Police

கோயம்புத்தூர் மாவட்டம், அவினாசியிலுள்ள ராயர் கல்வி நிலையம் என்ற தனியார் பள்ளியில், 8 ஆம் வகுப்பு படித்துவந்த நாச்சித்து (வயது 13) என்ற தலித் மாணவன் 7.2.2006 அன்று மர்மமான முறையில் இறந்துள்ளார். தலித் மாணவனின் மர்மச்சாவுக்குக் காரணமானவர்களை கைது செய்யக் கோரியும், விதிமுறைகளை மீறி செயல்படும் இப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரியும், உரிய மறு நீதி விசாரணை நடத்தக்கோரியும், ஒரே மகனை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு இழப்பீடு நிவாரணமாக, 5 ஏக்கர் நிலம் வழங்கக்கோரியும் 19.2.2006 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் கண்டனப் பேரணியும் நடந்தது. இதற்காக ‘விழுதுகள்' அமைப்பு, காவல் துறையிடம் அனுமதி கோரியிருந்தது. போராட அனுமதி மறுத்த காவல் துறை, அவினாசி வட்டம் முழுவதும் 144 தடை ஆணை பிறப்பித்தது.

விழுதுகள் அமைப்புக்கு எதிரான பிரச்சாரத்தையும், அவினாசிக்கு போராட வரும் தலித் மக்களையும் கைது செய்வதாக அனைத்து கிராமங்களிலும் ஒலிபெருக்கி மூலம் காவல் துறையினர் பிரச்சாரம் செய்தனர். இதையும் மீறி நீதிகேட்டுப் போராட அவினாசி வந்த விழுதுகள் செயல்வீரர்களை 300க்கும் மேற்பட்ட போலிசார் கிராமங்களிலேயே வழிமறித்து விரட்டியடித்தனர். தலித் மக்கள் வந்த வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. விழுதுகள் அமைப்பாளர் எம். தங்கவேல் மற்றும் குழந்தைகள், பெண்கள், விழுதுகள் செயல் வீரர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறைபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள், போலிஸ் வேனில் அழைத்துச் சென்றபோது தாக்கப்பட்டனர். மீண்டும் 24.2.2006 அன்று சிறீராம் என்ற 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், அதே பள்ளியில் மர்மமாக இறந்துள்ளான். இவ்விரண்டு மர்ம சாவுகளுக்கும் விழுதுகள் தொடர்ந்து நீதி கேட்டுப் போராடி வருகிறது.
Pin It