“சீ! போ! தூ! தூ அயோக்கியா,” என்று திட்டினான். காறித் துப்பினான்.

kuthoosi gurusamy 263“ஏனப்பா திட்டுகிறாய்? இப்படி என் முகத்தில் துப்பலாமா? உன் எச்சில் வீணாகி விடுமே! நா வறண்டு போமே! இந்தாச் சர்க்கரை! வாயில் கொட்டிக் கொள்!” என்று ஒருபிடி சர்க்கரையைக் கொட்டினான் அவன் வாயில்.

‘நீங்களே பார்த்தீர்களா? வெறும் ‘ப்ரூடாவா?” என்று கேட்காதீர்கள். “வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தைத் திருப்பிக் காட்டு,” என்றார் ஏசுநாதர். எதிரிலிருக்கும் ஒரு ஆள் அறைந்தால் நமது இடது கன்னத்தில் தான் அறைய முடியும் (யாரையாவது அறையச் சொல்லி அவரவர் பரீட்சை பார்ப்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை) வலது கன்னத்தில் அறைவதானால் அறைபவன் இடது கையினால்தான் அறை முடியும். அல்லது பின்புறமிருந்து அறைய வேண்டும். பின்புறமிருந்து கன்னத்தில் அறைவது இயற்கையல்ல, அதைவிட விசாலமான முதுகு இருப்பதனால். இதிலிருந்து ஏசுநாதர் இடது கையால் எழுதும் பழக்கமுடையவராய் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. (மத ஆராய்ச்சிக்காரர்கள் இங்கிருந்து தொடங்கி வேலை செய்யுங்கள்! விடாதீர்கள்!)

“இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயஞ் செய்துவிடல்,” என்றார், திருவள்ளுவர்.

தீங்கு புரிபவனை வெட்கித் தலைகுனியுமாறு செய்யலாம். அவனுக்கு நன்மை செய்தால் போதும்! இப்படிக் கூறாத பெரியார்கள் இல்லவே இல்லை. அதுமட்டுமா? அவர்களெல்லாம் பெரியார்கள் ஆனதே இப்படிக் கூறியதால்தான். ஆமாம், காந்தியார் உட்பட.

நமது மடாதிபதிகள் இருக்கிறார்களே, இவர்களைப் பற்றித் தப்பும் தவறுமாக ஏதேதோ பழிகள் கூறப்படுகின்றன. ‘சந்திரகாந்தா’ நாவல் எழுதப்பட்ட நாளிலிருந்தே மடாதிபதிகள் என்றாலே ஒருவிதமான “இளக்காரம்!” “சுவாமிகாள், யோகாப்பியாசமாச்சோ?” என்று கேட்கிறார்கள், சிறு பயல்கள் கூட. மடாதிபதிகள் இல்லாவிட்டால் சைவம் என்ன கதியாகியிருக்கும் என்பது யாருக்குத் தெரியும்? எங்கப்பன் பரமசிவனைக் கேட்டால் அல்லவோ தெரியும்!

மடாதிபதிகளின் சிவத்தொண்டை அறிந்துதான் ஜல்தி ஜல்தியாக அவர்களை ஈசன் தன் திருவடி நிழலுக்கு அழைத்துக் கொள்கிறார்! மடத்து சிப்பந்திகளைக் கேட்டுப் பாருங்கள்!

ஏசுநாதர், திருவள்ளுவர் ஆகியோரைப் பற்றிச் சொன்னேனே! அவர்கள் கிடக்கிறார்கள் பத்தாம் பசலிகள்! இதோ பாருங்கள், எங்கள் திருப்பனந்தாள் மடாதிபதியின் திருப்பணியை! அவர் பெயரை முதலில் குறிப்பிட்டு விடுகிறேன்!

ஸ்ரீகாசிமடம் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள் நந்தி தம்பிரான் சுவாமிகள்! இதுதான் பெயர். அதாவது சுருக்கமான தந்தி விலாசம்! முழுப் பெயர் வேண்டுமானால் அவருக்கே எழுதுங்கள்!

அவர் என்ன செய்திருக்கிறார், தெரியுமா? 5,000 ரூபாய் மூல தனத்தில் ஒரு அன்னதானக் கட்டளை ஏற்படுத்தியிருக்கிறார். இதன் வட்டி வருமானத்தைக் கொண்டு காசியில் ஆண்டுதோறும் தமது சத்திரத்தில் அன்னதானம் செய்யத் திட்டம் போட்டு விட்டார். எதற்காகத் தெரியுமா? காந்தியடிகள் மறைந்ததற்காக! அந்த நாளில் யாருக்கு அன்னதானம் தெரியுமா? பிராமணர்களுக்கு!

“ஐயையோ! கோட்ஸே கூட்டத்துக்கா?” என்று அலறாதீர்கள்!

அப்படி அலறுவது ஒருவிதமான குறுகிய புத்தி! விரோத மனப்பான்மை! நாம்தான் உயர்ந்த நிலைக்குப் போய்விட்டோமே, இப்போது! இந்த அற்ப சங்கதியெல்லாம் நம் வாயில் கூட வரக்கூடாது. நாம் இனிப் பேசுவதும் எழுதுவதும், ‘இளைஞர் எழுச்சி,’ புத்துலகச் சிற்பி, வருங்கால வெள்ளம், என்பவை போன்ற மிகப் பெரிய பிரச்னைகளாகத்தான் இருக்க வேண்டும். என் “பரந்த அநுபவத்தில்” கண்ட உண்மைதான் இது; நீங்கள் கேட்டாலுஞ் சரி! கேட்காமல் கெட்டுப் போனாலும் சரி! சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன்.

அதுமட்டுமல்ல! திருப்பனந்தாள் தம்பிரான் சுவாமிகள் செய்வதில் தவறென்ன? இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல், என்பதைப் படித்தவரல்லவா? காறித்துப்பியவன் வாயில் காலணா சர்க்கரை!

காந்தியாரைக் கொன்றவன் இனத்துக்கு காசியில் அன்னதானம்!

அன்பே சிவம்! திருச்சிற்றம்பலம்! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ஓம் நமசிவாயம்!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It