ஆக. 26-31 வரை கழகத்தின் பரப்புரை 5 முனைகளிலிருந்து தொடங்குகிறது
கழகத்தின் தலைமைக் குழு முடிவு
திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு, ஜூலை 13, 2019 பிற்பகல் 2.30 மணியளவில் மேட்டூரில் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நிகழ்ந்த குழுவின் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, முகநூல் பதிவு பொறுப்பாளர் பரிமள ராசன், இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், சென்னை இரா. உமாபதி, விழுப்புரம் அய்யனார், மடத்துக்குளம் மோகன், மேட்டூர் சக்திவேல், காவலாண்டியூர் ஈசுவரன், சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கழகக் கட்டமைப்பு நிதி வரவு குறித்து நன்கொடையாளர்கள் அளித்த நிதி விவரங்களை தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன் விரிவாக எடுத்துரைத்தார். தலைமைக் கழகக் கட்டிடத்தை மறு சீரமைப்பு செய்வது குறித்தும் விவாதிக்கப் பட்டது. விரைவில் கூடவிருக்கும் செயலவைக் கூட்டத்தில் மாவட்ட வாரியாகப் பெற்ற நன்கொடை குறித்து விரிவாக விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.
ஆண்டுதோறும் கழகம் நடத்தி வரும் பரப்புரைப் பயணம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு நாளும் தமிழர் உரிமைகளுக்கு எதிரான அதிரடி அறிவிப்புகள் வந்து கொண்டிருப்பதை உறுப்பினர்கள் கவலையுடன் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவிலே பெரியார் மண்ணாகத் திகழும் மதவெறி சக்திகளுக்கு இடமளிக்காத - பார்ப்பன எதிர்ப்பு சமூக நீதி கருத்துகளை ஆழமாக உள்வாங்கிக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டையும் திராவிட இயக்கங்களையும் குறி வைத்துத் தாக்கி வரும் பார்ப்பன - பா.ஜ.க. - சங்பரிவார் சக்திகள் குறித்தும் தோழர்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
சமஸ்கிருதம் - இந்தியைத் திணிப்பதோடு வடநாட்டுக்காரர்களையும் தமிழ்நாட்டு அரசு வேலைகளில் திணித்து வரும் போக்கு அதிகரித்து வருவதையும், கஸ்தூரி ரங்கன் குழு வெளியிட்டுள்ள கல்விக் கொள்கை மீண்டும் குலக் கல்வித் திட்டத்தைத் திணிக்கும் ஆபத்துகளைக் கொண் டிருப்பதையும் தலைமைக் குழு விவாதித்தது. மண்ணின் மைந்தர்களின் மொழி உரிமை, வேலை வாய்ப்பு உரிமை, இடஒதுக்கீடு உரிமைகளைப் பறிப்பதையும் 10 சதவீத பொருளாதார அடிப்படை யிலான உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டைத் திணிப்பதையும் கண்டித்தும், ஜாதி வெறியைத் தூண்டி அதன் வழியாக மத வாதத்துக்குள் ஜாதிக் குழுக்களைக் கொண்டு வந்து ‘இந்து மத’ வெறியைக் கட்டமைத்து பா.ஜ.க.வை வளர்க்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் சூழ்ச்சித் திட்டங்களையும் விரிவாக தோழர்கள் பகிர்ந்தனர். பரப்புரை இயக்கத்தை மண்ணின் மைந்தருக்கான உரிமை கோரும் இயக்கமாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஆகஸ்டு 26, 2019இல் பயணம் தொடங்கி, ஆக. 31இல் நிறைவு செய்வது என்றும் பயண நிறைவு விழாவை மேட்டூரில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. சென்னை, மேட்டூர், திருப்பூர், மயிலாடுதுறை, விழுப்புரம் பகுதிகளிலிருந்து 5 பயணக் குழுக்கள் புறப்படுகின்றன. பயணக் குழு பொறுப்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்களை தலைமைக் குழு முடிவு செய்தது.
சென்னை - இரா. உமாபதி; மேட்டூர் - சி.கோவிந்த ராஜ் (ஜி.பி.), திருப்பூர் - சூலூர் பன்னீர்செல்வம்; மயிலாடுதுறை - இளையராஜா; விழுப்புரம் - அய்யனார்.
அண்மைக்காலமாக ஜாதி ஆணவப் படுகொலை, தமிழகத்தில் அதிகரித்து வருவதை தலைமைக் குழு விவாதித்தது. ஜூலை 23ஆம் தேதி கோவையில் ஜாதி வெறி - ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த தோழர்கள் பெருமளவில் பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதேபோல் சென்னையில் ஜூலை 26 அன்று மண்ணின் மைந்தருக்கே வேலை கொடு எனும் முழக்கத்தை முன் வைத்து, பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுவைக் கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள் பெருமளவில் பங்கேற்கச் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.