எல்.ஆர். பாலி – 1958 இல் தொடங்கப்பட்ட "பீம் பத்ரிகா' (Bheem Patrika) என்ற இதழின் ஆசிரியர். பாபாசாகேப் அம்பேத்கருடன் இணைந்து செயல்பட்டவர். "பத்திரிகை வாயிலாக தலித் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை இறுதி வரை செய்வேன்' என்று அம்பேத்கர் முன்பு உறுதிமொழி எடுத்தவர். அம்பேத்கரியலை திக்கெட்டும் பரப்புவதற்காக – தொடக்கத்தில் இந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் "பீம் பத்ரிகா' இதழை வெளியிட்டு வந்தவர் பாலி. அதன் பிறகு ஏற்பட்ட நிதி நெருக்கடியால், தொடர்ந்து பிற மொழிகளில் அவரால் வெளியிட முடியவில்லை. பார்ப்பனிய சாதி இந்து சமூகத்தால் பாதிப்பிற்குள்ளாகும் லட்சக்கணக்கான தலித் மக்களின் குரலாக "பீம் பத்ரிகா' மாதமிருமுறை இதழாக, தற்பொழுது இந்தியில் மட்டும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அண்மையில் "பாம்செப்' அமைப்பின் சார்பில், எல்.ஆர்.பாலியிடம் எடுக்கப்பட்ட நேர்காணலை இங்கு வெளியிடுகிறோம்.

சந்திப்பு : பி.டி. சத்யபால்,

ஆர்.ஆர். சீனிவாசன்

தமிழில் : கிறிஸ்டி லீமா

அம்பேத்கர் உருவாக்கிய "பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு' பற்றி சொல்லுங்கள்?

pali_239மகாராட்டிராவிற்கு அடுத்தபடியாக பஞ்சாபில்தான் "பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு' (Scheduled Caste Federation) அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் தேர்தல் நடத்தப்பட்டபோது, காங்கிரஸ் கட்சியினர் எவரும் பஞ்சாபில் வெற்றி பெறவில்லை. அப்போது 8 தனித் தொகுதிகளுடன் கிஷன்தாஸ் கேலியே வெற்றி பெற்று, 1946 ஆம் ஆண்டு வரையில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 1946 இல் உலகப் போர் நடந்ததை அடுத்து தேர்தல் நடைபெறவில்லை. அம்பேத்கர் உருவாக்கிய அமைப்பு, அன்று பஞ்சாபில் அரசியல் செயல்திறன் மிக்க அமைப்பாக இயங்கியது. ஆனால், 1970 ஆம் ஆண்டு நடந்த அனைத்திந்திய செயற்குழு கூட்டம், டெல்லி இந்தியக் குடியரசுக் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு ஆட்சி அமைக்கலாம் என்று முடிவெடுத்த பின், காங்கிரஸ் உடனான கூட்டணி ஏற்பட்டது. கூட்டணி முறை எல்லா மாநிலங்களிலும் அப்போது பரவத் தொடங்கியது. ஆந்திராவிலும் பரவியது. அந்த வகையில் இந்த கூட்டணி முறை பஞ்சாபையும் பாதித்தது. காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட்டவுடன் நான் அந்த அமைப்பிலிருந்து விடை பெற்றேன். அதற்குப் பிறகு அமைப்பின் செயல்பாட்டில் மெத்தனம் ஏற்பட்டது.

இந்தியக் குடியரசுக் கட்சியில் நிறைய சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இருந்தனர். 1960களில் அனைத்திந்திய ஆர்ப்பாட்டம் தொடங்கியது. நாங்கள் சூன் 1964இல் எங்கள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கினோம். இந்தியா விடுதலை பெற்றவுடன் முஸ்லிம்கள் வசித்த பல இடங்கள் காலியாக இருந்தன. அந்த நிலங்களை தலித் மக்களுக்கு வழங்குமாறு போராடினோம். இதற்காகப் போராட்டம் நடத்தினோம். அதற்குப் பின் பெங்களூரு, லால் பகதூர் சாஸ்திரி கட்டடத்திற்கு முன் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டோம். அந்த போராட்டத்திற்குப் பிறகு அந்த நிலங்கள் தலித் மக்களுக்கு வழங்கப்பட்டன. அது வரை பஞ்சாபில் சட்டப்பூர்வமாக தலித்துகள் நிலம் வாங்க முடியாது. தலித்துகளிடம் 30 சதவிகித நிலம் இருந்தது. அந்நாட்களில் இந்திய குடியரசுக் கட்சி மக்களுக்கு தொண்டு செய்யும் – மக்கள் அமைப்பாகவே பல நற்செயல்களை செய்து வந்தது. ஆனால், காங்கிரசுடன் இணைந்தவுடன் அதன் செயல்திறன் குறைந்து விட்டது.

