தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு, அதற்கான காரணங்களைத் தேடியிருப்பதால், அரசின் இந்தக் கைது ஆணை குழப்பமாக அமைந்துவிட்டது என்று கடந்த 16.4.2009 வியாழனன்று சென்னையில் அறிவுரைக் குழுமத்தின் முன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார். தடுப்புக் காவல் சட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகளடங்கிய அறிவுரைக் குழுமத்தின் முன் கைது செய்யப்பட்டு, நான்கு வாரம் கழித்து, தங்கள் தரப்பு நியாயங்களை முறையிட முடியும். அதன்படி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி - சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் அறிவுரைக் குழுமத்தின் முன் பகல் 1 மணியளவில் நேர் நிறுத்தப்பட்டார்.
கழகத் தலைவர் வரவிருக்கும் சேதி அறிந்து, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் இளங்கோ, சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் ஏராளமாக திரண்டிருந்தனர். வழக்குறைஞர் அல்லாத ஒருவர் வாதிடலாம் என்ற மரபுப்படி, கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், கழகத் தலைவருக்காக நீதிபதிகள் முன் தமது கருத்துகளை முன் வைத்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சுமார் 45 நிமிட நேரம் எழுத்துப்பூர்வமாக தயாரித்து வந்த அறிக்கையை முன் வைத்து பேசினார். நீதிபதிகள் கருத்துகளை உன்னிப்பாகக் கேட்டனர். அறிவுரைக் குழுமங்கள் நீதி வழங்கும் என்று தாம் நம்புவதில்லை என்ற முன்னுரையோடு - அவரது உரை தொடர்ந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுத்துப்பூர்வமாக குழுமத்தில் முன் வைத்த வாதம்:
நான் பார்வை 1, 2-ல் கண்ட ஆணைகளின்படி மதுரை நடுவண் சிறையில் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் உள்ளவன் ஆவேன். நான் பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பின் தலைவராக கடந்த எட்டு ஆண்டுகளாக இருந்து வருகிறேன். தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்களைத் திட்டமிட்டு இனப் படுகொலை செய்து வரும் இலங்கை சிங்கள, பவுத்த பேரினவாத இராஜபக்சேயின் இராணுவத்துக்கு - தமிழ்நாட்டுத் தமிழர்களின் அனைத்துத் தரப்பினரும் மேற்கொண்ட அனைத்து வகையிலான போராட்டங்களையும், உணர்வுகளையும் சற்றும் மதிக்காமல் புறந்தள்ளிவிட்டு, தனி மனித விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் - தொடர்ந்து ஆய்தம், நிதி, தொழில்நுட்பம், வல்லுநர் என உதவி வரும் மத்திய அரசின் காங்கிரசை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அடையாளம் இல்லாமல் போகும் வண்ணம் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்ற முனைப்போடு களப்பணிகளும், கருத்துப் பரப்பல் பணிகளையும், ஒத்த கருத்துள்ள அமைப்புகளை உடன் இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்தேன். மத்திய காங்கிரசு அரசின் தேர்தல் கூட்டாளியான தமிழ்நாட்டு தி.மு.க. அரசு எங்களைப் போன்றோரின் நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்ற நோக்கில் போதிய காரணங்கள் இல்லை எனிலும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்ற தடுப்பு காவல் சட்டங்களை பயன்படுத்த தனது அரசு அதிகாரங்களை தவறாக உபயோகித்து வருவதின் ஒரு செயலே என் மீதான தடுப்புக் காவல் ஆணையாகும். அது குறித்து விளக்கம் அளிக்கவே இன்று உங்கள் முன் நிற்கிறேன்.
