எல்.அய்.சி. பொதுத் துறை நிறுவனத்தின் பங்குகளை தனியாரிடம் ஏற்கனவே விற்றது மோடி ஆட்சி. இப்போது, தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து, தொலைத் தொடர்பு, தொடர்வண்டி நிலையங்கள் உள்ளிட்ட 12 அமைச்சகங்களின் சொத்துகளை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து 7 இலட்சம் கோடி வருவாய் ஈட்டப் போவதாக அறிவித்துள்ளது. இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் சில அழுத்தமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஒன்றிய பாஜக அரசு தேசிய பணமாக்கல் திட்டத்தின் (National Monetisation Pipeline) நோக்கங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அடுத்த 4 ஆண்டுகளில் வருவாயைப் பெருக்குவதுதான் உண்மையான நோக்கமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அடுக்கடுக்கான கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.“அடுத்த 4 ஆண்டுகளில் குறிப்பிட்ட சில சொத்துகளில் இருந்து ரூ. 6 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்போவதாக அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு அடையாளம் கண்டுள்ள அந்தச் சொத்துகள் ஆண்டுதோறும் தவறாமல் வருவாய் ஈட்டக் கூடியதாக இருக்கின்றன. இந்நிலையில், வழக்கமாக அந்த சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கும், குத்தகைக்கு விடுவதன் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் கிடைக்கும் ரூ. 6 லட்சம் கோடிக்கும் இடையிலான வித்தியாசம் எவ்வளவு என்பதை ஒன்றிய அரசு மதிப்பிட்டுள்ளதா?

தற்போது ரூ. 1.30 லட்சம் கோடி கிடைக்கிறது. தனியாருக்கு தருவதன் மூலம் ரூ. 20 ஆயிரம் கோடி கூடுதலாக ரூ. 1.50 லட்சம் கோடிதான் கிடைக்கும் என்றால், அதற்காக 70 ஆண்டுகளாகக் கட்டமைத்த நிறுவனங்களை விற்பது சரியாக இருக்குமா?

தேசிய உள்கட்டமைப்புத் திட்டத்துக்கு ரூ. 100 லட்சம் கோடி தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு, அடுத்த 4 ஆண்டுகளில் திரட்டப்படும் இந்த ரூ. 6 லட்சம் கோடி எவ்வாறு போதுமானதாக இருக்கும்?நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ. 5.5 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்ய ரூ. 6 லட்சம் கோடி பயன்படுத்தப்படாதா?முதலில், ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும் என அடையாளம் காணப்பட்டு குத்தகைக்கு விடுவதற்கு இருக்கும் சொத்துகளின் ஒட்டுமொத்த மூலதனத்தின் மதிப்புதான் என்ன? தனியாருக்கு விடப்படும் சொத்துக்கள், 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிய அரசிடம் திரும்பும்போது, அதன் மதிப்பு என்னவாக இருக்கும்?

ஒருவர் வீட்டு உரிமையாளராக இல்லாதபோது- குத்தகைதாரராக இருக்கும்போது அவர் அந்த வீட்டைப் பராமரிக்கவோ, பழுதுபார்க்கவோ அல்லது மேம்படுத்தவோ செய்வாரா? மாறாக, சொத்து அரசுக்கு சொந்தமானது என்பதால், 4 ஆண்டுகளும் அரசே பராமரிப்பு செய்யுமா? குத்தகைக்கு விடப்படும் சொத்துக்கள் சார்ந்த துறைகளில் பணியாற்றுவோருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுமா, இட ஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படுமா?”

- இவ்வாறு ப. சிதம்பரம் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

எல்.அய்.சி., நவீன இந்தியா

1956 ஆகஸ்ட் 31ஆம் தேதி மாநில மறுசீரமைப்பிற்கான சட்டம் இயற்றப் பட்டது. இதற்கு அடுத்த நாள், செப்டம்பர் 1ஆம் தேதி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கான சட்டம் இயற்றப்பட்டது. முதல் சட்டம் எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ, அதே அளவுக்கு இந்த இரண்டாவது சட்டமும் முக்கியமானதாக இருந்தது. இருக்கிறது.

இந்தச் சட்டத்தின்படிதான் இந்தியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்பட்டு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் உருவாக்கப்பட்டது. இதற்கு ஒரு காரணமாக அமைந்தவர் இந்திரா காந்தியின் கணவரான பெரோஸ் காந்தி.

1955இல் ராம் கிஷன் டால்மியா என்ற மிகப் பெரிய தொழிலதிபர் தான் நடத்திவந்த இன்சூரன்ஸ் கம்பனியிலிருந்தும் மற்றொரு வங்கியிலிருந்தும் பணத்தை எடுத்து டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழை நடத்திவந்த பென்னட் அண்ட் கோல்மன் நிறுவனத்தை வாங்கினார். விரைவிலேயே அந்த வங்கி திவாலானது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பிய பெரோஸ் காந்தி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து தவறிழைப்பதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்யும் விதம் குறித்தும் காப்பீடுகளை தராமல் ஏமாற்றுவது குறித்தும் பெரோஸ் கேள்வியெழுப்பிவந்தார்.

