உங்கள் குழந்தைகள்
உங்கள் குழந்தைகள் அல்ல
அவர்கள் உங்கள் வழி வந்தவர்கள்
அவ்வளவுதான்''

இப்படியொரு புகழ்பெற்ற கவிதை குழந்தைகளின் தன்னியல்பை, சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிறது. குழந்தைகள் முதலில் கொஞ்சப்படுபவர்களாக இருக்கின்றனர். பின்னர் அவர்கள் பெரியவர்கள் ஆகும்வரை, மற்றவர்களின் கண்காணிப்பிலேயே காலத்தைக் கழிக்கின்றனர். அவர்களின் சிரிப்பும், அழுகையும், நேசிப்பும், வெறுப்பும் கணக்கில் கொள்ளப்படாதவையாகவே மாறிவிடுகின்றன. மாறிவரும் சமூக, பொருளாதாரச் சூழலில், தற்போதைய குழந்தைகள் கொலைக்களமாக இருக்கின்ற தொலைக்காட்சியில் தங்களைப் புதைத்துக் கொள்கின்றனர். நவீன சமூகத்தில், புறக்கணிக்கப்பட்ட மானுடத்தின் ஒரு பகுதியாகவே குழந்தைகள் உள்ளனர் என்பதே உண்மை.

குழந்தைகளுக்கான உரிமைச் சட்டத்தை 1990 செப்டம்பர் அன்று, அய்.நா. பொதுச்சபை நிறுவியது. 1992இல், முதல் குழந்தைகள் உரிமைச் சட்டம் இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது. குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக பல்வேறு சட்டவரைவுகள் இருந்தாலும், உலகிலேயே அதிக குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. உலக அமைப்பின் கணக்குப்படி, ஒரு கோடியே பத்து லட்சத்திலிருந்து இரண்டு கோடியே முப்பது லட்சம் குழந்தைகள், தொழிலாளர்களாக இருக்கின்றனர். இதில் 20 லட்சம் குழந்தைகள், ஆபத்து நிறைந்த தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது வேதனையிலும் வேதனையான ஒன்று. நான்கு லட்சத்து இருபதாயிரம் குழந்தைகள், வீதியில் வாழும் குழந்தைகளாக இருக்கின்றனர். ஏமாற்றுதலுக்கும், சுரண்டுதலுக்கும் இவர்கள் உட்படுத்தப்படுகின்றனர். ஓரிடத்தில் இல்லாமல் இடம் மாற்றிக் கொண்டே இருக்கும் கட்டடத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கு வழியின்றி, வாழ்க்கையுமின்றி பெற்றோருடன் ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கின்றனர். மேலும், இந்தியாவில் குழந்தை விபச்சாரம் பெருகியுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ‘யுனிசெப்' கணக்கெடுப்பின்படி, 15% விபச்சாரிகள், விபச்சாரத்திற்காக 15 வயதிற்குள்ளும், 25% பேர் 18 வயதிற்குள்ளும் வலிந்து தள்ளப்படுகின்றனர். ஏறக்குறைய 25,000 குழந்தைகள் பெங்களூர், கல்கத்தா, சென்னை, டெல்லி, அய்தராபாத், மும்பை போன்ற பெருநகரங்களில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. நான்கில் மூன்று பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படுகின்றன.

இவை மட்டுமன்றி, பள்ளிச் செல்லும் குழந்தைகள் மீது நடக்கின்ற வகுப்பறை வன்முறையும் கண்டுகொள்ளப்பட வேண்டியிருக்கிறது. பிஞ்சுக் குழந்தைகள் முதுகில் புத்தக மூட்டைகளையும், மகிழ்ந்திருக்க வேண்டிய வயதில் பாடத்தின் சுமைகளையும் ஏற்றி வைத்திருக்கிறது இன்றைய உலகம். மறுக்கப்பட்ட மக்களின் ஒரு பகுதியாக விளங்கும் குழந்தைகள், தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யும் இடம் இல்லாமல் இருந்தனர். அவர்களின் பங்கேற்பு இல்லாமல் ஜனநாயகம் முழுமை பெறாது என்பதால், அவர்களின் கருத்துகளைக் கூற வைத்து, முடிவு எடுக்க வைத்து, அவை மீது அவர்கள் செயல்படவும் முடியும் என்பதை நிரூபிக்க உருவாக்கப்பட்ட அமைப்புதான் குழந்தைகள் பாராளுமன்றம்.

ஒவ்வொரு கிராமத்திலும் இத்தகைய குழந்தைகள் பாராளுமன்றம் செயல்படலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 300 குழந்தைகள் பாராளுமன்றங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குழந்தைகளின் பாராளுமன்றத்திலும் அவைத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள் இருப்பார்கள். அவர்கள் திட்டங்களைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசுவார்கள். அந்த கிராமத்தின் தேவை குறித்து விவாதிப்பார்கள். அதன் மீது நடவடிக்கைகள் எடுப்பார்கள். இத்தகைய குழந்தைகள் பாராளுமன்றம், நவம்பர் 14, 2005 அன்று, குழந்தைகள் நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் மாபெரும் நிகழ்வாக சிறப்புற நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குழந்தைகள் பாராளுமன்ற அமைப்பினைச் சேர்ந்த த. பிரேமா தலைமை தாங்கினார். ஜானகிராமன், நிர்மலா, செண்பகவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Child child child
child குழந்தைகள் பாராளுமன்றத்தில், எட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு விவாதிக்கப்பட்டன. பெற்றோருக்கு வேலைவாய்ப்பு, பொதுக்கல்வி முறை, நீர்வளங்களைப் பாதுகாத்தல், குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்தல், குழந்தை நீதி ஆணையம், சுகாதாரத்தையும் மருத்துவத்தையும் உறுதி செய்தல், குழந்தைகளின் பங்கேற்பு உரிமையை உறுதிப்படுத்துதல், உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீட்டை உறுதி செய்தல் ஆகிய மசோதாக்கள் மீது விவாதங்கள் நடைபெற்றன. பின்னர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குழந்தைகள் பாராளுமன்றம் நிகழ்ச்சியை வாழ்த்த வந்த பெண்கள் ஆணையத் தலைவர் வி. வசந்திதேவி, "இந்தப் பாராளுமன்றத்தை குழந்தைகள் மாதிரிப் பாராளுமன்றமாகவே நடத்தி உள்ளனர். கூச்சல் குழப்பம் இல்லை. எதிர்க்கட்சிகள் தாக்குதல் இல்லை. ஆனால், விவாதங்களும் விடைகளும் மிகவும் தெளிவாகவே இருந்தன. குழந்தைகளால் எல்லாம் முடியும் என்பதை இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தியது'' என்று பேசினார்.

குழந்தைகளை வாழ்த்தி, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், பத்திரிகையாளர் அ. குமரேசன், கிரிஜா குமாரபாபு, அறிவியல் இயக்கம் கல்பனா, மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் ஆகியோர் பேசினர். விழாவில் குழந்தைகள் பாராளுமன்றம் குறித்த கையேடு ஒன்றினை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் வெளியிட, அருட்தந்தை மார்ட்டின் பெற்றுக் கொண்டார்.

ஏராளமான பார்வையாளர்கள் பங்குபெற்ற குழந்தைகள் பாராளுமன்றம், ‘குழந்தைகள் தங்கள் உரிமையை நிலைநாட்டப் புறப்பட்டு விட்டனர்' என்ற நம்பிக்கையை அளித்தது.
Pin It