அடுத்து பவுத்த அமைப்பை எடுத்துக் கொள்வோம். பஞ்சாபில் அன்று பவுத்த அமைப்பு பெரிய அமைப்பாக இருக்கவில்லை. ஆனால், இன்று அதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். லூதியானா, நாலந்தாவில் உள்ளதைப் போன்று பெரிய கட்டடங்களை ஏற்படுத்தி, பல்வேறு செயல்பாடுகளை பவுத்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. ஆனால், அவர்களுக்கென்று உறுதியான கொள்கை இல்லை. நாங்கள் அப்படி இல்லை. எங்களுக்கென்று உறுதியான அம்பேத்கரின் கொள்கை இருக்கிறது.

பாபாசாகேப் அம்பேத்கரின் தத்துவத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்தினீர்கள்?

பாபாசாகேப் அம்பேத்கரைப் பின்பற்றுவோர் ஒரு பொதுவுடைமைவாதியாக, ஒழுக்கவாதியாக, மனிதநேயம் மிக்கவராக, பகுத்தறிவுவாதியாக இருக்க வேண்டும். ஏன் என்றால் ஒரு பொதுவுடைமைவாதி மறுபிறப்பை நம்புவதில்லை. அப்படி நம்புவோமானால் திருந்தி வாழ்வதற்கு வழியே இருக்காது. ஆதலால் ஓர் அம்பேத்கரியல்வாதி பொதுவுடைமைவாதியாகவும், பகுத்தறிவுவாதியாகவும், இருக்க வேண்டும். "மனிதர்கள்தான் பண்பாட்டையும், நாகரிகத்தையும் உருவாக்குகின்றனர்' என்று அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்துகளை எல்லாம் பின்பற்றி, கொள்கைகளோடு இயங்கும் அமைப்பு எங்கள் அமைப்பு. எண்ணிக்கை வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம். ஆனால், இதுதான் முதன் முதலில் தோன்றிய அமைப்பு. இந்த அமைப்பை சார்ந்தவர்கள், உணர்ச்சி மிக்கப் போராளிகள்.

எங்கெல்லாம் அநியாயமும், அக்கிரமமும் தலை தூக்குகிறதோ அதை எதிர்த்து இந்த அமைப்பினர் போராடுகின்றனர். மக்களுக்கு உதவுகின்றனர். பஞ்சாபினர்தான் முதன் முதலில் அம்பேத்கரின் படிப்பினைகளைப் பின்பற்றி, "சாதியை ஒழிக்கும் வழி' என்ற நூலை வெளியிட்டனர். அதை நான் 14 மொழிகளில் வெளியிட்டுள்ளேன். உருது, பஞ்சாபி மற்றும் இந்தியில் மொழி பெயர்த்துள்ளேன். அது மட்டுமல்ல; "சமதா சைனிக் தள்'தான் மும்பையில் பாபாசாகேப் எழுத்துகளை எல்லாம் தொகுத்து வெளியிட வேண்டும் எனப் போராடியது. அதற்குப் பிறகுதான் மகாராட்டிர அரசு அவர் எழுத்து களை வெளியிட, அதிகாரப்பூர்வமாக உறுதி அளித்தது.

