1) ஈஷா மோசடிகள்
 
கர்நாடகத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளை கோவையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் செயல்பட்டு வருகிறது. ஈஷா மைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தியான லிங்கம் கோயிலும் ஆதியோகி என்ற பெயரிலான சிவன் சிலையும் ஏராளமான இறையன்பர்களை ஈர்த்து வருகின்றன. இந்தக் கோயிலும் சிலையும் சைவ நெறிகளுக்கும் ஆகம விதிகளுக்கும் புறம்பாக அமைதிருப்பதாக ஒரு சாரார் கூறி வருகின்றனர் என்றாலும் அது பற்றியதன்று நம் கவலை. ஈஷா யோக மையம் வனப் பகுதியை வன்கவர்வு செய்து அமைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் குற்றச்சாற்று. அது யானைகளின் வலசைப் பாதையில் அமைந்துள்ளது என்று 2011-12ஆம் ஆண்டிலேயே கோவை மாவட்ட வன அலுவலர் எழுதினார். ஆனால் 17.09.2021 அன்று தகவலுரிமைச் சட்டப்படியான விடையில் மாவட்ட வன அலுவலர் இதற்கு மாறா தகவல் தந்துள்ளார். யோக மையம் யானையின் வழித்தடத்தில் அமையவில்லையாம்! இந்தியத் தலமையமைச்சர் ஆனானப்பட்ட நரேந்திர மோதியின் ஆதரவு பெற்றவரல்லவா ஜக்கி? 
 
ஆதியோகி சிலையும், அதையொட்டி நிறுவப்பட்ட பல்வேறு கட்டடங்களும் சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானங்கள் என்பதைத் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதை 2017ஆம் ஆண்டில் இந்திய அரசின் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையே சுட்டிக்காட்டிற்று..
 
வனப்பகுதிக்கு மிக அருகிலேயே கட்டடங்கள் கட்டியது, நிதி மோசடியில் ஈடுபட்டது, பழங்குடியினரின் நிலத்தை பறித்துக் கொண்டது எனத் தொடர்ந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வரும் ஈஷா மையம் அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு ஏற்று இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்பது குடியாட்சிய ஆற்றல்களின் கோரிக்கை. 
 
2) வெறுப்புமிழ்ந்த ”தர்ம சன்சத்”
 
உத்தர்காண்ட் மாநிலம் அரித்துவாரில் தர்ம சன்சத் என்ற பெயரில் நடந்த திசம்பர் 17-19 மூன்று நாள் கூட்டத்தில் இந்து மத வெறியும் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பும் விதைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உண்டாக்க ’தர்ம சன்சத்’ சூளுரைத்துள்ளது. எப்படி? முஸ்லிம்களை இனக்கொலை செய்ய வேண்டுமாம்! இதற்காக இந்துக்கள் படை அமைக்க வேண்டுமாம்! 
 
கொலைவெறியோடு கொக்கரித்தவர்களில் ஒருவர் அஷ்வின் உபாத்யாய்! இவர் மீது பல வழக்குகள் உள்ளன. மாநில அரசும் காவல்துறையும் இந்த வெறுப்புக் கூச்சலைக் கண்டு கொள்ளவே இல்லை. ஒப்புக்குச் சில நடவடிக்கைகள் வரலாம். ஆனால் அதைக் கண்டு ஏமாந்து விடக் கூடாது. இந்த வெறித்தனமான வெறுப்புமிழ்வை நாட்டின் தலைமையமைச்சரோ உள்துறை அமைச்சரோ ஒப்புக்குக் கூட கண்டிக்கவில்லை. இந்துத்துவ சூத்திரதாரிகள் ஆயிற்றே! 
 
3) காசுமீரத்தில் தொடரும் நரவேட்டை:
 
2019 ஆகஸ்டு 5ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை யாரும் மறந்திருக்க முடியாது. தீராத காசுமீரச் சிக்கலை இந்த அறிவிப்பின் மூலம் தீர்த்து விட்டதாக அவர் கூறிக் கொண்டார். அரசமைப்புச் சட்டத்தின் 370ஆம் உறுப்பை முடக்குவதும், ஜம்மு காசுமீர மாநிலத்தைக் கலைத்து விட்டு, ஜம்மு காசுமீர், லடாக் என்ற இரு ஒன்றிய ஆட்சிப்புலங்களை உருவாக்குவதும்தான் அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்புக்குப் பின் காசுமீரப் பள்ளத்தாக்கு முழுவதும் முழுமையான ஊரடங்கு செயலாக்கப்பட்டது. தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இணையம் துண்டிக்கப்பட்டது. சிக்கலைத் தீர்த்து விட்டோம், திகிலியம் (பயங்கரவாதம்) ஒழிந்தது என்று அமித் ஷா மார்தட்டிக் கொண்டார்.
 
ஆனால் காசுமீரத்திலிருந்து அன்றாடம் கிடைக்கும் செய்திகள் கலக்கம் தருகின்றன. 27 நாளில் 26 பொய் மோதல்-கொலைகள் நடந்துள்ளன. இறந்தவர்களில் பெரும்பாலார் அகவை இருபது கூட நிறையாத பதின்பருவ இளம்பிள்ளைகள். காசுமீரத்தின் இப்போதைய மக்கள்தொகை ஒன்றேகால் கோடி. ஆய்தப் படையினரின் தொகை 9 இலட்சம். உலகிலேயே இதுதான் ஆகப் பெரும் இராணுவ அடர்த்தி என்று சுட்டிக்காட்டப்படுகிறது. 
 
டிசம்பர் 30 செய்திப்படி ஹைதர்போரா என்கவுண்டரில் பலியானவர்களின் உறவினர்கள்… அரசு விசாரணைக் குழு அறிக்கை வெறும் கண்துடைப்பு என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்! இது பொய்மோதல்தான் என்று பாசக ஆதரவுக் கட்சிகளே குற்றஞ்சாற்றியுள்ளன. 2020 டிசம்பர் 30ஆம் நாள் நடந்த பொய்மோதலில் கொலை செய்யப்பட்ட ஏதர் முஷ்டாக்(17), அஜாஸ் முகமது (24), ஜுபேர் அகமது லோன் (22) ஆகிய மூன்று இளைஞர்களின் பெற்றோர்… எங்களுக்கு நியாயமான நீதி விசாரணை வேண்டும், காவல்துறையால் கொலை செய்யப்பட்ட எங்கள் பிள்ளைகளின் உடல்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போராடுகின்றனர். கொல்லப்பட்டவர்கள் திகிலியர்கள் என்று காவல்துறை சொல்வதை யாரும் ஏற்கவில்லை… 
 
காசுமீரிகள் முசுலிம்கள், அவர்கள் பாகிஸ்தானின் கையாட்கள், எனவே நம் பகைவர்கள் என்ற வெறித்தனம் இந்திய ஆய்தப்படைகளிடம் ஊட்டி வளர்க்கப்படுகிறது. எத்தனைக் கொலைகள் செய்தாலும் அத்தனைப் பரிசுகள், வீர விருதுகள்! முப்படைத் தளபதியாக மோதி விரும்பித் தேர்ந்தெடுத்த பிபின் ராவத் இந்த அணுகுமுறையைத்தான் வலிந்துரைத்தார். 
 
இராணுவம் களத்தில் நிற்கும் போது அதற்கொரு பகை இராணுவம் இருக்கும். காசுமீரத்தில் காசுமீர மக்களே இந்திய இராணுவத்துக்குப் பகை இராணுவமாகப் பார்க்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. 
 
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்! ஆகுமா?

 - செங்காட்டான்

Pin It