சகோதரர்களே!

இதுவரை அரசியல் புரட்டையும், மதப் புரட்டையும் பற்றிச் சொல்லி வந்தேன். இனி ஆச்சாரியார், குரு, மகந்து, சங்கராச்சாரியார்கள், மடாதிபதிகள் என்பவர்களின் பேரால் நடக்கும் புரட்டுகளையும் சற்று கவனித்துப் பாருங்கள் .

periyar karunanidhiஎந்த தனிப்பட்ட நபர் மீதிலும் எனக்கு எவ்விதமான மன வருத்தமும், துவேஷமும் இல்லை. இவர்களுக்கு கொடுக்கும் பணம் நின்றுவிட்டால் எனக்கு ஒன்றும் லாபம் கிடையாது. நான் சொல்லுவதெல்லாம் நம்முடைய பணம் எவ்வளவு அக்கிரம வழியிலும், அவிவிவேக வழியிலும் செலவாகிறது என்பதையும் இதன் மூலம் நமது சுயமரியாதைகள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவதோடு நாம் எந்தெந்த வழிகளில் ஏமாற்றப்படுகிறோம் என்பதையும் உங்கள் அறிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணமே அல்லாமல் வேறல்ல.

ஆசாரியார், மகந்து, மடாதிபதி, சிஷ்யன், குரு என்று சொல்லும் வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள் அல்ல. அவை ஆரியர்கள் நாட்டு வார்த்தைகள் . அவர்கள் இங்கு வந்தபிறகு அவ்வார்த்தைகளை நம்முள் புகுத்தி அவர்களே அவர்களை அவ்வார்த்தைக்கு அருகர்களாக்கிக் கொண்டு, நம்மை அவர்களது சிஷ்யர்களாக்கிக் கொண்டு, நம்மை அவர்களது சிஷ்யர்கள் என்பதாகச் சொல்லி, அந்த மாதிரியான குரு சிஷ்ய பாவத்திற்கு என்னென்னமோ நிபந்தனைகள் ஏற்படுத்தி, அவைகளுக்கு நம்மை கட்டுப்படுத்தி, அவர்களை நாம் கடவுளை விட சிறந்தவர்களாக மதிக்கும்படியாகச் செய்து ஏமாற்றியிருக்கிறார்கள்.

முக்கியமான கோயிலாகிய திருப்பதியில் மகந்து என்பதாக ஒருவர் எதற்காக இருக்கிறார்? அவருக்கு ஏற்பட்ட வேலை என்ன? அவரால் அக்கோயிலுக்கோ அங்கு செல்பவருக்கோ உண்டாகும் லாபம் என்ன? அவர் கோயிலுக்கு தர்மகர்த்தாவென்று சொல்லுவதானால் மற்ற தர்மகர்த்தாக்களுக்கு இல்லாத தனி மரியாதை அவருக்கு ஏன் செய்ய வேண்டும்? அவர் ஒரு அரசனின் போகபோக்கியம் அனுபவிக்க எந்த விதத்தில் உரிமை உள்ளவர்? மற்ற பெரும்பான்மையான கோவில்களுக்கில்லாத முறை திருப்பதி கோயிலுக்கு மாத்திரம் ஏன் ஏற்பட வேண்டும்? அல்லாமலும், அவர் எந்த பரம்பரையில் வந்தவர்? அவர் ஜாதி, குலம், தாய், தகப்பன் முதலியவர்களின் தொழில், யோக்கியதை முதலியவைகள் என்ன? இந்த மகந்து வேலையில் இதுவரை இருந்து வந்தவர்களின் யோக்கியதை என்ன? எத்தனை மகந்துகள் கிரிமினல் குற்றத்திற்கு தண்டனை அடைந்தவர்கள்? எத்தனை மகந்துகள் லட்சக்கணக்காக சுவாமியின் சொத்தை குடி, இழிவான காரியம், மதுபானம், மாம்சம் உண்ணல், விபசாரம் முதலியவைகளில் செலவு செய்து குற்றங்கள் சாட்டப்பட்டனர் என்பவைகளை யோசித்துப் பார்த்தால் இவர்களது வழக்கமான யோக்கியதை இன்னதென்பதும், எந்த விதத்தில் இவர்கள் மதிக்கத் தகுந்தவர்கள் என்பதும் விளங்காமல் போகாது. மற்றும் இம்மகந்துகள் என்போர் சுவாமிக்கு வேண்டுதலை என்பதாக மக்கள் கொண்டுவரும் பொருள்களில் எவ்வளவு பாகம் கணக்குக்கு போகவிடாமல் திருடிக் கொள்ளுகிறார்கள் என்பதும் போய் வந்தவர்களை விசாரித்தால் யாவருக்கும் சுலபமாய் விளங்கும். ஒவ்வொரு யாத்திரைக்காரனிடமிருந்தும் வழிபறிக் கொள்ளை போல் வழி மறித்து பிடுங்கிக் கொள்ளப்படுகிறது எவ்வளவு?

