அவதூறு பரப்புவோருக்கு மறுப்பு (1)

பெரியார் முடிவெய்தி 50 ஆண்டுகள் கழிந்த பின்னரும் பெரியார் பற்றிய நினைவுகளும், அதனால் ஏற்படும் அதிர்வுகளும் தாக்கங்களும் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி, தோழர் அல்லது அய்யா பெ.மணியரசன் (நோக்கம் வேறுவேறாகக் கூட இருக்கலாம்) போன்ற விபீசண, அனுமார் கூட்டங்கள் சில வரிகளை உருவி எடுத்தும், திரித்தும் எப்படியேனும் பெரியாரை, திராவிடத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்று செயல்பட்ட வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு தரவுகளைத் தேடும் சிரமத்தை இவர்களது முன்னோடிகளான ரவிக்குமார், குணா, ம.பொ.சி, வ.வே.சு அய்யர் போன்ற பலரின் அன்றைய பதிவுகள் பயன்படுகின்றன. ஒருமுறை பார்ப்பன பேச்சு அடியாள் எச்.ராஜாவிடம் “பெரியாரைப் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு “நான் மணியரசன் எழுதி வருவதைப் படிக்கிறேன்; அதுவே போதும்” என்றான்.

அப்படித்தான் பல வாழ்க்கை வரலாறுகளும் கூட எழுதப்பட்டு வருகின்றன. ஓர் எடுத்துக்காட்டாக தோழர் ‘பாலசிங்கம் இராஜேந்திரன்’ என்பவர் எழுதி ‘நீலம்’ வெளியீட்டில் “இளையபெருமாள் வாழ்க்கை சரித்திரம்” என்ற நூலும் வெளிவந்துள்ளது. நான் கடந்த மாதம் மதுரையில் கலந்துகொண்ட ஒரு கருத்தரங்கிற்கு முன்னதாக இந்நூலை எழுதிய ஆசிரியருக்குப் பாராட்டு விழா நடந்தது. அந்த நாளில் அந்த நூல் எனக்குக் கிடைக்கவில்லை, அதன் பின்னர் தோழர் ஒருவர் வழியாக இந்த நூல் அண்மையில் தான் எனக்கு கிடைத்தது.kolathoor mani 514 ‘அரசியல் தலைவர்களுடனான உறவும் முரணும்’ என்ற தலைப்பிட்ட அந்நூலின் 13வது அத்தியாயத்தில் ஈ.வெ.ரா. பெரியார் என்ற உட்தலைப்பில் சில செய்திகள் பதிவாகியுள்ளன.

1948ஆம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த பெரியார் வீட்டில் அவரை சந்தித்து “எங்களது சமூகம் அனுபவித்து வரும் கொடுமைகளுக்கு இழிதொழில் செய்ய நிர்பந்திப்பதும் ஒரு முக்கியக் காரணமாகும். ஆகையால் எங்களின் இழிதொழில் ஒழிப்புப் போராட்டங்களுக்கு தங்களது ஆதரவைத் தர வேண்டும்” என்று கேட்டார் இளையபெருமாள். இதற்கு பெரியார், “உங்களுடைய சமூகத்தவர்கள் இந்த தொழில்களை செய்யவில்லை என்றால், யார் செய்வார்கள்? என்று கேட்டார்.

(அதன் மீது நூலாசிரியர் தன் கருத்தாக, “பிராமணர்களுக்கு எதிராக அனைத்து சமூகத்தவர்களும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று சொன்ன பெரியார், நடைமுறையில் இப்படிப்பட்ட சாதி இந்துக்குரிய குணத்தையே பெற்றிருந்தார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.)

இவை எந்த ஆதாரத்தின் மீது எழுதப்பட்டுள்ளது என்பதற்கு எந்த குறிப்பும் அதில் இல்லை, ஆனாலும் பிற்சேர்க்கையாக “பயன்பட்ட ஆவணங்கள்” என்ற பட்டியல் உள்ளது. அதில் முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள ரவிக்குமார் எழுதிய ‘இளையபெருமாள் – வாழ்வும் பணியும்’ என்ற 2010ஆம் ஆண்டில் வெளியிப்பட்டிருந்த நூல் என்னிடமே இருந்தது, அதில் தேடினேன். அந்நூல் முழுவதும் இளையபெருமாள் அவர்களின் வரலாற்றை அவரே சொல்வது போன்று எழுதப்பட்டுள்ளது.