சீரங்கம் பெரியார் சிலை உடைப்புக்காக எதிர்வினை ஆற்றிய எங்கள் இயக்கத் தோழர்கள் ஏழு பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ச்சப்பட்டு, அது தொடர்பாக கடந்த 2007 ஆம் ஆண்டில் எங்கள் தோழர்கள் அப்போதைய அறிவுக் குழுமத்தின் முன் நிறுத்தப்பட்டபோது அத் தடுப்புக் காவல் ஆணை, சட்டப்படி செல்லாது என்பதைச் சுட்டிக்காட்டியும், அறிவுரைக் குழுமம் தலையிடவில்லை என்ற நிகழ்வாலும், மேலும் அரசியல் காரணங்களால் போடப்படும் தடுப்புக் காவல் ஆணைகளின் பொருந்தாமையை சுட்டிக் காட்டினாலும் அறிவுரைக் குழுமம் தலையிடுவதில்லை. உயர்நீதிமன்றமே ஏறத்தாழ எல்லா ஆணைகளையும் இரத்து செய்து வந்துள்ளது. ஆகவே அறிவுரைக் குழுமம் என்ற நடைமுறை குறித்து நான் பொதுவாக நம்பிக்கை வைப்பதில்லை. எனினும், உங்கள் மூவர் மீதும் உள்ள மரியாதை காரணமாக கீழ்க்கண்ட எனது கருத்துக்களை உங்களின் கனிவான பரிசீலனைக்கும் உரிய நடவடிக்கைகளுக்கும் முன் வைக்க விரும்புகிறேன்.
தகவல் 1-ல் கண்ட தடுப்புக் காவல் ஆணை, அதைப் பிறப்பிக்கக் கோரி திண்டுக்கல் நகர (வடக்கு) காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் அளித்த பிரமாண வாக்குமூலம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அளித்துள்ள தடுப்புக் காவலுக்கான காரணங்கள் குறித்தும் கூற விரும்புகிறேன். ஆய்வாளர், ஈரோடு கருங்கல்பாளையம் வழக்கு, அவரது காவல்நிலைய வழக்கு, திண்டுக்கல் வழக்கு மீதான எனது பிணை மனு 11.3.2009 அன்று விசாரணைக்கு வருதல் ஆகியவற்றை சுட்டிக்காட்டி நான் பிணையில் வந்தால் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும், குந்தகமான குற்றங்களில் ஈடுபடக் கூடும் என்பதால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 3(2)-ன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்குமாறு தனது 9.3.2009 நாளிட்ட பிரமாண வாக்குமூலத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வேண்டுகோள் காவல் நிலைய ஆய்வாளர் வைக்கிறார்.
அதைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர், நான் கண்காணிப்புக்கு வர காரணமான ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையம் காவல் நிலைய குற்ற எண்.1051/08 வழக்கையும், அவ்வழக்கின் எங்களது பிணை ஆணையையும், வழக்கு விசாரணையில் உள்ளது என்பதையும் பார்க்கிறார். உடனே, நான் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும், இந்திய தேசத்தவரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு வெளிப்படையாக ஆதரிக்கும் செயலை செய்துள்ளேன் என திருப்தி அடைந்துள்ளார். ஆனால், அவ்வழக்கு குறித்து வழங்கப்பட்டுள்ள புத்தகத்தின் 7, 9 ஆகிய பக்கங்களிலுள்ள எனது பேச்சில் குற்றம் சொல்லப்படும் எந்தக் கருத்தும் இல்லை என்பது, படித்தால் தெளிவாக உணர முடியும். பேச்சின் இறுதியில் ‘தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய அமைச்சர்களுக்கு பெரியார் திராவிடர்கழகம் கருப்புக் கொடி காட்டும்’ என்பது வேண்டுமானால் தமிழக ஆளும் கட்சிக்கு ஆத்திரமூட்டுவதாக இருக்கலாம்.
அவ்வழக்கில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டிருக்கும் இரண்டு காவல் துறையினரும், சில காங்கிரஸ்காரர்களும் மட்டும் அக்கூட்டத்தில் பேசிய மூவரும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாகவும், பொது மக்களிடையே பயம் மற்றும் பீதி ஏற்படும் வண்ணம் பேசியதாகவும் கூறியுள்ளனர். அதற்கு எவ்வித ஆதாரமும் காட்டப்படாமல் உள்ளதாலும், சாட்சிகளின் அலுவல், கட்சி சார்ந்த சுயநல அக்கறை காரணமாக சொன்னதாகத் தான் கருத வேண்டியுள்ளது. ஆனால், கூட்ட நடவடிக்கைகளைக் குறிப்பெடுத்த ஈரோடு காவல் சுருக்கெழுத்துக்கூட இள நிலை அறிக்கையாளர் திரு.இரா.சந்தான முருகன், “பேச்சுக்கள் ஆர்வத்துடன் கேட்கப்பட்டன” என்றே தன் கணிப்பை அவரது சுருக்கெழுத்து அறிக்கையின் இறுதியில் (புத்தக பக்கம்:37) குறிப்பிட்டுள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அந்த பேச்சு எவ்வாறு சட்ட விரோத நடவடிக்கைக்கு ஆதரவானதாகும் என்பதையோ, அந்த பேச்சு எவ்வாறு தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிக்கும் செயல் என்பதையோ விளக்கவில்லை.