இல்லை எனில், அம்பேத்கருடைய எழுத்துகள் அரசு நிர்வாக அலுவலகத்தில் நைந்துபோய் கிடந்திருக்கும். அன்று பாபாசாகேப் அம்பேத்கரின் குடும்பம் இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. பையா சாகேப் அம்பேத்கரும் அவருடைய தாயார் சவீதா அம்பேத்கரும் – பதிப்புரிமை தொகைக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அம்பேத்கரின் எழுத்துகளைப் பதிப்பிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை; கவலையும் இல்லை. "சமதா சைனிக் தள்' என்ற அமைப்பே இதற்காக மும்பையிலிருந்து போராடியது. அங்கு நான் பதினைந்து நாட்கள் தங்கி, இரவு பகல் என்று பாராமல், காலையிலிருந்து மாலை வரை மக்களை சந்தித்து போராட்டத்திற்கு அவர்களை அணியமாக்கினேன். அந்த போராட்டத்திற்குப் பிறகுதான் மகõராட்டிர அரசு அம்பேத்கர் எழுத்துகளின் முதல் தொகுப்பை 1979 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதன் பிறகு அந்த 31 அத்தியாயங்களையும் ஒருங்கிணைத்து, 2 பகுதிகளாக இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டேன்.

ஏன் என்றால், மக்களுக்கு அவருடைய ஆங்கிலத்தில் படிப்பது சிரமத்தை ஏற்படுத்தும். அவருடைய ஆங்கில எழுத்துகளில் மிகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தியிருப்பார். ஒரு முறை காந்தியிடம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், “அது குகை மனிதன் அல்லது கிறுக்குப் பிடித்த மனிதனின் வார்த்தைகள்'' என்று சொன்னார். அவருடைய மொழி, தனி பாணியுடன் இருந்தது.

"பீம் பத்ரிகா' தொடங்கப்பட்டதைப் பற்றி கூறுங்கள்.

இன்று நான் எண்பதுகளில் இருக்கிறேன். பாபாசாகேப்பின் பெயரில் "பீம்' என்ற பத்திரிகையை தொடங்கினேன். அது ஆங்கிலம், இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் வெளியானது. இன்று அதனுடைய அறுபத்தி அய்ந்தாவது இந்தி பிரிவு நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனுடைய 50ஆவது ஆண்டு நிறைவை உத்தரப் பிரதேசத்தில் உள்ள காதிராபாதில் கொண்டாடினோம். முதன் முதலில் பாபாசாகேபின் எழுத்துகளை பதித்தது பஞ்சாபில்; அடுத்ததாக கர்நாடகாவில். ஆந்திராவில்கூட "புத்த தம்மா' சென்னய்யாவால் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது. அந்த புத்தக வெளியீட்டு விழாவில்கூட நானும் அம்ரித் ஜனதாவும் மேடையில் இருந்தோம்.

pali_277நாங்கள் அந்நாட்களில் அம்பேத்கருடைய கருத்தியல் எல்லோரிடமும் சென்றடைய வேண்டும் என்று மிகவும் பாடுபட்டோம். இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் என்று உலகம் முழுவதும் சுற்றி அவருடைய கொள்கைகளைப் பரப்புவதற்காகப் போராடினோம். வெறும் உரைகள் மூலம் மட்டும் அல்ல; செயற்பாட்டின் மூலம் பரப்பினோம். நிறைய பேர் பேசுவார்கள். ஆனால், செயல்பட மாட் டார்கள். நிறைய பேசி, ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பவர் அம்பேத்கர்வாதி அல்லர்; புரட்சிகர சிந்தனைகளை உருவாக்குபவர்தான் உண்மையான அம்பேத்கர்வாதி.

ஒருவன் அம்பேத்கர்வாதி என்று சொன்னால், அவன் முழு விடுதலை பெற்றாக வேண்டும். அவன் முழுவதும் மாறிய ஒரு மனிதனாக உருப் பெற வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அவன் அம்பேத்கர்வாதியாக முடியாது. இளைய சமுதாயம் என்றைக்கு அம்பேத்கருடைய கருத்துகளை படிக்கின்றதோ, அதாவது சாதி, மத வேறுபாடில்லாமல் உணர்கிறார்களோ – அன்று தான் இந்திய நாட்டில் புரட்சி தொடங்கும். ஏன் என்றால், அவருடைய கருத்தியல் புரட்சிகர வார்த்தைகளின் ஊற்று. கம்யூனிஸ்ட் கட்சி, .பி.அய். மற்றும் சி.பி.அய்.எம். அம்பேத்கருடைய வழியைப் பின்பற்றாமல் முட்டாள்களாக இருந்து விட்டனர். இதனால் அவர்களுக்கு எல்லாவற்றிலும் தோல்வியே மிஞ்சியது. இன்று அவர்கள் விழித்துக் கொண்டுள்ளனர்.

