நடிகர் கமலஹாசன் நடிக்கும் ‘தசாவதாரம்’ என்ற திரைப்படம் திரைக்கு வரவில்லை. சில நிமிடங்களே ஓடும் அதனுடைய டிரெய்லர் மட்டுமே வந்துள்ளதால், அதைப் பார்த்து ‘சர்வதேச ஸ்ரீ வைணவ தர்ம சம்ரக்ஷண’ என்ற வைணவ அமைப்பைச் சார்ந்த கோவிந்த ராமானுஜதாசா என்ற பார்ப்பனர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டார். வைணவர்களின் குலதெய்வமான ஸ்ரீரெங்கநாதனை உடைத்து சின்னாபின்னப்படுத்துவதாகவும், பகவானை ஒரு மனிதருடன் கட்டி கடலில் வீசியதாகவும் படம் சித்தரிக்கிறது என்று, அந்தப் பார்ப்பனர் வழக்கில் கூறியுள்ளார். 11 ஆம் நூற்றாண்டில் வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் சமய மோதல்கள் நடந்ததாக கற்பனையாக படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது என்கிறார், இவர்!
இது வைணவப் பார்ப்பனர் கருத்து என்றால், சைவ பார்ப்பனரான இராம. கோபாலனும் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். ஆனால் 11 ஆம் நூற்றாண்டில் சைவ - வைணவ மோதல் நடந்தது உண்மைதான். அது கற்பனை என்று கூற முடியாது. ஆனால், அது சின்ன சச்சரவுதான் என்கிறார் சைவப் பார்ப்பனர் ராம. கோபாலன்.
வழக்கு தொடர்ந்த வைணவப் பார்ப்பனரோ சைவ-வைணவ மோதல் நடந்தது என்று கூறுவதே கற்பனை என்கிறார். 11 ஆம் நூற்றாண்டில் சைவ-வைணவ மோதல்கள் கடுமையாக நடந்தது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.
இப்போதும்கூட சைவ-வைணவப் பகை இருக்கவே செய்கிறது. இதை எழுத்தாளர் தி. ராஜநாராயணன், தனது ‘கரிசல்காட்டுக் கடுதாசி’ நூலில் நகைச்சுவையாகப் பதிவு செய்துள்ளார். கி.ராஜநாராயணன், பிறப்பால் வைணவப் பிரிவைச் சார்ந்தவர். தங்களது வீட்டிலேயே சைவ எதிர்ப்பு கடுமையாகப் பின்பற்றப்பட்டது என்கிறார். கி. ராஜநாராயணன். அவர் எழுதியுள்ள பகுதி இது:
“சிவனுடைய பெயரை யாரும் எங்கள் வீட்டில் மறந்தும் உச்சரிக்க மாட் டோம். அசந்து மறந்து சொல்லி விட்டால் சாட்டை அடி விழும். எங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களின் பெயர்கள் கூட சிவப் பெயர் கிடையாது. இதில் எங்கள் அப்பா ரொம்ப ஜாக்கிரதை! நாங்கள் மணிகட்டு வைணவர்களின் பரம்பரை! மணிகட்டி வைணவர்களின் இரண்டு காதுகளிலும் சிறிய வெள்ளி மணிகள் கட்டித் தொங்கவிட்டிருக்கும். எங்காவது எவனாவது சிவனுடைய பெயரை அசந்து மறந்து சொல்லித் தொலைத்து விட்டால் உடனே வேகமாகத் தலையைக் குலுக்குவோம். இந்த மணிகள் ஒலித்து, சிவநாமத்தைக் காதினுள் நுழைய விடாமல் விரட்டி அடித்துவிடும்!”
இப்படியாக உள்ள மணிகட்டி வைணவரைக் கேலி செய்தும் கதைகள் உள்ளன. (சைவர்களைக் கேலி செய்து வைணவர்களும் நிறையக் கதைகள் உண்டு பண்ணியிருக்கிறார்கள்; இப்படி ஏசல் கதைகளும், ஏசல் பாடல்களும் பரஸ்பரம் ஏராளம்.)
ஒரு சத்திரத்தில் மூணு சிவப் பண்டாரங்கள் வந்து தங்கியிருந்தார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை; அதில் இரண்டு பண்டாரங்களுக்குள் பலத்த ‘அடிதடி’ நடந்தேறிவிட்டது. மூணாவது பண்டாரம் இதைப் பார்த்துப் பலத்த கூக்குரலிட்டார். சத்திரத்தின் கார்பாரி ஓடி வந்து அவர்களைப் பிடித்துக் கொண்டு போய் ஊர் நாட்டாண்மை நாயக்கரிடம் நிறுத்தினார். கிராமத்தின் நாட்டாண்மையும் விவகாரியுமான அவர் ஒரு மணி கட்டி வைணவர் என்பது அவர் காதுகளில் தொங்கும் மணிகளே சொன்னது!
சத்திரத்து அதிகாரியான கார்பாரி அந்தப் பண்டாரங்களைக் கொண்டு வந்து அவர் முன் நிறுத்தியதோடு விலகிக் கொண்டார். நடந்ததைப் பார்த்தவர் மூணாவது பண்டாரம் தான். அவர்தான் கண் கண்ட காட்சி. என்ன நடந்தது என்று ‘விவரித்தார்’ அவர்!
அந்த மூணாவது சிவப் பண்டாரம் மூச்சுக் காற்றை வெளியே விடும்போதும் சிவ; மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போதும் சிவ! அப்படி ஒரு சிவயோக சிவப் பண்டாரம் அல்லது பண்டார சிவம்! அவர் தன்னுடைய சாட்சியத்தை ஆரம்பித்தார்: முதல் பண்டாரத்தைச் சுட்டிக்காட்டி, “இச் சிவம் அச்சிவத்தை சிவ” அதாவது, இவர் - இந்தப் பண்டாரம் - அந்தப் பண்டாரத்தை ஓர் அடி வைத்தார் முதலில். பதிலுக்கு அவர் என்ன செய்தாராம்! “அச் சிவம் இச் சிவத்தை சிவ சிவ” - இரண்டாகப் பதிலுக்குத் திருப்பித் தந்தார். மேலும் என்ன நடந்தது?
“இச் சிவம் அச் சிவத்தை சிவ சிவ சிவ....” அவ்வளவுதான்; அதுக்குப் பிறகு நடந்ததை இப்படி வேகமாக விவரித்து முடித்தார். “இச் சிவம் அச் சிவம் இச் சிவம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ...”
பாவம், மணிகட்டி வைணவர் பாடு திண்டாட்டமாகப் போய்விட்டது! தலையை எப்படிக் குலுக்கியிருப்பார் என்று சொல்லத் தேவையில்லை. - என்று எழுதியுள்ளார் தி. ராஜ நாராயணன்.