அடுத்தப்படியாக லோககுரு என்னும் சங்கராச்சாரியார் என்பவர்களின் புரட்டு எவ்வளவு என்று யோசியுங்கள். லோககுரு என்று அவருக்கு எப்படி பெயர் தகும்? அவர் யார்? யாருக்கு குரு? என்று பார்ப்போமானால் அவர் இந்தியாவுக்கு குரு அல்ல. இந்தியாவில் உள்ள இந்துக்கள் என்பவர்களில் பார்ப்பனர்கள் எல்லோருக்குங் கூட குருஅல்ல. பார்ப்பனர்களில் உள்ள பல பிரிவுகளில் ஸ்மார்த்தர்கள் என்கிற ஒரு சிறு கூட்டத்தாருக்கு இவர் குரு என்ற பாத்தியமுடையவர். அச்சிறு கூட்டத்தாருக்கும் இவரைப்போல் இன்னமும் நான்கு ஐந்து சங்கராச்சாரியார்கள் என்போர்கள் உண்டு. ஆகவே ஒரு சிறு கூட்டத்தின் - அதாவது நமது நாட்டிலுள்ள சில ஆயிரக்கணக்கான மக்களில் 5 அல்லது 6 ல் ஒரு பாகத்தாருக்கு - குரு என்று ஏற்பட்ட ஒருவர் அக் கூட்டத்தினரின் செல்வாக்காலும், தந்திரத்தினாலும், ஏமாற்றுதலாலும், நம்மவர்களின் அறிவீனத்தினாலும், ஏமாந்த தனத்தினாலும் லோககுரு என்பதாக அழைக்கப்பட்டு இந்துக்கள் என்கிற எல்லா மக்களுக்கும் குருவாகி கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்து வெறும் பார்ப்பனர்களுக்கே பொங்கிப் போட்டு பார்ப்பனப் பிரசாரம் செய்து வருகிறார்.

