நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் கிராமங்களில் ஓ.என்.ஜி.சி. எரிவாயு எடுத்து நிலத்தையும் நீரையும் பாழ்படுத்துவதை எதிர்த்துப் போராடும் மக்களுக்காக துண்டறிக்கை வழங்கியதற்காக கைது செய்யப்பட்டவர் வளர்மதி. சென்னையில் ஜாதி ஒழிப்புக்கான பெண் போராளிகள் அறைகூவல் நிகழ்வில் பங்கேற்று தனது உரையில் குறிப்பிட்டதாவது:
பெண் போராளிகளின் அறைகூவல் என்று இந்த கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பெண் போராளிகள் யார்? அவர்களும் இந்த சமூகத்தி லிருந்து வந்தவர்களே. குடும்ப - ஜாதி கட்டமைப்புக்குள் ‘அடங்கிப் போ; பணிந்து வாழ்; அதுவே பெண்ணிற்குப் பெருமை’ என்கிற சூழலில் வளர்ந்த பெண்கள் அதை உடைத்துக் கொண்டு எப்படி வெளியே வந்தார்கள்? இந்தப் போராளிப் பெண்களுக்கு உரிமைகளை எவரும் கொடுத்துப் பெறவில்லை அவர்களாகவே தங்கள் உரிமைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவர்கள். ‘நான் எனது மகளுக்கு எனது மனைவிக்கு எல்லா உரிமைகளை யும் வழங்கியிருக்கிறேன்’ என்று கூறுகிறவர்கள் இருக்கிறார்கள். உரிமைகளை வழங்குவதற்கு நீங்கள் யார் என்று நான் கேட்கிறேன்.
அப்படி பூட்டுகளை உடைத்துக் கொண்டு வரும் பெண்களை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது? ‘பஜாரிகள்; ஒழுக்கமற்றவள்; அடங்காப் பிடாரி’ என்று குற்றம் சாட்டுகிறது. நான் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், ‘இனி இரவிலே தனியாகப் போகாதே; முன்பு போல் வெளியே போகாதே’ என்று எச்சரிக்கிறார்கள். எங்களைப் போன்றவர்கள் கையிலே மிளகாய்த் தூளும் கத்தியையும் வைத்துக் கொண்டுதான் வெளியே வர முடிகிறது என்பதுதான் இந்த சமூகம்.
நீட் தேர்வு வேண்டாம் என்பதற்காக சட்டப் போராட்டம் நடத்தினார் அனிதா. அவர் என்ன சொன்னார்? “நாங்கள் ஏழைகள்; எப்படி எங்களால் கோச்சிங் சென்டர்களில் பணம் கட்டிப் படிக்க முடியும்?” என்று கேட்டார். தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வி வணிகம், ஏழைகளுக்கு எப்படி நீதி வழங்கும் என்பதுதான் அவர் கேட்ட கேள்விக்கான அர்த்தம்.
சமூகத்தில் ஆணாதிக்க அடக்குமுறை பெண்களின் உடல் சார்ந்துதான் இருக்கிறது. பெண்கள் மீது அவர்கள் கட்டமைக்கும் இரண்டு அடக்குமுறைகளில் ஒன்று வன்முறை; மற்றொன்று ஒழுங்கு. ஒழுக்கம் பெண்களுக்கு மட்டும் தான். அதுஆண்களுக்கு இல்லை. ஒரு ஆண் எத்தனை பெண்களோடும் போகலாம்! ஆனால் ஒருபெண் பல ஆண்களோடு பேசினாலோ பழகினாலோ சமூகம் அந்தப் பெண்ணின் ஒழுக்கத்தை சந்தேகிக்கிறது. பெண்ணின் கருப்பைக்குள்தான் ஜாதி இருக்கிறது. அந்த கருப்பைக்குள் உருவாகிற குழந்தை எந்த ஜாதி என்பதற்குத் தான் இங்கே வன்கொடுமைகள் நடக்கின்றன.
நான் என்ன குற்றம் செய்தேன்? கதிராமங்கலம், நெடுவாசலில் விவசாய நிலங்களை பாழடிக்கும் ஓ.என்.ஜி.சி. திட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களின் பிரச்சினைகளை ஆதரித்து துண்டறிக்கைகளை வழங்கினேன். அதற்கான என் மீது குண்டர் சட்டம். நான் கூறுகிறேன், சிறையில் நான் மகிழ்ச்சியுடன் தான் இருந்தேன். இந்தச் சட்டங்கள் எனது போராட்ட உணர்வுகளை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது. நாங்கள் நடத்துகிற போராட்டங்கள் எங்களுக்கானது மட்டுமல்ல; சமூக உரிமைகளுக்கான போராட் டத்தில் நாங்கள் இறங்கி இருக்கிறோம்.
