ரூ.86 கோடி கனிம வள கொள்ளைக்காரர்; காவல் நிலையத்தில் ‘ரவுடி’ பட்டியலில் அறிவிக்கப்பட்டவர்!

கெலமங்கலம் கூட்டத்தில் கொளத்தூர் மணி முழக்கம்

kulathorimani 3504-5-2016 புதன் அன்று மாலை 5-00 மணிக்கு, கிருட்டிணகிரி மாவட்டம், கெலமங்கலம் பேருந்து நிலையத் திடலில், கிருட்டிணகிரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், கழக தேர்தல் நிலைப்பாட்டு விளக்கப் பொதுக்கூட்டம், மாவட்டத் தலைவர் தி.க.குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின் தலைவர் குமார், மாவட்டப் பொருளாளர் மைனர் (எ) வெங்கடகிரியப்பா, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் பழனி நன்றி கூறினார். தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வாழ்கிற அப்பகுதியில் மைனர் வெங்கடகிரியப்பா தெலுங்கு மொழியிலேயே உணர்வுபூர்வமாக, அத்தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத் தப்பட்டிருக்கிற தளி இராமச்சந்திரனின் அடாவடி சமூக விரோத நடவடிக்கைகளை விளக்கிப் பேசியதோடு, பொதுவுடமைக் கட்சிக்கு  இது ஒரு களங்கமே என்பதை விரிவாக விளக்கிப் பேசினார்.

பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், பெரி யாரின் தேர்தல் நிலைப்பாடுகள் எவ்வாறு கொள்கைப் பார்வையில் அக்கறையோடு எடுக்கப்பட்டன என்பதை விளக்கிப் பேசினார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது உரையில், “குற்றப் பின்னணி கொண்டோர் தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி மத்திய அரசின் ஓய்வுபெற்ற உள்துறைச் செய லாளர் வோரா தலைமையிலான குழுவின் அறிக்கையில் கூறப்பட் டிருக்கும் செய்திகளையும், சட்ட ஆணையம் 2014ஆம் ஆண்டு பரிந்துரைத்திருக்கும் சட்டத் திருத்த முன்மொழிவுகளையும் எடுத்துக் கூறி தியாக வரலாற்றையும், கொள்கை நேர்மையையும் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் மாண்புக்கும் மரபுக்கும் மாறாக இவ்வாறான ஒரு வேட்பாளரைப் பிடிவாதமாய் நிறுத்துவதன் பின்னணிதான் என்ன?” என்ற கேள்வியை எழுப்பினார்.

மேலும் தங்கள் செயலை நியாயப்படுத்த வழக்குதானே பதியப்பட் டிருக்கிறது; குற்றப் பத்திரிக்கைதானே தாக்கல் செய்யப்பட்டுள்ளது; தீர்ப்பா வந்துவிட்டது என்று சமாளிப்பதை எடுத்துரைத்து, அந்த நியாயப்படி பார்த்தால் 2ஜி வழக்குக்கும், ஏன், ஜெயலலிதா வழக்குக்கும்கூட அதே போன்ற சமாதானம் கூறப் படுகிறதே, அதற்கு தோழர்கள் என்ன கூறுவார்களோ என்ற கேள்வியையும் எழுப்பினார்.

ஒருவேளை தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் குண்டர் சட்டத்தில் எட்டு மாதம் சிறையில் இருந்தார், உள்ளூர் காவல் நிலையத்தில் இன்றுவரை ரவுடிப் பட்டியலில் இருக்கிறார் என்பதுதான் அவரது தனிச் சிறப்பு என்றெண்ணி வேட்பாளர் தேர்வு செய்திருப்பார்களோ? என்றார்.

மேலும் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கு எதிராக தோழர் நல்லக்கண்ணு போன்றோர் ஒருபக்கம் போராடிக் கொண்டும், கனிமவளக் கொள்ளை களைத் தடுப்பதைத் தங்கள் தேர்தல் வாக்குறுதியாய் கொடுத்துக் கொண்டும் இருக்கும்.  

இவர்கள் 86 கோடிகளுக்குமேல் கொள்ளை யடித்துள்ளார் என தமிழ்நாடு கனிம, சுரங்கத் துறையின் ஆய்வறிக்கையில் (அவ்வறிக்கைகூட திரு.சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டதல்ல;  இக்கொள்ளையை கண்டும் காணாமல் விட்ட அந்த அதிகாரிகளே தயாரித்தது தான்) கூறிய பின்னரும் அவரையே வேட்பாளராக நிறுத்தவேண்டிய தேவை என்ன?  அவ்வாறாயின் இதுவரை எவ்வித கனிமக் கொள்ளை அறிக்கையும் கொடுக்கப்படாத வைகுண்டராஜனைப் பற்றி எப்படிப் பேசமுடியும் என்ற கேள்வியையும் எழுப்பினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஒருவேளை இவையெல்லாம் சாதரணமானதாய்த் தோன்றலாம்; அய்யய்யோ இதுவெல்லாம் எங்களுக்குத் தெரியாதே என்றுகூட கப்சா விடலாம்;  ஆனால் தளித் தொகுதி வாக்காளர்களே! நீங்கள் உண்மைகளை அறிவீர்கள்; இவற்றையெல்லாம் நான் எடுத்துக் கூறவேண்டிய அவசியமில்லை. ஆனால் இதுவரை அச்சுறுத்தலாலோ, மிரட்டலாலோ, பணத்துக்குக்காகவோ, உயிர் அச்சத்தாலோ நீங்கள் இந்த சமூக விரோதியை, கனிமக் கொள்ளையனை, கொலைகாரனைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

இந்த முறையாவது, உங்கள் மனசாட்சிக்கு நேர்மையாக சிந்தித்து, இதுவரை இந்த தொகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை, அவப் பெயரைத் துடைத்தெறியுங்கள். தளி இராமச் சந்திரனைத் தோற்கடிப்பதன் மூலம் இந்தத் தொகுதி யின் அப்பாவி மக்களின் உயிர்களை, உடமைகளை, உங்கள் எதிர்காலச் சந்ததியினரின் நல்வாழ்வைப் பாதுகாத்தவர்களாக ஆவீர்கள்” என்றார்.

பேருந்து நிலையம் முழுவதும் ஏறத்தாழ ஆயிரம் பேர் கூட்டம் முழுவதையும் கேட்டதோடு, அவ்வப் போது கையொலி எழுப்பியும், ஆதரவுக் குரலொலி எழுப்பியும் உற்சாகமாக் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். பொதுக்கூட்டம் அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 8-00 மணிக்கு நிறைவடைந்தது.

 

Pin It