ஒரு சங்கராச்சாரி என்பவர் ஒரு ஊருக்கு வருவாரானால் அந்த ஊரிலுள்ள பார்ப்பன உத்தியோகஸ்தர், பார்ப்பன மிராசுதார், பார்ப்பன வக்கீல் முதலிய செல்வாக்குள்ள ஆசாமிகளின் மூலம் அந்நாட்டிலுள்ள செல்வவந்தர்களை எல்லாம் ஏமாற்றி 100, 200, 1000, 2000, 5000, 10000 என்பதாக வசூலிப்பதும், தீர்த்தபதி, nக்ஷத்திரபதி, தர்ம பூஷணம் முதலிய பட்டங்கள் கொடுப்பதாகச் சொல்லி அறிவில்லாத செல்வவந்தர்களை ஏமாற்றி 1000, 2000 வாங்குவதும், பாத பூஜைக்கு இத்தனை ரூபாய் என்றும், பாத தீர்த்தத்திற்கு இத்தனை ரூபாய் என்றும், தங்கப் பல்லக்கில் ஊர்கோலம் செய்ய இத்தனை ரூபாய் என்றும், வீட்டிற்கு வர இத்தனை ரூபாய் என்றும், வீட்டில் பூஜை செய்ய இத்தனை ரூபாய் என்றும், நமக்கு சொந்தமான குளத்தில் குளிக்க இத்தனை ரூபாய் என்றும், பிருதுகளுடன் வர இத்தனை ரூபாய் என்றும், வெறும் தீர்த்தத்திற்கு இத்தனை ரூபாய் என்றும், பாத தீர்த்தத்திற்கு இத்தனை ரூபாய் என்றும், வியாபார முறையில் பேசி கொள்ளை அடிக்கிறார்கள் . எந்த ஊருக்கு வந்தாலும் அந்த ஊர்களில் பிரபலமாயுள்ள கோயில்களிலேயே வந்து தங்குவதும், அக்கோயிலுக்குள்ளாகவே சங்கராச்சாரியாருக்கு வேண்டிய சகல நடவடிக்கைகளையும் அதாவது கக்கூசு, ஸ்நானம், சமையல் முதலியவைகள் வைத்துக் கொள்வதோடு காலிலுள்ள மிதியடியுடனேயே சுவாமியின் மூலஸ்தானம் வரையில் போய் சாமி கும்பிடுவதுமான காரியங்களையும் செய்கிறார்கள்.

இம்மாதிரி உலகத்திற்கே குரு என்று சொல்லிக் கொண்டும் பாடல் பெற்ற கோயில்களில் கக்கூசு கட்டிக் கொண்டும், மிதியடியுடனும் சாமி கும்பிடவும் உரிமையுள்ளவரான இந்த சங்கராச்சாரியார்களின் கொள்கை என்ன என்று பார்ப்பீர்களானால், அவர்கள் ஒரு விதத்தில் கடவுள் இல்லை என்று சொல்லுகிற நாஸ்திக மதத்தைச் சேர்ந்தவர்கள் . அதாவது தன்னைத் தவிர கடவுள் என்கிற வேறொரு பொருளோ தன்மையோ கிடையாது. தாங்களே தான் கடவுள் என்கிற கொள்கையையுடையவர்கள் . அதனால்தான் கோயிலில் கக்கூசு கட்டிக் கொள்வதிலும், மிதியடியுடன் மூலஸ்தானத்திற்கு போவதிலும் ஆட்சேபணை இல்லாதவர்களாயிருக்கிறார்கள் . இந்த கொள்கையுடையதற்கு ஸ்மார்த்தம் என்று பெயர். இது சைவ மதத்திற்காவது வைணவ மதத்திற்காவது கொஞ்சமும் சம்பந்தமில்லாதது. கிறிஸ்தவ மதத்திற்கும் மகமதிய மதத்திற்கும் ஒன்றுக்கொன்று எவ்வளவு வித்தியாசம் உண்டோ அதைவிட அதிகமாக சைவ மதத்திற்கும் வித்தியாசம் உண்டு. ஸ்மார்த்தாளுக்கும் சைவ கோயில்கள் கிடையாது. தன்னையே கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் இவர் வேறு கோயில்களை கும்பிடுவது ஏமாற்றுவதற்கேயல்லாமல் வேறல்ல. இன்னும் இவர் சன்னியாசி வேஷம் போட்டுக் கொண்டு தன்னை சன்னியாசி என்று சொல்லிக் கொண்டும் அரசபோகம் அனுபவிப்பார். தனக்கெனவே யானை, குதிரை, ஒட்டகம், சிப்பாய் முதலிய படைகளும் போகிற இடங்களுக்கெல்லாம் கொண்டு போகிறார்கள் . தன்னுடைய சிஷ்யர்கள் என்போர்களாகிய நம்மவர்களிடமே இவைகளுக்கு செலவுக்கு வேண்டிய பண்டங்களையும் சம்பாதித்து வருகிறார்கள். இவ்வளவும் செய்தும் அவரிடமுள்ள மத சம்பந்தமான நாணயமோ மிகவும் மோசமானது. தான் மனதில் மாத்திரம் ஸ்மார்த்தராயிருந்து கொண்டு வெளியில் சைவ வேடம் போட்டுக் கொண்டு ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நடவடிக்கைகளை உடையவராயிருக்கிறார்கள் .