ஆனால், என்னுடைய செயல்பாடுகளைத் தடுக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படாவிடில் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும், இந்திய தேசத்தவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், தடை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் அமைப்பிற்கு வெளிப்படையாக ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவேன் என்று, தான் அறிவேன் என்று கூறி, எனவே என்னை தேசியப் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 3(2)ன்படி தடுப்புக் காவலில் வைக்க ஆணை பிறப்பித்து விடுகிறார்.
மேற்கண்டவாறு என் மீது தேசியப் பாதுகாப்பு சட்டப்படி தடுப்புக் காவலுக்கு ஆணை பிறப்பித்ததற்குப் பிறகு தான் திண்டுக்கல் நகர (வடக்கு) காவல் நிலைய வழக்கு குறித்த ஆவணங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறார். அந்த வழக்கு (குற்ற எண்.325/2009) முதல் தகவல் அறிக்கையிலுள்ள சார்பு ஆய்வாளர் திரு.எஸ். ராஜகோபால் அவர்களின் புகாரில்கூட (புத்தக பக்கம்:93) எனது பேச்சு ‘இருதரப்பினரிடையே பகை உணர்வை தூண்டக்கூடிய வகையிலும்’, ‘பொது மக்களிடையே பயத்தை உண்டாக்கும் வகையிலும், குற்றத்தை மாநிலத்திற்கு எதிராக செய்யும் நோக்கத் துடனும்’ இருந்ததாகத்தான் புகார் கூறியுள்ளார். அதே போல அந்த முதல் தகவல் அறிக்கையிலும்கூட எனது பேச்சின் சுருக்கெழுத்து அறிக்கை என்பதாக ஒரு பதினொரு பக்க அறிக்கை இணைக்கப்பட்டிருக்கிறதே தவிர, அதன் எந்தப் பகுதி சட்ட விரோத மானது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டவும் இல்லை.
அதே போல காவல் ஆய்வாளரின் காவல் அடைப்பு அறிக்கையிலும் எனது பேச்சு “அரசியல் கட்சியினருக்கிடையே பகை உணர்வைத் தூண்டக் கூடிய வகையிலும் பொது மக்களுக்கிடையே பயத்தை உண்டாக்கும் வகையிலும், குற்றத்தை மாநிலத்துக்கு எதிராக செய்யும் நோக்கத்துடனும், சட்டத்துக்கு புறம்பாக கலவரத்தைத் தூண்டும் வகையிலும்” இருந்துள்ளதாக தான் குறிப்பிட்டுள்ளார். (புத்தக பக்கம்: 191)
முதல் தகவல் அறிக்கையிலும், காவல் அடைப்பு அறிக்கையிலும், “13(1)(b) Unlawful Activities Prevention Act 1967” என்ற ஒரு பிரிவு எழுதப்பட்டுள்ளதே தவிர, உள்ளடகத்தின் எந்த இடத்திலும் அதற்கான செயல் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. இது குறித்தெல்லாம் தனது சிந்தனையைச் செலுத்தி ஆய்வு செய்யாமல், எனது 3.3.2009 நாளிட்ட கடிதத்தில் (புத்தக பக்கம்: 239-243) குறிப்பிட்டிருந்ததைப் போல அரசியல் பழிவாங்களுக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்த எடுக்கப்பட்ட முன் முடிவு காரணமாகவே இப்படி எந்திர ரீதியில் ஆணை பிறப்பித்துள்ளார். 2.3.2009 அன்று என்னை இவ்வழக்கில் கைது செய்வதற்காக மேட்டூர் வந்திருந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள், என்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதாகச் சொன்னதைக் குறிப்பிட்டு 3.3.2009 நாளிட்ட ஒரு கடிதத்தை (புத்தக பக்கம் 239-243) திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட மூவருக்கு சிறைக் கண்காணிப்பாளர் வழியாக அனுப்பி, எவ்வித விசாரணையும் செய்யாத நிலையிலேயே தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்த எடுத்துள்ள முடிவால், அரசியல் பழிவாங்கல் காரணமாக நான் பாதிக்கப்படாமல் உரிய நடவடிக்கை எடுத்து நீதி வழங்குமாறு வேண்டியிருந்தேன்.
