ஒழிக்கவும் துணைபுரியும்" - டாக்டர் அம்பேத்கர்

‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி’ என்றார் பெரியார். தமிழர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த 'சூத்திர' இழிவை ஒழிக்க - தாம் பதவியேற்ற சில நாட்களிலேயே - ஆத்திரத்தோடு கையெழுத்திட்டிருக்கிறார், தமிழக தல்வர். கருணாநதி அவர்கள். ஆம்! ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்’ என்ற அரசாணையை தி.மு.க. அரசு நிறைவேற்றி இருப்பதன் மூலம் - பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த கருவறைத் தீண்டாமை வேரறுக்கப்பட்டுள்ளது. எந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையும் கவனத்தில் கொள்ளாத, பெரியாரின் இம்முக்கிய செயல்திட்டத்தை தேர்தலில் முன்வைத்து, இத்திட்டம் நிறைவேற திராவிடர் கழகம் காரணமாக இருந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும்.

மே 16, 2006 அன்று இந்த அரசாணை நிறைவேற்றப்படுவதற்கு முன்புவரை, இந்நாட்டின் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருமே - சட்டப்படி (விதி 372) "சூத்திரர்'களாக - "விபச்சாரி மக்களாகவே' கருதப்பட்டு வந்தனர். இந்த அரசாணை மூலம் தமிழர்கள் மீதான இழிவு சட்டப்படி துடைத்தெறியப்பட்டுள்ளது. சாதி ஒழிப்புப் போராட்டத்தில், குறிப்பிடத்தகுந்த மைல்கல்லாகத் திகழும் இப்புரட்சிகர செயல்பாட்டை நிகழ்த்திக் காட்டிய தமிழக முதல்வருக்கும், திராவிடர் கழகத் தலைவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி! இது, தமிழர்கள் மட்டும் அல்ல; இந்தியா முழுவதும் உள்ள பார்ப்பனர் அல்லாதோர் அனைவரும் பாராட்டி, வரவேற்றுப் பின்பற்ற வேண்டிய ஒரு முன்மாதிரி செயல் திட்டமாகும்.

கோயில் கருவறையில், பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்ற தன்மை முரண்பாடு தீர்க்கப்பட்டு விட்டது. அதற்கடுத்த நிலையில் உள்ள பார்ப்பனர் அல்லாதார் மற்றும் தலித் மக்களுக்கிடையிலான முரண்பாடுகளும் முடிவுக்கு வந்தாக வேண்டும். இல்லை எனில், கோயில்களில் நுழைய ஏற்கனவே உரிமை பெற்றவர்கள் - அதன் நுழைவு வாயிலிலேயே தலித் மக்களுக்கு அவ்வுரிமையை மறுத்து விடுவர். சட்டம் இருந்தாலும், தலித்துகள் கருவறையைத் தீண்ட முடியாத ஆபத்தான நிலை ஏற்பட்டுவிடும். ஒவ்வொரு ஆண்டும் கண்டதேவி தேரோட்டத்தில், சட்டத்திற்குப் புறம்பான தீண்டாமை, திட்டமிட்டு அரங்கேற்றப்படுவதை மறந்துவிட முடியாது. இதை நேர்செய்ய தி.மு.க. அரசு என்ன செய்யப் போகிறது என்பதையும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

நாடு சுதந்திரம் பெற்று 59 ஆண்டுகள் கழித்தும் உயர் கல்வி நிறுவனங்களும், நாட்டின் முக்கிய கேந்திரங்களும் - கோயில் கருவறைகளாகவே காட்சியளிக்கின்றன. அர்ச்சகர் தொழில் போய்விட்டாலும், அய்.ஏ.எஸ். தொழில் போய்விடக்கூடாது என்பதில் குறியாக இருப்பதால்தான், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படுகின்றன. இந்நிலை மாற, சட்டரீதியாகவே ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். மேலும் மிக முக்கியமாக, சாதி மறுப்புத் திருமணங்கள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டு, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை - சாதியற்றோர் என்று வகைப்படுத்தி, சிறப்பு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் இருப்பினும், தீண்டாமைக் குற்றங்கள் வெவ்வேறு வடிவங்களில் நிலைப் பெற்றிருப்பதற்கு, அதன் (இந்து) பண்பாட்டு வேர்கள் அழிக்கப்படாதது தான் காரணமாகும். இந்து மதத்தைப் புனரமைத்து, புனிதப்படுத்தும் செயல்கள் தடுத்து நிறுத்தப்படாதவரை, சாதியையும் அதன் வெளிப்பாடான தீண்டாமையையும் முற்றாக ஒழிக்க முடியாது.

மதமாற்றத் தடைச் சட்டம் ரத்தானது முழுமை பெற
முதல்வர் முன்னுரிமை அளிக்க வேண்டும்

மனிதர் மலத்தை மனிதர் அகற்றும் இழிதொழில் தடை செய்யப்படும் என்றும், அப்பணி செய்பவர்களுக்குத் தகுதியான மாற்றுப்பணி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருப்பது, சமூக நீதியில் அக்கறையுள்ளோர் வரவேற்கப்பட வேண்டிய, மிகச் சிறந்த இழிவு ஒழிப்புத் திட்டமாகும். தி.மு.க. அரசு பதவியேற்றவுடனேயே பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்து, அனைத்துத் தரப்பினரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில், முதலமைச்சரின் பார்வைக்கு நாம் சில முக்கிய தலித் பிரச்சினைகளை முன்வைத்து, அவை மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழைகிறோம்.