மகந்துகள் சங்கதியும் உலக குருக்கள் சங்கதியும் இப்படியானால் மற்ற குட்டி சாமியார்கள் , ஜீயர்கள் முதலிய வைணவ மடாதிபதிகள் சங்கதி எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இது தவிர இந்த ஆச்சாரியர்களுக்கு கட்டுப்பட்ட மக்களுக்குள்ளாகவே அநேகருக்கு இந்த குருமார்கள் தவிர குலகுரு என்பதாகவும் தங்கள் ஜாதி குரு என்பதாகவும் அநேகருண்டு. அவர்களும் இது போலவே சஞ்சாரம் என்கிற பெயரை வைத்துக் கொண்டு வருஷத்திற்கு ஒரு முறை பிரயாணம் செய்து குரு காணிக்கை யென்பதாக வரி வசூலிப்பதும், வரி அல்லாமல் மடத்திற்கு கடன் அதிகமாய் விட்டது, மழை இல்லை, சாமியார் விலைக்கு வாங்க, பட்டத்தை நிலைநிறுத்த, செய்த வியாஜ்ஜியத்தில் கடன் ஏற்பட்டு விட்டது, இரண்டு பெண்டாட்டி கட்டியும் பிள்ளையில்லை, மூன்றாவது கல்யாணத்துக்கு தங்கப் பல்லக்கு செய்யப் பணம் வேண்டும், வெள்ளிப் பாத்திரம், பிறாது இவைகளுக்கு பணம் வேண்டும் என்பவைகளான பெயரினால் வசூலிக்கும் பணம் கணக்கு வழக்கில்லை. இம்மாதிரி சாமியார் வரிகள் தினம் ஒன்றுக்கு 4 அணா சம்பாதிக்கும் ஏழைக் கூலியைக்கூட விடுவதில்லை. சாமியார் இல்லாவிட்டால் தங்களுக்கு அவமானம் என்று நினைக்கும்படியாய் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சாமியார்களின் சொந்த யோக்கியதை ஒழுக்கங்கள் என்ன என்பதைப்பற்றி சிஷ்யர்கள் யாராவது கவனிக்கிறார்களா? ஒரு சாமியாருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தால் அந்த இரண்டு பிள்ளைகளும் உள்ள சிஷ்யர்களை மாடு கன்றுகளைப் பிரித்துக் கொள்வது போல் ஆளுக்குப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுகிறார்கள். மேல், கடை சங்கராச்சாரியார்களும் இம் மாதிரியே ஒருவருக்கொருவர் எல்லை பிரித்துக் கொண்டிருக்கிறார்கள் . ஒருவர் எல்லையில் ஒருவர் வந்ததற்காக கோர்ட்டுகளில் விவகாரமும் நடந்து வருகிறது.

இது போலவே சிறு கிராமங்களும் குடும்பங்களும் சாமியார்களுக்கு பிரிவினையாக்கப்படுகிறது. இந்த சாமியார்களில் அநேகம் பேர் தங்களுடைய சஞ்சாரத்தில் தாசிகளைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள் . சில சாமியார்கள் சஞ்சாரத்திற்கு தாங்கள் போக சவுகரியப்படாமல் தங்களுடைய தாசிகளை அனுப்பி விடுகிறார்கள் .

