kovilpatti lockup deathபெறுநர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
தலைமை செயலகம்,
சென்னை-600009.

ஐயா,

பொருள்: சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் காவல் மரணங்கள் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்ற எண்கள் 649/2020 மற்றும் 650/2020, சட்ட பிரிவு 176 1 (1A) கு.ந.ச வழக்குகளை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றியுள்ள அரசாணை (G.O. (2D) NO 150, Home (Police VIII) Department, dated 29.6.2020)யைத் திரும்பப்பெற்று, மீண்டும் சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடர்ந்து நடக்க உத்திரவிடக் கோருதல்-தொடர்பாக.

வணக்கம்! கடந்த 19.6.2020 ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் பேரூராட்சியில் செல்போன் கடை வைத்திருந்த வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பின்னர் காவல் சித்தரவதையால் முறையே 22.6.2020 மற்றும் 23.06.2020 ஆம் தேதிகளில், கோவில்பட்டி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக கோவில்பட்டி காவல் நிலையத்தில் 649/2020 மற்றும் 650/2020 ஆகிய குற்ற எண்களில் மரணத்திற்கான காரணம் குறித்து மாஜிஸ்ட்ரேட் விசாரிக்கும் வழக்கு பதியப்பட்டது. பின் அந்த வழக்குகளில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்திரவிற்கிணங்க, சி.பி.சி.ஐ.டி காவல்துறை புலன் விசாரணை மேற்கொண்டு, வழக்கினை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வந்தனர்.

ஏற்கனவே இவ்வழக்கில் இதுவரை சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சார்ந்த பத்து காவல் துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கின் முக்கிய சாட்சிகளின் விசாரணை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கின் பெரும்பாலான சாட்சிகள் விசாரிக்கப்பட்டும், வழக்கின் சான்று பொருள்கள் மற்றும் சான்றாவணங்கள் சேகரிக்கப்பட்டும் உள்ளன. சி.பி.சி.ஐ.டி காவல்துறை நேர்த்தியான முறையில் வழக்கின் புலனாய்வை மேற்கொண்டது. சி.பி.சி.ஐ.டி காவல் துறையின் செயல்பாடு, பொதுமக்கள் மத்தியில் பாராட்டையும், சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு மேற்கண்ட இரு வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு மாற்றி அரசாணை (G.O. (2D) NO 150, Home (Police VIII) Department, dated 29.6.2020) வெளியிட்டது. இந்தச் செயல், மாநிலத்தின் கொள்கை முடிவு எனக் கருதி நீதிமன்றம் அதில் தலையிடவில்லை. ஆனால், 30.06.2020 அன்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தன் ஆணையில், கொரோனா சூழலில் சிபிஐ எந்த அளவிற்கு இந்த வழக்கில் வேகமாக செயல்பட முடியும் என்ற கரிசனத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அரசின் கொள்கை முடிவு, பொதுமக்களின் பொது கருத்துக்கு எதிராகவோ அல்லது அரசின் செயல் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் இருந்தாலோ, அரசு தன் கொள்கை முடிவை மறுபரிசீலனை செய்வதே மக்களாட்சியின் மாண்பிற்கு உகந்தது. மேலும் ஒரு முறை அரசு பிறப்பித்த அரசாணையைத் திரும்பப் பெற எந்த சட்டத்தடையும் இல்லை.

மனித உரிமைச் செயல்பாடுகளில் தொடர்ந்து தமிழக மற்றும் இந்திய அளவில் செயல்படும் எங்கள் இயக்கம், பொதுமக்களின் கருத்துக்களை அறிந்த வகையில், மத்திய புலனாய்வுத் துறைக்கு இந்த வழக்குகளை மாற்றியது, அரசின் நம்பகத்தன்மை மீது பெரும் ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே கருதுகிறது. ஆரம்பத்தில் இந்த வழக்கில் இறந்தவர்கள் நோய் காரணமாக இறந்ததாக தங்களின் அறிக்கை வந்ததும், நீதிமன்றம் தலையிடுவதற்கு முன், குற்றவாளிகளைக் கைது செய்வதில் இருந்த அரசின் பாராமுகம் குற்றவாளிகளுக்கு மறைமுகமாகவும் நேரிடையாகவும் சாதகமாக அமைந்தது.

தற்போது வழக்கின் புலன் விசாரணை மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ள சூழலில், வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றுவதை சிவில் சமூகம், வழக்கின் விசாரணையை பாதிக்கும் செயல் என்றே கருதுகிறது. ஏனெனில், ஏற்கனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு, ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் சி.பி.ஐயின் செயல்பாடு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. மேலும், அந்த துறைக்கு சி.பி.சி.ஐ.டி போன்று முறையான கட்டமைப்பு மற்றும் ஆள்பலம் இல்லை. எனவே, தற்போது உள்ளது போன்று விரைவாக விசாரணை நடைபெறாமல் கூடுதல் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குற்றம் சாட்டப்பட்டோருக்கு சாதகமாக முடியும். சாட்சி மற்றும் சாட்சியங்கள் கலைக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே, ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல் மரணங்கள் தொடர்பான இரண்டு வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு மாற்றி வெளியிட்ட அரசாணை (G.O. (2D) NO 150, Home (Police VIII) Department, dated 29.6.2020)யைத் திரும்பப்பெற்று, உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில், சி.பி.சி.ஐ.டி காவல்துறையே தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, விரைந்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து, வழக்கு விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கித் தரும் வகையில், தமிழக அரசு செயல்பட வேண்டும் என பியூசிஎல் கோருகிறது.

தங்கள் உண்மையுள்ள,

கண.குறிஞ்சி, மாநிலத் தலைவர் & க.சரவணன், மாநிலப் பொதுச் செயலர், PUCL

Pin It