பாபாசாகேப் கொள்கைகளைப் பின்பற்றுவதைப் பற்றி இன்று அவர்களுடைய பத்திரி கைகளில் படிக்க முடிகிறது. அதற்காக கருத்தரங்குகளையும், விவாதங்களையும் நடத்திக் கொண்டு வருகிறார்கள். ஏன் என்றால், அவருடைய எண்ணங்கள் புதியவை. அவருடைய எண்ணங்கள் அடிப்படையானவை. அவருடைய எண்ணங்கள் மனித இனத்திற்கு நன்மையை விளைவிக்கும். அவருடைய எண்ணங்கள் இந்நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும். மக்கள் என்றைக்கு அம்பேத்கருடைய கொள்கைகளைப் பின்பற்றுகிறார்களோ, அன்று அவர்கள் எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைவர். மக்கள் அம்பேத்கரைப் பின்பற்றினால் இந்நாடு செழிப்படையும்.

நான் திரும்பச் சொல்கிறேன். என்னவெல்லாம் அம்பேத்கருடைய வழி என்று சொன்னேனோ, அதாவது பகுத்தறிவு, பொதுவுடைமை, ஒழுக்கம், மனிதநேயம். எந்த அமைப்பு இவற்றை ஏற்றுக் கொண்டு பின்பற்றுகிறதோ அது முன்னேற்றம் அடை யும். நிறைய பேர் அம்பேத்கருடைய கொள்கை களைத் திரித்தும், சுருக்கியும் பின்பற்றுகின்றனர். இதனால் பயனில்லை. அவர் சொன்னதை மாற்ற எவருக்கும் உரிமையில்லை என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.

பாபாசாகேப் எழுதி இருப்பது குறைந்தது 50 ஆண்டுகளுக்காவது பயனுள்ளதாக இருக்கும். உண்மையாக இருக்கும். நான் அவருடைய எழுத்துகளில் இருந்து ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்திய நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை என்று சொல்கிறார். அதற்கு சில காரணங்களை குறிப்பிடுகிறார். முதலாவதாக, அச்சமின்றி சுதந்திரமாக தேர்தல் நடைபெறுவதில்லை. இரண்டாவது, வலுவான எதிரணி இல்லை. மூன்றாவது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. அரசின் ஆட்சி நேர்மையான ஆட்சியாக இல்லை. இதைப் போன்று 5,6 காரணங்களை குறிப்பிடுகிறார்.

இன்றைய நாடாளுமன்றத்தின் நிலைமை என்ன? எல்லா நாடாளுமன்ற உறுப்பினரும் குறைந்தது 5 முதல் 6 கோடி ரூபாய் வரை சொத்து வைத்துள்ளனர். 350 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர்; 150 பேர் ரவுடிகள்! இப்படி இருக்கும் நாடாளுமன்றத்திலிருந்து எதை எதிர் பார்க்க முடியும்? இன்று பஞ்சாபில் இருக்கும் முதல் அமைச்சரின் மகன்தான் துணை முதலமைச்சர்; அவருடைய மருமகள் நாடாளுமன்ற உறுப்பினர். இது ஜனநாயகமா? இல்லை குடும்ப நாயகமா? இது நீண்ட நாட்கள் நீடிக்க முடியாது.

எனவே, இளைய தலைமுறையினர் பாபாசாகேப்பின் எழுத்துகளைப் படிக்க வேண்டும். படிப்பது மட்டுமின்றி, அதை செயல்படுத்த வேண்டும். செயல்படுத்தாவிட்டால் பயனில்லை.

Pin It