அந்த அம்மா சாமியார்களும் சால்வையைப் போர்த்துக் கொண்டு சிஷ்ய கோடிகளைத் தங்கள் காலில் விழச் செய்து பிரசாதம் கொடுத்து காணிக்கை வாங்கி வருகிறார்கள் . சில சாமியார்கள் வாரண்டு சேவகர்களுடன் காணிக்கை வசூல் செய்யவும், வாரண்டு கடன் தீர்க்கவும் சஞ்சாரம் செய்கிறார்கள் . எனது மைத்துனரின் சாமியார் தாசி வைத்திருப்பதால் அடிக்கடி வாரண்டில் பிடிபடுவதுண்டு. எங்கள் குலகுரு என்பவர் வருவதற்கு சாவகாசமில்லை என்கிற காரணத்தால் கண் தெரியாத தன்னுடைய 80 வயது தாயாரான விதவைக் கிழவியை அனுப்பிக் காணிக்கை வசூல் செய்யச் செய்வதும், எங்கள் குடும்பமும் அந்த குருட்டுக் கிழவிக் காலில் விழுந்து காணிக்கை கொடுப்பதும் இன்னமும் நடந்து வருகிறது. என் தகப்பனாருக்கும் தாயாருக்கும் இந்த குருடி காலில் விழுவதற்கு வெட்கப்பட்டு வேறொரு சாமியாரை ஏற்படுத்திக் கொண்டார்கள். வேறு சாமியாரும் நல்லாஞ் சக்கிரவர்த்திகள் என்கிற ஒரே பரம்பரை என்று சொல்லிக் கொள்வதானாலும் அதற்கு வேறு இதற்கு வேறு என்பதாக இரண்டு வரி கொடுக்கப்பட்டு வருகிறது. புது சாமியார் வைத்துக் கொண்டதாக கேள்விப்பட்ட பழய சாமியார் குடும்பத்தோடு வீட்டிற்கு வந்து “ஹரி இரண்டானாலும் குரு இரண்டாகலாமா” என்பதாக கோபித்து சாபமிடுவதாகப் பயமுறுத்தி அதிகப் பணமும் வாங்கிக் கொண்டார்கள். அந்த சாபத்தால்தான் எனக்கு குழந்தை இல்லை என்றும் நான் குருத் துரோகியாகவும் மதத் துரோகியாகவும் போய் விட்டதாகவும் குருட்டு நம்பிக்கைக் கொண்ட கிழங்கள் பேசிக் கொள்ளுகின்றன. ‘திராவிடன்’ பத்திராதிபரான ஸ்ரீமான் கண்ணப்பர் அவர்கள் குடும்பத்துக்கு குரு என்கிற ஒரு ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யங்கார் பார்ப்பனர் ரிவினியூ போர்டாபீசில் மாதம் 75 ரூபாய் சம்பளத்திலிருக்கிறார். வருஷத்துக்கு ஒரு மாதம் சர்க்காரால் கொடுக்கப்படும் பிரிவிலேஜ் லீவு என்கிற சம்பளத்துடன் உள்ள லீவை உபயோகித்துக் கொண்டு கிராமங்களுக்கு பஞ்சகச்சம் கட்டி ஒரு கிழிந்த சால்வையைப் போர்த்துக் கொண்டு வந்து திண்ணையில் உட்கார்ந்து காணிக்கை வரி வசூலித்துக் கொண்டு மறுபடியும் உத்தியோகத்திற்கு போய் விடுகிறார்.

