பார்வையாளர்களை திகைப்பில் ஆழ்த்தும் ‘பிரம்’மாண்டம்; கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்; நவீன காமிராக்களின் ஒளிப்பதிவு இவைகளோடு சமஸ்கிருதப் பெருமைகள் மற்றும் புராணப் பெருமைகளைக் குழைத்து, பார்ப்பனீயத்தை நவீனமாக்கும் முயற்சிகளில் சுஜாதா - ஷங்கர் கூட்டணியில் வெளிவந்துள்ள படம் தான் ‘அந்நியன்’.
சட்டத்தை நூற்றுக்கு நூறு பின்பற்ற வேண்டும் என்பதில் ‘கறாராக’ இருக்கிறார். குடுமி, பூணூல் சகிதமாக வழக்கறிஞர் தொழில் நடத்தி வரும் அய்யங்கார் அம்பி! உழைக்காமல், சதா குடித்துவிட்டு சோம்பேறியாகத் திரிகிறவர்; விபத்தில் காயமடைந்தவருக்கு கார் கொடுத்து உதவ முன் வராதவர்; ரயில் பயணிகளுக்கு தரமற்ற சாப்பாடு வழங்கும் ஒப்பந்தக்காரர்; இவர்கள் எல்லாம் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடும்போது, ‘கருட புராணத்தில்’ கூறியுள்ளது போல், ‘நரகத்தில்’ எருமை வாகனத்தில் ‘எமன்’ வந்து தரக்கூடிய தண்டனைகளை எல்லாம், அய்யங்கார் ‘அம்பி’யே ‘அந்நியனாக’ உருவெடுத்து தந்து விடுகிறார்! கொதிக்கும் எண்ணெய்க் கொப்பறையில் உயிரோடு எரிப்பது; மாடுகளை மிதிக்க வைத்து சாகடிப்பது; ரத்தம் உறிஞ்சும் அட்டைகளை உடல் முழுதும் மேயவிட்டு, ரத்தம் குடிக்கச் செய்து சாகடிப்பது இவை எல்லாம் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளவாறு, நரகத்தில் தரப்படும் தண்டனைகளாம்!
ஷங்கரும்-சுஜாதாவும் சேர்ந்து ரூ.25 கோடி செலவில் (இதில் அய்.டி.பி.அய். வங்கி தந்த கடன் 10 கோடியாம்) தயாரித்து, ஒரு திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். படத்தில் இப்படி தவறு செய்கிறவர்களாக சித்தரிக்கப்பட்டவர்கள் எல்லாம் ‘சூத்திரர்’கள் தான்! அய்யங்கார் அம்பியும், அவரது “தோப்பனாரும்” நேர்மையின் மறு உருவமாக இருக்கிறார்கள். ‘சாது’வாக சட்டத்துக்கு பயந்தவராக இருக்கும் அம்பி, திடீரென ‘அன்னியராக’, ‘சூப்பர்மேன்’ ஆகி, பழி வாங்குவதும், உடனே, ‘ரொமான்டிக் ஹிரோவாகி’ களியாட்டம் போடுவதுமாக - ஒரே பாத்திரம் - மூன்று வடிவம் எடுக்கிறது. ‘மல்டிபிள் பர்சனால்ட்டி டிசார்டர்’ என்ற மனநோய் பாதிப்பால், இது நிகழுகிறது என்று, காதில் பூ சுற்றுகிறார்கள்.
இப்படி ஒரே மனிதர் மூன்று வெவ்வேறு ஆளுமைகளைக் கொள்ளும்போது, ஒவ்வொரு பாத்திரமும் ஆற்றலுடன் செயல்பட முடியாது என்பதே உண்மை. விரக்திக்கும் மனச்சிதைவுக்கும் உள்ளாகி செயலற்றவர்களாகி விடுவார்கள். ஆனால் சுஜாதா உருவாக்கிய ஒரே நபருக்குள், புதைந்துள்ள 3 பாத்திரங்களும், முழு ஆற்றலுடன் செயல்படுவதாகக் காட்டி, மருத்துவ அறிவியலையே கேலிக்குள்ளாக்குகிறார்கள்.
நேர்மையோடு செயல்படவே விரும்பும் அம்பி, தனது காதலியின் சபா நிகழ்ச்சிக்காக, ஏன் சிபாரிசுக் கடிதத்தை வாங்கிக் கொண்டு போனார் என்பதுதான் புரியவில்லை. இவர் மட்டும் சிபாரிசுக் கடிதம் வாங்கிப் போவாராம். சபா பொறுப்பாளர் வேறு ஒரு எம்பி சிபாரிசு கடிதத்தை ஏற்றுக் கொண்டால் ‘அந்நியனாக’ வந்து தண்டனை தருவாராம்! என்ன முரண்பாடு?
சிண்டையும், பூணுலையும் நேர்மையின் சின்னமாக முன் வைக்கிறார் பார்ப்பனர் சுஜாதா! சிகிச்சை பெற்ற அம்பி, மனம் திருந்தியவனாகும்போது, சிண்டு போய் ‘கிராப்’ வருகிறது. அநியாயத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த இந்த ஒரே அடையாளத்தையும் ஒழித்து விட்டீங்களாடா பாவி என்று, மற்றொரு பார்ப்பனராக வரும் விவேக்கை பேச வைத்திருக்கிறார் சுஜாதா. இதுதான் சுஜாதா இந்தப் படத்தில் மய்யமாக இழைபோடவிட்டிருக்கும் செய்தி!
இந்த ‘சிண்டை’யும், ‘பூணூலை’யும் குறியீடுகளாகக் கொண்ட பார்ப்பானிடம் தானே, உழைப்பைக் கேவலப்படுத்தியது, அடுத்தவன் உழைப்பைச் சுரண்டி வாழுவதை தர்மமாக்கியது. ‘சூத்திரன்’ படித்தால் சித்திரவதை செய்யச் சொன்னது, மனுசாஸ்திரப்படி “பிராமணர்களுக்கு” எந்தத் தண்டனையும் கிடையாது. இப்படி ஒரு சாஸ்திரத்தை எழுதி - அதை சமுதாய விதிகளாக்கி நடைமுறைப்படத்தியவர்களை எந்த எண்ணெய் சட்டியில் போட்டு எரிப்பது? எங்கே மாடுகளைவிட்டு மிதித்து சாகடிப்பது?
சுஜாதா - ஷங்கர் கம்பெனி பதில் கூறுமா?.