1. கடந்த முறை தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது,”பிறப்பால் கிறித்துவராக இருப்பவர் இந்துவாக மாறினால், அவர் ஆதிதிராவிடர் சாதிச் சான்றிதழ் பெறவோ இடஒதுக்கீட்டுக்குரிய சலுகைகளை அனுபவிக்கவோ தகுதி இல்லை'' (கடிதம் நகல் எண் : 81 / நாள் 19.9.2000) என்றொரு ஆணையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் கோலப்பன், இ.ஆ.ப. அவர்கள் மூலம் வெளியிட்டிருந்தது.

கிறித்துவராக இருக்கும் ஒரு தலித், இடஒதுக்கீடு என்ற உரிமையைப் பெற இனி "இந்து'வாகவும் மாறிவிடக்கூடாது என்று இந்த ஆணை கூறுகிறது. அதே நேரத்தில் "இந்து'வாக இருக்கும் தலித் அவன் விரும்பும்போது வேறு மதத்திற்கும் செல்ல முடியாது. ஏனெனில், இடஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும். இதனால், மதம் மாறும் உரிமை தலித் மக்களுக்கு முற்றிலுமாக மறுக்கப்படுகிறது.

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்த ஆணையை ரத்து செய்யக்கோரி, ஏப்ரல் 2002 இல் வேலூர் ஊரிசு கல்லூயைச் சேர்ந்த பேராசியர் அய். இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தொடுத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் "டிவிஷன் பென்ச்' 4.10.2002 அன்று இந்த ஆணைக்கான இடைக்காலத் தடையை வழங்கியது.

மதமாற்றத் தடைச்சட்டத்தை 31.5.2006 அன்று சட்டப்பேரவையில் தி.மு.க. அரசு முழுவதுமாக நீக்கியுள்ளது. மேற்கூறிய ஆணையையும் உடனடியாக ரத்து செய்தாக வேண்டும். இல்லையெனில், மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டது முழுமையானதாகாது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், தலித் கிறித்துவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற உறுதிமொழி இடம் பெற்றுள்ளது. இந்த ஆணை ரத்து செய்யப்படாவிட்டால் இது தேர்தல் வாக்குறுதிகளை மீறுவதாகவும், மதமாற்றத் தடைச்சட்டத்தை திரும்பப் பெற்றது, நகைப்புக்குரியதாகவும் ஆகிவிடும்.

2. சிறப்பு உட்கூறுத் திட்டம் (Special component plan), பழங்குடியினர் துணைத் திட்டம் (Tribal sub plan) தலித் மக்களின் வாழ்க்கை ஆதாரமாக, உயிர் நாடியாகக் கருதப்படுகிறது. ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை தமிழக அரசும், மத்திய அரசும் கால்பங்குகூட நிறைவேற்றுவதில்லை. தமிழ் நாட்டில் சிறப்பு உட்கூறுத் திட்டத்தில் வர வேண்டிய ரூ. 2,000 கோடிக்குப் பதிலாக ரூ. 400 கோடிக்குக் கீழாகவே ஆண்டுத்திட்ட நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறை உட்பட அனைத்துத் துறை அதிகாரிகளும், திட்டக்குழுவும் சிறப்பு உட்கூறுத்திட்டம் என்பதைப் பற்றி எதுவும் அறியாமலும், அறிந்திருந்தும் அறியாதது போலவும் இருந்து வருகின்றன. நிதித்துறையும் திட்ட வளர்ச்சித் துறையும் எதிர்மறையாகவே செயல்பட்டு வருகின்றன.

எனவே, முதல்வர் இதில் தலையிட்டு இப்பிரச்சினையை நேர் செய்வதுடன், தலித் மக்களுக்கு போய்ச் சேர வேண்டிய நிதி முறையாக செலவழிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க இதற்கென ஒரு தனித்துறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

3. தலித் மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகையை கடந்த கால அ.தி.மு.க. ஆட்சி செலவழிக்காமல் விட்டுவிட்டது. கடந்த அய்ந்தாண்டுகளில் இவ்வாறு செலவிடாத தொகை மட்டும் ரூ. 4,869 கோடியாகும். மத்திய அரசு தலித்துகளுக்காகப் பல்வேறு துறைகளுக்கு மொத்தமாக ஒதுக்கிய அளவும், மாநிலங்கள் என்ற பட்டியலில் தமிழகத்திற்கு வழங்கிய தொகையில் முறையாகத் திட்டமிட்டு, தலித் மக்களுக்காக அவைகளைப் பெற்று பயன்படுத்தாமல் 2001 முதல் 2006 வரை, இத்தொகையை ஜெயலலிதா அரசு செலவிடவில்லை. இதை மத்திய

சமூக நீதித்துறை அமைச்சர் மீராகுமாரி அவர்களும் சுட்டிக்காட்டியுள்ளார். தற்பொழுது பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசு தலித் மக்களுக்கு சேரவேண்டிய பங்கை விரைந்து வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கோருகிறோம்.

இலவசத் திட்டங்களுக்கு முன்னுமை அளித்து செயல்படும் அரசு, தலித் மக்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள மத்திய, மாநில அரசுகளின் நிதியை முறையாகவும் விரைவாகவும் அம்மக்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை அதிகாரப் படுத்துவதற்கும், சுயமரியாதையுடன் வாழவைப்பதற்கும் முன்னுமை அளிக்க வேண்டும். தமிழக முதலமைச்சர், இதில் தனிக்கவனம் செலுத்துவதன் மூலமே, கடந்த ஆட்சியில் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
Pin It