இவ்வளவு அழிம்பும் அக்கிரமமும் புரட்டும் பித்தலாட்டமும் ஏமாற்றமும் அயோக்கியத்தனமும் செய்து கொள்ளையடித்துக் கொண்டு போகிற இந்த ஆச்சாரியார், மடாதிபதி, லோககுரு, குலகுரு, சாமியார் இவர்களால் மக்களுக்கு ஏதாவது லாபம் உண்டா என்பதை கவனித்துப் பாருங்கள். இவர்களைப் பற்றி நமது தமிழ் ஆதாரங்களில் ஏதாவது எழுதப்பட்டிருக்கிறதா என்று பார்த்தால் எங்கும் கிடையவே கிடையாது. ஆனால் ஆரிய நூல்களில் இருந்தாலும், அது எவ்வளவு ஆபாசமாய் காணப்படுகிறது என்று பார்ப்பீர்களானால் அதன் உண்மை விளங்கும். குருபத்தினி சிஷ்யன் மேல் ஆசைப்பட்டு அவனைக் கெடுத்ததும் அதற்காக சிஷ்யன் சபிக்கப்பட்டதும் காணப்படுவதும், குருக்கள் ஒருவருக்கொருவர் பொறாமையால் சண்டைப் போட்டுக் கொள்ளுவதும், குருபத்தினி சம்பந்தம் செய்தால் அது இன்ன பாவம் என்றும் அதற்கு இன்ன பிராயச்சித்தமென்றும், சிஷ்யனாக ஆசைப்பட்டிருந்தால் இன்ன பிராயச்சித்தமென்றும், அந்தம்மாளாக ஆசைப்பட்டிருந்தால் இன்ன பிராயச்சித்தம் என்றும் புராணங்களும் ஸ்மிருதிகளும் எழுதப்பட்டிருக்கிறதும் அனுபவத்திலும் இம்மாதிரி அக்கிரமங்கள் நடந்து பலர் பாவத்திற்கு ஆளாவது பிராயச்சித்தத்தின் மூலம் பார்ப்பனர்களுக்கு பணம் கொடுப்பதுமல்லாமல் வேறு என்ன லாபம் உண்டாகிறது? ஆத்மார்த்தத்திற்காவது வாழ்க்கைக்காவது ஏதாவது பலன் உண்டா? ஏதாவது உபதேசம் உண்டா?

லோக குரு சங்கராச்சாரியார் முதலிய பணக்கார குருக்கள்மார்கள், நாம் சூத்திரனானதால் நம்மைப் பார்த்தது குற்றம், நம்முடன் பேசியது தோஷம், நமது பாஷையாகிய தமிழை உச்சரித்தது மகா பாவம் என்பதாகக் கருதுவதும், அதற்காக நம்ம பணத்தைக் கொண்டே பிராயச்சித்தம் செய்வதும், அதன் மூலம் பார்ப்பனர்களுக்குத் தானம் கொடுப்பதும் தவிர வேறு பலன் உண்டா? குலகுரு என்கிறவனும் நமது வீட்டிற்கு வந்தால் நமது பாயின் மேல் உட்காரக் கூட அசுசிப்பட்டுக் கொண்டு தாவிக் குதித்து கீழே உட்காருகிறான். ஆனால் அதே குரு அசுசியான வீதியில் நடந்து வரும் போது காலில் என்னென்னவோ மிதித்துக் கொண்டு நடந்து வருகிறான். அவன் நடந்து வந்த அசுசியான தெருவை விட நம்ம வீட்டுப் பாய் அசுசி என்பதாக கருதுகிறான். இப்படிப்பட்டவன் காலில்தான் நாம் விட்டம் போல் விழுந்து கும்பிட்டு பணம் கொடுக்கிறோம். இந்த சமயத்தில் குரு நமக்கு உபதேசம் செய்வதென்ன, நம்முடன் பேசுவதென்ன என்பதை கவனித்தீர்களா?

குரு : சவுக்கியமா?

சிஷ்யன் : தேவரீர் அனுக்கிரகத்தால் நாயேன் சவுக்கியம்.

குரு : உனக்கு எத்தனை குழந்தைகள் ?

சிஷ்யன் : நான்கு குழந்தைகள் .

குரு : பெண் எத்தனை ஆண் எத்தனை?

சிஷ்யன் : ஒரு பெண் மூன்று ஆண்.

குரு : ஆண்களுக்கு கல்யாணம் ஆய்விட்டதா?

சிஷ்யன் : இரண்டு ஆண்களுக்கு கல்யாணமாகிவிட்டது.

குரு :அப்படியா, இரண்டு ஆண்களுக்கு கல்யாணமாகி விட்டதா? அப்படியானால் அது இரண்டு குடும்பம், நீ ஒரு குடும்பம் ஆக மூன்று குடும்பமாகி விட்டது. ஆகவே மூன்று தலைக்கட்டுக்கு தலைக்கட்டு ஒன்றுக்கு ஒன்றே கால் ரூபாய் வீதம் மூன்றோன் மூன்று, மூக்கால் முக்கால் ஆக மூன்றே முக்கால் ரூபாய் அல்லவா காணிக்கை கொடுக்க வேண்டும். நீ ஒன்றேகால் ரூபாய் தானே வைத்திருக்கின்றாய் இது தர்மமா?