ஆனால், எனது கடிதத்துக்கு பார்வை 3-ல் கண்ட பதிலில் (புத்தக பக்கம்: 245, 247), எனது கடிதத்தை உரிய வகையில் மனதை செலுத்தி பரிசீலிக்காத காரணத்தால், உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு கைது செய்துள்ளார்கள் என்று கூறி எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக ஒரு எந்திரகதியான பதிலை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அனுப்பியிருந்தார். அதன்படி தேசிய பாதுகாப்பு சட்டப்படி கைது செய்ய அவர்கள் கொண்டிருந்த முன் முடிவு உறுதிப்படுகிறது. மேலும், ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் தேசிய பாதுகாப்பு சட்டப் பிரிவு 3((2)ன்படி மாநிலத்தின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு பாதிப்பு, மக்களுக்கான அத்தியாவசிய பொருள் வழங்கல் சேவை பராமரித்தல் போன்ற காரணங்களுக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும் எனிலும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரோ ‘இந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை, இந்திய தேசத்தவர் பாதுகாப்பு’ என்ற காரணங்களுக்காக, என் மீது சிந்தனையைச் சிறிதளவும் பயன்படுத்தி ஆராயாமல், தேசியப் பாதுகாப்பு சட்டப் பிரிவு 3(2)-ன்படி தடுப்புக் காவலுக்கு ஆணையிட்டது, தடுப்புக் காவலில் வைக்க வேண்டும் என அவர் கொண்டிருந்த முன் முடிவை அப்பட்டமாக தெளிவுபடுத்துகிறது.
இந்தப் பிழையை எவ்வாறோ பின்னர் அறிய வந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர், 11.3.2009 அன்று அவசர அவசரமாக தே.பா.ச. தடுப்புக் காவல் ஆணை எண்.1/2009 (திருத்தம்) என்ற கடிதத்தை அனுப்பி, பழைய தடுப்புக் காவல் ஆணையில் பக்கம் 1, பத்தி 1, ஆறாவது வரியில் “இந்திய ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும்” என இருப்பதை, “பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு” என்று திருத்தி வாசிக்குமாறு ஆணையிட்டுள்ளார். ஆனால், இவ்வாறு திருத்தம் மேற்கொள்ளுவதற்கு உரிய காரணமாக எந்த ஒரு ஆவணத்தையோ, ஆதாரத்தையோ இணைத்துக் கொடுக்கவுமில்லை. அதோடு, தடுப்புக் காவலுக்கான காரணங்களிலும், எட்டு இடங்களில் “பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம்” என்ற சொல்லை சேர்க்கச் சொல்லி, புதிய ஆவணங்களையோ, வேறு ஆதாரங்களையோ காட்டாமல் திருத்த ஆணை பிறப்பித்துள்ளார்.
இவ்வாறு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 3(2)-க்கு இணக்கமாக “பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம்” என்ற சொல்லை இணைக்கும் முயற்சியிலும், போதிய அளவுக்கு மனதைச் செலுத்தாத காரணத்தால், தடுப்புக் காவலுக்கான காரணங்கள் அறிக்கையின் முதல் பத்தியில் என்னை, “இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும், இந்திய தேசத்தவரின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகவும், தடை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு வெளிப்படையாக ஆதரிக்கும் செயலையும் செய்துள்ள சமூக விரோதி” என்பது திருத்தத்துக்கும் பிறகும் அப்படியேதான் உள்ளது. காரணங்களைக் கொண்டு முடிவுக்கு வராமல், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தடுப்புக் காவலில் என்னை வைத்துவிட வேண்டும் என்ற முன் முடிவுக்கு சாதகமாக காரணங்களைத் தேடியதால்தான், இந்த முன்னுக்குப் பின் முரண்களும், குழப்பங்களும் நேரிட்டுள்ளது என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது. “பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம்” என்பது கூட அல்ல, சாதாரண, “சட்ட ஒழுங்குக்கு குந்தகம்” என்பதற்கான ஆதாரம்கூட எந்த ஆவணத்திலும் இல்லை.