ஒரு பெண் தனக்கான உடலை யாருடன் பகிர்வது என்று முடிவு செய்யும் உரிமை பெண்ணுக்கு மட்டுமே உண்டு. அதேபோல் மக்களுக்கு உணவு வழங்கும் விவசாயி தனது நிலத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற உரிமை விவசாயிக்குத் தான் உண்டு.
சங்கர் கொலை செய்யப்பட்ட நேரத்தில் நான் கவுசல்யாவை பார்த்தேன். துணைவரை இழந்து நின்ற பெண்ணாக அப்போது இருந்தார். இப்போது இந்த மேடையில் நான் கவுசல்யா பேசிவிட்டு இறங்கியவுடன் அவரைப் பார்த்தேன். ஜாதிக்கு எதிராகப் போராடும் போராளியாக அவர் வளர்ந்திருக்கிறார். இப்படி அவர் வளர்த்தெடுக்கப் பட்டதற்கு எது காரணம்? எங்களுக்கு முன் செங்கொடி, அனிதா, அஜிதா என்ற பெண் போராளிகள் சமூகத்துக்காகப் போராடி மரணத்தைத் தழுவினார்கள். சென்னையைச் சார்ந்த மாவோயிச அமைப்பைச் சார்ந்த பெண் போராளி அஜிதாவை துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாக்கினார்கள். செங்கொடி, அனிதா, அஜிதா என்ற போராளிகள் மடிந்திருக்கலாம்; அவர்களின் கொள்கைகளை ஒரு போதும் அழித்துவிட முடியாது. அவர்களைத் தாங்கி நாங்கள் வந்திருக் கிறோம். நாங்களும் அழிக்கப்படலாம்; எங்களுக்குப் பிறகு இந்த சமுதாய விடுதலைத் தத்துவங்கள் அடுத்தடுத்துப் போராளிகளை வளர்த்தெடுக்கும்.
நான் சிறையிலிருந்தபோது தண்டகாருண்யா பகுதியில் பழங்குடி மக்கள் எப்படி இராணுவத்தால் வேட்டையாடப்பட்டார்கள் என்பதை உண்மை அறியும் குழு நேரில் சென்று சேகரித்த தகவல்களைக் கொண்ட ஒரு ஆங்கில நூலைப் படித்தேன். அங்கே போராடுகிறவர்கள் பழங்குடி மக்கள். தங்கள் நாட்டின் உரிமைகளை காக்கப் போராடுகிறார்கள். அருந்ததிராய் அது குறித்துக் கூறியதை நினைவு படுத்துகிறேன். தண்டகாரண்யா பகுதியில் ஆயுதமேந்திப் போராடும் போராளிகள் பழங்குடி மக்கள். அந்த பழங்குடி மக்களில் 90 சதவீதம் மாவோயிஸ்டுகள் என்றார். எனக்கு ஆயுதப் போராட்டத்தில் கருத்து மாறுபாடு உண்டு. பிரச்சினை அதுவல்ல; ஆனால் பழங்குடிப் பெண்கள் இராணுவத்தால் எப்படி நடத்தப்படுகிறார்கள்?
உரிமைகளுக்காகப் போராடுகிறவர்களை உடல்ரீதியாக அழிக்கிறார்கள் அல்லது சிறையிடைக்கிறார்கள். இராணுவத்தினர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளான 15 வயது பெண் கர்ப்பமுற்று இருக்கிறாள். ‘முதல் 3 இராணுவத்தினர் வன்புணர்வு செய்த கொடுமைதான் எனக்கு நினைவில் இருக்கிறது. அதற்குப் பிறகு நான் மயங்கி விட்டேன். எத்தனை பேர் என்னை சீரழித்தார்கள் என்பது தெரியாது’ என்று கூறியிருக்கிறார். கணவன் கண் முன்னே ஒரு பெண்ணைக் கூட்டு பால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண் ஒப்புதல் வாக்கு மூலம் தந்திருக்கிறார்.
ஈழத்திலே ஆயுதம் ஏந்தி பெண் புலிகள் போராடினார்கள். அவர்களும் இதே இராணுவ ஒடுக்குமுறையைத்தான் சந்தித்தார்கள். போராளி இசைப் பிரியாவை சிங்கள இராணுவ வெறி, சித்திரவதை செய்து சாகடித்தது.
அன்புத் தோழர்களே! நாங்கள் பேசும் அரசியல் எங்களுக்கானது அல்ல; சமூகத்துக்கானது. பெண் போராளிகளை அழித்துவிடலாம். எரிக்கப்பட்ட சாம்பல் மேட்டிலிருந்து ஃபீனிக்ஸ் பறவைகள் போல மீண்டும் மீண்டும் போராளிகள் வந்து கொண்டே இருப்பார்கள். ஜாதி ஒழிப்பே சமூக விடுதலை; ஜாதி ஒழிப்பே மனிதத்தை வளர்க்கும்; அந்த மனிதத்தை மதமாற்ற வாழ்க்கையே தரும்” என்றார் வளர்மதி.