சிஷ்யன் :சுவாமி தேவரீர் என்னை மன்னிக்க வேண்டும். குடும்பம் இன்னும் பிரிக்கப்படவில்லையாதலாலும் அதுகளால் இன்னமும் ஒரு சம்பாதனையும் இல்லையாதலாலும் ஒரே குடும்பமாய் பாவித்து விட்டேன்.

குரு : நீ குடும்பம் பிரித்தால் என்ன, பிரிக்காவிட்டால் என்ன. அவர்கள் சம்பாதித்தால் என்ன. சம்பாதிக்காவிட்டால் என்ன. பெரிய சுவாமிகள் காலத்திலேயே உன் பெரியோர்களால் தலைக்கட்டுக்கு ஒன்றேகால் ரூபாய் கொடுப்பதாக பட்டயமிருக்கிறது. அல்லாமலும் சாஸ்திரத்திலும் தலைக்கட்டுக்குத் தனித் தனியாய் வாங்கும்படி ரிஷிகள் சொல்லி இருக்கிறார்கள் . அந்தப்படி கொடுக்க வேண்டும் என்றும் தர்ம சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

சிஷ்யன் : சுவாமி! நாயேன் தெரியாத்தனத்தினால் செய்த குற்றத்தை மன்னிக்க வேண்டும். மூன்றே முக்கால் ரூபா காணிக்கையும் இந்த அபசாரத்திற்காக அபராதம் ஒன்றே கால் ரூபாயும் சேர்த்து ஐந்து ரூபாயாக வைத்திருக்கிறேன். பெரிய மனது செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

குரு : நிரம்ப திருப்தி. மடம் ரொம்பவும் பழுதாயிருக்கிறது. சிஷ்யர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு வந்து பார்த்து அது எப்படி செய்ய வேண்டுமோ அந்தப்படி செய்யுங்கள் . (தன்னைத்தானே) சுவாமிகள் ரம்பவும் அதனால் அசவுக்கியப்படுகிறார்கள் .

சிஷ்யன் : ஆ ஆகா. இதோ 10 நாளில் நாங்கள் எல்லோரும் மடத்திற்கு வந்து ரிபேர் செய்துவிட்டு வருகிறோம்.

இவ்வளவுதான் குருவுக்கும் சிஷ்யர்களுக்கும் சம்பாஷணை. இதைத் தவிர வேறு ஏதாவது நடந்ததை நான் பார்த்ததே இல்லை.

இப்படி இருந்தால் இது ஒரு பகற்கொள்ளையா அல்லவா என்று தான் கேட்கிறோம். இம்மாதிரி குருவையுடைய நாடாவது மக்களாவது சுயமரியாதை, அறிவு, விடுதலை முதலியவைகள் அடைய முடியுமா? எனவே ஒரு கூட்டத்தார் அதாவது பார்ப்பனர்கள் பிழைக்கவே அரசியல், கடவுள் , மதம், ஆச்சாரியார்கள் ஆகியவைகள் இருக்கின்றனவே அன்றி இவைகளால் ஏதாவது பலன் உண்டாகிறதா?

இம்மாதிரியான ஏமாற்றத்திலிருந்து விலகி அன்பு என்கிற உண்மையான கடவுளை அடைய சமத்துவம் என்கிற கொள்கைகளான மதத்தையும் சுயமரியாதை என்கிற குருவையும் அடைந்தால்தான் விடுதலையோ இன்பமோ மோட்சமோ அடைய முடியுமேயல்லாமல் வேறு ஒன்றினாலும் முடியாது என்பதை உணருங்கள் .

(குற்றாலத்தில் சொற்பொழிவு தொடர்ச்சி 4.9.27 குடிஅரசு, 11.9.27 குடிஅரசு.)

குடி அரசு - சொற்பொழிவு - 25.09.1927