ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி போன்ற மதப் பண்டிகைகளின் உள்ளடக்கங்கள் இப்போது மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. புனிதம் என்ற நிலையில் இருந்து வணிகம் என்ற‌ நிலைக்கு மாறிப்போய் விட்டது. சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை.

நமது நாட்டில் கல்விக்காக ஒரு கடவுள் இருக்கிறது. சரஸ்வதி பூஜை, அதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் எல்லோரும் சொந்த ஊருக்கு பயணமாகிறார்கள். விடுமுறையை ஒரு கொண்டாட்ட நாளாக அவர்கள் கொண்டாடுகிறார்கள். புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன, பத்திரிகைகள் மலர்களை வெளியிட்டு வியாபாரம் செய்கின்றன, நகைக்கடைகள் தள்ளுபடி விலையில் நகைகளை விற்பனை செய்கின்றன, இவைகள் தான் இன்றைக்கு சரஸ்வதி பூஜையின் அடையாளமாக மாறிப்போய் விட்டது.

கல்வி உரிமையை ஒன்றிய பாஜக ஆட்சி பறித்துக் கொண்டு வருகிறது. நீட் தேர்வு, இந்தி திணிப்பு, கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றி எல்லாவற்றையும் தனதாக்கிக் கொண்டு பாஜக சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்துக் கூறி இந்துமத பண்டிகையாக அதை அடையாளச் சின்னமாக வைத்துக் கொண்டுள்ளது. எங்களுக்கு ஏன் கல்வியைத் தரவில்லை, எங்கள் மீது ஏன் நீட்டை திணிக்கிறீர்கள் என்று இப்போது யாரும் சரஸ்வதியிடம் போய் முறையிடுவதில்லை. ஒன்றிய ஆட்சியை எதிர்த்து தான் மக்களிடம் சென்று கையெழுத்து இயக்கங்களை நடத்த வேண்டியுள்ளது.

செல்வத்திற்கான கடவுள் லட்சுமி என்கின்றார்கள். ஆனால் செல்வத்திற்கான லட்சுமியை அம்பானி, அதானி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே உரியவர் என்றாக்கிவிட்டார் பிரதமர் மோடி. சாதாரண ஏழை எளிய மக்களிடம் இருந்து லட்சுமியை அவர் பிரித்தெடுத்து விட்டார். சொல்லப்போனால் ஏழை எளிய இந்துக்களுக்கு மோடி செய்யும் மகத்தான துரோகம் என்று கூட இதை சொல்லலாம். ஆக பண்டிகைகள் என்பது மதங்கள், புனிதங்கள் என்ற நிலையில் இருந்து விலகி வணிகங்கள், வியாபாரங்கள், கொண்டாட்டங்கள் என்ற நிலைமைக்கு மாறுவதோடு கல்வியை அனைவருக்கும் சமமாக்க வேண்டும், செல்வத்தை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கொள்கையையும் இல்லாமல் செய்துவிட்டது. ஆனாலும் கூட பழக்கத்தின் காரணமாக நாம் இந்த பண்டிகைகளை கொண்டாடி கொண்டிருக்கிறோமே தவிர இந்து மதம் அப்படியே உயிர்த்துடிப்போடு இருந்து வருகிறது என்பது இதன் அர்த்தமல்ல.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சென்னை வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உற்சாகமான வரவேற்பை தந்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி – இது ‘திராவிட பூமி’ என்பதை நிரூபித்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் இமாம் உல் ஹக் வரலாற்றுரீதியாக சென்னையில் பாகிஸ்தான் அணிக்கு நல்ல ஆதரவு இருந்துள்ளது. அந்த ஆதரவு எங்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்களை பார்த்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று மதவெறிக் கூச்சல் போட்டார்கள். அது இந்துத்துவம், இது தமிழ்நாடு.

விடுதலை இராசேந்திரன்

Pin It