அந்தத் தருணத்தில் இந்தியாவில் வலுவான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஏதும் இல்லாததும் அரசின் கவனத்தில் இருந்தது. ஆயுள் காப்பீடு போன்றவை ஏழைகளுக்கு எட்டாத உயரத்தில் இருந்தன. இவற்றுக்கெல்லாம் தீர்வாகவே காப்பீட்டு நிறுவனங்களை தேசிய மயமாக்க நேரு தலைமையிலான இந்திய அரசு முடிவெடுத்தது.

இதையடுத்து அந்தத் தருணத்தில் இந்தியாவில் இயங்கிவந்த 245 காப்பீட்டு நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் - எல்அய்சி உருவாக்கப்பட்டது. எல்லா நிறுவனங்களிலும் சேர்த்து 27,000 பணியாளர்கள் இருந்தார்கள். சுமார் 400 கோடி ரூபாய் சொத்து, அதன் பராமரிப்பில் இருந்தது. 50 லட்சம் பாலிசிகள் செயல்பாட்டில் இருந்தன. மொத்தமாக 1,000 கோடி ரூபாய்க்கு காப்பீடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த இணைப்பை அடுத்து, இந்தியாவின் மிகப் பெரிய அளவில் ஊழியர்களைக் கொண்ட நிறுவனமாக எல்அய்சி உருவெடுத்தது. 2017வாக்கில் 1.2 லட்சம் பணியாளர்களும் 12 லட்சம் ஏஜென்டுகளும் இருந்தனர். சுமார் 27.7 லட்சம் கோடி ரூபாய் சொத்து அதன் பராமரிப்பில் இருந்தது. 30 கோடி பாலிசிகள் செயல்பாட்டில் இருந்தன.

இந்த 65 ஆண்டுகளில் எல்அய்சியில் திரண்ட பணம் பெரும்பாலும் தேசக் கட்டமைப்பிலேயே முதலீடு செய்யப்பட்டது. இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு எல்அய்சி கடன் கொடுத்தது. ஐந்தாண்டுத் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதியில் கிட்டத்தட்ட ஐந்து சதவீதத்தை எல்ஐசியே கொடுத்தது. சில நூறு கோடிகளில் துவங்கிய இந்தத் தொகை, இப்போது சில லட்சம் கோடிகளாக உயர்ந்து நிற்கிறது.

எல்ஐசி முதலீடு செய்த பணத்தை வைத்தே பிலாய் உருக்காலை போன்ற மிகப் பெரிய உருக்காலைகள், மாநில மின்வாரியங்கள், ஐஐடிகள், ஐஐஎம்கள், சாலைகள் போன்றவை இந்தியாவில் உருவாக்கப்பட்டன.

பங்குச் சந்தைகள் ஆட்டம்காணும்போது, எல்ஐசியின் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் பணம் காப்பாற்றப்பட்டது.

1980களில் ஒரு சம்பவம் நடந்தது. எல் அண்ட் டி நிறுவனத்தை மொத்தமாக கையகப்படுத்த நினைத்த அம்பானிகள் அந்த நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்த பல நிறுவனங்களில் இருந்து அவற்றை வாங்கினர். முடிவில் தீருபாய் அம்பானி, அனில் அம்பானி, முகேஷ் அம்பானி ஆகியோர் அதன் இயக்குனர் குழுமத்தில் இடம்பெறும் நிலை வந்தது. அந்தத் தருணத்தில் இதற்கு எதிராக பெரும் குரல்கள் எழுந்தபோது, எல் அண்ட் டியில் பெருமளவு பங்குகளை வைத்திருந்த எல்ஐசி அதைத் தடுத்து நிறுத்தியது.

கடைசிவரை அம்பானிகளால், எல் அண்ட் டியை முழுமையாக வாங்க முடியவில்லை.

இதுபோல 2000களின் துவக்கத்தில் பிர்லா எல் அண்ட் டியை வாங்க முயன்றபோதும் எல்ஐசி அதனைத் தடுத்து நிறுத்தியது. யாரோ ஒரு தனியார் முதலாளி, மற்றொரு தனியார் நிறுவனத்தை வாங்கு முயற்சி அல்ல அது.

எல் அண்ட் டியை வாங்குவதன் மூலம், தன்னுடைய கிராசிம் சிமென்ட்டிற்கு எல் அண்ட் டி சிமென்ட் மூலம் நிலவும் போட்டியை நீக்கி, சிமென்ட் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதுதான் பிர்லாவின் நோக்கம். இது முறியடிக்கப்பட்டது.

செப்டம்பர் 1 - எல்அய்சி உருவாக்கப்பட்ட தினம்.

- ஊடகவியலாளர் முரளிதரன்

Pin It