இன்னும் சொல்லப் போனால், ஈரோடு கருங்கல் பாளையம், திண்டுக்கல் நகரம் (வடக்கு) ஆகிய வழக்குகளுக்கு அடிப்படையான சுருக்கெழுத்தாளர் அறிக்கைகளின் இறுதியில் (புத்தக பக்கம்: 37-179) பேச்சுக்களால் பொது மக்கள் பயமோ, பீதியோ அடையாமல், “பேச்சுக்களை ஆர்வத்துடன் கேட்டார்கள்” என்பதற்கான ஆதாரங்கள் தான் உள்ளன. அதோடு, ஈரோடு கருங்கல் பாளைய கூட்டம் (14.12.2008) நடந்து மூன்று மாதங்களும், திண்டுக்கல் கூட்டம் (26.2.2009) நடந்து இரண்டு வாரங்களும் கடந்த நிலையிலும் தடுப்புக் காவல் ஆணை பிறப்பித்த (10.3.2009) நாள் வரை பேச்சுக்களால் எவ்வித பதட்ட நிகழ்வு நடந்ததாகக்கூட எந்த ஆதாரமும் காட்டப்படவில்லை. மேலும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தடுப்புக் காவலில் வைக்க கோரிக்கை வைத்து திண்டுக்கல் நகர (வடக்கு) காவல் நிலைய ஆய்வாளரின் அறிக்கை (பத்தி 2 - பத்தி 4)யில் “இந்திய ஒருமைபாட்டிற்கும், இறையாண்மைக்கும், இந்திய தேசத்தவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும்” இருப்பதாக சொல்லப்பட்டது. அப்படியே இருக்க, அதன் அடிப்படையில் பிறப்பிக்கப்படும் தடுப்புக் காவல் ஆணையில் மட்டும் “பொது ஒழுங்குக்கு குந்தகம்” என காரணம் எப்படி மாறியது என்பதற்கு தெளிவான எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை.
மேலும், ‘திருத்தம்’ என்பது எழுத்துப் பிழைகளுக்காக செய்வது தானே தவிர, அடிப்படை பொருளையே மாற்றுவதாக இருக்க முடியாது. புதிய ஆதாரங்கள், ஆவணங்கள், தரவுகள் கிடைத்திருந்தால் பழைய ஆணையை இரத்து செய்து விட்டு, புதிய காரணங்களுக்காக புதிய ஆணையைத் தான் பிறப்பித்திருக்க வேண்டும். எனவேதான், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின்படி ஏற்பளித்து பார்வை 2-ன்படி அரசாணை பிறப்பித்த, பொது (சட்டம், ஒழுங்கு-எப்)த் துறையின் அரசு இணைச் செயலாளர்கூட, சட்டஆய்வின்படி நிற்குமோ நிற்காதோ என்பது குறித்துக்கூட கவனம் கொள்ளாமல், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் 10.3.2009 அன்று பிறப்பித்த தடுப்புக் காவல் ஆணையை ஆளுநர் கவனமாக பரிசீலித்த பின் ஏற்பளிப்பதாக கடைமைக்காக கூறுவதோடு முடித்துக் கொண்டதாகவே எண்ண வேண்டியுள்ளது.