நூலாசிரியர் தோழர் ரவிக்குமார் தனது முன்னுரையில் “அவரது 75வது பிறந்தநாளின் போது அவரிடம் பதிவு செய்யப்பட்ட அவரது சுருக்கமான தன் வரலாற்றை ‘சித்திரை நெருப்பு’ என்ற பெயரில் சிறு நூலாக வெளியிட்டேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் தொடக்கமும் ‘சித்திரை நெருப்பு’ என்றுதான் தலைப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை தோழர் ரவிக்குமார் அவர்கள் முன்னர் வெளியிட்டிருந்த ‘சித்திரை நெருப்பு’ என்ற சிறு நூலின் மறுபதிப்பாக இந்நூல் இருக்கக் கூடும். நூலின் தலைப்பை மட்டும் ‘எல்.இளையபெருமாள் வாழ்வும் பணியும்’ என்று மாற்றியிருக்கலாம்.

எப்படியோ, அந்நூலில் உள்ள “பறை அடிப்பது பற்றி” என்ற உட்தலைப்பில் உள்ள பகுதியில் பெரியார் பற்றி அவதூறு பதிவாகியுள்ளது.

“சமூகத்தில் இழித்தொழிலாய் இருக்கின்ற இந்த தொழில்களை ஒழிப்பதற்கு அரசியல்வாதிகள் முன் வரவில்லை. சமூக சீர்திருத்தவாதிகளும் முன்வரவில்லை. ஏன் பெரியார் அவர்களிடமே கேட்டேன். ‘இந்தத் தொழில்களை வேறு யார் செய்வது? இளையபெருமாள், நீயே ஒரு மாற்று கூறு’ என்று சொன்னார். 1948, டிசம்பர் 20ம் தேதி சிந்தாதிரிப்பேட்டை வீட்டிலே சந்திக்கும் போது சொன்னார்” என்பது தான் அந்த பகுதி. இது ஒரு புனையப்பட்ட பொய்யே ஆகும். எந்த அடிப்படையில் அதனைப் பொய் என்கிறோம்?

23.11.1946 அன்று திராவிடர் கழக ஏடான ‘விடுதலை’ இதழில் "ஜாதியை ஒழிப்பதற்குக் காங்கிரசில் திட்டமில்லை, ஹிந்துமத ஸ்தாபனமே காங்கிரஸ் வாணியம்பாடியில் பெரியார் பேச்சு! பறைகள், தப்பட்டைகள் தீக்கரையாயின!" எனும் தலைப்பில் ஒரு செய்தி வந்துள்ளது. 22.11.1946 அன்று வாணியம்பாடி சந்தைப்பேட்டையில் செட்யூல்டு வகுப்பார் பெடரேசனால் ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது.

அப்போது இந்தியாவில் அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில், (பெரியார் அந்த உரையில் ‘இந்திய மத்திய அதிகார சபை’யில் என்கிறார்) முஸ்லீம் லீக்குக்கு ஒதுக்கப்பட்ட 5 இடங்களில் ஒரு இடத்தை செட்யூல்டு வகுப்பார் பெடரேசன் தோழர் ஒருவருக்கு முஸ்லீம் லீக் அளித்தது.அதற்காக ஜனாப் ஜின்னா அவர்களை பாராட்டி நடத்தப்பட்ட கூட்டம் அது. (அவ்வாறு ஒதுக்கப்பட்ட இடத்தில் நியமிக்கப்பட்டவர் வங்காளத்தைச் சேர்ந்த ஜோகேந்திரநாத் மண்டல் என்பவர். இடைக்கால அமைச்சரவை 2.9.1946ல் அமைக்கப்பட்ட போது காங்கிரசுக்கு இணையான இடங்கள் தங்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்ற முஸ்லிம் லீக் கோரிக்கை ஏற்கப்படாததால் முஸ்லீம் லீக் பங்கேற்க மறுத்துவிட்டது. அதனால் 12 இடைக்கால அமைச்சர்களும் காங்கிரசாராகவே நியமிக்கப்பட்டனர். வைசிராய் வேவல் அவர்களின் முயற்சியில் மீண்டும் அமைச்சரவை புதுப்பிக்கப் பட்டது. அதில் இந்திய முஸ்லீம் லீக்குக்கு 5 இடங்கள் என்றும், காங்கிரசுக்கு 8 இடங்கள் என்றும் முடிவாகிறது. அவ்வாறு முஸ்லீம் லீக்குக்கு ஒதுக்கப்பட்ட 5 இடங்களில் ஒரு இடத்தை தான் செட்யூல்டு வகுப்பார் பெடரேசன் உறுப்பினர் ஜோகேந்திரநாத் மண்டல் அவர்களுக்கு வழங்கி முகமது அலி ஜின்னா அவரை இந்தியாவின் சட்ட அமைச்சராக்குகிறார்.

ஜோகேந்திரநாத் மண்டல் என்பவர் யார்?

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் 1942 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட செட்யூல்டு வகுப்பார் பெடரேசனின் வங்காள மாகாணத் தலைவரே ஜோகேந்திரநாத் மண்டல் ஆவார். அவர் வங்காள மாகாண முஸ்லீம் லீக் தலைமையிலான அமைச்சரவையில் நிதி, பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஆவார்.

