‘காதல்’ - ‘பேய்’ - ‘சண்டை’ என்று மசாலாக்களைக் கொண்ட திரைப்படங்கள் புற்றீசல்களாக வந்து கொண்டிருக்கும் நிலையில் ‘தர்ம பிரபு’ போன்ற சமூகச் சிந்தனைகளைக் கொண்டு மக்களுக்கான அரசியலைப் பேசும் படங்கள் வெளி வருவது மிகவும் அபூர்வம்.
முத்துக்குமரன் எழுதி இயக்கி, யோகி பாபு கதாநாயகனாக நடித்து வெளி வந்திருக்கும் ‘தர்மபிரபு’ - பார்ப்பனர்கள் சூழ்ச்சி, ஜாதிக் கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலை சாட்டையால் அடித்து நொறுக்குகிறது. ‘துக்ளக்’ சோ, பார்ப்பனர் உருவத்தில் ஒரு பாத்திரமே உருவாக்கப்பட் டுள்ளது. கராத்தேயில் கறுப்பு பெல்ட் வாங்கியவர்கள்கூட வெள்ளை பெல்டுக்கு (பூணூல்) பயப்பட வேண்டும் என்று ‘சோ’ வடிவில் வரும் ‘கோ. அரங்கசாமி’ என்ற பாத்திரம் பேசுகிறது.
பெரியாரின் ‘கடவுளை மற மனிதனை நினை’ என்ற கொள்கையின் நியாயத்தை எமதர்மனாக வரும் புராணப் பாத்திரம் புகழ்ந்து பேசுகிறது. பெரியார், அம்பேத்கர், காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் இன்றைய தேவையையும் வலியுறுத்துகிறது. அதில் பெரியாருக்கும் அம்பேத்கருக்குமே கூடுதல் அழுத்தம் தரப்பட்டுள்ளது.
‘தலைவிதி’ என்ற தத்துவம், வேறு ஓர் இனத்தை அடிமைப்படுத்த நாம் கண்டுபிடித்தது என்று ‘துக்ளக்’ சோ பாத்திரம் பேசுகிறது.
‘மயிரைக் கட்டி மலையை இழுக்கிறோம்; வந்தால் மலை; போனால் மயிலாப்பூர்’ என்று ‘எமதர்மன்’ பேசுகிறான். உழைக்கும் மக்கள் கட்சியாக ஜாதி கட்சி உருவகம் செய்யப்பட்டு அந்தக் கட்சியினரின் ஜாதி வெறி, வாக்கு வங்கி, அரசியலை மிகத் துணிவுடன் அம்பலப்படுத்துகிறது. இந்தப் படத்துக்கு ‘விமர்சனம்’ எழுதவே பல ஏடுகள் அஞ்சி ஒதுக்கி நிற்கின்றன. ‘தமிழ் இந்து’ நாளேடு கடந்த வெள்ளிக் கிழமை (ஜூன் 28) இணையத்தில் ஏற்றிய விமர்சனத்தை ஏட்டில் வெளியிடவில்லை. சில பார்ப்பன ஆங்கில நாளேடுகள் இந்தப் படத்தை மிக மோசமாகத் திட்டித் தீர்த்துள்ளன.
தணிக்கைக் குழு இப்படத்தை எப்படி அனுமதித்தது என்று ‘தினமலர்’ பார்ப்பன நாளேடு கொதித்துப் போய் எழுதுகிறது. எந்த ஒரு திரைப்படமும் பார்ப்பனர்களை ஜாதி வெறிக் கட்சிகளை இவ்வளவு துணிவோடு அம்பலப்படுத்தியதில்லை என்றே கூறலாம்.
படத்தில் வரும் எல்லா கட்சிகளுமே அப்படியே நூற்றுக்கு நூறு பட்டைத் தீட்டப்பட்ட கொள்கையாகவே இருக்க வேண்டும் என்ற ‘கொள்கைத் தூய்மை’ப் பார்வையோடு சிலர் முகநூலில் எழுதுகிறார்கள். மக்களிடம் சில கருத்துகளைக் கொண்டுச் சேர்க்கும்போது ‘சமரசங்கள்’ படத்தைத் தயாரிப்போருக்கு இருக்கவே செய்யும். அவற்றைத் தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்வதைவிட மக்களிடமும் குறிப்பாக எதிரிகளிடம் அது என்ன தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
அந்த வகையில் ‘தர்மப் பிரபு’ மிகவும் துணிச்சலான படைப்பு. பெரியாரிய - அம்பேத்கரிய சிந்தனையாளர்கள் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டிய ஒரு படம்.