ஏனெனில் 11.3.2009 ஆம் நாளிட்ட “திருத்த ஆணை” அவரது கவனத்துக்கு வந்திருந்தும், அவர் அதை புறக்கணித்து விட்டிருக்கிறார். தடை செய்யப்பட்ட இயக்கங்களின் சட்ட விரோத செயல்களுக்கு உதவும் செயல்கள்தான் சட்ட விரோதமானதே தவிர, தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருப்பினும் அதன் சட்டப்படியான நடவடிக்கைகளை ஆதரிக்கும் செயல் குற்றமாகக் கருத முடியாது. மேலும் தடைசெய்யப்படும் இயக்கங்களை ஆதரிக்கும் பேச்சுகள்கூட குற்றமாகாது என உச்சநீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தும் இருக்கின்றன. இவ்வாறிருக்க, குறிப்பிட்டுள்ளபடி எவ்வித குற்றங்களையும் இழைக்காத என்னை, போதிய காரணங்களை முன் வைக்காமலும், சட்ட விதிகளுக்கு முரணாகவும், உரிய அளவுக்கு மனதை செலுத்தி பரிசீலிக்காமலும், முன் முடிவுடன் அவசர கதியில் என் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்ட தடுப்புக் காவல் ஆணையை இரத்து செய்ய பரிந்துரைக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
அடக்குமுறைக்கு கிடைத்த முதல் அடி ‘மிசா’ - ‘பொடா’ எதிர்ப்பாளர்களாக மனித உரிமைக் காவலர்களாக வேடம் தரித்தவர்களின் உண்மை முகம் இப்போது கிழிந்து தொங்குகிறது. சீமான் மீது - தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவி, அவரை தேர்தல் பிரச்சாரம் செய்யாமல் தடுத்து விடலாம் என்று திட்டமிட்டு செயல்பட்ட கலைஞர் கருணாநிதியின் திட்டம் இப்போது தவிடுபொடியாகிவிட்டது.
சீமான் மீது போடப்பட்ட ‘தேசிய பாதுகாப்புச் சட்டத்தை’ சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது; தி.மு.க. ஆட்சியின் முகத்தில் பூசப்பட்ட கரியாகும். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிப்தர்மராவ் - சி.டி.செல்வம் ஆகியோர் வழங்கியுள்ள தீர்ப்பில் - ஒரு கூட்டத்தில் பேசுவதாலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, நாட்டின் இறையாண்மை குலைந்து போய்விடும் என்று கூற முடியாது என்று, ஏற்கனவே உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பை மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளனர். சீமான் பேசியதற்குப் பிறகு - அதன் தொடர்ச்சியாக பொது ஒழுங்கு சீர்குலையும்படி எந்த நிகழ்வும் நடந்துவிடவில்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். இவை எல்லாம் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு தெரியாதது அல்ல.
ஒரு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறோம். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன், சிங்கள ராணுவத்தால் குறி வைத்து கொல்லப்பட்டபோது, அவருக்காக, முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி ஒரு இரங்கற் கவிதை எழுதினார். தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிக்கலாமா, என்று வழக்கம் போல் ஜெயலலிதா சட்டசபையில் எதிர்த்தார். இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றார் ஜெயலலிதா. அப்போது, சட்டசபையில் உச்சநீதிமன்றம் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது தவறல்ல என்று தான் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று கலைஞர் கருணாநிதி எடுத்துக் கூறியது மட்டுமல்ல, சட்டசபைக்கு தவறான தகவல் தந்ததாக ஜெயலலிதா மீது உரிமை மீறல் பிரச்சினையும் கொண்டு வரப்பட்டது. அடுத்த நாள் ‘முரசொலி’ ஏட்டில் (ஏப்.19 2008) உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே எடுத்துக்காட்டி, ஜெயலலிதாவுக்கு கலைஞர் கருணாநிதி பதில் எழுதினார். கடந்த ஏப்.18 ஆம் தேதி அவர் விடுத்த அறிக்கையில்கூட, “விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் இறந்து போன நேரத்தில் இரங்கல் கவிதை ஒன்று நான் எழுதினேன் என்பதற்காக ஜெயலலிதா எப்படியெல்லாம் அறிக்கை விடுத்தார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், ஜெயலலிதாவின் அந்த குற்றச்சாட்டுக்கு தாம் எழுதிய பதிலையும், சட்டப் பேரவையில் கொண்டு வந்த உரிமை மீறல் பிரச்சினையையும் கூறாமல் தவிர்த்து விட்டார்.
இவைகளை சுட்டிக் காட்டினால், அவரே மாட்டிக் கொள்வாரே! தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல; அதுதான் உச்சநீதிமன்ற தீர்ப்பு - என்று எழுதிய இவரே, அதே குற்றச்சாட்டின் கீழ் - சீமான் கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டுமே!
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
உள்நோக்கத்துடன் நடந்த கைது
- விவரங்கள்
- கொளத்தூர் மணி
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2009