இந்தியாவின் அரசியல் நிர்ணய சபைக்கு பம்பாய் மாகாணத்திலிருந்து அம்பேத்கர் அவர்கள் தேர்வாக முடியவில்லை, வங்காளத்தின் செட்யூல்டு வகுப்பினர், பழங்குடி உறுப்பினர் ஆகியோரின் வாக்குகளை முயன்றுபெற்று அரசமைப்பு அவைக்கு அம்பேத்கரை அனுப்பி வைத்தவர் இதே ஜோகேந்திரநாத் என்பவர் தான்.

1947ல் பாகிஸ்தான் பிரிந்த போது இவர் கிழக்கு வங்காளத்தை சேர்ந்தவர் (கிழக்கு பாகிஸ்தான்) என்பதால், பாகிஸ்தான் அரசமைப்பு அவையின் தற்காலிகத் தலைவராகவும், பின்னர் பாகிஸ்தானின் சட்டம், நீதித்துறை அமைச்சராகவும், கூடுதல் பொறுப்பாக தொழிலாளர் நலத்துறை, காமன்வெல்த், காஷ்மீர் விவகாரத்துறை அமைச்சராகவும் இருந்தவர். அந்த ஜோகேந்திரநாத் மண்டல் இந்திய இடைக்கால அமைச்சரவையில் சட்ட அமைச்சராக 25.10.1946 அன்று பதவி ஏற்றார். பாகிஸ்தான் பிரிவினை வரை அப்பதவியில் தொடர்ந்தார்).

அவ்வாறு செட்யூல்டு வகுப்பார் பெடரேசன் உறுப்பினரான ஜோகேந்திரநாத் மண்டலுக்கு அமைச்சர் பதவியை வழங்கிய ஜனாப் முகமது அலி ஜின்னாவை பாராட்டவே நடத்தப்பட்டது அக்கூட்டம்.

அவ்வாறு 22.11.1946 அன்று வாணியம்பாடியில் செட்யூல்டு வகுப்பார் பெடெரேசனால் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கூட்ட த்திற்கு தோழர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். தொடர்ந்து செட்யூல்டு வகுப்பார் பெடரேசனின் மாநில செயலாளர்கள் தளபதி பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, ஆதிமூலம் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து பெரியார் உரையாற்றியுள்ளார். அவ்வுரையில் இழிவைத் துடைக்க இஸ்லாமியராவதே சிறந்த வழி என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கூட்டத்தின் முழு உரையும் 23.11.1946 நாளிட்ட விடுதலை ஏட்டில் வெளிவந்துள்ளது. இறுதியில் ‘பறைகள் தீக்கிரை’ என்ற உட் தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.

பெரியார் (மேடையில் இருந்து இறங்கி மேடையின் எதிரில்) உட்கார்ந்தவுடன் செட்யூல்டு வகுப்புத் தோழர்கள் தப்பட்டைகள், தாசாக்கள், மத்தளங்கள் முதலிய பலதரப்பட்ட தோற்கருவிகளுடன் சுமார் 100 பேர்கள் திடீரென்று மேடை அருகே வந்தார்கள். வந்தவுடன் கூட்டத்தில் தடபுடல் ஏற்பட்டது. பெரியார் அமைதியாய் இருக்கும்படி வேண்டி, அமைதி ஏற்படுத்திய பிறகு, பெரியாரின் முன்னிலையில் அவைகளை போட்டு குவித்துவிட்டு ஒருவர் மேடை மீது ஏறி நின்று, “நாங்கள் பறை அடிப்பதால் தானே பறையர்கள் என்று அழைக்கப்படுகிறோம். இனிமேல் பறை அடிப்பதில்லை. சாவு வீட்டிற்கும், வாழ்வு வீட்டிற்கும், சாமி வீட்டிற்கும் கண்டிப்பாக பறை அடிப்பதில்லை என்று இப்போது உறுதி செய்து கொண்டோம். அதற்காக அந்தக் கருவிகளை இதோ கொளுத்தி விடுகிறோம்” என்று சொல்லி 4, 5 புட்டி மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பு வைத்தார். நெருப்பு திகு,திகு என்று எரிந்தது. யாவரும் ஆரவாரித்தார்கள்.

“டாக்டர் அம்பேத்கர் அனுமதி வந்ததும் நாங்கள் பெண்டு பிள்ளைகளுடன் மதம் மாறுவோம்” என்று ஒலித்துக் கொண்டு கலைந்து சென்றார்கள், என்பதுவே அந்த செய்தி.

நாடு முழுவதும் பறைகளை எரிக்க பெரியார் வேண்டுகோள் விடுத்த வரலாற்றை அடுத்த இதழில் பார்ப்போம்.

Pin It